Sunday, July 3, 2016

Shri Adi Sankara's historic places (T)

ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் வாழ்க்கையுடன் சம்மந்தப்பட்ட முக்கியமான இரண்டு இடங்கள் என்ன என்பதை பலர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களில் கூட அவற்றைக் குறித்து அதிக செய்திகள் கூறப்படவில்லை. அந்த இரண்டு முக்கியமான இடங்கள் ஒம்காரீஸ்வரர் ஆலயத்தின் அடியில் அவர் அவருடைய குருவை சந்தித்து போதனைகளை பெற்றுக் கொண்டு தவம் இருந்த குகை மற்றும் இரண்டாவது காஷ்மீரத்தில் அவர் தங்கிய ஆலயம் ஆகும்.

ஸ்ரீ ஆதிசங்கரர் கேரளாவில் காலடி எனும் இடத்தில் உள்ள புரானா (அதன் தற்போதைய பெயர் பெரியார்) ஆறு எனும் நதிக் கரையின் அருகில் திரு சிவகுரு மற்றும் திருமதி ஆர்யாம்பாள் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார். முதலில் அந்த தம்பதியினருக்கு குழந்தைகள் எதுவுமே பிறக்கவில்லை என்பதினால் மனம் ஒடிந்து போய் இருந்தார்கள். ஆனால் ஒரு நாள் அவரது தாயாரின் கனவில் தோன்றி சிவபெருமான் தானே விரைவில் அவர்களுக்கு மகனாகப் பிறப்பேன் என வாக்குறுதி தந்தார். விரைவில் திருமதி ஆர்யாம்பாளும் கர்பமுற்று ஒரு ஆண் மகனைப் பெற்று எடுத்தாள். அவரே ஸ்ரீ ஆதி சங்கரர் ஆகும். ஆறு வயதிலேயே ஆதி சங்கரர் அனைத்து வேதங்களையும் புராணங்களையும் கற்று அறிந்தார். ஒருமுறை கேட்டால் அதை மீண்டும் அவர் அப்படியே திரும்பக் கூறுவாராம். விவாதங்களில் அவற்றை மேற்கோள் காட்டுவாராம். அவர் மாபெரும் தத்துவ ஞானி. இந்து சமயத்தில் மட்டும் அல்லாமல் பிற சமய தத்துவங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவற்றை ஆழமாகக் கற்றறிந்தவர். ஆகவே அவர் தத்துவங்களைக் கரைத்துக் குடித்துள்ள தத்துவ ஞானி எனக் கருதப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் குடும்ப வாழ்வைத் துறந்து ஸந்நியாசத்தை ஏற்க வேண்டி வந்தது.

ஒம்காரீஸ்வரர் ஆலயத்தில் ஆதி சங்கரர் தவம் இருந்த குகை


குடும்பத்தை துறந்து ஸன்யாஸத்தை ஏற்றுக் கொண்ட ஸ்ரீ ஆதி சங்கரர் கேரளாவில் இருந்து நடை பயணத்தை மேற்கொண்டு தனக்கு ஆன்மீக போதனைகள் அனைத்தையும் கற்றுக் கொடுக்க தக்க குருவைத் தேடி பல்வேறு இடங்களுக்கும் செல்லத் துவங்கினார். தனக்கு வேதாந்தத்தில் அனைத்தையும் கற்றுக் கொடுக்க உள்ள ஆசான் தெய்வீகத்திதை சென்றடையும் இறுதி நிலையான பிரும்ம நிலையை எட்டியவராக இருக்க வேண்டும் என எண்ணினார். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் யோகி நர்மதை நதியின் அருகில் எங்கோ அவருக்காக காத்திருக்கிறார் என்பதாக அவர் மனதும் கூறியது.

