Tuesday, June 30, 2015

Raghuvamsam - 15

ரகுவம்சம்-15
- சாந்திப்பிரியா - 
ரகுவம்ச ஆட்சி தொடர்வு  
முறிந்தது

பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு  ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப் போய் சலிப்பு ஏற்பட, தனது மகனான அக்னி வருணனை ஆட்சியில் அமர்த்தி விட்டு நைமிசாரண்ய வனத்துக்குச் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டார். அக்னி வருணன் ஆட்சிக்கு வந்த நேரத்திலே நாட்டில் அவருக்கு எந்த விதமான சங்கடமும் இல்லாமல் இருந்தது. அக்கம்பக்கத்து மன்னர்கள் அடங்கிக் கிடந்தார்கள். நாட்டில் செல்வம் கொழித்துக் கிடந்தது. அரசாள்மை விதிமுறைகள் என்பதெல்லாம் வறைமுறையோடு வழி வகுக்கப்பட்டு நடைமுறையில்  இருந்தன என்பதினால் அந்தந்த அதிகாரிகள் முறையோடு அரசர் சார்பிலே ஆதிக்கம் செய்து வந்தார்கள். மக்களுக்கு எந்தக் குறையுமில்லை. ஆகவே அக்னி வருணன் நாட்டு நடப்பின் எதைக் குறித்தும் கவலைக் கொள்ளாமல் சிற்றின்ப வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தான். காமம் தலைக்கேற பெண்கள் விஷயத்தில் துர் நடத்தைக் கொண்டவனாக மாறிக் கொண்டே வந்தான். காமுகனாக மாறிக் கொண்டே இருந்த அவனுக்கு எந்த அமைச்சரும் முன் வந்து அறிவுரைக் கூற முடியாமல் பயந்தார்கள். ஏன் என்றால் அவர்கள் எத்தனை எடுத்துக் கூறியும் அவன் தனது நடத்தையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அளவுக்கு மீறி சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டதினால் அக்னி வருணனுக்கு  மெல்ல மெல்ல உடலில் தீர்க்க முடியாத தேக வியாதி பிடித்துக் கொண்டது.  சில நாட்களிலேயே அவனால் நடக்கக் கூட முடியாமல் போயிற்று. 

 
அதனால் அக்னி வருணனுக்கு குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை என்பதினால் வியாதி பிடித்து கிடந்த அக்னி வருணனுக்குப் பிறகு அடுத்து ராஜ்யத்தை யார் ஆளப்போகிறார்கள் என்ற கவலையும் மந்திரிமார்களுக்கு எழுந்தது. பல ஆண்டுகளாக அரசனோ மக்கள் யாரையுமே சந்திக்கவில்லை. எப்போதாவது, எதற்கேனும் அரசனை சந்திக்க விரும்பிய மக்களுக்கு அரசன் புத்திர பாக்கியம் பெறுவதற்காக தபத்தில் அமர்ந்துள்ளதாகவும், ஆகவே அவரை தொந்தரவு செய்ய இயலாது என்று பொய் கூறி,  அரசனுக்கு வந்திருந்த வியாதி குறித்த விஷயத்தை அடியோடு மறைத்து வைத்திருந்தார்கள். அரண்மனையில் கூட அரசனைக் குறித்த எந்த செய்தியுமே யாருக்கும் தெரியவில்லை. அரண்மனையின் அறையிலேயே முடங்கிக் கிடந்த அரசனும் ஒரு நாள் மரணம் அடைந்தான்.

அரசன் மரணமும் அடைந்த பின் அதை வெளியில் தெரியாமல் மறைத்து வைத்து அமைச்சர்கள் கூடி ஆலோசனை செய்த பின் கைதேர்ந்த பண்டிதரை அழைத்து  அவரைக் கொண்டு யாகாக்கினி  எனும் யாகம் செய்வதைப் போல போலி நாடகம் நடத்தி, அந்த அக்னிக்குள் அரசனை மறைத்து வைத்து அவர் உடலை எரித்தார்கள். அனைத்து காரியங்களும் முடிந்ததும் அரசனுக்கு பிள்ளை ஏதும் இல்லை என்றாலும் அவனுடைய மனைவி  அரசாள்வதற்கு தேவையான அனைத்து சத்குணங்களையும் பெற்று இருந்தாள் என்பதை அறிந்து கொண்ட மந்திரிகள் அவளையே  நாட்டை ஆளுமாறு கோரினார்கள்.  ராஜ்யத்தை ஆள்வதற்கு அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்றாலும்,  ரகுவம்ச ஆட்சி தழைத்திட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பல காலம் நல்லாட்சி தந்து வந்தாள்.

காளிதாசரின் ரகுவம்ச காவியம்   முடிந்தது 
--------------------------

 ரகுவம்சம்: ஒரு பார்வை  
அக்னி வருணனுக்கு முன்பாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து கொண்டிருந்த ரகுவம்ச பரம்பரையினர் துறவறம் மேற்கொண்டோ, தத்தம் ஆயுளை தாமே முடித்துக் கொண்டோ தமது வாரிசுகளுக்கு ராஜ்ய பதவியை தந்துவிட்டு தேவலோகம் போய்  சேர்ந்து விட்டார்கள். அக்னி வருணனின் மனைவி ஆண்டபோதும் அவளது ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை. அவள் தனது முன்னோர்களின் ஆட்சியைப் போலவே திறமையாக ஆண்டு வந்தாள் என்றாலும் வம்சாவளியாக ஆண்டு வந்த ரகு பரம்பரை ஆட்சியின் பின்னலில் ஒரு இழை அறுந்து விட்டது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.  ஏன் என்றால் பிள்ளைகளை இல்லாத அவளுக்கு பிறகு நாட்டை யார் ஆண்டார்கள் என்பது தெரியவில்லை. ஆகவே அக்னி வருணனின் மறைவே ரகுவம்ச ஆட்சியின் முடிவு என்றே கருத வேண்டி உள்ளது.  

சில குறிப்பேட்டுக்களில் அக்னி வருணனுக்குப் பிறகு சூரிய வம்சத்தின் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்த 35 அரசர்கள் ஆண்டு வந்துள்ளதாகவும் அதில் கடைசியாக ஆண்ட மன்னன் கிழக்கு சூரத் நகரை ஆண்டு வந்த  சுமித்ரா எனும் மன்னன் என்றும் காணப்படுகிறது.  அந்த மன்னனே அயோத்தியாவை ஆண்ட கடைசி சூரிய வம்சத்து மன்னன்  என்றும் காணப்படுகிறது என்றாலும் அது பற்றிய மேல் விவரங்கள் தெரியவில்லை. மேலும்  அக்னி வருணனின் மறைவுக்குப்  பிறகு பதவி ஏற்ற ஷிக்ராகு எனும் மன்னனின் மகனான மாரு  என்ற மன்னன் யோகக் கலைகளில் சிறந்தவராக விளங்கினார் என்றும் அவரே கலியுகத்தில் பிறந்து மீண்டும் ரகு வம்சத்தை ஸ்தாபிக்க உள்ளார் என்ற செய்தி  சிலரிடம் காணப்படுகிறது. ஆனால் அவர்கள் அக்னி வருணனின் மனைவியின் வழித் தோன்றல்களா அல்லது எந்த விதத்தில் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள் என்பதெல்லாம் வரலாற்றில் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அக்னி வருணனுடைய முந்தைய மன்னர்களின் மகன் வழியினராக இருந்திருக்கலாம் என்றும் வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதே போலவே மன்னன் மாருவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மன்னர்களில் எட்டாவது மன்னனாக இருந்த பிரஹத்பால் எனும் மன்னன் மகாபாரதப் போரில் பங்கேற்றவர் என்றும், அவர் மகாபாரதப் போரில் கௌரவர்கள் சேனையில் பங்கேற்று அபிமன்யுவினால் மரணம் அடைந்தவர் என்றும் சில செய்திகள் உள்ளன. ஆனால் அவை எதுவுமே காளிதாசனின் ரகுவம்சத்திலோ அல்லது வால்மீகியின் ராமாயணத்திலோ காணப்படவில்லை. 
 
காளிதாசன் எழுதிய ரகுவம்சம் அக்னி வருணன் ஆட்சியைக் குறித்து எழுதியதும் மேலே தொடராமல் முடிந்து விட்டது. அக்னி வருணனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவரது மனைவிக்குப் பின்னர் ராஜ்யத்தை ஆண்ட ரகுவம்சத்தினர் யார், யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கூறியபடி காளிதாசன் எழுதிய காவியத்தில் பல பகுதிகள் கிடைக்கவில்லை என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதைக் குறித்த இன்னொரு செய்தியும் உள்ளது.

உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் போஜராஜன் காளிதாசரிடம் பெரும் மதிப்பு கொண்டவர். காளிதாசன் போஜராஜனின் அரசவையை அலங்கரித்து வந்திருந்த நவரத்தினங்களில் ஒருவர். போஜனுக்கும் காளிதாசனுக்கும் இடையே ஒரு அற்புதமான உறவு உண்டு. இருவரும் இணை பிரியவே மாட்டார்கள், இணைப் பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள்.

ஆயினும், சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்து விடும். அந்த நேரங்களில் காளிதாசர் போஜ ராஜனை விட்டு விலகி எங்கேயேனும் சென்று தான் காளிதாசன் என்பதை எவருக்கும் தெரிவிக்காமல் வாழ்ந்து வருவதுண்டு. ஒரு முறை வழக்கம் போல போஜ ராஜனுக்கும் காளிதாசனுக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவரும் பிரிந்தனர்.

காளிதாசனும் ஒரு தாசியின் வீட்டில் சென்று தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல், தன்னை புலவர் என்று கூறிக் கொண்டு வாழ்ந்து வந்தார். காளிதாசனை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அத்தனை ஏன், ஒற்றர்கள் உட்பட மன்னனின் படை வீரர்கள் பெரும்பான்மையானவர்களுக்கு கூட காளிதாசன் யார் என்ற அடையாளமே தெரியாதாம். ஆகவே அவர் நாட்டில் எங்காவது சென்று வாழ்ந்து வந்தால் அவரை மீண்டும் கண்டு பிடிப்பது கடினமான காரியமாக இருந்தது.

நல்ல நண்பனின் பிரிவுத் துயர் தாங்க முடியாத போஜராஜன் அவரைக் கண்டுபிடிக்க, தான் எழுதிய புதிருக்கு விடைக் கூறும் மக்களுக்கு பரிசுகள் உண்டு என அறிவித்தார். போஜன் மற்றும் காளிதாசனின் மனநிலை ஒரே நிலையில் இருந்ததினால் அவர்கள் போடும் எந்த புதிருக்கும் மற்றவர்களால் எளிதில் அர்த்தம் கூற முடியாது. போஜனின் புதிர்களுக்கு காளிதாசரும், காளிதாசரின் புதிர்களுக்கு போஜனும் மட்டுமே தக்க விடையைக் கொடுக்க முடியும். ஆகவே தனது புதிருக்கு நிச்சயமாக காளிதாசன் மட்டுமே பதில் கூற இயலும் என்பதை அறிந்திட்ட மன்னன் காளிதாசனின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க அந்த புதிருக்கான விடை தருபவர்களுக்கு மிகப் பெரிய அளவில் சன்மானங்கள் தருவதாக அறிவித்து இருந்தார்.

காளிதாசன் தங்கி இருந்த வீட்டில் இருந்த தாசியும் இந்த செய்தியைக் கேட்டு, காளிதாசனிடம் வந்து, 'நீங்கள் ஏதோ புலவர் என்றீர்களே, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்' என்றாள். சற்றே ஏமார்ந்து போன காளிதாசனும் உடனடியாக, அந்த புதிருக்கான பதிலை ஒரு சமிஸ்கிருத ஸ்லோக வடிவில் தாசிக்கு கூறிவிட்டார்.

அந்த பதிலைக் கேட்ட தாசிக்கு சந்தேகம் வந்து விட்டது. ஒருவேளை காளிதாசனே அரசனிடம் சென்று அந்த பதிலைக் கூறிவிட்டு பரிசைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டால் தன் கதி என்ன ஆகும் என எண்ணியவள் நயவஞ்சகமாக, காளிதாசன் உறங்கிக் கொண்டு இருந்தபோது அவர் கழுத்தை வெட்டி அவரைக் கொலை செய்து விடுகின்றாள். காளிதாசனின் உயிர் பிரிகின்றது.

அதற்குப் பிரு அந்த தாசியும் அரண்மனைக்குச் சென்று அவர் விடுத்த புதிருக்கான பதிலைக் கூறி பரிசைக் கேட்க, அந்த பதிலைக் கேட்ட மன்னனும் அதை காளிதாசன் மட்டுமே கூறி இருக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு, பரிசை தாசிக்கு கொடுத்தாலும், அவளை விட்டு விடாமல் தாசியை மிரட்டி நடந்த உண்மையை அறிந்து கொண்டார். காளிதாசனை அவள் கொலை செய்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டவுடன் அவளை அழைத்துக் கொண்டு ஓடோடி அவள் வீட்டுக்கு சென்றார். போஜனுக்கு ஒரு சக்தி இருந்தது. கற்றறிந்திருந்த அந்த சக்தியினால் தமது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இறந்தவர் யாராக இருந்தாலும் அவரை ஒரு முகூர்த்த நேரம் அவரால் உயிர் பிழைத்து வைக்க முடியும். ஆகவே அந்த சக்தியை போஜன் பிரயோகித்து காளிதாசரை உயிர் பிழைத்து எழ வைக்கிறார்.

