Thirupathi sree Venkateswarar-1
சாந்திப்பிரியா
முன்னுரை
திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலாபதி தென் இந்திய மக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல. இந்த உலகின் அநேக கோடி மூலைகளிலும் உள்ளவர்களும் அவரை பிரார்த்திக்காமல் இருப்பதில்லை. காரணம் ஸ்ரீ வெங்கடாசலபதி என்றாலே செல்வத்தைத் தருபவர் என்ற நம்பிக்கை உண்டு. செல்வத்தை மட்டும் அல்ல, நாம் வேண்டியதையும் அருள்பவர் ஏழுமலையான் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அனைத்துக்கும் மேலாக இந்த உலகின் கண்கண்ட தெய்வம், கலியுக வரதர் என்று அவரை ஆழமாக நம்புபவர்கள் ஏராளம், ஏராளம். வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதிக்கு சென்று அந்தக் கடவுளை தரிசிக்காதவர்கள் தம் வாழ்நாளின் பெரும் புண்ணியத்தை இழந்து விட்டவர்கள் என்று நம்புபவர்கள்தான் எத்தனை பேர் ! அப்படிப்பட்ட அந்தக் கடவுள் இந்த பூமியில் அவதரித்தக் கதை மிகவும் அற்புதமானது, ஆனந்தத்தைத் தருவது. ஆனால் அவர் ஜீவ சரித்திரம் வாய்மொழிக் கதையாகவே வம்சாவளியாக வந்துள்ளது. ஒரு மகாபாரதக் காவியத்தைப் போல, ஒரு ராமாயணத்தைப் போல, வேதங்களைப் போல அவருடைய ஜீவ சரித்திரம் எழுதி வைத்திருக்கப்படவில்லை என்றாலும், அவருக்குள்ள கோடானு கோடி பக்தர்களின் எண்ணிக்கை அவர் ஜீவ சரித்திரம் எழுதப்பட்டு இருந்தால் என்ன, எழுதி வைக்கப்படாமல் இருந்தால் என்ன, வாய் மொழி கதையாகவே இருந்தாலும், எம்மை வாழ வைத்த தெய்வத்தின் கதை என்றே நம்பி அவரைக் காணத் துடிக்கிறார்கள்.
திருப்பதிக்குச் சென்று ஸ்ரீ வெங்கடாசலபதியை தரிசிக்க முடியாதவர்கள், நம் வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, ஒரு ரூபாயையும் மஞ்சள் துணியில் முடிந்து வைத்து விட்டு, அவற்றை ஸ்வாமி பீடத்தில் வைத்து அவர் ஜீவ சரித்திரத்தை தினமும் ஒருமுறை என தொண்ணூறு நாட்கள் தொடர்ந்து படித்து வந்தால் நாம் வேண்டியது நிறைவேறும் என்பார்கள். அது பிரார்த்தனை செய்யும் நம்பிக்கையின் அடிப்படை தன்மையை கொண்டது என்றும், தொண்ணூறு நாட்கள் தொடர்ந்து படித்து முடிந்ததும், நமக்கு என்று நேரம் கிடைக்குமோ அன்று நாம் உள்ள ஊரில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியின் ஆலயத்துக்குச் சென்று, வேண்டுதலுக்கு முடிந்து வைத்த நாணயத்தையும், பிரார்த்தனையை எழுதி வைத்துள்ள காகிதத்தையும் உண்டியலில் சேர்த்து விட்டால் எண்ணம் நிறைவு பெற்று விடும் என்று என்று என்னிடம் கும்பகோணத்தில் இருந்த திரு ஸ்ரீனிவாசச்சாரியார் என்ற ஒரு பண்டிதர் சில வருடங்களுக்கு முன்னர் கூறினார். அதையே இன்றும் சில அனுபவ பண்டிதர்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் அனைவராலும் திருப்பதிக்கு செல்ல முடிவதில்லை, அங்கு சென்றாலும் அவரை தரிசனம் செய்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார்கள், ஆகவே இந்த பூமியின் கண்கண்ட பிரதிக்ஷ்ய தெய்வமான அவரை எங்கிருந்தபடியும் நாம் முழு நம்பிக்கையுடன் துதித்து வேண்டினால் நமக்கு வேண்டியதை தந்தருள்கிறார் என்று அனுபவ பூர்வமான, தாம் அனுபவித்த சொந்த உண்மையைக் கூறுகிறார்கள். இதற்கு நானே கூட ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன்.