ஸ்ரீ ஆதி சங்கரரே சிவபெருமானின் அவதாரமாக மனித ரூபத்தை எடுத்து இருந்தாலும், அவர் மனிதராகப் பிறந்து விட்டதினால் ஒரு சராசரி மனிதருக்கு உண்டான மன நிலை மற்றும் ஆற்றல்களுடனேயே வாழ வேண்டி இருந்தது. ஆகவே அவர் பயணத்தில் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் முடிந்த அளவு தவத்தில் அமர்ந்து கொண்டார். அவர் சென்று கொண்டு இருந்த பாதையோ பல இடங்களிலும் பல்வேறு தடைகளைக் கொண்டு அமைந்தவையாக இருந்தன. வழியில் கொடுமையான வன விலங்குகளையும், மூர்க்கத்தனமான மனிதர்களின் தடைகளையும் சந்தித்து அவற்றையும் உடைத்துக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது. பயணத்தின் முடிவாக அவர் ஒம்காரீஸ்வரர் நதிக்கரைக்கு இரண்டு மாதங்களில் சென்றடைந்தார். அங்கு பல முனிவர்களின் ஆஸ்ரங்களையும் கடந்து முடிவாக தமது குருவான ஸ்ரீ கோவிந்த பாகவத்பாதாவின் ஆஸ்ரமத்தை அடைந்தார். குகையில் ஆதி சங்கரரின் சிலை

ஒம்காரீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாகும். அற்புதமான, அமைதியான தோற்றம் தந்தவண்ணம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நர்மதை நதி முற்றிலும் சூழ்ந்து இருக்க அதன் நடுவில் தீவு போல அமைந்து உள்ள மலை மீது அந்த ஆலயம் உள்ளது. நர்மதை நதியை தாண்டி அந்தப் பக்கம் சென்றால் ஆலயம் அமைந்துள்ள மலையின் அடிப்பகுதியை அடைய முடியும். முன் காலத்தில் அந்த ஆலயத்துக்கு செல்லும் மக்கள் நதியில் நனைந்து கொண்டே நடந்து செல்வார்கள். சிலர் நீந்திச் செல்வார்கள். சில இடங்களில் படகுகளில் செல்லும் வகையில் வழி அமைந்து இருந்தது. ஆனால் இன்று யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் தமது பிரார்த்தனைகளை மனதில் ஏந்திக் கொண்டு, முக்கியமாக ஸ்ராவண மாதங்களில் ஆலயத்துக்கு நடந்தே செல்ல விரும்புவதினால் இரண்டு பெரிய பாலங்கள் நதியின் மீது அமைக்கப்பட்டு உள்ளன. ஆலயத்தை சுற்றி ஓடும் நர்மதை நதியோ ஓம் வடிவில் உள்ளதினால் இந்த ஆலயத்துக்கு ஒம்காரீஸ்வரர் என்ற பெயர் வந்துள்ளதாகக் கூறுவார்கள்.

ஒம்காரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஜ்யோதிர்லிங்கமோ பாணலிங்கம் எனப்படுவதாகும். தெய்வீகத் தன்மை கொண்ட, ஆதியில் இருந்து உருவான பாணலிங்கம் இயற்கையில் உருவான கல்லாகும். பாண என்றால் சிவபெருமான் என்பதான அர்த்தம் என்கின்றார்கள். நீண்டும், நேர்வட்டமாகவும் பல்வேறு உருவங்களில் காணப்படும் பாணலிங்கங்கள் மனிதர்களால் அந்த ரூபத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. வேதங்களும், புராணங்களும் சிவபெருமானின் சக்தியை உள்ளடக்கியவையே பாணலிங்கம் என்பதாக கூறுகின்றன.