காளிதாசனும் உயிர் பிழைத்து எழுந்திட இருவரும் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்கள். காளிதாசர் போஜரிடம் கூறினார் ' மன்னா, நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது. நான் எழுதிய ரகுவம்சம் முடிக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே முடிக்காமல் நான் மிச்சம் வைத்துள்ள குறிப்புகளைத் உனக்குத் தருகின்றேன். அதைக் கொண்டு நீங்கள் மீதம் உள்ள ரகுவம்சத்தை பாடி முடுஇக்க வேண்டும்' என்று கூறிய பின் அதன் குறிப்புக்களையும் அவரிடம் தந்தப் பின் மரணம் அடைந்து விடுகிறார். அதைக் கொண்டு போஜராஜன், ரகுவம்சத்தின் முழு பகுதியையும் மீண்டும் எழுதி முடிக்க துவங்கினாலும் முழுமையாக அவரால் அதை எழுதி முடிக்கவில்லை என்றும் அதுவே போஜசம்பு எனும் இராமாயண காவியமாகி விட்டது என்றும் கூறுகிறார்கள். போஜ சம்புவிலும் அக்னி வர்ணன் என்பவனின் கதையோடு ராமாயணம் முடிவதினால் காளிதாசன் எழுதிய மீதி பாகம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் ராமருடைய மூதையோர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களின் சிறிய வாழ்க்கைக் குறிப்புக்களே காணப்படுகின்றன. ராமருடைய தந்தையின் முந்தைய வம்ச சாபம் போன்றவை கூறப்பட்டு இருந்தாலும் அவர் எழுதி உள்ள ராமருடைய கதையில் அவர்கள் அவதாரம் குறித்த அதிக விவரங்களைக் கொடுக்காமல் பொதுவாக கூறிவிட்டு விட்டுள்ளார்.

காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் வால்மீகி முனிவரின் இராமாயண பாடலைப் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளதினால் காளிதாசர் வால்மீகியின் ராமாயணத்தை அறிந்து கொண்டோ அல்லது படித்தோ இருக்கலாம் என்று நம்ப இடமுள்ளது. வால்மீகி எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயணம் 24000 த்துக்கும் அதிகமான பாடலைக் கொண்டது என்றும், அவற்றில் ராமர் பிறப்பில் இருந்து இறப்பு வரை விவரமாக விவரிக்கப்பட்டு இருந்துள்ளது என்றும், அவர் எழுதிய ராமாயணம் ராமனின் வாழ்க்கை வரலாற்றையும் பெருமைகளைப் பற்றி மட்டுமே என்பதினால் ராமருடைய முன் வழி சந்ததியினரையோ அல்லது ராமருக்குப் பிறகு ஆண்டவர்களையோ குறித்த செய்திகளை வால்மீகி ராமாயணம் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள். அதே சமயத்தில் வால்மீகி ராமாயணத்தின் முதல் சில பாகங்களும் இறுதி பாகமான ராமர் இறப்பும், அவர் வம்சத் தொடர்ச்சி குறித்த பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஒருவேளை வால்மீகியின் முதல் சில பாகத்தில் அவர் ராமர் சந்ததியினர் குறித்து கூறி இருக்கலாம் என்றும், அதுவே காளிதாசரின் ரகுவம்ச காவியத்தின் கருவாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களுக்கு உள்ளது. நான் முன்னரே எழுதியது போல காளிதாசரால் எழுதப்பட்டிருந்த ரகுவம்சம் எனும் மூல நூலில் 25 காண்டங்கள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் 19 காண்டங்களே புலவர்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற ஆறு காண்டங்களில் கூறப்பட்டுள்ள மன்னர்கள் யார் என்பதோ, இல்லை அவை எதை வெளிப்படுத்தின என்பதோ தெரியவில்லை. ஆனால் வால்மீகி ராமாயணத்தைப் போலவே காளிதாசரின் கதைக்குப் பின்னர் காவியம் மீண்டும் தொடராமல் அந்தரங்கத்தில் ரகுவம்சக் காவியம் நின்று விட்டு உள்ளதைக் காணும்போது காளிதாசரின் கண்டெடுக்கப்படாத பாடல்களில் பிந்தைய வம்சத்து செய்திகள் இருந்திருக்கலாம் என்பதாக நம்ப இடமுள்ளது.  எது எப்படியோ, காளிதாசரின் ரகுவம்சக் காவியத்தை முடிக்கப்படாத காவியமாகவே கருத வேண்டி உள்ளது.

Monday, June 29, 2015

Raghuvamsam - 14

ரகுவம்சம்-14
- சாந்திப்பிரியா - 
ரகுவம்ச அழிவின் துவக்கம்

இப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அதீதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். குசன் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் ராஜ்யத்தில் மக்களும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். எந்தக் குறையும் அவர்களுக்கு இருந்திடவில்லை. அப்படிப்பட்ட நேரத்திலே ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்கு சென்றபோது அவர் தனக்கு துணையாக குசனையும் அழைத்துச் சென்றார்.  அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா  மரணம் அடைந்தார். ஆனால் அது போலவே அந்த  கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தார். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மன வருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டார்.

அதீதியைத் தொடர்ந்து அவரது புத்திரன் நிதடராஜன்  பதவியை அடைய அதீதியும் மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து  நளன், நளனைத்  தொடர்ந்து  நப்பஹா,  நப்பஹாவைத் தொடர்ந்து புண்டரிக்கா, புண்டரிக்காவைத் தொடர்ந்து ஷேமாதவ் என்ற மன்னர்  போன்றவர்கள் ஆட்சியில் தொடர்ந்தார்கள்.  ஷேமாதவ் ஆட்சியும் முந்தைய ரகு மன்னர்கள் ஆட்சிக்கு சற்றும் சளைத்தது அல்ல என்ற அளவிலே புகழ் பெற்று வளர்ந்தது. மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. சில காலம் வாழ்ந்து வந்த ஷேமாதவ் தனது புத்திரனான தேவனிகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தேவலோகம் சென்றான். தேவனிகனுக்கு அக்னிஹு என்ற புத்திரன் பிறக்க அவனோ நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  நாடுகளையும் வென்று அவற்றை ஆண்டு  வந்தான்.

அக்னிஹுவைத்  தொடர்ந்து அவனது மகன் பரியாத்திரா  ஆட்சிப் பொறுப்பை ஏற்க, சிலா, குசா (லவ குசாவில் உள்ள குசா அல்ல), மற்றும்  உன் நாபா எனும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு  வந்த  வஜ்ர நாபா என்பவன் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு ஒப்பான வலிமையைக் கொண்டவனாக இருந்து அற்புதமான ஆட்சியைத் தந்தான். வஜ்ர நாபா மறைவுக்குப் பிறகு அவன் புத்திரன் சங்கணா என்பவர் ஆட்சிக்கு வர  சங்கணாவின் மறைவுக்குப் பிறகு அவனது மகன் வியூஷி தாசா என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் சிவபெருமானிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்று இருந்தவர். வியூஷி தாசாவோ பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டு தானே விசுவசகா  என்ற பெயரில் தனக்கே மகனாகப் பிறந்து ஆட்சிப் பொறுப்பை தன்னுடைய தந்தையின் காலத்துக்கு பிறகு ஏற்றுக் கொண்டார். நல்ல ஆட்சி கொடுத்து வந்தவரும் காசி விஸ்வநாதரின் பெரும் பக்தனுமான அந்த விசுவசகா துறவறத்தை மேற் கொண்ட  பின்னர் தன்  மகனான ஹிரண்ய நாபா என்பவரை  ஆட்சியில் அமர்த்தினர்.  மாமுனிவரான யாக்யவால்யகர் அத்யாத்ம யோகக் கலையை ஹிரண்ய நாபாவிடம் இருந்தே கற்றறிந்தார்.

ஹிரண்ய நாபாவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் ஹிரண்ய நாபாவின் மகனான  கௌசல்யன் என்பவர் ஆவார்.  விரைவில் கௌசல்யரும் ஆட்சி பொறுப்பை தனது மகனான பிரமிஷ்டர் என்பவரிடம் தந்து விட்டு மறைந்து போனார்.  பிரமிஷ்டர் ஆட்சியில் மக்கள் அனைவரும் பெரும் சுகத்தோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். விஷ்ணு பகவானின் வாகனமான கருடன் கூட இவருக்கு சேவகம் செய்ததாக கருதினார்கள். பிரமிஷ்டர் தனக்குப் பிறகு பூச நட்ஷத்திரத்தில் பிறந்த புஷ்யன் எனும் பெயரைக் கொண்ட தனது  புத்திரனை ஆட்சியில் அமர்த்தி அவருக்கு நல்லாட்சி தர வழி காட்டினார்.  பூஷ்யனும் ஜைனிமி முனிவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு யோகக் கலைகள் பலவற்றையும் கற்றறிந்த பின்னர் தனது புத்திரனாகிய துருவசாந்தி என்பவரை ஆட்சியில் அமர்த்தி விட்டு மரணம் அடைந்தார்.

துருவசாந்தி மன்னனானதும் தனது மூதையர்கள் போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.  அப்போது ஒருநாள் அவர் வேட்டை ஆடிக்கொண்டு இருக்கையில் அவர் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு  மரணம் எய்தினார். அவர் மரணம் அடைந்த தருவாயில் அவருக்கு சுதர்சனன்  எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு அவர் முடி சூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.

இந்த நிலையில்தான் ரகுவம்சத்தின் அழிவும் துவங்க உள்ளது என்ற விதி செயல்பட்டத் துவங்கியது. சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து கொள்ளத் துவங்கி அறிவில் சிறந்தவனாக விளங்கிற்று.  இருட்டில் ஜொலிக்கும் ஒரே ஒரு சந்திரன் போலவும், வனத்தில் தனிக்காட்டு ராஜாவான சிங்கம் போலவும் தனித்தன்மைக் கொண்டவராக விளங்கினார்.  நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக்கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை மகாநீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். இவர் வாழ்க்கையில் இருந்தே மீண்டும் அவருக்கு மன்னர்களுக்கே உரிய பரம்பரைக் குணங்கள் தோன்றலாயிற்று. அவரது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த  அவரைப் பல  பெண்கள்  மோகிக்கலாயினர்.
தொடரும்....15

Sunday, June 28, 2015

Raghuvamsam - 13

ரகுவம்சம்-13
- சாந்திப்பிரியா - 
குசன் நாக கன்னிகையை 
மணந்த கதை  

இப்படியாக ராமனும் தனது அவதாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் ராம லஷ்மண, பரத மற்றும்  சத்ருக்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து  கொண்டு அந்த எட்டு  சகோதரர்களில் அனைத்திலும் மேன்மையாக இருந்த குசனின் தலைமையின் கீழ்  ஏழுபேரும் ஆட்சி செய்து  கொண்டு வந்த வேளையில் ஒருநாள் குசன் தனது மந்திரிமார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது 'அரசனே, உனக்கு மங்களம் உண்டாகட்டும்' என்று கூறியபடி அந்த அறைக்குள்  ஒரு பெண் திடீர் என நுழைந்தாள்.  அவளைக் கண்டு திடுக்கிட்ட குசனும் அவளிடம் கேட்டார் 'பெண்மணி, நீங்கள் யார்?, உங்கள் கணவர் யார்?  அனைத்து காவலையும் மீறி என் அறைக்குள் எங்ஙனம் நுழைந்தீர்கள்?. உங்களுக்கு என்ன வேண்டும்? ' என அதிசயப்பட்டுக் கேட்டார். 

அதைக் கேட்ட பரதேசி போல தோற்றம் தந்த அந்தப் பெண்மணியோ 'அரசனே, உன்னுடைய தந்தையார் பூத உடலைத் துறந்து வைகுண்டம் போய் விட்டப் பின் தக்க தலைவன் இன்றி அவதிப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் அயோத்தியா பட்டிணத்தின் தெய்வ மகள்  என என்னை அறிந்து கொள். ரகுவின் வம்சத்திலே நீ தோன்றி பிற ராஜ்யங்களை திறமையாக ஆண்டு கொண்டிருக்கையில் உன்னுடைய முன்னோர்களின் நகரமான அயோத்தியாவின் நிலை என்னவென  என்றாவது எண்ணிப் பார்த்தாயா? அந்த நகரமே பாழ்பட்டு, சீரழிந்து கிடக்கிறது. சாலைகள் பழுதடைந்து கிடக்க வீடுகள் பலவும் இடிந்து கிடக்கின்றன.  பஞ்சு போன்ற புற்கள் நிறைந்த பாதையில் உள்ள புல்லும் வாடி அந்த பூமியே வறண்ட நிலமாக காணப்படுகிறது. பெண்களின் முகத்தை மூடிக் கொண்டிருக்கும் திரைகள் கிழிந்து சிலந்தி வலைப் போல ஆகி உள்ளன.  அத்தனை ஏழ்மை நிலை. நகரெங்கும்  ஏழைகள் நிறைந்துள்ள நிலை. இரவிலே பெண்கள் அஞ்சாது சென்று கொண்டு இருந்த சாலைகளில் நரிகளும், பேய்களும் சுற்றித் திரிகின்றன. ஆகவே அவர்களால் பயமின்றி வெளியில் வர முடியவில்லை. பூஜைகள் செய்யப்பட்டு வந்திருந்த சராயு நதிக்கரை ஓநாய்களும், நரிகளும், நாய்களும் கொன்று தின்று போட்டுள்ள மிச்சம் உள்ள மான்களின், முயல்களின்  மாமிச பிண்டங்களினால்  நிறைந்து கிடக்கின்றன. ஆகவே அரசே, நீர் சற்றும் தாமதியாது அயோத்திக்கு வந்து அந்த பட்டிணத்தை  சீர்படுத்த வேண்டும் என்பதை வேண்டிக் கொளவே இங்கு வந்தேன்' என்று கூறிவிட்டு அப்படியே மறைந்தும் போனாள் .

அதைக் கேட்டு மனம் வருந்திய குசாவும் மனக் கலக்கம் அடைந்தார். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாமல் சற்றே பிரமித்து நின்றாலும் உடனடியாக  பெரும் படையுடன் கிளம்பி விந்திய மலை, கங்கை நதி என அனைத்து இடங்களையும் கடந்து  அயோத்தியை அடைந்து  ஆட்சியை தன் கையில் எடுத்துக் கொண்டான். அந்த ஊரிலேயே தங்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு சீர்கேட்டையும் களைந்து சென்றவாறு நகருக்கே புதுப் பொலிவை  தந்தான். இடிந்து கிடந்த சாலைகளும் கட்டிடங்களும் புதுப்பிக்கப்பட்டன. வறண்டு கிடந்த ஏரிகளும், நதிகளும் தூர் வாரப்பட்டன. நீர் நிறைந்திருந்த நதிகளில் எல்லாம் மறைந்து இருந்த முதலைகளை, கொடிய பாம்புகளை விரட்டி அடிக்கப்பட்டன. இப்படியாக அயோத்தி புதுப் பொலிவைப் பெற ஜனங்கள் மீண்டும் மன மகிழ்வோடு வாழத் துவங்கினார்கள். ரகுவம்சம் மீண்டும் பொலிவு பெற்றுள்ளதே என எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள்.