சுமார் 26 வருடங்களுக்கு முன் இருக்கலாம். புது வருடம் பிறந்தது. ஜனவரி மாதம் முதல் தேதி. அன்றைக்கு திருப்பதிக்குச் சென்று பகவானை தரிசனம் செய்துவிட்டு வரலாம் என வீட்டிலே தயாரித்த இனிப்பு பாயசத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு என் மருமகன் ஒருவனுடன் ஜாவா இரு சக்கிர மோட்டார் வண்டியில் விடிகாலை திருப்பதிக்கு கிளம்பிச் சென்றோம். அதுவே திருப்பதிக்கு என் முதல் பயணம். எங்களுக்கு எந்த முன் அனுபவமும் இல்லை. அங்கு சென்றால் பெரும் கூட்டம். தரிசனம் செய்ய குறைந்தது எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும் என்றார்கள். ஒரு வேடிக்கை என்ன என்றால் நான் தெய்வம் உள்ளது என்று நம்புபவன். ஆனால் பூசைப் புனஸ்காரங்களில் நம்பிக்கை இல்லாதவன். ஏன் இன்றைக்கும் நெற்றியில் வீபுதி, சந்தானம் என எந்த பொட்டுக் கூட வைத்துக் கொள்வதில்லை. என் மனதில் அந்த நிலைக்கான காரணம் ஏதாவது இருக்கலாம். அப்படிப்பட்டவன் முதன் முதலாக திருப்பதி சென்றும் எட்டு மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும் என்றுடன், சரி பகவானை தூரத்தில் இருந்தே தரிசனம் செய்யலாம் என எண்ணிக் கொண்டு பாயசத்தை அங்குள்ளவர்களுக்கு தந்தப் பின், திருப்பதி வெங்கடாசலபதியை தூரத்தில் இருந்தே கோபுரத்தை நோக்கிப் பார்த்து மனதார வணங்கி விட்டு வீடு திரும்பி விட்டேன். ஆனாலும் நான் ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்ற வருத்தமோ, பயமோ என்னுள் இன்றுவரை எழவே இல்லை. காரணம் எங்கிருந்தாலும் அவரை மனதார பூஜிக்கலாம் என்ற எண்ணமே காரணம்.
26 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்றும் திருப்பதிக்குச் சென்று அவரை தரிசனம் செய்யும் வாய்ப்பு வரவே இல்லை. என்னை பல முறை திருப்பதிக்கு சென்று விட்டு வரலாம் என நண்பர்களும், வீட்டினரும் அழைத்து இருக்கிறார்கள். இன்று வரை போக வேண்டும் என்ற மனம் எழவில்லை. ஆனால் சென்னையில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்துக்கு சென்று அவரை தரிசித்து வணங்கி உள்ளேன். ஆகவேதான் அவர் அருளாசி எனக்கு நீங்காமல் உள்ளது என்று மனம் எண்ணுகிறது. என் நிலையில் உள்ளவர்களைப் போல வாழ எனக்கு தேவையானது கிடைக்கின்றது. அதுவே போதும் என்று மனம் நினைக்கின்றது. இப்படி இருக்கையில் போன மாதம் நான் சென்னைக்குச் சென்று இருந்தபோது, பேச்சு வாக்கில் ஒருவர் எனக்கு ஏழுமலையான் கதையைக் கூறினார். அன்று நான் நினைத்தேன், அவர் ஜீவ சரித்திரத்தை நான் எழுத வேண்டும். இன்று அதை செயல் படுத்திவிட்டேன். அதுவும் அவர் செயலாகவே இருக்க வேண்டும். அவரை திருப்பதியில் சென்று பார்க்க விட்டால் என்ன. அவர் அருள் இல்லை என்றால் இந்த சரித்திரத்தை எழுதி இருக்க முடியுமா ?
இது ஒருபுறத்தில் இருக்க நாம் இனி அவர் ஜீவ சரித்திரத்தைப் படிப்போம்.
அதற்கு முன்னர் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று திருப்பதி ஏழுமலையான் திருப்பதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றார் என்றால் அதற்கு விதை போட்டவர் நாரத முனிவரே. அவர் மேற்கொண்ட முயற்சியினால்தான் திருப்பதி வெங்கடேஸ்வரர் அவதரித்தார். ஆகவே திருப்பதி வெங்கடேச பெருமானை நாம் தரிசிக்கப் போனால், நாரத முனிவரை முதலில் வணங்கி விட்டே திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். நாரதர்தான் ஏழுமலையான் அவதரிக்கக் காரணம் என்பதற்கான கதைதான் திருப்பதி ஏழுமலையானின் ஜீவ சரித்திரம்.
இது ஒருபுறத்தில் இருக்க நாம் இனி அவர் ஜீவ சரித்திரத்தைப் படிப்போம்.
..........தொடரும்
கருத்துகள்
கருத்துரையிடுக