பாணலிங்கத்தைக் குறித்த கதை புராணங்களில் ஒன்றான 'அபரார்ச்சித்த பரிபச்சா' (205,1-26) எனும் நூலில் காணப்படுகின்றது. அந்தக் கதையின்படி முன் ஒரு காலத்தில் பாணசுரா என்றொரு அசுரன் இருந்தான். அவன் ஹிரண்யகசிபுவின் மகனான பக்த பிரகலாதனின் மகனான பாலிஎன்பவரின் நூறு மகன்களில் ஒருவன். அவன் சிவபெருமானை துதித்து கடுமையான தவம் இருந்து வானத்திலே பறக்கும் நகரமான திரிபுரா எனும் நகரை அவரிடம் இருந்து பெற்று இருந்தான். அந்த நகரம் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு எனும் உலோகங்களினால் ஆன மூன்று அடுக்குக்களைக் கொண்டது. அது மட்டும் அல்ல சிவபெருமான் தன்னுடைய சக்திகளை அடக்கி வைத்து இருந்த ஒரு சிவலிங்கத்தையும் அவரிடம் இருந்து பெற்றான். அதனால் அவனிடம் இருந்த லிங்கத்தின் பெயர் பாணலிங்கம் என்று ஆயிற்று.பறக்கும் நகரமான திரிபுராவில் பாணாசுரன் தங்கத்திலான நகரில் வாசித்தான். அந்த மூன்று நகரங்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போதுதான் அதை அழிக்க முடியும் என்பது விதி. அளவற்ற ஆற்றலைப் பெற்று இருந்தவன் அனைவரையும் துன்புறுத்தினான். அவனது அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே இருக்க அவனை அழிக்க எண்ணிய சிவபெருமான் பினாகா எனும் தனது விசேஷ வில்லில் இருந்து அம்பை செலுத்தி அந்த பறக்கும் நகரமான திரிபுராவை சுக்குநூறாக வெடித்து சிதற அடித்து அதை அழித்தார். திரிபுரா நகரம் சுக்கல்களாகி பல்வேறு இடங்களிலும் விழுந்தன. அவற்றில் ஒன்று நர்மதை நதியாகும். வெடித்துச் சிதறிய திரிபுரா நகரில் பாணசுரா வைத்து இருந்த பாணலிங்கமும் அடக்கம் ஆகும். நர்மதை நதியில் விழுந்த அந்த லிங்கம் பலகோடி துண்டுகளாக உடைந்து நதியில் மூழ்கிற்று. அதன்பின் கோபம் அடங்கிய சிவபெருமான் நர்மதை நதியின் கரையிலேயே அமர முடிவு செய்து ஒம்காரீஸ்வரர் ஆலயத்தில் பாணலிங்கமாக சென்று அமர்ந்து கொண்டார்.

பண்டிதர்கள் சிலரின் கூற்றின்படி தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து நர்மதை நதிக்கரையில் கற்களை சிவலிங்கங்களாக ஆராதனை செய்து பல்வேறு மந்திரங்கள் ஓதி பூஜித்தப் பின் அந்த சிவலிங்கங்களை நதிக்கரையில் விட்டு விட்டு செல்வது உண்டு. அவற்றில் சில பூமியில் புதைந்து போயின, சில நதியில் மூழ்கி விட்டன. அப்படி நதியில் மூழ்கிய சிவலிங்கங்கள் சில சிவபெருமானின் சக்தியைக் கொண்டவையாக இருந்தன. காலப்போக்கில் அந்த லிங்கங்களே பாண லிங்கங்களாகின. ஆகவேதான் நர்மதை நதியில் இருந்து கிடைக்கும் பாணலிங்கம் பூமியில் இருந்து கிடைக்கும் மற்ற லிங்கங்களை விட அதிக சக்தி கொண்டவையாக உள்ளன. குகையின் அன்றைய தோற்றமும் 
இன்றைய தோற்றமும்

ஒம்காரீஸ்வரர் ஆலயத்துக்கு செல்ல மலை மீது ஏறும் வழியில் மலையின் அடிவாரத்தில் சிறிய குகை ஒன்று உள்ளதைக் காணலாம். ஸ்ரீ ஆதி சங்கரர் தனது குருவை சந்திக்க நர்மதை நதிக்கரையில் இருந்த ஒம்காரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்தபோது அந்த குகையில்தான் ஸ்ரீ கோவிந்த பாகவத்பாதா ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருந்தார். அவரைக் கண்டதுமே ஸ்ரீ ஆதி சங்கரர் பேரானந்த வெள்ளத்தில் மூழ்கினார். அவரிடம் இருந்து தீக்ஷையும் போதனைகளையும் பெற்றுக் கொள்ள ஆசை கொண்டார்.

அதை போலவே ஸ்ரீ கோவிந்த பாகவத்பாதாவும் தாம் எதிர்பார்த்துக் காத்திருந்த, தாம் தீட்ஷை தந்து போதனை செய்ய விரும்பிய இளம் சன்யாசியின் வரவை எதிர்பார்த்து அங்கு காத்திருந்தாராம்.