எப்போது வேண்டுமானாலும் மக்கள் தம்மை வந்து சந்தித்து குறைகளைக் கூறலாம் என்று அறிவித்ததும் அல்லாமல், தம்மை வந்து சந்தித்தவர்களை தவறாமல் சந்தித்து அவர்களது நிறை குறைகளைக் கேட்டறிந்து தேவையானவற்றை செய்தார்.  குறைகளைக் கேட்டு நீதி வழுவாமல் முடிவு செய்தார். பலமான ஒற்றர் படைகளை வைத்திருந்து நாட்டு நடப்புக்களை உன்னிப்பாக கவனித்து தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தார். எந்த பிரச்சனைகளிலும் மூத்த மந்திரிமார்களின் ஆலோசனைகளைக் கேட்டடறிந்த பின், அனைத்தையும் நன்கு விவாதித்த பின்னரே    நடவடிக்கையையும்  எடுத்தார்.  அஸ்வமேத யாகம் செய்தார்.

இப்படியாக காலம் கடந்து கொண்டு இருக்கையில் ஒருநாள் குசன் தனது மனைவிகளுடன் நதியில் ஜலக்ரீடை செய்தவாறு குளித்துக் கொண்டிருக்கையில் அவரது அரண்மனையின் ஒரு ராஜகுமாரியின் நகை நதிக்குள் விழுந்து விட்டது.  அதை தேடி எடுத்து வருமாறு மன்னன் ஆணையிட நதிக்குள் மூழ்கி ஆபரணத்தை தேடிய நீர்முழ்கி பணி  செய்பவர்கள் அந்த நகை நதியில் பாதாளத்தில் வாழும் நாகராஜனின்  தங்கையின் கழுத்தில் உள்ளது என்று கூற அதை திருப்பித் தருமாறு மன்னன் அவர்களை கேட்கச் சொல்லி அனுப்பினார். ஆனால்  அந்த ஆபரணத்தை தனது சகோதரி ஆசையாக கழுத்தில் போட்டுக் கொண்டு உள்ளதினால் அதை திருப்பிக் கொடுக்க இயலாது என அதைக் கொடுக்க மறுத்த நாக மன்னன் அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பி  விட்டார்.

அதைக் கேட்டு கோபமுற்ற குசன்  அந்த நதிக்குள் மறைந்திருந்த விஷ ஜந்துக்களையும், மறைந்திருந்த முதலைகளையும் விரட்டி அடிக்கவும், நாக மன்னனின் சேனையை ஒடுக்கவும் தனது பாணத்தை நதிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் விஷ்ணுவின் வாகனமான பெரும் கருடனை அழைத்து  நாகங்களை அழித்து விட்டு ஆபரணங்களை மீட்டு வருமாறு கூறினார். கருடனும் அந்த காரியத்தை செய்ய அங்கு வந்து  நதியின் மீது வட்டமடிக்கத் துவங்க, அதைக் கண்டு பயந்து போன நாகராஜனும் வெளியில் வந்து  குசனை சந்தித்து அவருடைய ஆட்சியை பெரிய அளவில் பெருமையாகப் பேசி  அந்த ஆபரணத்தை எடுத்துக் கொண்டது தன்னுடைய தங்கையான குமுதவதி என்று கூறி அவளை மணம் செய்து கொள்ளுமாறு குசனிடம் வேண்டுதல் வைக்க, குசனும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நாகராஜனின்  சகோதரியான குமுதவதியை மணந்து கொண்டார். அதன் பின் பல காலம் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தபோது குசன் மற்றும் குமுதவதிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது.  அதற்கு  அதீதி என்ற பெயரிட்டு வளர்த்து வரலானார்கள்.
தொடரும்................14

Saturday, June 27, 2015

Raghuvamsam - 12

ரகுவம்சம்-12
- சாந்திப்பிரியா - 

ராமர், லஷ்மணர் மற்றும் சீதையின் மறைவும் ரகுவம்சத்தினர் ஆட்சி தொடரவும்

இப்படியாக பல்வேறு விதங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தாலும் திறமையுடன் தனது வம்சத்தினர் ஆட்சியை தொடர்ந்து கொண்டு இருந்த ராமருடைய ராஜ்ய எல்லைகளும் விரிவடைந்து கொண்டே சென்றன. ஒரு நாள் யாத்திரையில் இருந்த ராமனை வழியிலே அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் தனது ராஜ்ஜியம் ஸ்திரமாக அமைந்திருக்க ராமரும் அஸ்வமேத யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தார். பல திசைகளில் இருந்தும் மன்னர்கள் பொன்னும் பொருளும் அனுப்பி யாகத்துக்கு பெருமை சூட்ட,  யாக முறைப்படி தனது ராஜ்ய குதிரையை திக் விஜயம் செய்ய அனுப்பி வைத்தார். அந்த யாக  குதிரையை வால்மீகி  ஆஸ்ரமத்தில் இருந்த லவ குசர்கள் அடக்கி வைத்துக் கொண்டார்கள்.

அஸ்வமேத யாகத்தைச் செய்யும் மன்னர்கள்  தமது சார்பிலே ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவார்கள். மன்னனது படையினருடன் போரிட பலமில்லாத அரசர்கள் அந்த யாகக் குதிரையைத் தமது நாட்டின் வழியே இடையூறு இன்றி செல்ல  அனுமதிப்பதின் மூலம் அந்த குதிரையை அனுப்பிய மன்னருக்கு தாம் தமது ராஜ்யத்தோடு கட்டுப்படுவதாக  கூறப்படும் செய்தியாகும்.  அப்படி   அடிபணிய விரும்பாத மன்னர்கள் அந்த யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டி  குதிரையை அனுப்பிய அரசப் படையினருடன்  போர் புரிந்து தோற்பார்கள் அல்லது ஜெயித்து அவர்களை அடித்து விரட்டுவார்கள். அதன் மூலம் தாமும் தமது ராஜ்யமும் அஸ்வமேத யாகத்தை செய்த அரசர்களுக்கு அடி பணிய மாட்டோம் என்ற செய்தியை அளிப்பார்கள்.  இப்படிப்பட்ட நிலையில்தான் இராமன் அனுப்பிய யாகக் குதிரையை ராமரது  மகன்களான  லவனும், குசனும்  பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். அதைக் கண்டு வியந்து போன ராமர் வால்மீகி முனிவரை அழைத்து அவர்களை குறித்து விசாரிக்க முனிவரோ அவர்கள் ராமனது சபையில் வந்து இராமாயண கானத்தைப் பாடிய பின்னர் அவர்களைக் குறித்த விவரத்தைக் கூறுவதாக  செய்தி அனுப்பினார்.

ராமரை சந்தித்தப் பின் வனத்துக்கு வந்த வால்மீகி முனிவரும் லவ குசர்களை அந்த யாகத்துக்கு சென்று ராமாயணக் காவியத்தைப் பாடுமாறு  அனுப்பி வைத்தார். லவ குசர்கள் யார் என்பதை அறிந்திடாத ராமரும் சபைக்கு வந்து அற்புதமான ராம காவியத்தைப் பாடிய லவ குசர்களை அதைக் கற்பித்தது யார் என்பதைக் கேட்டறிந்த பின்னர் வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்துக்கு சென்று அவரை வணங்கித் துதித்து அந்த சிறுவர்களை சபைக்கு அனுப்பி இராமாயண காவியத்தை  பாட ஏற்பாடு செய்ததற்கு நன்றி கூறிய பின் அந்த சிறுவர்கள் யார் என்பதைக் கேட்க அவர்களே  ராமருக்கும் சீதைக்கும் பிறந்த  இரட்டை மகன்களான லவ குசர்  என்பது  வால்மீகி முனிவர் மூலம் ராமருக்கு தெரிய வந்தது.  அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ராமரும் அந்த முனிவரிடம் தனது மனைவி சீதையை அழைத்து வந்து தம்மிடம் சேர்க்குமாறு வேண்டினார்.  முனிவரின் ஆலோசனையின் பேரில் தனது மனைவி சீதையை யாக முடிவில் அழைத்து வந்து அனைவர் முன் நிலையிலும் கற்புக்கரசி என நிரூபித்தப் பின்னர் அவளை மக்களறிய  மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அவருக்கு உறுதி கூறி விட்டு யாகத்தை தொடர்ந்தார். ஆனால் யாகம் நடைபெறுவதற்கு அதை செய்பவருடைய  மனைவியும் உடனிருக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால், அந்த யாகசாலையில் சீதையின் ஒரு பதுமையை வைத்திருந்து, அதேயே தனது மனைவியாகக் கருதி யாகத்தை ராமன் செய்தார்.

யாகம் முடியும் தருவாயில் இருந்தபோது மனைவி சகிதம் ஒரு கணவர் செய்ய வேண்டிய சடங்கை செய்ய  வேண்டிய தருமணம் வந்தபோது வால்மீகி முனிவரும் சீதையை அழைத்து வந்தார். அந்த நிலையில் அனைவர் முன்னிலையிலும் முனிவர் சீதையைப் பார்த்துக் கூறினார் 'மகளே உன்னுடைய கற்பையும், நீ யார் என்பதையும் நிரூபிக்க வேண்டிய தருமணம் வந்து விட்டது. முதலில் நீ ராவணனின் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டு பல காலம் இருந்திட்டாலும் ராமனை மட்டுமே நினைவில் கொண்டு வேறெந்த நினைவும் இல்லாத நிலையில் இருந்த கற்புக்கரசி என்பதை  அனைவர் முன்னிலையிலும் நிலை நாட்டு ' என்று கட்டளை இட்டார்.

அதைக் கேட்ட சீதையும்  அனைவர் முன்னிலையிலும் பெரும் தீ மூட்டச் சொல்லிய பின்னர் அனைவர்  முன்னிலையிலும் பூமா தேவியை நோக்கிக் வேண்டினாள்  'தாயே, நான் எந்த விதமான களங்கமும் இல்லாதவள்.  நான் களங்கமற்றவள், தூய்மையான  கற்புக்கரசி என்பது உண்மை என்றால் என்னை உன்னுள் அழைத்துக் கொண்டு விடு' என்று கூறி விட்டு யாரும் எதிர்பாராத நிலையில் அப்படியே தீயில் குதிக்க, அந்த தீயின் அடியில் இருந்த பூமி  இரண்டாகப் பிளக்க, தீயோடு எந்த சலனமும் இன்றி சீதையும் பூமிக்குள் சென்று மறைந்து விட பூமி மூடிக் கொண்டது. அவளது வரவுக்காக பாதாளத்தில் காத்திருந்த பூமா தேவியும் அவளை தன்னுடன் இணைத்துக் கொண்டாள் .

ஷண நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திட அதை சற்றும் எதிர்பாராத ராமரும் கற்புக்கரசியான தனது மனைவி சீதையை இழந்த கோபத்தில் 'என் மனைவி சீதையை மீண்டும் என்னிடம் திருப்பிக் கொடுக்காவிடில் பூமாதேவியை அழித்திடுவேன்' என ஆவேசத்துடன் கூறியவாறு தனது உறையில்  இருந்த வாளினை வெளியில் எடுக்க அங்கு தோன்றிய பிரும்ம தேவர் ராமரின் கோபத்தை அடக்கினார்.  'சீதை பூமியிலே மனித குலத்தில் அவதரித்ததின் காரண காரியமும் காலமும் முடிந்து விட்டதென்றும், அதனால்தான் அவர் முன்னிலையில் அவள் தன்னை பூமாதேவியுடன் இணைத்துக் கொண்டு விட்டாள் என்றும் அதனால் இனிமேலும் அது குறித்து வருந்துவதோ இல்லை அழுது புலம்புவதோ தவறு. ஆகவே அழுது புலம்புவதை விடுத்து யாகத்தில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து,  மரியாதை செலுத்தி அனுப்புவதே முறையாகும்' என்று அறிவுறுத்த தன்  நிலையை அறிந்திட்ட ராமனும் வந்திருந்த அனைவருக்கும்  தக்க சன்மானங்களையும் வெகுமதியையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அதன் பின் சீதையின் பிரிவால் மன அமைதி இழந்த ராமர் தனது மாமனாகிய யதாசித்து என்பவரின் ஆலோசனையை நாடி அவர் கூறியபடி தனது ஆட்சியில் இருந்த சிந்து எனும் தேசத்தை  பரதனுக்குக் கொடுத்தார். ஆனால் சில காலம் ஆண்டதும்  பரதனோ அந்த நாட்டை தமது புதல்வர்களான தக்கன் மற்றும் புர்கலன் என்பவர்களுக்குக் கொடுத்து விட்டு ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து விலகிக் கொண்டார்.  அது போலவே லஷ்மணரும் தனது நாட்டை தனது புதல்வர்களான அங்கதன் மற்றும் சந்தரகேது என்பவர்களுக்கு கொடுத்து விட ராமரும் தனது ராஜ்யத்தை தனது புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டார்.

இப்படியாக ராம லஷ்மணர் மற்றும் அவர்களது சகோதரர்களான பரதனும், சத்ருக்னனும் தமது ஆட்சிப் பொறுப்புக்களை தத்தம் மகன்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். சில காலம் கடந்ததும் ராமாவதாரம் முடிவுற வேண்டிய நிலை வந்தது.  அந்த நிலையில் ராமரைக் காண ஒருநாள் துர்வாச முனிவர் வந்தார். வந்தவர் தான் ராமனிடம் தனியாக  பேச வேண்டும் என்று கூறிவிட்டு உள்ளே  சென்று ராமாவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் குறித்து ராமருடன் பேசிக் கொண்டிருக்கையில் அதன் இடையில் உள்ளே சென்று அவர்கள் பேசியதைக் கேட்டுவிட்ட லஷ்மணர் மனம் தளர்ந்து போனார்.  தன்னை அழைக்காத நிலையில் தான் உள்ளே சென்று அவர்கள் உரையாடலைக் கேட்டதினால் ஏற்பட்ட பாவத்திற்காக  தாம் மனப்பூர்வமாக  அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறிவிட்டு, இனி தனக்கும் வாழ்வு தேவை இல்லை என்பதை உணர்ந்து  கொண்ட பின் அங்கிருந்து நேராக சராயு நதிக்கரைக்குச்  சென்று யோக வழியை பயன்படுத்தி தன்  ஆத்மாவை உடலில் இருந்து விலக்கிக் கொண்டார்.

