Tirukoneeswar Temple , Sri Lanka -Part-2


சாந்திப்பிரியா 

பாகம்-2

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். அதுவே தென் கயிலையிலும் நடந்தது. 'திருகோணீஸ்வரர் மலை எழுந்து விட்டது. அது தட்ஷினக் கைலாயம் என்றப பெயரையும் பெற்று சிவபெருமான் மற்றும் உமையவள் தங்கும் இடமாகவும் ஆகி விட்டது. ஆனால் அதில் ஒரு குறை உள்ளது. அதை எப்படி கவனிக்காமல் விட்டீர்கள்  ?' என நாரதர் பிரும்மாவிடம் கேட்டார். பிருமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவர் நாரதரிடம், தான் படைத்த கைலாய மலையில் என்னக் குறை உள்ளது என்று கேட்டார். நாரதார் அமைதியாகக் கூறினார் ' என்னைப் படைத்த பிரும்மனே , கைலாயம் என்றாலே கங்கை உற்பத்தி ஆகி ஓடும் இடம் ஆகும். நீங்கள் படைத்த  தென் இமய மலையில்  கங்கை எங்கே உள்ளது? கங்கை இல்லாத இடம் கைலாயம் ஆகுமா? ' என்று கேட்டார். பிரும்மாவுக்கு தான் செய்திருந்த தவறு தெரிந்தது. ஆனால் அதை எப்படி சிவபெருமானிடம் சென்று இப்போது  கூறுவது? இப்போது அதைக் கூறினால் அவர் கோபம் அடைவாரே என்பதினால் இங்கும் கங்கையின் கிளைக் கொண்டு வர  என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்தார்கள். அவர்கள் விஷ்ணுவிடமும் சென்று சென்று அதற்கான யோஜனையைக் கேட்டார்கள். விஷ்ணு அவர்களிடம் 'கவலைப் படாமல் செல்லுங்கள் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்' என்று கூறி அவர்களை அனுப்பியப் பின் , கங்கா தேவியை அழைத்து அவளிடம் ஒரு காரியத்தை செய்யுமாறு கூறினார்.

பகீரதன் தவத்தினால் ஏற்பட்ட கங்கையின் பிரவாகத்தை அடக்க அவளை தனது முடியில் முடித்து வைத்துக் கொண்டார் சிவபெருமான் என்றாலும், அவர் முடியில் அவர் வைத்திருந்தது கங்கை நதியின் பிரவாகத்தை மட்டுமே. ஆனால் சில நேரங்களில் கங்கா தேவியும் அங்கு அவர் முடியில் வந்து தங்குவாள். ஆனால் உமையுடன் அவர் தனிமையில் இருக்கும்போது, கங்கா தேவி அங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது உமையின் கண்டிப்பான கட்டளை. அதற்குக் காரணம் தனிமையில் சிவபெருமானுடன் உமை இருக்கும்போது அவர்களை அந்தக் அந்த கோலத்தில் வேறு எந்தப் பெண்ணுமே பார்க்கக் கூடாது, அவர்களால் அவர்களுக்கு எந்த தொல்லையும் ஏற்படக் கூடாது என்பதே.

விஷ்ணு செய்திருந்த ஏற்பாட்டின்படி திருகோணீஸ்வரர் மலையில் ஒரு நாள் சிவனும் பார்வதியும் தனிமையில் கேளிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது கங்கா தேவியானவள் அவர் முடியில் சென்று அமர்ந்து கொண்டு ஒரு பெண்ணின் குரலில் கலகலவென சிரிப்பது போல சப்தம் செய்தாள். 'இதென்ன உங்கள் முடியில் இருந்து எதோ சப்தம் வருகிறது' எனப் பார்வதி கேட்க, அப்போது தன் முடியில் கங்கை அமர்ந்திருப்பதை உணர்ந்த சிவனார் 'ஒன்றும் இல்லையே, கங்கை நதியல்லவா பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. அதன் சப்தமே இது ' என்று கூறி விட்டு, பார்வதிக்கு தெரியாதபடி தன் தலையில் இருந்த கங்கா தேவியை நீர் திவலைகளாக்கி அதை தலையில் இருந்து துடைத்து ஏறிய அந்த நீர்த் திவலைகள் சிவனாரின் பாதத்தில் சென்று விழ, நீர் திவலைகளாக இருந்த கங்கா தேவி சிவனார் பாதத்தில் இருந்து வெளிக் கிளம்பி  திருகோணீஸ்வரர் மலையில் இருந்து பெரும் பிரவாகமாகப் பாய்ந்து அந்த மலையை சுற்றி ஓடியபடி  கடலுடன் கலந்தாள். அப்படி அவள் மலையை சுற்றி ஓடியபோது, அவள் உடலில் இருந்து வழிந்த நீர் இன்னும் சில இடங்களில் கிளை நதியாகப் பாய்ந்து ஓடியது.

இப்படியாக அந்த தென் கயிலையிலும் சிவபெருமானின் அருளினால் கங்கை நதி பிறந்ததும், அதைக் கண்டு மகிழ்ந்த நாரத முனிவர் பிரும்மாவுடன் ஓடி வந்து  விஷ்ணுவிற்கு நன்றி கூற,  அவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்ற  விஷ்ணுவும், கங்கா தேவியும் சிவபெருமானையும் உமையும் தரிசித்து நடந்ததைக் கூறி அவர்களது ஆசிகளை வேண்டி நின்றார்கள். சிவபெருமானும் புன்னகைப் புரிந்து அவர்களுக்கு ஆசி கூறி அனுப்பியப் பின் தன் பாதத்தில் இருந்து வெளிச்சென்ற அந்த கங்கை நதியில் குளித்தால் ஏற்படும் பலவிதமான புண்ணியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார். இமய மலைப் பர்வதத்தில் தன் முடியில் இருந்து வெளியான கங்கை, தென் பகுதியில், அதாவது இமய மலையின் அடிப்பகுதியில் உள்ள தென் பகுதியில், தனது பாதத்தில் இருந்து வெளியேறியதன் மூலம், தனது தலை முதல் பாதம் வரை தன்னை அபிஷேகம் செய்த பலனுடன் கங்கை அங்கு இருக்கிறாள் என்பதினால் அது விசேஷமான கங்கை நதியாக கருதப்படும் என்றும் அதில் ஸ்நானம் செய்பவர்கள் அடைய உள்ள பெரும் பயன்களையும் விலாவாரியாக எடுத்துரைத்தார். அந்த கிளை நதியில் உற்பத்தி ஆன ஒன்றுதான் கதிர்காமனில் ஓடும் மணிக்கங்கை நதியும் ஆகும். திருகோணீஸ்வரர் மலை உச்சியில் உலக அன்னையான உமைக்கு ஒரு ஷணம் கங்கையின் சிரிப்பு மிக அதிக (மஹா) மன வேதனையை தந்ததினால் திருகோணீஸ்வரர் மலையில் உற்பத்தியான அந்த கங்கையின் பெயர் மஹா வலி தந்த கங்கை என்பதை குறிக்கும் வகையில் மாவலிகங்கை என்ற  பெயரைப் பெற்றுள்ளது  என்று சிலர் கருத்துக் கூறுவார்கள்.
......தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Thirumeeyachur- Sree Lalithambigai Temple

Thula Puranam- Part-1

Grama devathas and deities in Vedik temples - 4