அந்த குகையில் தங்கி இருந்து ஸ்ரீ ஆதி சங்கரருக்கு ஞானம் மிக்க மேல்நிலை ஆன்மீக போதனைகளை அவருடைய குருவான ஸ்ரீ கோவிந்த பாகவத்பாதா செய்தார். இந்து தர்ம நெறி, வேதாந்தம், தியானம், தர்மம் மற்றும் சமாதி நிலை போன்றவற்றின் உச்சகட்ட நிலைகளை போதனை செய்தாராம். பல ஆண்டுகள் அந்த இருவரும் அதே குகையில் தங்கி இருந்துள்ளார்கள். எந்த நிலையிலும் அவர்கள் வெளியில் வரவே இல்லை. குளிப்பதற்குக் கூட அந்த குகையில் இருந்த ரகசிய வழி மூலம் நர்மதை நதிக்கு சென்று குளித்து விட்டு வந்தார்களாம். அந்த ரகசிய வழியும் தற்போது அடைப்பட்டு உள்ளதாம். தற்போது அந்த குகையின் புனிதத் தன்மையைக் கருதி எவரையும் உள்ளே செல்ல அனுமதிப்பது இல்லை. அந்த குகை இருந்தது பல காலம் வெளியில் எவருக்கும் தெரியாமல் இருந்ததாம். ஆனால் பரமாச்சார்யாவின் ஆணைப்படி ஸ்ரீ ஆதி சங்கரர் தவம் இருந்ததாக கூறப்பட்ட அந்த குகையை கண்டுபிடிக்க பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த திரு நாகராஜா சர்மா என்பவர்அந்தக் குகை ஒம்காரீஸ்வரில் இருப்பதைக் கண்டு பிடித்தார். அதற்குப் பிறக்கவே அந்த குகையின் மகத்துவம் வெளியில் தெரிந்ததாம். அதைக் கேள்விப்பட்ட நான் 1984-85 ஆம் வாக்கில் அங்கு சென்று குகையை தரிசனம் செய்த பின் அது குறித்து தமிழில் வெளியாகி வந்திருந்த தாய் எனும் வார இதழில் அது குறித்து எழுதினேன். குகையைக் கண்டு பிடித்த 
ஜபல்பூர் திரு நாகராஜா ஷர்மா

திரு ஜபல்பூர் நாகராஜா சர்மா என அழைக்கப்பட்டவர் ஜபல்பூரில் உள்ள மின்வாரிய நிலையத்தில் பணியாற்றியவர். மஹா பெரியவா ஆணையிட்டதை ஏற்று தமது பதவி காலத்திலும் சுமார் ஏழு ஆண்டுகாலம் பல இடங்களுக்கும் சென்று ஸ்ரீ ஆதி சங்கரரும், அவருடைய குருவான ஸ்ரீ கோவிந்த பாகவத்பாதாவும் தவம் இருந்த அந்த குகையை தேடி அலைந்தார். முடிவாக 1978 ஆம் ஆண்டு வாக்கில் கண்டு பிடித்துள்ளார். அந்த குகைக்குள் ஐந்து சுரங்கப் பாதைகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்று ஆலயத்தின் மேல் உள்ள ஆலய சன்னிதானத்தை சென்றடையும் வகையிலும், இன்னொன்று உஜ்ஜயினிக்கு செல்லும் வகையிலும், மூன்றாவது நகருக்குள் நுழையும் பாதையாகவும், நான்காவது நர்மதை நதியின் அடிப்புறத்தை சென்று அடையும் வகையிலும் இருந்துள்ளதாகவும், ஐந்தாவது குறித்த செய்தி இல்லை எனவும் தெரிகின்றது. அந்த குகை இப்படியாக இருந்திருக்கலாம் என மஹா பெரியவா ஒரு மாதிரி வரைபடத்தை திரு நாகராஜா சர்மாவிடம் காட்டியதாகவும், அந்த குகையை கண்டு பிடித்ததும், மஹா பெரியவா காட்டிய மாதிரி வரைபடத்தைப் போலவே அந்த குகை அமைந்து இருந்ததைக் கண்ட திரு நாகராஜா சர்மா அவர்கள் அதிர்ந்து போனாராம். இதில் மற்றொரு ஆச்சர்யமான உண்மை என்ன என்றால் அந்த குகை கண்டுபிடிக்கப்படும்வரை அந்த குகை இருந்தது ஆதி சங்கரர் நிறுவியதாக கூறப்படும் மடங்களின் அன்றைய தலைமை மடாதிபதிகள் யாருக்குமே தெரிந்திருக்கவில்லையாம். காஞ்சி பெரியவாளைத் தவிர ஆதி சங்கரர் தவம் இருந்ததாக கூறப்படும் குகை நர்மதை நதியின் கரையில் ஷங்கல்கட் எனும் எங்கோ உள்ளதாக சிறு குறிப்பு மட்டும் ஜ்யோதிர் மடத்தின் பீடாதிபதிக்கு இருந்ததாம். ஆனால் அது எங்கே உள்ளது என்பது தெரியவில்லை என்றாராம். அது மட்டும் அல்ல பல வருடங்களாக ஒம்காரீஸ்வரருக்கு விஜயம் செய்து ஆலயத்தில் வழிபட்டு வந்த எந்த ஒரு பக்தருக்கு கூட அந்த குகையின் மகத்துவம் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை அடர்ந்த இருட்டாக பாழடைந்த நிலையில் இருந்த அந்த குகை மனிதர்கள் நுழைய முடியாத இடம் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனாலும் திரு நாகராஜா ஷர்மாவின் முயற்சியினால் மட்டுமே இன்று பக்தர்கள் அங்கு சென்று ஆதி சங்கரரை வழிபட முடிகின்றது என்பது அவருக்கு கிடைத்துள்ள பெருமை ஆகும்.