அதைக் கண்ணுற்ற ராமரும் மேலும் வருத்தம் அடைந்து கலங்கினார். எப்போது தன் இணை பிரியாத சகோதரன் தன்னை விட்டு விலகி விட்டாரோ, அப்போதே தமக்கும் தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்தார். தனது அனைத்து ராஜ்ய பொறுப்புக்களையும் லவ குசலர்களுக்கு தந்த பின் தனது சகோதரர்களான பரதன், சத்ருக்னன் போன்றவர்களை அழைத்துக் கொண்டு சராயு நதிக்கரைக்கு சென்றார். அங்கு சென்றதும் ராமர் முன்னே செல்ல, மற்றவர்கள் அவர் பின்னால் செல்ல சராயு நதியில் புகுந்த அனைவரும் தமது மானிட வாழ்வை முடித்துக் கொண்டு மேலுலகத்துக்குச் சென்றார்கள்*. இப்படியாக சீதையின் மறைவை  தொடர்ந்து ராம லஷ்மண, பரத மற்றும் சத்ருக்னனின் அவதாரங்கள் மறைந்தன. அவரவர் கொடுத்துச் சென்ற ராஜ்யத்தை அந்தந்தவர்களின் புதல்வர்கள் ஆளத் துவங்கினார்கள்.  ரகுவம்ச ஆட்சி  முடிவுக்கு வர மேலும் சில காலம் இருந்ததினால் அந்த புத்திரர்களின் ஆட்சியுடன் ரகு வம்ச ஆட்சியும்  தொடரலாயிற்று.

------------------
*சிறு குறிப்பு :- 

வால்மீகி ராமாயணத்தை அவர் எப்போது இயற்றினார் என்பதைக் குறித்து சில சர்ச்சைகள் உள்ளன. ராமாயணம் என்பது ராமனின் பிறப்பு முதல் ராவணனைக் கொன்ற பின் அயோத்தியாவுக்குத் திரும்பி அந்த நாட்டை ஆண்டவரையிலான பாடல்கள் எனக் கூறப்படுகிறது. அவற்றை வால்மீகி முனிவர் தனது மனக்கண்ணால் அறிந்து கொண்டு இயற்றியதாக கூறுகிறார்கள்.  

ஆனால் வால்மீகி வட மொழியில் எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயண காவியத்தை 1941 ஆம் ஆண்டில் 'காஞ்சீபுரம் உபய வேதாந்த மகாவித்வான் ஸ்ரீமத் பிரதிவாதி பயங்கரம் அண்ணன்கராசாரிய ஸ்வாமிகள்' என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதில்  முதல்  ஸர்கமான ம்ஷேப ராமாயணம் எனும் அத்தியாயத்தில்  நாரத முனிவர்தான் வால்மீகி முனிவருக்கு ராமாயணக் கதையை சுருக்கமாக உபதேசித்ததாகவும், அதற்குப் பிறகுதான்  அவர் தாம்ஸா  நதிக்கரையில் ஏற்பட்ட நிகழ்ச்சியினால் நாரதர் உபதேசித்த ராமாயணத்தை பாடல்களாக இயற்றியதாகவும்,  அதைப் பாடவல்லவர்கள் எவரேனும் கிடைப்பார்களா என எண்ணிக் கொண்டு இருந்தபோதுதான்  லவ குசர்கள் அங்கு வந்து அவரிடம் தாம்  இருவரும் அந்தப் பாடல்களை பாட ஆவலுள்ளவர்களாக இருப்பதாகக் கூறி இராமாயண கானத்தைக் கற்றரிந்தார்கள் எனக்  எழுதப்பட்டு உள்ளது.

அந்த ராமாயணம் ராமர் அயோத்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்திலேயே இயற்றப்பட்டு உள்ளதினால்தான் ராமர் சபையில் லவ மற்றும் குசா இருவரும் அதைப் பாடலாகப் பாடி உள்ளார்கள்.  அவர்கள் பாடிய பாடல் ராமாயணயத்தில் ராமரின் சாசங்களை  எடுத்துரைத்துள்ளது.  ஆனால் ராமரை  அதில் தெய்வீக அவதாரமாக காட்டவில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இரண்டாவதாக ராமாயணத்தின் கதாபாத்திரங்கள் பூமியிலும், தேவலோகத்தோடும் சம்மந்தம் கொண்டுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் அதில்  காணப்படுகின்றன.  

வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது என்றும் அவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த ராமாயணம் இராமரின் பிறப்பில் இருந்து ராமர் பட்டாபிஷேகம் மற்றும் சீதை வனத்துக்கு சென்ற சம்பவங்களை  மட்டுமே  விளக்குகின்றன என்றும் கூறுகிறார்கள். ராமர் செய்த யாகத்தில் வால்மீகி  கற்றுக் கொடுத்து லவ மற்றும் குசா பாடியதாக கூறப்படும் ராமாயணத்தில் சீதை மற்றும் ராமர் இறப்பு குறித்து  குறிப்பு இருந்திருக்குமா என்பது  விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.  அதன் காரணம் வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்ட காவியம் ஆகும்  என ஆய்வாளர்கள் கருதினாலும்  அவற்றில் பெரும் பகுதி கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

இன்னும் சில  விடை தெரியாத கேள்வியும் உள்ளது. காளிதாசர் எழுதிய ரகுவம்சத்தில் ராமனுடைய முன்னோர்கள் குறித்தும், ராமர் வம்சம் தோன்றிய வரலாறும் கூறப்பட்டு உள்ளபோது வால்மீகி முனிவருக்கு அவை  தெரியாமல் இருந்திருக்குமா? ஆகவே அப்படி கிடைக்காத பெரும் பகுதியான  பாடல்கள் ராமருடைய முன்னோர்களின் வரலாறாக இருந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்கள். காளிதாசரின் ரகுவம்சத்தில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை லவ குசர்கள் ராமன் நடத்திய யாகத்தில்  பாடியதாக  எழுதி உள்ளத்தில் இருந்து காளிதாசர் வால்மீகி முனிவர் எழுதி இருந்ததாக கூறப்படும் ராமாயணத்தைப்  முழுவதும் படித்திருக்கலாம் என நம்ப இடம் உள்ளது.  

தொடரும்..........13

Friday, June 26, 2015

Raghuvamsam - 11

ரகுவம்சம்-11
- சாந்திப்பிரியா - 
லவ குசர் பிறப்பும் 
ராமருக்கு வந்த சோதனையும்

ராவணனை வதம் செய்த பின் ராமரும் தனது மனைவி சீதையோடு புஷ்பக விமானத்தில் ஏறி  அயோத்திக்கு திரும்பலானார். வழி எங்கும் தான் எப்படி இலங்கையை அடைந்தேன் என்ற விவரங்களை சீதைக்கு ஆனந்தமாக கூறிக் கொண்டே வந்தார். வனத்தில்  தாம் வசித்த இடம், சீதையை ராவணன் கடத்திய இடம், மாய மான் உருவில் இருந்த மாரீசன் கொல்லப்பட்ட இடம், ஜடாயு  யுத்தம் செய்து மடிந்த இடம், சுக்ரீவரின் நட்பைப் பெற்ற இடம், வாலியை வதம் புரிந்த இடம், ஹனுமான் தன்னிடம் வந்து சரண் அடைந்த இடம்,  கங்கை, சரஸ்வதி, சராயு போன்ற நதிகள் என அனைத்தையும் குறித்து கூறிக் கொண்டே வந்தவர் அயோத்தியாவை அடைந்ததும்  பட்டாபிஷேகம் செய்து கொண்டு நாட்டின் அரச பதவியை தனது  சகோதரன் பரதனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  ராஜ்யத்தை ஆளத் துவங்கிய ராமரின் மனைவி சீதையும் கர்பவதியானாள். அனைவரும் ஆனந்தத்துடன் அந்த செய்தியைக் கொண்டாடினார்கள்.  நாட்கள் ஓடின.  நாடும் நல்லபடியாக ராமரின் ஆட்சியில் அமைந்து இருந்தது. 

ஒருநாள் ராமபிரான் தனது ஒற்றன் ஒருவனை அழைத்து நாட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அந்த ஒற்றன் கூறினான்  'மன்னா, இந்த நாட்டில் அனைவர் மனதிலும் பரவலாக ஒரு எண்ணம் சுற்றிக் கொண்டு உள்ளது. உமது மனைவியை மாற்றான் ராவணன் கவர்ந்து கொண்டு போய் அத்தனைக் காலமும் தம் இருப்பிடத்தில் வைத்துக் கொண்டிருந்தான். திரும்பி வந்து சில காலத்திலேயே அவள் கர்பவதியாகவும் ஆகி விட்டாள். மாற்றானிடத்தில் அத்தனைக் காலம் தங்கிய பத்தினியை எப்படி ராமர் சந்தேகப்படாமல் ஏற்றுக் கொண்டார் என  மக்கள் உம்மை தூற்றுகிறார்கள்' என்று கூற அதைக் கேட்ட ராமரும் திடுக்கிட்டார்.

உடனடியாக தனது சகோதரர்களை அழைத்து அது குறித்து ஆலோசனை செய்த பின் சீதையை தன்  வாழ்க்கையில் இருந்து நீக்கி விட தீர்மானம் செய்து விட்டு கர்பவதியான அவளை  வனத்தில் இருந்த வான்மீகி ஆஸ்ரமத்தில் கொண்டு போய் விட்டு வரச் சொல்லி விட்டார். ஆனாலும் ராமருக்கு சீதையின் பிரிவு மன வருத்தத்தை தந்தது. அதை அடக்கிக் கொண்டு நாடாண்டு வந்தார்.

சில காலம் சென்றதும் ராவணனுடைய தங்கை கும்பேசினி என்பவளின் புதல்வன் இலவணன் என்பவன் தமக்கு பெரும் துயரங்களையும் துன்பத்தையும்  அளிக்கிறான் என ராமரிடம் முனிவர்கள் சென்று முறையிட்டபோது ராமரும் தனது சகோதரன் சத்ருக்னனை அனுப்பி அந்த அசுரனை அழிக்கச் சொன்னார்.  சத்ருக்னனும்  இலவணனை அழிக்கச் சென்றபோது வனத்தில் இருந்த வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சென்று இருந்தபோது அங்கிருந்த சீதைக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்த செய்தியைக் கேட்டு மனம் மகிழ்ந்தார். அதன் பின் அவர் இலவணனை அழித்து விட்டு  நாடு திரும்பும் வழியில் நதிக்கரையில் இருந்த தம்முடைய ராஜ்யத்தை தமது புதல்வர்களான ஸ்வாகு மற்றும் வெகுசறுகு  என்பவர்களிடம் ஒப்படைத்தப் பின்னர் ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து தம்மை விலகிக் கொண்டார்.  அதன் பின் அயோத்தியாவுக்கு திரும்பியவர் இலவணன் வதத்தைக் குறித்துக் கூற அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் சீதை பிரசவித்ததையோ, அல்லது லவ குசா பிறந்த செய்தியையோ அவர் யாரிடமும் கூறவில்லை. அதன் காரணம்  தக்க நேரத்தில் தன்னால் லவ குசா யார் என்பதை  வெளிப்படுத்தப்படும்வரை சத்ருக்கனன் அவர்களைப் பற்றிய எந்த செய்தியையும் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்பதான வால்மீகியின் கட்டளையை அவரால் மீற முடியவில்லை.

வால்மீகி முனிவரும் சீதையின் இரு புதல்வர்களுக்கும் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுக் கொடுத்தப் பின் ராமாயணத்தையும்* பாடலாக கற்றுக் கொடுத்தார். இந்த நிலையில் அயோத்தியில் சில குறிப்பிடத்தக்க  சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு நாள் ராமரின் அரண்மனைக்கு முன்னால்  ஒரு அந்தணர் தனது இறந்து கிடந்த குழந்தையை எடுத்து  வந்து நின்று கொண்டு பூமியை நோக்கி  'ஓ ...பூமா தேவியே  தசரத மகாராஜா ஆண்டு வந்திருந்த பூமியில் அவர் ஆட்சி இருந்த காலத்தில் எந்த ஒரு அகால மரணமும் நிகழ்ந்தது இல்லை. ஆனால் இன்றோ அதே மகாராஜனின் புதல்வர்  ஆட்சியில் நடந்துள்ள இந்த அகால மரணத்தை தாங்கிக் கொண்டு எப்படி  உன்னால் அமைதியாக இருக்க முடிகிறது?' என்று கூறி ஒப்பாரியிட்டு அழுது கொண்டு இருந்தார்.

அந்த செய்தியைக் கேட்ட ராமனும் ஓடோடி  வெளியில் வந்து இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையையும், ஒப்பாரி வைத்தபடி இருந்த அந்தணரையும் பார்த்துக் கூறினார் 'அந்தணரே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  இந்தக் குழந்தைக்கு அகால மரணம் ஏற்பட்டு இருந்தால் அதன் உயிரை நான் மீட்டுக் கொண்டு வருவேன். அதற்கு நான் பொறுப்பு' என் சூளுரைத்து விட்டு ஆக்ரோஷத்துடன் பல ஆயுதங்களையும்  எடுத்துக் கொண்டு புஷ்ப விமானத்தில் ஏறி  யமலோகத்தை நோக்கிச்  செல்லத் துவங்கியபோது ஒரு அசரீரி  குரல் கொடுத்தது 'மன்னனே, உங்கள் ஜனங்களில் சிலர்  தர்ம நெறிக்கு மாறாக குற்றம் செய்துள்ளார்கள். அவர்களைக் கண்டு பிடித்து அவற்றைக் களைந்தாலே உன் நாட்டுக்கு  விமோசனம் கிடைக்கும். வேறெங்கும் போவதை தவிர்த்து உன் நாட்டிலேயே நடைபெறும் இந்த தர்மநெறிக்கு எதிரான குற்றத்தை தடுத்து நிறுத்து' என்று கூறிவிட்டு  மௌனமாயிற்று.

