Chithambara Manmiyam - 5


சாந்திப்பிரியா


பாகம்-5



பதஞ்சலி முனிவர் வருகை 

வியாக்கிரபாத முனிவர் தனது தந்தையார் மற்றும் மைந்தரான உபமன்யு முனிவர்களுடன் சிவ நடன தரிசனத்தை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிவ பூஜை செய்தபடி அங்கிருந்தபோது, வைகுண்டத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
ஆதிஷேஷனுடைய உடல் மீது சயனித்துக் கொண்டு இருந்த விஷ்ணு பகவானின் உடல் திடீரென கனத்தது மட்டும் அல்ல அவர் எதையோ யோசனை செய்வது போல அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டே இருந்தார். ஆடிக்கொண்டே இருந்ததினால் தன் மீது படுத்துள்ள விஷ்ணு பகவான் விழுந்து விடக் கூடாதே என்ற கவலைக் கொண்ட ஆதிசேஷன் மிகவும் பவ்யமாக விஷ்ணு பகவானிடம் அது குறித்துக் கேட்டார். பதில் ஒன்றும் கூறாமல் ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது இருந்து திடீர் என அதிகாலையில் எழுந்த விஷ்ணு பகவான் தனது நித்தியக் கடமைகளை செய்து முடித்தப் பின் தனது சிம்மாசனத்தில் சென்று அமர்ந்து கொண்டார். அதைக் கண்ட ஆதிசேஷன் அவரிடம் கேட்டார் ' பிரபோ, நீர் அடியேன் மீது முன்போல சயனித்து மெல்ல எழுந்திராது திடீர் என இன்று ஏன் இத்தனை விடியற்காலை எழுந்து விட்டீர்கள் ?. உங்களுடைய்ப் போக்கே இன்று மாறி உள்ளதே, அதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?' என்று கேட்டார்.
அதற்கு விஷ்ணு பகவான் கூறினார் ' ஆதிசேஷா, நேற்று சிவபெருமான் பிட்ஷாடன வடிவம் கொண்டு, என்னை மோகினி அவதாரம் எடுக்கக் கூறி விட்டு என்னுடைய தேவாதார வனத்தில் வந்து பிட்ஷை கேட்கலானார். அப்போது அங்கு கூடி இருந்த நாற்பத்தேட்டாயிர முனிவர்களும் என்னைக் கண்டு மோகிக்க, அவர்களுடைய பத்தினிகளோ சிவபெருமானைப் பார்த்து மோகித்தார்கள். அதைக் கண்டு விட்ட அந்த முனிவர்கள் தமது பத்தினிகளை சபிக்காமல் அவர்களது மோகத்துக்கு ஆளாகி விட்ட சிவபெருமானை சபித்தார்கள். ஆனால் அவை எதுவுமே சிவபெருமானை ஒன்றும் செய்யவில்லை. ஆகவே கோபம் கொண்ட முனிவர்கள் சிவபெருமானை அழிக்க எண்ணி அபிச்சார ஹோமம் செய்தார்கள். அந்த ஹோம குண்டத்தில் இருந்து இருந்து ஒரு பயங்கரப் புலி வெளி வர, சிவபெருமான் அதை தம் கையினால் பிடித்துக் கொண்டு அதன் தோலை உருவி உடையாக உடுத்திக் கொண்டார். அதன் பின் ஹோமத்தில் இருந்து வெளிவந்த சர்பத்தை எடுத்து அதை சுற்றிப் பின்னி கையில் தனது கணையாழியாக அணிந்து கொண்டார். அதன் பின் வெளிவந்த முயலவனை கீழே தள்ளி அவன் முதுகெலும்பு முறியும் அளவிற்கு அவனை அழுத்தி அவன் மீது நின்று கொண்டார். அவனைத் தொடர்ந்து வந்த அக்கினியை தன திருக்கரத்திலே ஏந்திக் கொண்டார். அவர்கள் ஓதிய மந்திரங்களையும் தானே ஆவாஹித்துக் கொள்ள முனிவர்கள் செய்வதறியாது திகைத்தார்கள். 
பிட்ஷாடன வடிவத்தில் வந்திருந்தது சிவபெருமானே என்று அறிந்து கொண்டதும், அவரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அதன் ஓபின் அவரிடம் தமக்கு தரிசனம் தந்து அருளுமாறு வேண்டிக் கொள்ள, சிவபெருமானும் மனம் இளகி, தேவி உமையோடு தனது ரிஷபத்தில் ஏறி வந்து ஆகாயத்தில் அவர்களுக்கு காட்சி தந்தார். நானும் மோகினி வேடத்தைக் களைந்து விட்டு அவரை அப்படியே வணங்கி நிற்க, இந்திரன், பிரும்மன்,என அனைத்து தேவர்களும், முனிவர்களும் அங்கு வந்து கூடி நின்று உமையோடு இருந்த சிவபெருமானை தரிசித்தார்கள். இனி நீங்கள் அனைவரும் நித்தம் சிவலிங்கத்தை தியானித்து வழிபடுங்கள் என்று கூறி விட்டு சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். அந்தக் காட்சி என் கண்ணில் மீண்டும், மீண்டும் வந்து நிற்க என் நித்திரையும் அகன்றது, கனவும் கலைந்தது. அந்தக் கனவுக் காட்சியே என்னை புளகாங்கிதம் அடைய வைத்து தூங்க விடாமல் செய்தது. அந்த ஆனந்தக் காட்சியை உனக்கு எப்படிச் விளக்குவேன் , ஆதிசேஷா, அது மீண்டும் கிடைக்க முடியாததல்லவா ' என்றார்.