மூன்று ஆண்டுகள் அந்த குகையில் ஸ்ரீ ஆதிசங்கரர் தமது குருவுடன் தங்கி இருந்துள்ளார். மூன்றாம் ஆண்டில் அவருடைய குரு ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது ஒருமுறை அங்கு பெய்த பெரும் மழையினால் அந்த குகையே மூழ்கி விடும் எனும் அளவில் நர்மதை ஆற்றில் வெள்ளைப் பெருக்கு ஏற்பட ஆதி சங்கரர் அந்த குகையின் முகப்பில் ஒரு குடுவையைக் கட்டி தொங்க விட்டார். அந்த நதியின் வெள்ளம் குகைக்குள் நுழையாமல் அந்த குடுவையில் அடைக்கலம் ஆயிற்றாம். அதன் பின் நர்மதா தேவியை அவளது சீற்றத்தை தணித்துக் கொள்ளுமாறு ஆதி சங்கரர் வேண்டிக் கொள்ள வெள்ளம் அப்படியே நின்று விட்டதாம். அதன் பிறகு ஸ்ரீ ஆதி சங்கரர் அங்கிருந்து சென்றபின், சிலகாலம் அங்கிருந்த குரு எப்போது அங்கிருந்து கிளம்பிச் சென்றார் என்பதோ, எங்கு சென்றார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை.

ஸ்ரீ கோவிந்த பாகவத்பாதா அங்கிருந்து கிளம்பி காசிக்கு செல்லுமாறு ஆதிசங்கரருக்கு ஆணையிட்டாராம். அவர் கூறியபடியே காசியை சென்றடைந்த ஸ்ரீ ஆதி சங்கரரும் அங்கு பல வித்வான்களையும், அறிஞர்களையும் தமது வாதத் திறமையினால் தோற்கடித்து வெற்றி கொண்ட பின் தன் மீது சுமத்தப்பட்டு இருந்த தவறான எண்ணங்களையும் களங்கங்களும் விலக வழி வகுத்தார்.  சில காலம் அங்கிருந்த ஆதி சங்கரர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

காஷ்மீரத்தில் ஸ்ரீ ஆதி சங்கரருக்கு ஆலயம் எழுந்த கதை

காசியில் இருந்து கிளம்பிய ஸ்ரீ ஆதி சங்கரர் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆன்மீக தர்கங்களில் கலந்து கொண்டு விவாதம் செய்து பெரும் பண்டிதர்களை தோற்கடித்து வெற்றி கொண்டார். காஷ்மீரத்துக்கு சென்ற ஸ்ரீ ஆதி சங்கரர் அங்கும் சிறிய மலை மீது இருந்த ஒரு குகை போன்ற இடத்தில் தங்கினார். அவர் தங்கி இருந்த இடம் தற்போது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரிய ஆலயம் என பெயர் மாறி உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கரரின் காஷ்மீர் விஜயம் இந்து மதத்துக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்தது.

