Garudazhvaar - 3
3
அவர்கள்
ஏற்கனவே இந்திரனை பழி தீர்ப்பதற்காக பல காலமாக காத்து இருந்தவர்கள்.
பாலகியா என்ற அந்த முனிவர்களுக்கு இந்திரனின் மீது ஏன் கோபம்? அதற்கு
பின்னணிக் கதை உண்டு. ஒருமுறை தக்ஷப்ரஜாபதி ஒரு பெரிய யாகம் செய்தார்.
அப்போது காஷ்யப முனிவர் தன் சார்ப்பில் அந்த யாகத்துக்கு 60000 க்கும்
மேற்பட்ட பாலகியா முனிவர்களை அனுப்பினார். அவர்கள் தோற்றத்தில்
குள்ளமானவர்கள். அந்த யாகத்துக்கு தன் சார்ப்பில் இந்திரனும்
பல முனிவர்களை அனுப்பி இருந்தான். தன்னுடைய பெருமையை பறை சாற்றவேண்டும் என்ற
எண்ணத்தில் இருந்த இந்திரனும் அனைத்து வனங்களில் இருந்தும் யாகத்துக்குத்
தேவையான விறகுகளை எடுத்துப் போய் விட்டதினால் பல வனங்களிலும் தேடி
அலைந்தும் அந்த பாலகியா முனிவர்களுக்கு யாகக் கட்டைகள் கிடைக்காமல்
வெறும் கையுடன் யாகசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்படி அவர்கள் சென்றபோது யாகக் கட்டைகள் எதையும் கொண்டு செல்ல முடியாமல் வெறும் கையுடன் யாகத்தில் கலந்து கொள்ள வந்த அவர்களை கண்டு இந்திரன் எள்ளி
நகையாடினான். அதனால் கோபமுற்ற அந்த முனிவர்கள் யாகத்தில் கலந்து கொள்ள
முடியாமல் திரும்பினார்கள். அப்போது அவர்கள் எப்படி தம்மை இந்திரன்
அவமானப்படுத்தினாரோ அது போலவே தாம் அனுப்பும் எவர் மூலமாவது இந்திரனும்
அவமானப்படுவான் என்று சாபமிட்டார்கள். அதற்காக அவர்கள் கடுமையான தவம்
இருந்து இந்திரனை அவமதிக்கும் விதத்திலான ஒருவரை தோற்றுவிக்க வேண்டும்
என்று காஷ்யப முனிவரை வேண்டி வந்ததினால் அவரும் அதுவே நல்ல தருணம் என எண்ணிய காஷ்யப முனிவரும் கருடனை அவர்களிடம் செல்ல இப்படி ஒரு நாடகத்தை நடத்தி இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது.
அதனால்
காஷ்யப முனிவர் மூலம் தமக்கு அறிமுகமான கருடன் தங்களுடைய சார்ப்பாகவும்
தேவலோகம் சென்று இந்திரனிடம் இருந்து அமிர்தத்தை வெற்றிகரமாக எடுத்து வந்து
இந்திரனை அவமானப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அதற்கான தவ
வலிமையையும் அவர்கள் கருடனுக்குத் தந்தார்கள்.
தேவலோகத்துக்கு
வந்து கருடன் அமிர்தத்தை கவர்ந்து செல்ல உள்ள செய்தி தேவேந்திரனின்
காதுகளையும் எட்டியது. அவர் கவலையுற்றார். அதை தடுத்தே ஆக வேண்டும்.