அதைக் கேட்ட ராமரும் பல திக்குக்களிலும் சென்று தகாத குற்றத்தை செய்பவர்களைத் தேடி அலைந்தபோது ஒரு இடத்தில் தர்ம நெறி முறைக்கு மாறாக ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கியபடி  அந்தணர் அல்லாத ஒருவன் தவத்தில் இருந்ததைக் கண்டார்.  உடனே அவன் அருகில் சென்று அவன் தலையை தனது வாளினால் சீவி எறிய  அகால மரணம் அடைந்த குழந்தையும் பிழைத்து எழுந்த செய்தியும் கிடைத்தது. அரண்மனைக்கு சென்றவரை வாயிலிலே நின்று வரவேற்ற அந்தக் குழந்தையின் தந்தையும் அவரை பல்வேறு வகைகளிலும்  துதி செய்து வாழ்த்திய பின் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார்.
 
(*சிறு  குறிப்பு:- 
வால்மீகி முனிவருக்கு ராமாயணம் எழுதத் தூண்டிய சம்பவமாக கீழ் காணும் கதையை கூறுகிறார்கள். ஒரு நாள் எப்போது போல  குளிப்பதற்காக தமஸா நதிக்கரைக்கு  வந்த வால்மீகி முனிவர் அங்கே ஆண் மற்றும் பெண் புறாக்கள் இரண்டும் கலவியில் இருந்தபோது வேடன் ஒருவன் எய்த அம்பினால் ஆண் புறா இறந்து விழுந்ததைக் கண்டு பெண் புறா பரிதவித்து அழுததைக் கண்டு கருணையும் கோபமும் ஒருங்கே எழும்ப அந்த வேடனைக் சபிக்கும் விதத்தில் அவரை அறியாது  அவர் வாயில் இருந்து   ஒரு ஸ்லோகம்  எழுகிறது. இப்படி ஒரு ஸ்லோகம் தன்னையறியாது தன் வாயில் இருந்து எப்படி வெளிவந்தது வந்துள்ளது யோசிக்கையில் அவர் முன் பிரும்மா தோன்றுகிறார்.  அவர் முன் தோன்றிய பிரும்மா ராம கதையை எழுதுமாறு வால்மீகி முனிவருக்கு கட்டளை இடுகிறார். அப்படி அவரால் எழுதப்படும் ராமனின் கதை பூவுலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை மனித இனத்தவரால்  கொண்டாடப்படும் என ஆசீர்வதிக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட வால்மீகி முனிவரும் தியானத்தில் ஆழ்கையில் ராமரின்  பிறப்பிலிருந்து  பட்டாபிஷேகம் மற்றும் சீதாவை துறக்கும் வரையிலான ராம கதையின் அனைத்து நிகழ்வுகளும் அவர் மனதில் ஒன்றன் பின் ஒன்றான  வெளிப்பட அதை மனதிலே ஆழமாக உருவேற்றிக் கொண்டார். இப்படியாக மனதில் தன்னால் இயற்றப்பட்ட இராமாயண மகா காவியத்தை வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களான குச லவர்களுக்கு முதன் முதலில் போதிக்கிறார்.  முதலில் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் ராமரின் பிறப்பில் இருந்து ராமர் அயோத்தியா திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொண்டு சீதையை வனத்துக்கு அனுப்பியவரைதான் இயற்றப்பட்டு உள்ளது என்று நம்புகிறார்கள். அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளாக வால்மீகி ராமாயணத்தில் காணப்படுபவை வேறு யாராலோ எழுதப்பட்டு  பிற காலத்தில் வால்மீகி ராமாயணத்துடன் சேர்க்கப்பட்டவை என்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் லவ குசர்கள் அயோத்தி நகரிலும் ராமபிரானின் ராஜ சபையிலும் பாடிய ராமாயணம் ராமர் பிறப்பில் இருந்து  பட்டாபிஷேகம் வரையில் மட்டுமே இருந்ததென்றும் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.  அனைத்துமே வாய்வழி செய்தியாகவே  காலம் காலமாக வந்து உள்ளது. )
தொடரும்..........12

Thursday, June 25, 2015

Raghuvamsam - 10

ரகுவம்சம்-10
- சாந்திப்பிரியா - 

ராமரின் வனவாசம் 
ஜடாயுவின் மரணம் மற்றும் ராவண வதம் 

பரசுராமருடன்  ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்த  அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து ராம லஷ்மணர்களை வரவேற்று உபசரித்தார்கள். அவர்களது வீர, தீர மற்றும் பெருமையை எடுத்துக் காட்டிய சம்பவங்களை நிகழ்த்தியதற்கும்,  சீதையை ராமன் திருமணம்  செய்து கொள்ளக் காரணமாக இருந்தவருமான   விஸ்வாமித்திர  முனிவருக்கும்  பெரிய வரவேற்பு அளித்து, அவரை பல விதமாக கௌரவித்து,  வணங்கித் துதித்து தமது ஆனந்ததை வெளிப்படுத்தினார்கள்.

அடுத்து நிகழ்ச்சிகள் மீண்டும் வேக வேகமாக நடந்தேறின. தசரதன் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தவுடன் ராமனை பட்டதில் அமர்த்தி விட்டு தான் ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தபோது, மீண்டும் ஒரு சங்கடம் கூனியின்  உருவிலே வந்தது.  கூனியின் போதனையினால் ஈர்க்கப்பட்ட கைகேயி தசரதனிடம் இருந்து முன்னொரு காலத்தில் தான் பெற்று இருந்த வாரத்தை நினைவூட்டி  ராமனை தனது மனைவியுடன் பதினான்கு வருட காலம் வனவாசம் செல்லவும்,  பரதனை ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கவும் வழி செய்து கொண்டாள் .  அதன்படி ராம லஷ்மணர்கள் வனவாசத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று.

அதனால் மனமுடைந்து போன தசரதனும், ராமன் அவரது மனைவி சீதை மற்றும் என்றும் தன்னை விட்டுப் பிரியாமல் இருந்த சகோதரன் லஷ்மணரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றதும் பாசத்தினால் கட்டுண்டு  தனது உயிரை விட்டார். தன்னுடைய தாயாரின் சூழ்ச்சியை அறிந்த பரதனும் ராஜ்யபரிபாலனத்தை ஏற்க மறுத்து வனத்துக்கு சென்று தமது தந்தை தசரதனுக்கு கட்டாயத்தினால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தையும் ராமனிடம் எடுத்துக் கூறி, ராமனை  நாடு திரும்பி  ராஜ்ய பரிபாலனத்தை ஏற்குமாறு வேண்டிக் கொண்டான். ஆனால் மரணம் அடைந்து விட்ட தனது தந்தைக்கு தான் கொடுத்த வாக்கை மீற  முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் ராமபிரான். ஆனால் ராமர் தன்னுடன் வந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்காவிடில் அங்கிருந்து செல்ல முடியாது என அடம் பிடித்து நின்ற இளைய சகோதரன் பரதனிடம் ராமர் அதன் விளைவுகளை எடுத்துக் கூறினார். பரதன் அயோத்தியாவுக்கு  திரும்பிச் சென்று ராஜ்ய பரிபாலனம் செய்யாவிடில்  நாடு நலிவுறும், மக்கள் அவதியுறுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுமாறு அறிவுரைக் கொடுத்தார்.  அதன் பின் பரதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தான் அணிந்திருந்த பாதுகையை பரதனிடம் தந்து தன்னுடைய அந்த பாதுகையை எடுத்துக் கொண்டு போய் தனக்கு பதிலாக அதை தனது துணையாக  வைத்துக் கொண்டு ராஜ்யத்தை தான் திரும்பி வரும்வரை நிர்வாகம் செய்யுமாறு கூறினார். பரதனோ அந்த பாதுகைகளை கொண்டு போய் அதுவே தனது சகோதரன் ராமன் என்பதாக அறிவித்து,   சிம்மாசனத்தில் தான் அமராமல் தனக்கு பதிலாக ராமருடைய பாதுகையை வைத்து  ஆட்சி செலுத்தி வரலானார்.

நிற்க, அங்கோ  வனத்திலே இருந்த ராமனோ தனது மனைவி சீதை மற்றும் சகோதரன் லஷ்மணருடன் அங்கிருந்த காய் கனிகள் மற்றும் மூலிகைகளை உண்டபடி காலத்தைக் கழித்து வந்தார்கள். அங்கிருந்த  நாட்களிலே அத்ரி முனிவர் ஆஸ்ரமத்திலும்  தங்கி பணிவிடை செய்தார்கள். அவர்கள் பஞ்சவடி எனுமிடத்திலே இருந்தபோது  ராமரின் அழகில் மயங்கிய ராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமனைக் காதலித்து அவரை நாயகனாக அடைய முயன்றாள். ஆனால் அவளது வார்த்தைகளைத் உதறித் தள்ளிய புனித குணம் கொண்ட ராமரோ அவளை துரத்தி அடிக்க, அவருக்கு தொல்லைத் தர முயன்ற சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் அறுத்து லஷ்மணர் அவளைத் துரத்தி அடித்தார். அவளும் ஓடோடிச் சென்று சகோதரன் ராவணனிடம் முறையிட, அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ராவணனும் பெரும் சேனையை அனுப்ப அந்த சேனையையும் நிர்மூலமாக்கி அனுப்பினார்கள்  ராம லஷ்மண சகோதரர்கள். சூர்ப்பனகை விவரித்திருந்த சீதையின் அழகை மனதிலே கொண்ட ராவணனும் சீதையை தான் அடைய எண்ணம் கொண்டான். அதுவே முன் ஒரு காலத்திலே நாராயணன் தேவர்களுக்கு தான் ராமனாக அவதரித்து தேவர்களுக்கு தொல்லைத் தந்து வந்த ராவணனை அழிப்பேன் என்ற வாக்கு கொடுத்ததற்கு போடப்பட்ட முதல் அஸ்திவாரம் ஆயிற்று. பூர்வ ஜென்மத்தில் சீதையும் 'ராவணனை தான் அழிப்பேன்' எனப் போட்டு இருந்த சபதத்துக்கு அஸ்திவாரமாயிற்று.

ராம லஷ்மணர்களின் பலத்தை தவறாக எடைபோட்டு இருந்த ராவணனும் தனது மாமன் மாரீசனின் மாய மான் வேஷ உதவியோடு ராம லஷ்மணர்களின் கவனத்தை திசை திருப்பி தனியே இருந்த  சீதையை கவர்ந்து வந்தான். வழியிலே தன்னை தடுக்க வந்த ஜடாயுவையும் கொன்று சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான். சீதையிடம் தன் பராக்கிரமங்களையும், பலத்தையும், தான் கொண்டிருந்த சக்திகளையும் செல்வத்தையும் பலவாறு எடுத்துரைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள எத்தனையோ வற்புறுத்தியும் அவள் மறுத்ததினால் அவளை அசோக வனத்திலே தனிமை சிறையில் வைத்தான்.  ஏமாற்றப்பட்டு வீடு திரும்பிய ராம லஷ்மணர்கள் சீதையை தேடி அலைந்தபோது, வழியிலே இறக்கும் தருவாயில் கிடந்த ஜடாயு மூலம் ராவணன் சீதையை கவர்ந்து சென்ற உண்மையை அறிந்து கொண்டார்கள். அந்த செய்தியை கூறிய உடனேயே மரணம் அடைந்துவிட்ட ஜடாயுவுக்கும் அங்கேயே இறுதிக் கிரியைகள் செய்து முடித்தப்பின் வானரங்களின் உதவியோடு சீதை உள்ள இடத்தைத் தேடலானார்கள்.