அந்த காலகட்டத்தில் காஷ்மீரத்தில் சைவ வழிபாடு பெரும் அளவு இருந்துள்ளது. ஸ்ரீ ஆதி சங்கரர் காஷ்மீரில் இருந்தபோதுதான் அவர் சௌந்தர்யலஹரி ஸ்லோகங்களை இயற்றியதாகவும், அங்குதான் அவர் சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என்பதையும் சக்தியின் மேன்மையையையும் உணரத் துவங்கினார் என்றும் கூறுகிறார்கள். அங்குதான் சௌந்தர்யலஹரி ஸ்லோகங்களை இயற்றி ஸ்ரீ சக்கரத்தையும் வடிவமைத்தாராம். காஷ்மீரில் ஒரு பெண்மணியுடன் ஆன்மீக விவாதம்

ஸ்ரீ ஆதி சங்கரர் காஹமீரத்தில் இருந்தபோதுதான் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினார் என்பதின் காரணம் என்ன என்பதற்கு சில காஷ்மீரி பண்டிதர்கள் கூறும் கிராமியக் கதை இது. ஸ்ரீ ஆதி சங்கரர் காஷ்மீரத்துக்கு சென்று இருந்தபோது அவர் விசார்னாக் எனும் இடத்தில் தமது சிஷ்யர்களுடன் தங்கி இருந்தார். அவருக்கு தங்க ஏற்பாடுகள் செய்திருந்தவர் சமையல் செய்துகொள்ள அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்திருந்தாலும் அடுப்பை எரிக்க எந்த சாதனமும் (தீப்பெட்டி, எரியும் விளக்கு போயன்றவை) வைத்திருக்கவில்லை என்பதினால் அவர்களால் இரவு அடுப்பை மூட்டி சமையல் செய்ய முடியாத நிலை இருந்தது. மறுநாள் அவர்களுக்கு சமையல் செய்து தர ஒரு பெண்மணியை அனுப்பி இருந்தார்கள். சமையல் செய்ய வந்த பெண்மணி அடுப்பை எரிக்க எந்த சாதனம் அங்கு இல்லை என்பதினால் அடுப்பை மூட்டித் தருமாறு விருந்தாளிகளை வேண்டிக் கொள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் முதல் யாராலும் தீப்பெட்டி இல்லாமல் அடுப்பை எரிய வைக்க முடியவில்லை. அதைக் கண்டு சற்றே கிண்டல் செய்த பெண்மணி இரு குச்சிகளை எடுத்து உராசினாள். அதில் தீப்பொறி பறக்க அதைக் கொண்டு சமையல் அடுப்பை மூட்டி சமையல் செய்தார். அதைக் கண்டு ஸ்ரீ ஆதி சங்கரர் திகைத்தார். அது மட்டும் அல்ல. அந்தப் பெண்மணி நன்கு கற்றறிந்தவர், அவருடன் ஆன்மீக தர்க்கம் செய்ய விரும்பினாள் என்பதினால் அவளுடன் சுமார் பதினேழு நாட்கள் சக்தியின் மகிமை மற்றும் பிற ஆன்மீக விஷயங்கள் குறித்து தர்க்கம் செய்தார். முடிவில் வாதத்தில் அவர் வென்றாலும், சக்தியின் மேன்மைக் குறித்த விளக்கங்களுக்கு ஸ்ரீ ஆதி சங்கரரால் பதில் கூற முடியவில்லை. அவரும் சக்தியின் மகிமையை ஏற்க வேண்டி இருந்தது. சக்தி தேவி இன்றி சிவனுக்கு தனி சக்தி இல்லை என்பதை உணர்ந்தார். அதை அவருக்கு புரிய வைக்கவே பார்வதி தேவி அப்படி ஒரு நாடகத்தை நடத்தினார் என்பதாக பண்டிதர்கள் நம்பினார்கள். இந்த நிகழ்சசியும் பீகார் மாநிலத்தில் மஹிஷ்மதி என்ற ஊரில் ஸ்ரீ ஆதி சங்கரர் அங்கிருந்த வித்வானான மண்டன மிஸ்ரா, மற்றும் அவருடைய மனைவியுடன் புரிந்த விவாதத்தை ஒத்து உள்ளது. அங்கும் மண்டன மிஸ்ரா, மற்றும் அவருடைய மனைவி இருவதும் ஆதி சங்கரருடன் நடைபெற்ற விவாதத்தில்  தோற்றுப் போனார்கள். 

