Mouna Nirvaana swamigal 15

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்   - 15
மவுன நிர்வாண ஸ்வாமிகள்
சாந்திப்பிரியா

திண்டுக்கல் பழனி நெடும் சாலையில்  உள்ளதே கேசவனம்பட்டி  என்ற கிராமம்.  திண்டுக்கல்லில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள அந்த ஊர்  அமைதியானது.  ஆன்மீகத்தில் விருப்பமுள்ளவர்களைத் தவிர  அதிக மக்கள் அறிந்திராதது அந்த ஊர் . அங்குதான் மாபெரும் சித்தரான ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண சுவாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது. 
அவர் எங்கிருந்து வந்தார் என்பதோ, அவருடைய பெற்றோர்கள் யார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மகிமைகள் ஏராளமாம்.  எந்த உடையுமே அணியாமல் பிறந்த  மேனியாகவே திரிந்தார். ஆகவே அவரை தத்தாத்திரேயரைப்  போல பிரும்மனின் அவதாரம் என்றே நம்புகிறார்கள். அவர் மீது எவராவது துணியைப் போர்த்தினால் அதை களைந்து எறிவாராம். பார்த்தால் ஊர் சுற்றித் தெரியும் பைத்தியக்காரனைப் போல காட்சி அளிப்பார்.  பாம்புகளுடன் விளையாடுவாராம்.  திடீரென தன்னைத் தானே அடித்துக் கொள்வாராம்.  அவர் அப்படி செய்தால்  எவரோ ஒருவர் அந்த கிராமத்தில் மரணம் அடையப் போகிறார்கள் என்பதைக் காணலாமாம். அவர் எவருடனும் பேசியது இல்லையாம்.  ஆகவே அவரை மௌன ஸ்வாமிகள் என அழைத்தனர். சுமார் அறுபது வயதுவரை வாழ்ந்து இருந்தவரை பற்றி நன்கு தெரிந்திருந்த மக்கள் அவரிடம் சென்று ஆசி பெற்று  வணங்கினார்கள்.  பல ஞானிகள் மற்றும் மகான்கள்  கூட தம்மை வந்து பார்த்தவர்களை அவரைச் சென்று பார்க்குமாறு கூறுவார்களாம். அவரை தெருப் பொறுக்கிகள் சீண்டுவது உண்டு. ஆனால் அவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே இருப்பாராம். புன்முறுவல் மட்டுமே அவர்களுக்கு அவர் தந்த பதிலாம். ஆனால் நாளடைவில் அவர் மெளனமாக செய்து வந்த மகிமைகளை கேட்டும் பார்த்தும்  வந்த  ஊர் பெரியவர்கள் அவர் பைத்தியம் அல்ல, மாபெரும் மகானே என்பதை உணர்ந்து கொண்டனர்.  ஆகவே அவர்  எந்த இடத்திலாவது தங்க வேண்டும் என்பதை உணர்ந்து கேசவனம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஊரில் அவர் எந்த வீட்டிலாவது திடீர் என நுழைவாராம்  . சமையல் அறைவரை சென்றுவிட்டுத் திரும்பி வருவாராம். அதை எவரும் தவறாக எண்ணியது இல்லை. காரணம் அவர் எந்த வீட்டில் நுழைந்து விட்டுத் திரும்பினாரோ அவர் வீட்டில் நல்லது நடக்குமாம். அவருக்கு எதிலும் பற்று இருந்தது இல்லை . மிகக் குறைந்த அளவிலேயே சாப்பிடுவார். எப்போதாவது எவராவது வந்து சிகரட்டைத் தந்தால்  புகை பிடிப்பார். அதற்குக் காரணம்  ஒரு சிகரட்டை புகைக்கும்போதே  அந்த சிகரெட்டை கொண்டு தந்தவர்களது  துயரங்கள் அவரிடம் சென்று விடுமாம்  . அவர் மொழி மௌனம்.  அவர் செயல்கள் மௌனத்தில், அவர் மற்றவர்களுடன் பேசியது மௌன மொழியிலேயே. அவரிடம் சென்றவர்களுக்கு அவர் மருந்து தந்தது இல்லை, பிரசாதம் தந்தது இல்லை, மந்திரம் செய்தது இல்லை, போதனைகளையும் செய்தது இல்லை. ஆனால் அவர் முன் சென்று தம் துயரைக் கூறி நின்றால், அவர் அவர்களை ஒரு முறை பார்ப்பார்.  அவ்வளவுதான். அல்லது திடீரென வந்தவர்களை எட்டி உதைப்பார், கையில் உள்ளதைக் கொண்டு அடிப்பார் அல்லது ஒரு அறை விடுவார்.  அடுத்தகணம் அவர்களின்  வியாதியின் தன்மை குறைந்துள்ளது போல உணருவார்கள். வந்தவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். சில நாட்களிலேயே  அவர்கள் துயரமும் அதன் காரணமும் விலகுவதை உணர்ந்தனர்.  இப்படியாக மௌனப் புரட்சியினாலேயே பல  மக்களுக்கு அருளி வந்த கருணைக்கடல்  1982 ஆம் ஆண்டு சமாதி அடைந்தார்.
ஆலயத்தில் அவர் சிவலிங்கமாக இருந்து கொண்டு அங்கு வரும் பக்தர்களைக் கத்து அருளுகின்றாராம். அவரை அடக்கம் செய்த இடத்தின் மீது மழைக் காலமே அற்ற  அன்று  பெரும் மழை கொட்டியது. வானத்தில் கருடன் ஒன்று அவர் சமாதி மீது மூன்றுமுறை சுற்றிப் பறந்து விட்டுச் சென்றது என்பதே அவருடைய தெய்வீகத்தை பறை சாற்றுவதாக உள்ளது.
 (படங்கள்  நன்றி :  http://www.kasavanam-siddhar.org )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Kudai Swamigal -E

Vasanthapura Temple ( E)