கிஷ்கிந்த  மலையில் இருந்த வாலி-சுக்ரீக சகோதரர்களின்  சண்டையில் ராமர் சுக்ரீவனுக்கு உதவி செய்து, வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அவர் இழந்த ராஜ்யத்தை மீட்டுத் தந்ததின் மூலம் குரங்குப் படையின் துணையும் கிடைத்தது. ஹனுமானும் ராமருக்கு கிடைத்தார். அந்த ஹனுமானைக் கொண்டுதான் சீதையின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, இலங்கைக்குப் போய் ராவணனுடன் யுத்தம் புரிந்து கும்பகர்ணன், இந்திரஜித் போன்ற மகா அசுரர்களையும் கொன்று, முடிவில் ராவணனின் தம்பி விபீஷணனின் துணையோடு ராவணனையும் கொன்று சீதையை மீட்டு வந்தார்.
தொடரும்................11

Wednesday, June 24, 2015

Raghuvamsam - 9

ரகுவம்சம்-9
- சாந்திப்பிரியா - 

ராமர் சீதையை மணந்ததும் 
பரசுராமர் கர்வ பங்கத்தை அடக்கிய கதையும்
 
சீதையை மணக்க வேண்டும் என மனதார விரும்பி ஆசை ஆசையாக அங்கு வந்திருந்த அனைத்து ராஜ குமாரர்களும் நான் முந்தி, நீ முந்தி என அடுத்தடுத்து சபை நடுவே வந்து வில்லையும், அம்பையும் தூக்க முயன்று தோல்வி அடைந்து முகம் சோர்ந்து போய் அவரவர் ஆசனங்களில் சென்று அமர்ந்தார்கள். நடந்தவற்றைக் கண்ட ஜனகரும் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டார். சீதைக்கு இனி மணமாகாது என்றே நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். அப்போது விஸ்வாமித்திரர் ராமனை நோக்கி 'நீ சென்று முயன்று பார்' என்று கூறி ராமனை அனுப்ப ராமனும் விஸ்வாமித்திரரை வணங்கி விட்டு அந்த வில்லையும் அம்பையும் தூக்க எழுந்து சென்றார். இத்தனைப் பேர் முயன்றும், அனைவரும் தோற்றுப் போய் விட்ட நிலையில் அவர்களை விட இளம் வயதினராக தோன்றும் இந்த ராமன் எங்கே இதை தூக்கி வெற்றி கொள்ளப் போகிறான் என முகத்தில் எந்த சலனமே இன்றி அமர்ந்திருந்த ஜனகருக்கு ராமர் வணக்கத்தை தெரிவித்தப் பின்  எளிதாக அந்த வில்லைத் தூக்கி வளைத்து உடைத்தார். அனைவரும் அதைக் கண்டு மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள்.  ஜனகரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் வேகமாக நடந்தேறியன.  தசரத மன்னன் தமது பரிவாரங்களுடனும், ராஜ குருவான  வசிஷ்டருடனும் மிதிலைக்கு வந்து சேர ஜனக மன்னரும் சீதையை ராமனுக்கு திருமணம் செய்து தந்தார்.   ஊர்மிளை எனும் கன்னிகையை லஷ்மணர் மணந்து கொள்ள, மாண்டவி மற்றும் சுதகீர்த்தி என்பவர்களை முறையே பரதரும் சத்ருக்னனும் மணந்து கொண்டார்கள்.   மணம்  முடிந்ததும் அனைவரும் ஊருக்கு திரும்பும் வழியில் பரசுராமர் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

அவர்களை தடுத்து நிறுத்திய பரசுராமர்  'ஷத்ரிய வீரனே, எனது பிதாவின் மரணத்துக்குக் காரணமான ஷத்ரியர்களை அழித்து விட்டு இங்கு வந்துள்ளேன். இனி நான் அழிக்க வேண்டிய ஷத்ரியர்களில் நீயும், காத்தவீர்யனும்தான் மீதம் உள்ளீர்கள். உனக்கும் எனக்கும் ராமன் எனும் நாமகரணமே உள்ளது என்பதினால் உன்னைக் கொல்ல யோசனையாக உள்ளது.   நீ ஜனகனிடம் இருந்த  வலிமையற்ற  சிவ தனுஷை உடைத்து விட்டு சீதையை மணந்து கொண்டாலும், அது உன் உண்மையான வலிமையை எடுத்துக் காட்டாது.  இதோ  என்னிடம் உள்ள இந்த  விஷ்ணுவின் வில்லைப் பார். இதை நீ எடுத்து வளைத்து நாணேற்றினால்  என்னை வெற்றிக் கொண்ட உண்மையான வீரன் என்று உன்னை ஒப்புக் கொள்வேன். அதன் பின் நீ மேலே செல்லலாம்' என்று கூறினார்.

அந்த சவாலை ஏற்றுக் கொண்ட ராமன் பரசுராமரிடம் கூறினார் 'முனிவரே, நீங்கள் என்னை விட மூத்தவர் என்பதினால் இந்த வில்லை வளைத்து நாணேற்றி வெற்றி கொண்டால் அதன் பிறகு   உம்மைக்  கொல்வது குற்றம் ஆகும். ஆகவே இந்த பாணத்தை  தூக்குவதற்கு முன்னரே தயவு செய்து இந்த  பாணத்துக்கு  என்ன இலக்கு என்பதைக் கூறுவீர்களேயானால்  நான் அதை செய்வேன். ஆனால் நீங்கள் விரும்பினால் கூட நான் உங்களைக் கொல்ல  மாட்டேன். அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. நீங்கள் ஒரு பிராமணர் என்பதைத் தவிர விஸ்வாமித்திரருக்கும் உறவினர் ஆவீர்கள். விஸ்வாமித்திரர் என்னுடைய குரு ஆவார்.  ஆகவே என்னால் என் குருவுடன் சம்மந்தம் உள்ளவர்களைக் கொல்ல முடியாது. அது குரு துரோகம்  ஆகிவிடும். அதனால்  இந்த  பாணத்துக்கு இலக்கு உங்கள் 'பாத கதியா' அல்லது நீங்கள் 'ஜெயித்து உள்ள பூமியா'  என்று கேட்டார்.  

விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்  சாந்தமான முனிவராக இருந்தவர். ஆனால் தன்னுடைய தந்தையைக் கொன்ற ஷத்ரியர்களை பழிவாங்க புறப்பட்டு சென்றபோது விஷ்ணுவின் கோப குணாதிசயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு ஆவேசமானவர். அவரது அவதாரத்திலே அவருக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. அந்த சக்தியைக் கொண்டு  ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடையே எவ்வளவு இடைவெளி இருந்தாலும்  ஷண நேரத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அவரால் சென்று விட முடியும்.  அந்த சக்தியையே 'பாத கதி'  என்பார்கள்.

பரசுராமானின் குரு காஷ்யப முனிவர் என்பவர் ஆவார். பரசுராமர்  அவருடைய குருவான காஷ்யபருக்கு குருதட்ஷணையாக  தான் தபஸ் மூலம் வெற்றிக் கொண்டிருந்த  அனைத்து பூமியையும் தானமாக தந்திருந்தார்.  அப்போது அதைப் பெற்றுக்  கொண்ட காஷ்யபர் பரசுராமரிடம் கூறினாராம்  ' பரசுராமா, எப்போது உனக்கு தபஸ் மூலம் கிடைத்த அனைத்து பூமியையும் எனக்கு நீ  தானம் தந்து விட்டாயோ, அந்த தானம் தந்த பூமியில் நீ  வசிக்கலாகாது,  அங்கு  நீ விஜயம் மட்டுமே செய்யலாம். இரவிலே தங்கலாகாது.

அதனால் பரசுராமர் காலை வேளையில் அந்த பூமியில் எங்கு விஜயம் செய்தவாறு இருந்தாலும், இரவு துவங்கியதுமே தனது பாத கதி எனும் சக்தியை பயன்படுத்தி வெகு தொலைவில் அந்த இடத்தின் எல்லையாக இருந்த மகேந்திர மலைக்கு அப்பால் சென்று விடுவாராம்.  ஆகவே அப்படிப்பட்ட சக்தியைத் தரும் பாத கதியையோ, அல்லது தான் ஏற்க்கனவே தானம் தந்து விட்ட பூமியையோ இலக்காக்கி அவற்றை இழக்க விரும்பவில்லை என்பதினால், ராமர் வில்லில் நாணேற்றி வெற்றி பெற்றால்  ஒன்று தன்னை கொன்று விடலாம், அப்படி தன்னைக் கொல்ல   விருப்பம் இல்லை எனில் அவர் அதற்கு மாறாக தான் யாகம் செய்து பெற்றுக் கொண்ட ஸ்வர்க கதியை இலக்காகக் கொள்ளலாம்  என்று கூறி விட்டார். அதாவது பரசுராமர் என்ற அந்த மானிடப் பிறவி முடிந்து விட்டதும்  அவர் ஸ்வர்கத்துக்கு  செல்ல இருந்த அந்தப் பாதையை* அழித்து  விடலாம் என்ற அர்த்தம் ஆகும்.

அதைக் கேட்டதும் ராமர் பரசுராமரிடம் இருந்த வில்லை வாங்கி அதை தூக்கி அதில் நாணேற்றி பரசுராமரை வெற்றிக் கொள்ள பரசுராமரின் கர்வ பங்கமும் அடங்கியது. அது நடந்து முடிந்ததும் பரசுராமர் தன் முன் உள்ள ராமனே தனக்கு பின் வந்துள்ள விஷ்ணுவின் அவதாரம் என்பதை புரிந்து கொண்டு அதை ராமனிடமே எடுத்துக் கூறி கைகளைத் தூக்கி ராமனை ஆசிர்வதித்து வழி அனுப்பினார். தனக்கு முடிவு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்ட பரசுராமனே தம்முடைய தவ வலிமை முழுவதையும் ராமர் தூக்கி நிறுத்திய தமது பாணத்திற்கு இரையாக்கி விட்டு, பிராமணர் என்ற நிலையில் இருந்து கொண்டு  'நீ அவதரித்தக் காரணம் அனைத்தும் இனிதாக முடியட்டும் என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்ய, ராமனும் தனது மனைவி மற்றும் பரிவாரங்களுடன் பரசுராமரின் கால்களில் விழுந்து வணங்கிய பின் அவர் ஆசிகளை ஏற்றுக் கொண்டு தனது நாட்டுக்குத் திரும்பினார்.

-----------------------------
* ஒரு  சிறு விளக்கம் :-​  

ஸ்வர்க கதியை அழிப்பது என்றால் பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு விட்டால் ஸ்வர்கத்துக்கு செல்லவே முடியாது என்பதல்ல இதன் சாரம். ஸ்வர்க பாதையை அழித்து விட்டால் பரசுராமர் அவதாரம் முடிந்தவுடன் முதலில்  அவர் எண்ணி இருந்தபடி நேரடியாக ஸ்வர்கத்துக்கு செல்ல முடியாமல் வேறு வழியில் ஸ்வர்கத்துக்கு செல்ல வேண்டி வரும்.  அதற்கு மேலும் சில ஷணங்கள் தேவைப்படும்.  நாம் கணக்கிடும் ஒவ்வொரு ஷணமும்  தெய்வங்களைப் பொருத்தவரை பல்லாண்டு காலம் ஆகும்.  ஆகவே வீணாகும் ஒவ்வொரு ஷணமும் தெய்வங்களைப் பொருத்தவரை பொன்னானவை. அப்படி  வீணாகும் ஒவ்வொரு ஷணமும்  ஒரு அவதாரத்தை முடித்து விட்டு அடுத்த அவதாரம் எடுப்பதற்கு  இடையே பல்லாயிரம் ஆண்டுகள்   இடைவெளியை ஏற்படுத்தி விடும்.  அப்படி என்றால் அனைத்தையும் இயக்கும் எனப்படும் தெய்வங்களால் அவற்றை முன்னரே அனுமானித்து இருக்க முடியாதா, இப்படிப்பட்ட சங்கடங்களை தவிர்க்க முடியாதா என்ற கேள்வி எழலாம்? புராண விளக்கங்களின்படி தெய்வங்களை மையமாகக் கொண்டு நடப்பது அனைத்துமே  தெய்வ லீலைகள் ஆகும்.  இப்படி செய்வதின் மூலம் இப்படி நடக்கும் என்ற விதியை மானிடப் பிறவிகளுக்கு உணர்த்திடவே அப்படிப்பட்ட லீலைகளை வேண்டும் என்றே தெய்வங்கள்  நடத்திக் காட்டுகிறார்கள்.

விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டத்தை அடைந்ததும், தனது சக்தியை ராமருக்கு செலுத்த வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்து கொண்டார். அதனால் தன்னிடம் இருந்த வில்லை ராமன் வாங்கிக் கொண்டு, அதை தூக்கி நாணேற்றி  தன்னை  வெற்றிக் கொண்டவுடன்  தன்னை  வணங்கி நின்ற ராமருக்கு தனது கைகளைத் தூக்கி பரசுராமர் ஆசிர்வதிக்கிறார். பரசுராமர் உருவில் இருந்த விஷ்ணு பகவான் அப்படி கைகளை தூக்கி ஆசிர்வதிக்கும்போதே அதன் மூலம் தனது சக்திகள் அனைத்தையும் ராமாவதாரத்துக்கு மாற்றி விடுகிறார்.  ஏன் என்றால் ஒரே நேரத்தில் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இரண்டு வெவ்வேறு மானிட அவதாரங்களில் வைத்திருந்து  தமது கடமைகளை செய்ய முடியாது. 

'நீ அவதரித்ததின் காரணம் அனைத்தும் இனிதே முடியட்டும்' என்று பரசுராமர் ஆசிர்வதித்தபோதும் கூட தான் விஷ்ணுவின் அவதாரம் எனும் உண்மையை ராமர் புரிந்து கொள்ளவில்லை. அது போலவே மற்றவர்களும் விஷ்ணுவைப் போல சக்தி கொண்ட மானிடர் என்றே ராமரைக் குறித்து நினைத்திருந்தார்களே தவிர அவரை தெய்வம் என்று கருதவில்லை. தானே விஷ்ணுவின் அவதாரம் என்பது ராமருக்குப் புரிந்து இருந்திருந்தால் விஷ்ணுவின் அவதாரமாக, தமக்கு மூத்த அவதாரமாக இருந்த பரசுராமரை தம்மிடம் தோற்றுப் போக வேண்டும் என ராமர் எண்ணி இருப்பாரா? இந்த காட்சி கூட பரசுராம அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும், தனது சக்திகளை ராமாவதாரத்துக்கு செலுத்திவிட வேண்டும் என விஷ்ணு எண்ணியதினால் நடைபெற்ற நிகழ்ச்சியாகும். 

தொடரும்............10

Tuesday, June 23, 2015

Raghuvamsam - 8

ரகுவம்சம்-8
- சாந்திப்பிரியா - 

விஸ்வாமித்திர முனிவர் நடத்திய யாகமும்   சீதையின் ஸ்வயம்வரமும்

நால்வரும் வளர்ந்து பெரியவர்களானவுடன் ஒருநாள் ராஜகுரு விஸ்வாமித்திரர் தசரதரின் அரண்மனைக்கு வந்து தசரதனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். தான் செய்யும் ஒருயாகம் அசுரர்களால் இடையூறு செய்யப்பட்டு தடுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதினால் தன்னால் யாகத்தை சரிவர செய்ய இயலவில்லை என்றும், அதனால் யாகம் நடந்து முடியும்வரை யாகத்துக்கு காவலாக இருக்க ராமனையும் லஷ்மணரையும் தன்னுடன் அனுப்புமாறு கேட்க தசரதர் தயங்கினார். தனக்கே வெகு காலத்துக்குப் பிறகே புத்திர பாக்கியம் கிடைத்திருக்கையில் யாகத்துக்கு காவலாக இருக்கும் நேரத்தில் அந்த அசுரர்களின் மூலம் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என பயந்து போன தசரதன் விஸ்வாமித்திரர் வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். ஆனாலும் சற்றே சுதாகரித்துக் கொண்டு ராம லஷ்மணர்களுக்கு பதில் தனது படைகளை யாகத்துக்கு  காவலாக இருக்க அனுப்புவதாக கூற,  அதை ஏற்க விஸ்வாமித்திரர் மறுத்து விட்டதுடன், தான் கேட்டபடி ராம லஷ்மணரை தனது யாகத்துக்கு காவலாக இருக்க அனுப்ப முடியவில்லை என்றால்  தனக்கு வேறு எந்தப் படையும் தேவை இல்லை என கோபமாகக் கூறி விட்டு கிளம்பிச் செல்லத் துவங்கியதும் அங்கிருந்த வசிஷ்ட முனிவர் அவர்களை சாந்தப்படுத்தி  விஸ்வாமித்திரர் கேட்டபடியே அவர் யாகத்துக்கு காவலாக இருக்க ராமனையும் லஷ்மணரையும் அனுப்புமாறும், அது நன்மைக்கே என்றும் தசரதனுக்கு எடுத்துரைக்க, வேறு வழி இன்றி தசரதனும்  தனது இரண்டு புத்திரர்களான ராமனையும் லஷ்மணரையும்  விஸ்வாமித்திரர் நடத்தும் யாகத்துக்கு காவலாக இருக்க அவருடன் அனுப்பி வைக்க சம்மதித்தார்.