ஒரு கட்டத்தில் நாட்டில் நிலவிய குழப்பமான நிலைமை, புத்த மற்றும் ஜைன மதங்களின் ஆதிக்கம் போன்றவை மெல்ல மெல்ல பரவத் துவங்கிய நேரத்தில், இந்து மதம் மெல்ல மறைந்து விடுமோ என்ற அச்சம் தரும் நிலைமை நிலவியது. அந்த நேரத்தில்
ஸ்ரீ ஆதி சங்கரருடைய இந்து மத விளக்கங்கள், வேதாந்த, உபநிஷ மற்றும் ஆன்மீக புராணங்களின் மறுமலர்ச்சியின் அடிப்படையில் அமைந்திருந்த போதனைகள் இந்து மதம் மீண்டும் வலிமையோடு எழுவதற்கு காரணமாக அமைந்தன.

சனாதன தர்மத்தை நிலைநிறுத்த A.D-788-820 ஆண்டுகளில் வாழ்ந்த மஹா யோக புருஷரான ஸ்ரீ ஆதி சங்கரர் ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் காஷ்மீரத்துக்கு விஜயம் செய்தார் என்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அவர் அங்கு சென்று தங்கி இருந்து தவம் செய்த இடமே தற்போது காஷ்மீரத்தில் உள்ள ஸ்ரீ சங்கராச்சாரியார் ஆலயம் ஆகும். காஷ்மீரில் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஆலயம் 
Photo courtesy:
https://en.wikipedia.org/wiki/File:The_Ancient_Shankaracharya_Temple_(Srinagar,_Jammu_and_Kashmir).jpg
 
நான்காம் நூற்றாண்டில் அமைந்ததாக கூறப்படும் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஆலயம் அந்த காலத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஆலயம் என்ற பெயரில் அமைந்து இருக்கவில்லை. ஸ்ரீநகரில் தென்மேற்கு பகுதியில் பூமியின் மட்டத்தில் இருந்து சுமார் 1100 அடி உயரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ஸ்ரீ நகரில் இருந்து செல்ல பஸ் மற்றும் பிற வாகன வசதிகள் உள்ளன. இந்த ஆலயம் முன் காலத்தில் பல்வேறு பெயர்களில் இருந்துள்ளன. தக்தே சுலைமான் (Takht-e-Sulaiman) என்ற பெயரிலும் இது இருந்தது என்றாலும் 1846-1857 AD ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த டோக்ரா பிரிவை சார்ந்த குலாப் சிங் என்பவர் ஆட்சியில்தான் இந்து பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக சங்கராச்சாரியார் ஆலயம் என்ற பெயரைப் பெற்று அதற்குள் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். அந்த ஆலயத்துக்கு ஏறிச் செல்ல படிக்கட்டும் அவருடைய ஆட்சியில்தான் அமைக்கப்பட்டதாம். 1925 ஆம் ஆண்டு அங்கு விஜயம் செய்த மைசூர் மஹராஜா அந்த ஆலயத்துக்கு மின்சார இணைப்பு கிடைக்க வழி செய்தாராம். 1961 ஆம் ஆண்டில் துவாரகா பீடத்தின் மடாதிபதி அந்த ஆலயத்தில் ஆதி சங்கரருடைய சிலையை பிரதிஷ்டை செய்தாராம்.

இந்த ஆலயம் மதத்தின் அடிப்படையில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை. அற்புதமான கட்டிடக் கலையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த ஆலயம் இருபது அடி உயர எண்கோண (8) வடிவில் அமைந்துள்ள பீடத்தில் உள்ளது. அதன் படிகளில் காணப்படும் முக்கியமான செய்திகள் படிக்க முடியாமல் அழிந்துள்ளன. எட்டு என்பது இந்து மதத்தில் பேராற்றல் கொண்ட முக்கியமான எண் ஆகும். காஷ்மீர் ஸ்ரீ சங்கராச்சாரியார் 
ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம்