இவ்வாறாக சிவபெருமானின் தோற்றத்தைக் குறித்து விஷ்ணுவானவர் ஆதிசேஷனுக்கு கூறிக் கொண்டு இருக்கையில், ஆதி சேஷனின் மனதில் பெரும் ஆசை ஏற்பட்டது. 'ஆஹா.. விஷ்ணு பகவானே நிலை குலைந்து நின்று வணங்கிய அந்த அழகியக் காட்சியை என்னால் கண்டு களிக்க முடியாமல் போயிற்றே ...என்றாவது ஒருநாள் இந்த பாக்கியம் எனக்கும் கிட்டுமா?....என்ன இருந்தாலும் சிவனுக்கும் தொண்டு செய்வதில் எந்த தப்பும் இல்லையே....அவர் அருகில் இருந்திருந்தால் அந்த அற்புதக் காட்சியை நானும் கண்டு களித்திருக்கலாமே' என்று மனதில் எண்ணிக் கொண்டிருக்க, ஆதிசேஷனின் மனதில் ஓடிய எண்ணத்தை மஹாவிஷ்ணு புரிந்து கொண்டு இனி சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் காணும்வரை ஆதிசேஷன் மனதில் அந்த சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும், அவரால் எனக்கு நல்ல சயனத்தைக் கொடுக்க இயலாது, என்று கவலைப் பட, அதை புரிந்து கொண்டப் ஆதிசேஷனும் வருத்தமுற்றார். 
மகாவிஷ்ணு அவரிடம் கூறினார் ' ஆதிசேஷா, உன்னை நான் குறைக் கூற மாட்டேன். நானே சிவபெருமானின் நடனக் காட்சியைக் கண்டு சொக்கிப் போய் அல்லவா அதை அடக்க முடியாமல் உம்மிடமும் கூறினேன். ஆகவே அதைப் பார்க்க உமக்கு ஆவல் ஏற்படுவதில் வியப்பில்லைதான். அதற்கு நான் தடையாக இருப்பது தவறு. ஆகவே நீயும் பூலோகம் சென்று தக்க நேரத்தில் அந்தக் காட்சியை கண்டு களிக்க வேண்டும் என்று உனக்கு ஆசிகளைக் கூறுகிறேன்.
முன்னொரு காலத்தில் அத்ரி முனிவரும் அவர் மனைவி அனுசூயையும் திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள் அதற்கு ஏற்ப பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண் குழந்தையும் உண்டு. நீ பதஞ்சலியாகப் பிறக்கும் முன்னர் ஆதிஷேஷனாகவே நீ இருந்தாய். அப்போது உன்னை பிள்ளையாகப் பெற விரும்பி விஷ்ணுவான என்னை நோக்கித் தவமிருந்து உன்னை மகனாகப் பெற்றார்கள். ஆனால் நீயோ ஐந்து தலை நாகமாக அவர்களுக்கு பிறக்க அதைக் கண்டு அஞ்சியவர்கள் பயந்து போய் உன்னை கீழே போட்டுவிட கீழே விழுந்த நீயும் பதஞ்சலி என்ற உருவைப் பெற்றாய். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் பூமியிலே நீ விழுந்ததால் உன் பெயரும் பெயர் பதஞ்சலி என ஆயிற்று.
ஆகவே இப்போது நீயும் அதே பதஞ்சலி எனும் உருவம் கொண்டு நாகலோகத்துக்குப் போ. அதற்குள் ஒரு மலையும் அந்த மலைக்குள் ஒரு துவாரமும் உள்ளது. அந்த துவாரத்தின் வழியே நீ சென்றால் தில்லை வனத்தை அடையலாம். அந்த தில்லை வனத்தில் வடக்குப் பக்கத்தில் ஒரு ஆலமரம் இருக்கும். அங்கு மூல வடிவமாக உள்ள சிவலிங்கத்தை வியாக்கிரபாத முனிவர் என்பவர் ஸ்தாபித்து வைத்து உள்ளார். அந்த்ய முனிவரோ தான் சிவ நடனத்தையும், சிவபெருமானின் அபூர்வக் காட்சியையும் காண வேண்டும் என்று வேண்டியவாறு அந்த சிவலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு உள்ளார். நீயும் அங்கு சென்று அவரோடு சேர்ந்து பூஜை செய்தால் தைபூசம் வியாழர் கிழமை அன்று நாம் அங்கு வந்து சிவ தரிசனத்தைக் கண்டு களிக்க உதவுவோம். நீ அந்தக் காட்சியைக் கண்டு கழித்தப் பின் திரும்பி வரும்வரை உன் பிள்ளையை எனக்கு சயனிக்க அனுப்பி வை'.