இல்லை என்றால் பாம்புகள் அமிர்தத்தை உண்டு சாகா வரம் பெற்றிடும். அதனால்
பிற்காலத்தில் பல தொல்லைகள் ஏற்படும். அமிர்தம் என்பது தேவர்களுக்கு
மட்டுமே சொந்தமானது என்பதை உணர்ந்தார். ஆகவே அதை தடுத்து நிறுத்தும்
முயற்சிக்காக இந்திரன் அந்த குடத்தை சுற்றி அற்புதமான பாதுகாப்பு
ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
அமிர்த
குடத்தை பாதுகாப்பதற்காக இரவும் பகலும் பெரிய, பெரிய கண்களை திறந்து
வைத்து இருந்தபடி இருக்கும் இரண்டு ராக்ஷச நாகங்களை அதை சுற்றிக் கொண்டே
இருக்குமாறு அங்கு தங்க வைத்தார். அவை இரண்டும் குடத்தை சுற்றி வந்தபடி
ஓயாமல் வாயில் இருந்து விஷக் காற்றை வீசிய வண்ணம் இருந்தன. அந்த அமிர்த
கலசம் மற்றும் நாகங்களை சுற்றி குடை ராட்டினம் போல பயங்கரமாக சுற்றிக்
கொண்டே இருந்த இரண்டு ராக்ஷச சக்கரங்கள் இருந்தன. அந்த சக்கரம் முழுதுமே
நன்கு கூர்மையாக்கப்பட்ட கத்திகளைக் கொண்டது. அவற்றின் அருகில்
செல்பவர்களை துண்டு துண்டாக வெட்டி விடும். அத்தனைக் கூர்மையானது. அதன்
மத்திய பகுதியில்தான் நாகங்கள் மேலே பார்த்தபடி அமர்ந்து கொண்டு இருந்தன.
அந்த நாகங்களைக் கொன்றால் மட்டுமே அந்த துவாரத்தின் வழியே உள்ளே செல்ல
முடியும். அவற்றைத் தாண்டி சுற்றிலும் லட்சக் கணக்கான இந்திரகணங்கள் கருடன்
வருகிறதா என வானத்தைப் நோக்கி பார்த்தபடியே இரவும் பகலும் காவலில் இருந்தன.
இந்த
நிலையில் அந்த கலசத்தை எடுத்து வருவது மிக்க கடினமானது என்பதை மேலே
சுற்றிக் கொண்டு இருந்த கருடன் உணர்ந்தார். சிறகோடு அதன் அருகில் சென்றால்
சிறகுகள் துண்டு துண்டாக சீவப்பட்டு விடும். ஆகவே முதலில் அந்த சக்கரம்
சுற்றுவதை நிறுத்த வேண்டும். அதற்கான ஒரே வழி உள்ளே சென்று அதன் அடிப்
புறத்தில் உள்ள பல் சக்கரத்தில் ( Gear ) ஒரு கட்டையை வைக்க வேண்டும்.
மேலே
கருடன் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. எப்படி உள்ளே நுழையலாம் எனப்
பார்த்துக் கொண்டே இருந்தபோது நாகங்கள் இரண்டும் சுற்றிக் கொண்டு
சக்கரத்தின் நடு துவாரத்தில் தலையை விட்டு வெளியில் பார்த்தபடி இன்னும்
அதிகமாக விஷத்தையும் தீ ஜுவாலையும் கக்கத் துவங்கின. அதன் அருகில்
செல்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் கிடையாது என்பதினால்தான் இந்திர
கணங்கள் அந்த ராட்டினத்தின் அடிப்பகுதியில்தான் காவலில் இருந்தன.
இங்கு
இன்னொன்றைக் கூற வேண்டும். இந்த நாடகங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது
கருடனுக்கும் நாகங்களுக்கும் சம பலமே இருந்தது. கருடனால் நாகத்தைக் கொல்ல
முடிந்த சக்தி இல்லை. ஆகவே என்ன செய்யலாம் என யோசனை செய்த கருடன்
அங்கிருந்து பறந்து சென்று தேவலோக மண்ணில் புரண்டு எழுந்தது. அத்தனை
தூசியையும் தன் உடம்பில் எடுத்துக் கொண்ட கருடன் தன் இறக்கைகளை படபடவென
அடித்து அந்த பகுதி முழுவதையுமே கண்களே தெரியாத அளவிற்கு புழுதி மேகத்தினால் நிரப்பியது. யார் எங்கு உள்ளார்கள் என்பதையே பார்க்க முடியாமல் அனைவரும் கண்களை இறுக மூடிக் கொள்ள வேண்டிய அளவு அந்த பகுதி முழுவதுமே புழுதி மண்டலமாயிற்று. எதனால் அப்படி ஒரு நிலைமை தோன்றியது என்பதையே யாராலும் தெரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். அதுவே நல்ல தருமணம் என்பதை கருடன் உணர்ந்தார்.
.............தொடரும்
கருத்துகள்
கருத்துரையிடுக