இந்த ஆலயம் கட்டப்பட்ட காலத்தை குறித்தும், கட்டியவர்களைப் பற்றியும் சில மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. 2629 to 2564 BC ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த சண்டிமான் எனும் மன்னனே இதைக் கட்டி உள்ளதாக சில காஷ்மீர் பண்டிதர்கள் கூறுகிறார்கள். இயற்கை சீற்றத்தினால் பழுதடைந்த அந்த ஆலயத்தை 426–365 BC. ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ராஜ கோபதத்யா எனும் மன்னன் சீர் அமைத்ததாகவும், மீண்டும் பூகம்பத்தினால் பழுதடைந்த ஆலயத்தை 697–734 A.D. ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த கரகோட்டே வம்சத்தை சேர்ந்த மன்னனான லலிதாதித்யா என்பவர் சீரமைத்தார் என்றும் செய்திகள் உள்ளன. இந்த ஆலயம் தமது வாழ்க்கையில் பல முறை பழுதடைந்து சீரமைக்கப்பட்டு உள்ளது என்பது வரலாறாகும்.

இந்த ஆலயம் கட்டப்பட்ட காலம் குறித்த சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.
திரு கல்கா என்பவர் எழுதி உள்ள வரலாற்று நூல் ஒன்றில் இந்த ஆலயத்தை 371 BC. ஆண்டு ஆட்சியில் இருந்த மன்னன் கோபதத்யா என்பவரே கட்டி உள்ளதாக தெரிவிக்கின்றார். திரு கல்கா எழுதி உள்ள 'ராஜதாரங்கணி' அதாவது நதிகளை போன்று ஆட்சியில் ஓடிய மன்னர்களின் வரலாறு என்பதாக அர்த்தம் தரும் வகையில் அமைந்துள்ள, சமிஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ள அந்த நூல் காஷ்மீர ஆட்சியாளர்களின் வரலாற்றைக் கூறும் நூலாகும். ஆனால் வேறு சிலரோ இந்த ஆலயம்  200 BC ஆண்டில் ஆட்சி செய்தவரும், பேராற்றல் மிக்க அசோக சக்ரவத்தியின் மகனுமான ஜாலூகா எனும் மன்னன் கட்டியதாகும் என்றும் கூறுகிறார்கள்.

இன்னும் சில ஆராய்ச்சியாளர்களோ அந்த ஆலயம் முதலில் புத்த விஹாராவாக இருந்தது எனவும் அதையே ஆதி சங்கரர் இந்து மத வழிபாட்டு தலமாக மாற்றி அமைத்தார் என்றும் கூறுகிறார்கள். பெர்ஷியா நாட்டை சேர்ந்தவர்களோ அது மன்னன் சாலமன் என்பவருடைய இன்மகிழ்வு தரும் இடமாக (தோட்டம்) இருந்தது என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக அந்த ஆலயத்தில் பெர்ஷிய மொழிகளில் பொறிக்கப்பட்டு உள்ள பல செய்திகளைக் காட்டுகிறார்கள். இன்றோ அந்த ஆலயம் அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் விஜயம் செய்யும் ஒரு முக்கியமாக வழிபாட்டு தலமாக மாறி உள்ளது.

ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் இந்த ஆலயம் ஸ்ரீநகரில் உள்ள ஆலயங்களில் மிகப் பழமையான ஆலயம் ஆகும். இங்கு செல்ல மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலமே சிறந்தது என்கின்றார்கள்.

ஸ்ரீ ஆதி சங்கரர் தமது 32 வயதில் மறைந்து விட்டதாக கூறுகிறார்கள். பல்வேறு இடங்களுக்கும் சென்று பல வல்லுனர்களையும், பண்டிதர்களையும், வித்வான்களையும் ஆன்மீக தரகங்களில் தமது வாதத் திறமையினால் வெற்றி கொண்ட ஆதி சங்கரர் இமயமலையில் ஜோஷியில் ஒரு மடத்தைக் கட்டியபின், பத்ரிநாத் ஆலயத்தையும் அமைத்து விட்டு, கேதார்நாத் மலை உச்சிக்கு சென்று சிவலிங்கத்தில் ஐக்கியமாகி அப்படியே  மறைந்து விட்டதாகக் கூறுகின்றார்கள்.

No comments:

Post a Comment