ராம லஷ்மணர்கள் விஸ்வாமித்திரருடன் கிளம்பிச் சென்று கொண்டு இருந்தபோது வழியில் தாடகை எனும் அரக்கி இருந்த வனப்பகுதி வந்தது. அவள் கொடூரமான குணத்தையும் முகத்தையும் கொண்ட அரக்கியாவாள். அவள் பலத்தையும், பயங்கரத்தையும் விஸ்வாமித்திரர் ராம லஷ்மணர்களுக்கு  எடுத்துரைத்தார். அவர்கள் விஸ்வாமித்திரருடன் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்ட அரக்கியோ அவர்களைக் கொல்ல ஆவேசமாக அவர்களை நோக்கி வந்தபோது  பெண் என்பதினால் அவளுடன் சண்டைப் போட முதலில் ராமன் சற்றே  தயங்க, விஸ்வாமித்திரர் பல கதைகளை எடுத்துக் கூறி அவளைக் கொல்லாவிடில் தமது யாகம் நடைபெறாது என்ற காரணத்தையும்  கூற, ராமனும் சற்றும் தயங்காமல் அவள் மீது பாணம்  ஒன்றை விட, அந்த அம்பும் அவளது மார்பை துளைத்துக் கொண்டு வெளியேறிச் செல்ல அவள் மலையைப் போல அப்படியே சாய்ந்து வீழ்ந்தாள். அவள் கொல்லப்பட்டதைப் பார்த்த மாரீசனும், சுவாகு எனும் அரக்கர்களும்  பெரும் சேனையுடன் வந்து ராம-லஷ்மணருடன் யுத்தம் செய்யலானார்கள்.  அவர்களது சேனையையும் மாரீசன் மற்றும் சுவாகு இருவரையும் ராம லஷ்மணர்கள் பல பாணங்களை வீசி கொன்று தீர்த்தார்கள். அந்த அரக்கர்கள் அனைவரும் அழிந்தப் பின் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்ற விஸ்வாமித்திரர் தாம் பாதியில் நிறுத்தி வைத்திருந்த தமது யாகத்தைத் மீண்டும் துவக்கி  முடித்துக் கொண்டார். யாகம் நடந்து முடியும்வரை யாகசாலையின் அனைத்துப் பக்கங்களிலும் நடந்து கொண்டே இருந்தவாறு கண் அயராமல் யாகத்துக்கு காவலாக நின்றார்கள் ராம லஷ்மண சகோதரர்கள்.

அந்த யாகம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும் மனம் மகிழ்ந்து போன விஸ்வாமித்திர முனிவர் அவர்களுக்கு தமது பரிபூரண ஆசிகளை வழங்கினார்.  அந்த நேரத்தில் அவருக்கு மிதிலை மன்னன் ஜனகரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.  அந்த அழைப்பில் அவர் தனது நாட்டில் தனதி எனும் யாகத்தை நடத்த உள்ளதாகவும் அதில் பங்கேற்று அங்குள்ள சிவதனுஷ் எனும் வில்லை தூக்கி அம்பை எய்பவர்களுக்கு தனது மகளை விவாஹம் செய்து கொடுப்பதாக முடிவு செய்து உள்ளதினால், அந்த நிகழ்ச்சி நல்ல முறையில் நடைந்து முடிந்திட அவர் தன்  நாட்டுக்கு வந்து தம்மை ஆசிர்வதிக்க வேண்டும் எனவும்  அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொண்ட விஸ்வாமித்திரரும் தம்முடன்  ராம லஷ்மணர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

அவர்களும் செல்லும்போது வழியிலே கௌதம முனிவரின் சாபத்தினால் கல்லாகிக் கிடந்த அவரது மனைவியான அகலிகை மீது ராமனின் கால்கள் எதேற்சையாகப் பட்டு விட கல்லாகிக் கிடந்த அவள் உயிர் பெற்று எழுந்தார். ராமரின் கால் பட்டதும்  அவள் சாபம் நீங்கி உயிர் பிழைத்து எழுந்த காரணத்துக்கான சாபம் குறித்து ராமனுக்கு விஸ்வாமித்திரர் எடுத்துரைத்தார்.  விஸ்வாமித்திரர்  'கல்லாகிக் கிடந்த  அகலிகை கௌதம முனிவரின் தர்ம பத்தினியாக இருந்தவள். ஆனால் அவள் தேவலோக அதிபதியான இந்திரனின் அழகில் ஒரு நாள் சற்றே மயங்கி விட்டதால் அவளைக் கல்லாகப் போவது என அந்த முனிவர் சபித்து விட்டாலும்  எப்போது  ராமனின் கால் சிலையாக கிடக்கும் அவள் மீது  படுமோ அப்போது அவள் உயிர் பெற்று எழுவாள் என்று தெய்வ நியதி உள்ளது' என்றுக் கூறினார். அந்த நிலையிலும் ராமர் தெய்வ அவதாரமே என்பதை அவரும் உணரவில்லை, ராமனுக்கும் தெரியவில்லை. உயிர் பிழைத்து எழுந்த அகலிகையை ராம லஷ்மணர்கள் வணங்கி  எழுந்தப் பின், அவளை அழைத்துக் கொண்டு அவளுடன் துணையாகச் சென்று  கௌதம  முனிவரிடம் அவளை பத்திரமாக ஒப்படைத்தப் பின் அங்கிருந்து மீண்டும் கிளம்பி விஸ்வாமித்திரருடன் மிதிலைக்கு செல்லத் துவங்கினார்கள்.

விஸ்வாமித்திரர் மிதிலைக்கு வந்து கொண்டிருந்த செய்தியைக் கேட்ட ஜனகர் பெரும் மகிழ்ச்சி அடைந்து  அவர் வந்து கொண்டிருந்த வழியை நோக்கிச் சென்று வழியிலேயே அவரை சந்தித்து, அவரை விழுந்து வணங்கி அவருக்கு அர்க்கியமும் தந்து அவர்களை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவருடன் இருந்த இரண்டு இளைஞர்களான ராம லஷ்மணர்களைக்  குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். ராமனின் வீரம், தீரம் மற்றும் பல்வேறு மேன்மையான குணங்களைக் கேட்டறிந்த ஜனகரும் ராமனையும் அந்த யாக முடிவில் நடைபெற இருந்த வில் போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு  விடுத்தார்.

ராமன் எதுவும் கூறும் முன்னரே அவர் சார்பில் விஸ்வாமித்திரர் அந்த அழைப்பை ராமர் சார்ப்பில் தானே ஏற்றதாகக் கூறி விட்டு மறுநாள் அந்த போட்டியில் பங்கேற்க ராம லஷ்மணர்களை அரச சபைக்கு அழைத்துச் சென்றார். போட்டி துவங்கும் முன்னர் மன்னன் அனைவருக்கும்  கூறினார்  'இங்கு கூடி உள்ள அனைவருக்கும் வந்தனம். இந்த வில்லும் அம்பும் சிவபெருமான் கொடுத்ததாகும்.  ஏர்  உழும்போது பூமியில் இருந்து எனது மகளான சீதை கிடைத்ததால் இந்த வில்லையும் அம்பையும் யார் தூக்குவார்களோ அவர்களுக்கே சீதையை மணமுடித்துக் கொடுப்பதாக  முடிவு செய்திருந்தேன். அதன்படி இந்த வில்லையும், அம்பையும் யார் தூக்குவார்களோ அவர்களில் ஒருவரே சீதைக்கு கணவராக தேர்வு செய்யப்படுவார்'. இப்படியாகக் கூறி விட்டு, அங்கு கூடி இருந்த அனைவருக்கும் சபை நடுவே வைக்கப்பட்டு இருந்த வில்லையும் அம்பையும் காட்டினார்.
தொடரும்...........9

Monday, June 22, 2015

Raghuvamsam - 7

ரகுவம்சம்-7
- சாந்திப்பிரியா - 
மன்னன் தசரதன் 
பெற்ற சாபம்   

அயன் மரணம் அடைந்த பிறகு ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்ட தசரதனும் தன் தந்தையைப் போலவே நல்லாட்சி நடத்தி வந்தார். தீய செயல்களோ அல்லது தீய குணங்களோ அவரிடம் சிறிதும் காணப்படவில்லை. அவரும் தனது தந்தையைப் போல பல நாடுகள் மீதும் படையெடுத்து சென்று தனது நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார். ஜனங்கள் அவர் மீது பெரும்  மதிப்பு வைத்து இருந்தார்கள். பல விஷயங்களிலும் அவர்  சிறந்து விளங்கினார். அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் அவர் கோசலநாட்டு மன்னனின் மகளான கௌசல்யயையும், கேயதேசத்து அரசனின் மகளான கைகேயி மற்றும் மகர தேசத்து மன்னனின் மகளான சுமித்திரையும் மணந்து கொண்டார்.  இப்படியாக மூன்று மனைவிகளுடனும் ஆனந்தமான வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கையில் அவருக்கும் ஒரு சோதனை வந்தது.

வசந்த காலத்தில் பொதுவாக மன்னர்கள் வன வேட்டைக்குச் செல்வார்கள். அப்போதுதான் காட்டில்  வனவிலங்குகள் ஓடியாடித் திரியும். உணவுக்கு இறை தேடி அங்கும் இங்கும் அலையும். செடி கொடிகள் அற்புத பச்சை நிறத்தில் மனதுக்கு இனிமையாக காட்சி தரும். அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்படியான வசந்த காலம் வந்தபோது தசரத மன்னனும் தனது சிறு சேனையுடன், வன நாய்கள், மிருகத்தைக் கட்டும் கயிறு என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வனத்துக்கு வேட்டையாடச் சென்றார். வன தேவதை தசரதனை மனதார வரவேற்றாள். வனத்துக்கு வேட்டைக்கு சென்ற தசரதன் பல மிருகங்களைக் கொன்றார். மறைந்து இருந்த மிருகங்களை தூரத்ததில் இருந்தே பாணம் விட்டு அழித்தார். மதியம் வேட்டையாடி களைப்புற்றவர்கள் ஒரு அரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது காத தூரத்தில் இருந்த நதி ஒன்றில் மிருகம்  ஒன்று களுக், களுக் என்று நீர் அருந்துவது போல சப்தம் கேட்டது. ஆனால் அது யானை அல்ல. ஒரு குருட்டு பெற்றோர்களின் புதல்வர் அவர்களுக்காக தனது குடத்தில் நீரை மொண்டு கொண்டு இருந்தபோது எழுந்த சப்தமே ஆகும்.

தசரதர் வில் வித்தையில் சிறந்தவர். ஓசை வரும் திசையைக் கண்டே துல்லியமாக அந்த ஓசை வரும் இடத்திற்கு அம்பை ஏவும் வல்லமைக் கொண்டவர். ஆகவே ஓசை வந்த திசையில் அம்பை ஏத்தினார்.....அந்தோ பரிதாபம். அந்த அம்பும் அங்கிருந்த குருட்டு பெற்றோர்களின் புதல்வர் உடலிலே தைத்து அவரை கீழே வீழ்த்த, ஐயோ என அலறினான் அந்த சிறுவன். ஒ ....மனிதக் குரல் ஒலிக்கிறதே...ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டதோ ....வந்த குரல்  மனித ஒலியாக இருக்குமா என திடுக்கிட்ட தசரதர் ஓசை வந்த இடத்துக்கு ஓடோடிச் சென்று பார்க்க அங்கே தான் எய்த அம்பினால் கீழே விழுந்து கிடந்த சிறுவனைக் கண்டார். தசரதரைக் கண்ட சிறுவனோ இருகரமும் கூப்பி 'மன்னா சற்று தூரத்தில் தோள் கூடையில் சுமந்து வந்துள்ள கண் பார்வை அற்ற என்னுடைய பெற்றோர்களை விட்டு விட்டு வந்திருக்கிறேன். அவர்கள் தாகத்தினால் தவித்தபடி இருப்பார்கள். ஆகவே தயவு செய்து உடனடியாக இந்த குடத்தில் உள்ள நீரைக் கொண்டு சென்று அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் தாகத்தைத் தணிக்க உதவுங்கள்' என்று கூறி விட்டு அப்படியே மரணம் அடைந்து விழுந்தான்.

என்ன செய்வதென்று தெரியாத தசரதனும் இறந்து கிடந்த சிறுவனையும், குடத்து நீரையும் எடுத்துக் கொண்டு போய் கண் பார்வை அற்ற கிழவர்களின் அருகில் சென்று முதலில் நடந்த எதைப் பற்றியும் கூறாமல் நீர் குடத்தைக் கொடுத்து அதை அருந்துமாறு கூறினார். ஆனால் அந்த கண்பார்வை அற்ற பெற்றோர்களோ தமது புதல்வன் வராமல் வேறு யாரோ வந்தல்லவா தண்ணீரைத் தருகிறார் ....நமது புதல்வனுக்கு என்ன ஆயிற்று என தவித்தபடி தமது புதல்வனின் பெயரைக் கூறி அவனை அழைத்தார்கள். அவன் வந்து விடுவான் என்றும், அதற்குள் நீரை அருந்துமாறு தசரதன் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் சந்தேகம் கொண்ட அவர்கள் தமது புதல்வன் குரலைக் கேட்காமல் அந்த நீரை அருந்த மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார்கள்.