அதைக் கேட்ட ஆதிஷேஷரும் அதி ஆனந்தம் அடைந்து விஷ்ணுவை பலவாறாக தோத்திரம் செய்து வணங்கினார். அடுத்து அவரிடம் விடைப் பெற்றுக் கொண்டு, தன் மகனை விஷ்ணு பகவானின் சயநாப் படுக்கையாக இருக்குமாறு ஏற்ப்பாடுகளை செய்தப் பின் பதஞ்சலி உருவம் கொண்டு நாகலோகத்துக்குப் போய், அங்கிருந்த பர்வதத்தை (மலை) வணங்கி நின்று அதன் தென்புறத்தில் இருந்த பிலாத்துவாரம் (வழி) வாயிலாக பூலோகத்தை அடைந்து அங்கிருந்து தில்லை வனத்தையும் சென்றடைந்தார்.
விஷ்ணுவானவர் கூறியது போல வடப் பகுதியில் ஆலமரத்தின் அடியில் வியாக்கிரபாத முனிவர் இருந்த இடத்தை அடைந்து அவரை சந்தித்து தமது வரலாற்றை எடுத்துரைத்து, தான் வந்த காரணத்தையும் கூறினார். அதைக் கேட்ட வியாக்கிரபாத முனிவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை தம்முடன் இருந்தபடி சிவ பூஜையை செய்யுமாறு வேண்டிக் கொண்டார். இப்படியாக பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து கொண்டு தினமும் சிவகங்கையில் குளித்தப் பின் திருமூலாட்டேஸ்வரரையும், திருபுலீசமுடையாரையும் பூஜை செய்து வந்தார். திருபுலீசமுடையார் யார் என்றால் அது வியாக்கிரபாத முனிவர் ஸ்தாபித்த லிங்கம் ஆகும். சிவபெருமான் அவருக்கு புலி போன்ற உடல் வலிமையையும், நகங்களில் புலி நகத்தின் போன்ற சக்தியையும் தந்தப் பின் அந்த லிங்கத்தை அவர் ஸ்தாபித்ததினால் அது காலப்போக்கில் திருபுலீசமுடையார் என அழைக்கப்பட்டது.
இப்படியாக இருக்கையில் சில நாள் கழித்து தில்லை வனத்தின் மேல் பகுதியில் பதஞ்சலி முனிவர் ஒரு குளத்தைக் கண்டார். ஆகவே அங்கு சென்றவர் அங்கு ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து அதன் வலப்பக்கத்தில் ஒரு பர்ணசாலையை தனக்கென அமைத்துக் கொண்டு அங்கு தங்கி இருந்தவாறு மூன்று சிவ லிங்கங்களையும்- திருமூலாட்டேஸ்வரர், திருபுலீசமுடையார் மற்றும் தாம் ஸ்தாபித்தது என மூன்றையும் பூஜித்துக் கொண்டு இருந்தார்.
அவர் அங்கு வருவதற்கு முன்னரே மூவராக - மத்யன்திக முனிவர், வியாக்கிரபாத முனிவர், அவர் புதல்வரான உபமன்யு முனிவர் என மூவர் இருக்க பதஞ்சலி முனிவருடன் சேர்ந்து நால்வரும் அற்புதாமான சிவ தரிசனத்தைக் காண வேண்டும் என்று வேண்டியவாறு சிவனை நினைத்து பூஜை செய்து வரலாயினார்கள். பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதரும் சிவனின் ஆனந்த தாண்டவ காட்சியைக் காண விரும்பினார்கள் என்பதினால் பின்னர் அந்த பரம்பொருளும் அவர்களுக்குத் தன் ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருளினார். அந்த நேரத்தில் அவர் (சிவபெருமான்) தன்னுடன் காசி நகரில் இருந்த மூவாயிரம் அந்தண  வேத விற்பன்னர்களையும் அங்கு வரவழைத்தார். அந்த வேத விற்பன்னர்கள் தான் இன்றைய சிதம்பரம் தீட்சிதர்கள் என்று ஒரு புராண கதையும் உள்ளது. பதஞ்சலி முனிவரும், வியாக்ரமபாத முனிவரும் செய்த இடை விடாத தவத்தினால் மனம் மகிழ்ந்தார் பரமேஸ்வரர். ஆகவே அவர் அவர்களுக்கு அருள் புரிவதற்கு அவர்கள் முன் தோன்றியபோது அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் சிவபெருமானின் ஆனந்தக் கூத்தைப் கண்டு களிக்க வேண்டும் என அவரிடம் வேண்டிக் கொண்டபோது  தக்க  நேரத்தில் அதை செய்வதாக அந்த சிவனும் உறுதி கொடுத்தார்.
.........தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Kudai Swamigal -E

Vasanthapura Temple ( E)