சில கணம் யோசனை செய்தபின் வேறு வழி இன்றி தசரதனும் நடந்த அனைத்தையும் கூறி, தான் யார் என்பதையும் கூறி அவர்களிடம் தான் அறியாமல் செய்து விட்ட பிழைக்காக மன்னிப்பைக் கோரினார். 'பெரியோர்களே, நான் தெரியாமல் செய்து விட்ட பிழையை மன்னித்து என்னையே உங்கள் மகனாக ஏற்றுக் கொண்டு என்னுடன் அரண்மனைக்கு வந்து விடுங்கள். நான் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்' என்று கூறியதும் அந்த கண்பார்வை அற்ற பெற்றோர்கள் கதறி அழுதார்கள். தாம் ஆசையுடன், அன்புடன் வளர்த்து வந்த தமது ஒரே மகனை இழந்து விட்டவர்களினால் மகனின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சற்றே கோபமுற்ற கிழவர் தசரதனுக்கு சாபமிட்டார். 'மன்னா, எங்களை நீ எப்படி புத்திர சோகத்தினால் வருத்தமடையச் செய்து விட்டாயோ அதைப் போலவே உன் வாழ்விலும் உனக்கு புத்திர சோகம் ஏற்படட்டும்' என்று கூறிய பின் அப்படியே கீழே விழுந்து இருவரும் மரணம் அடைய, பெரும் துயரம் அடைந்த தசரதனும் வேறு வழி இன்றி அந்த மூவருக்கும் அங்கேயே கிரியைகளை செய்து அவர்களை தகனமும் செய்து விட்டு நாடு திரும்பினார்.

காலம் விரைவாக ஓடிற்று. மரணம் அடைந்து விட்ட, கண்பார்வை அற்ற கிழவர்களின் சாபமோ என்னவோ, பதினாறாயிரம் வருடம் கழிந்தும் தசரதனுக்கு புத்திர பாக்கியமே கிடைக்கவில்லை. அதனால் தனது மூதையோரான திலீபனைப் போலவே 'தமக்கு பிறகு ஸ்ரார்தங்கள் செய்து பித்ருக் கடன்களை தீர்க்க மகன் பிறக்கவில்லையே' என மனம் வருந்திய தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்யலானார்.

இது நடைபெற்றுக் கொண்டு இருந்த நேரத்திலே பாற்கடலில் சயனித்திருந்த மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் சென்று இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தமக்கு தேவலோகத்திலும், பூலோகத்திலும் ராவணன் எனும் அசுரனின் மூலம் பல தொல்லைகள் நேரிடுவதாகவும், ராவணனின் ஆட்களினால் தாம் எந்த ஒரு யாகத்தையும் பூஜை புனஸ்காரங்களையும் செய்ய முடியாமல் தவித்துக் கிடப்பதையும் கூறி தம் அனைவருக்கும் ராவணனின் அட்டகாசத்தில் இருந்து விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட நாராயணரும் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அமைதிப்படுத்தி  'தேவர்களே நீங்கள் அஞ்ச வேண்டாம். நடப்பதை நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த ராவணன் பிரும்மாவிடம் இருந்து பல அறிய வரங்களை பெற்றுக் கொண்டு உள்ளான். அதில் ஒன்றாக அவன் தனக்கு தேவர்களால் மரணம் சம்பவிக்கக் கூடாது என்ற வரத்தையும் பெற்று இருக்கிறான். ஆகவே அவனுக்கு தேவர்களால் மரணம் சம்பவிக்காது. ஒரு மானிடப் பிறவியினால் மட்டுமே மரணம் கிடைக்கும்.  அந்த மரணமும் நான் மானிடப் பிறவி எடுத்தப் பின் என்னால் மட்டுமே மரணம் சம்பவிக்கும் என்பது விதியாக உள்ளது. தற்போது தசரதன் தனக்கு மகன் வேண்டும் என புத்ர காமேஷ்டி யாகம் ஒன்றை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆகவே நானே தசரதனின் மகனாக பிறந்து  பூமியிலே மானிடனாக வாழ்ந்து  அந்தப் பிறவியிலே ராவணனுடன் யுத்தம் செய்து அவனை அழிப்பேன். கவலைப்படாதீர்கள்' என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

அதே நேரத்தில் தசரதன் செய்த யாகமும் நிறைவேறும் கட்டத்தை எட்டியபோது அந்த யாகத் தீயில் இருந்து தோன்றிய பூதம் ஒன்று தனது கையில் ஒரு மண்பாண்டத்தை எடுத்து வந்து அதில் இருந்த பிரசாதத்தை தசரதனுக்கு கொடுத்து அதை அவருடைய மனைவிகள் உண்டால் அவர்கள் கருதரிப்பார்கள் என்று கூறி விட்டு மறைந்தது.   தசரதரும் அதைக் கொண்டு போய்  தனது மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார். அதை அருந்திய கோசலை நல்ல நாளில் நாராயணருடைய அவதாரமான ஒரு புத்திரனைப் பெற்று எடுத்தாள்.  அவனுக்கு ராமன் எனப் பெயர்  சூட்டினார்கள். பிரசாதத்தை உண்ட கைகேயி பரதனைப் பெற்று எடுக்க, பிரசாதத்தை உண்ட சுமித்திரைக்கு லஷ்மணர் மற்றும் சத்ருக்னன் பிறந்தார்கள். நான்கு புதல்வர்களில் ராமரும், லஷ்மணரும்  ஒன்றாக வளர, பரதனும் சத்ருக்னனும் ஒன்றாக வளர்ந்தார்கள். அவர்கள் நால்வரும்  நல்லொழுக்கம் நிறைந்தவர்களாக கல்வி அறிவு மிக்கவர்களாக  வளர்ந்து வந்தார்கள்.
தொடரும்.........8

Sunday, June 21, 2015

Raghuvamsam - 6

ரகுவம்சம்-6
- சாந்திப்பிரியா - 
அயன்  மரணமும்,  தசரதன் பதவி ஏற்றதும் 

அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினான்.  பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார். எந்த நாட்டு அரசனுக்கும் எந்த விதமான தொல்லையும் கொடுத்ததில்லை.  அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் ஒருநாள் அவன் தனது மனைவி  இந்துமதியுடன் சோலையில் அமர்ந்திருந்தபடி பூக்களைப் பறித்தபடி ஓடியாடிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தார். இருவரும் ஒரு மரத்தடியில் படுத்திருந்தவாறு பேசிக் கொண்டு இருக்கையில் வானத்து வழியே சென்று கொண்டு இருந்த நாரத முனிவருடைய வீணையில் இருந்து ஒரு மாலை கீழே விழுந்தது. விழுந்த மாலை இந்துமதியின் மார் மீது வந்து விழ அவள் ஒரு கணம் பரவசம் அடைந்து மகிழ்ந்த பின் அப்படியே பூமியிலே வீழ்ந்து மாண்டாள். அதைக் கண்ட அயனும் அப்படியே மூர்ச்சை அடைந்து விழுந்தார். அவருடைய பரிவாரங்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள். அன்னமும், ஆகாயத்திலே பறந்து சென்ற கிளிகளும் கூட அழுது புலம்பின. சற்று நேரத்தில் அயன் மட்டும் கண் விழித்தார். இறந்து கிடந்த தனது மனைவியின் உடலைக் கண்டு திக்கிட்டுப் போய் துக்கம் தீராமல் அழுது புலம்பலானார். 

'தேவி, என்னே விதி என்பது? ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்த மாலையினால் உன் உயிர் போனதின் காரணம் என்னவோ .....தெரியவில்லையே....உன் மெல்லிய உடலை அந்த மெல்லிய மலர் மாலை பறித்ததின் காரணமும் தெரியவில்லையே......பிரியமானவளே ..... நாம்  எந்த பாவமும் செய்யவில்லையே... அனைவருக்கும் நல்லதையல்லவா செய்து வந்தோம்...இப்படி என்னை தனியே தவிக்க விட்டுச் சென்று விட்டாயே...இது நீதியாகுமா. இது நியாயமா......உனக்கே இது தகுமா? தேவி....உயிர் பிழைத்து எழுந்து வந்து அந்த காரணத்தைக் கூற மாட்டாயா? இனி நான் எப்படி உறங்குவேன்? உன் அழகிய வதனம்   மீது   உன்னைப் பொசுக்க போடப்படும்  கட்டைகளை எப்படியம்மா உன் உடம்பு தாங்கும்?'  என்றெல்லாம் கூறிக் கூறி கதறி அழுதவண்ணம் இருந்தார். அவரை உற்றாரும் உறவினரும், சுற்றத்தாரும் தேற்றி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்துமதியின் உடலையும் எடுத்துச் சென்று பத்து நாட்கள் இறுதிக் காரியங்களை  முறையோடு செய்து முடித்தார்கள்.

இறுதிக் காரியங்கள் நடந்து முடிந்தேறிய பின் அங்கு வந்திருந்த வசிஷ்ட முனிவருடைய சீடர்கள்  மன்னர் அயனிடம் சென்று கூறினார்கள் 'மன்னா அனைத்து முக்கால சம்பவங்களை ஞானக் கண் கொண்டு நோக்கும் எம்முடைய மா முனிவரான வசிஷ்ட முனிவர் உமக்கு சில உண்மைகளைக் கூற எம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இறந்து போன உன்னுடைய மனைவி பூர்வ ஜென்மத்தில் அருணை என்பவளாக  இருந்தாள். அவள் இந்திரனின் சபையில்  ஒரு அப்ஸரை ஆவாள். ஒருமுறை திருணவின்து எனும் மாமுனிவர் தவத்தில் இருந்தார். அவர் தவம் வெற்றிகரமாக நடந்து  முடிந்து விட்டால் அவர் இந்திரனையும் மிஞ்சிய சக்தி கொண்டவர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் இந்திரன் ஒரு சூழ்ச்சி செய்து அருணை எனும் தனது ராஜசபை அப்ஸரையை அந்த முனிவரின் தவத்தைக் கலைக்க அனுப்பினார். அவளும் திருணவின்து எனும் அந்த முனிவர் தவம் இருந்த இடத்தை அடைந்து நடன நாட்டிய ஓசை எழுப்பி அவர் தவத்தைக் கலைத்தாள். தவம் கலைந்த முனிவரும் கோபம் கொண்டு அவளை மானிடப் பெண்ணாக பிறவி எடுத்து பூமியிலேயே சென்று  வாழுமாறு சாபமிட்டார். அழுது புலம்பியவாறு தான் அறியாமையினால் செய்து விட்ட தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கோரினாள்.  தான் வேண்டும் என்றே எந்த தவறையும் செய்யவில்லை, இந்திரனின் கட்டளைப்படியே வேறு வழி இன்றி அங்கு வந்து அவர் தவத்தைக் கலைக்க வேண்டியதாயிற்று என்று கூறி தனக்கு சாப விமோசனம் தருமாறு வேண்டினாள். முனிவர் திருணவின்துவும் அவள் மீது இரக்கப்பட்டு  'அவள் பூமியிலே பிறந்து அயனுக்கு மனைவியாக வாழ்ந்து கொண்டு இருக்கையில் நாரதர் வீணையில் இருந்து எப்போது அவள் மார்பின் மீது  கற்பக மாலை விழுமோ அப்போது அவளுக்கு  மரணம் சம்பவித்து அவள் மீண்டும் இந்திர லோகத்துக்கு சென்று விடுவாள். அதுவரை அவள் பூமியிலே மானிடப் பிறவியில் இருந்து அவதியுற வேண்டும்' என்று அவளுக்கு தான் முதலில் கொடுத்த சாபத்தின் தன்மையை மாற்றினார்.

வசிஷ்ட முனிவருடைய சீடர்கள் மேலும் தொடர்ந்தார்கள் 'மன்னா இதனால்தான் பூர்வ  ஜென்மத்தில் அருணையாக இருந்த உன்னுடைய மனைவியான இந்துமதியும் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்துக்கு திரும்பச் சென்று விட்டாள். ஆகவே நீ எத்தனைதான் அழுது புலம்பினாலும் அவள் மீண்டும் உயிர் பிழைத்து வரமாட்டாள் எனும் உண்மையை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எங்களை வசிஷ்ட முனிவர் இங்கு அனுப்பினார். ஆகவே மனதை தேற்றிக் கொண்டு உன் கடமையை வழுவாமல் செய்து வா. அதுவே நீ பிறந்த இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் செயலாக இருக்கும்' என்று கூறி விட்டு சென்று விட்டார்கள். 

ஆனாலும் அயனினால்  தனது மனைவியாக இருந்த இந்துமதியை மறக்க முடியவில்லை. அவர்  மனதில் ஏற்பட்டு இருந்த துக்கம் ஆற முடியாத பெரிய ரணமாகவே  உருமாறிக்  கொண்டு  இருந்தது. காலம் கடந்தது. துக்கத்தினால் தன் நிலை இழந்த மன்னன் தனது மகன் தசரதன் எட்டு வயதாகும்வரைக் காத்திருந்தார்.   தசரதன் இளம் வயதுக்கு வந்து முடி சூட்டிக் கொள்ளும் நிலைக்கு வந்ததும், அவரை அரியணையில் அமர்த்திவிட்டு  ராஜ்ய பரிபாலனத்தையும் அவரிடத்திலே தந்து விட்டு  பல காலம் உபவாசம் இருந்து ஒருநாள் சராயு நதிக்கரைக்குச் சென்று சராயு நதியில் விழுந்து உயிரைத் துறந்து கொண்டார்.
தொடரும்..........7

Raghuvamsam - 5

ரகுவம்சம்-5
- சாந்திப்பிரியா - 

அயனுடன் இந்துமதியின் ஸ்யம்வரம் 

ஸ்வயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும்  தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று அங்கிருந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் தனது உடலையும், முகத்தையும் முழுமையாக மூடி இருந்த  சேலை வழியே பார்த்துக் கொண்டே நடந்து செல்கையில் அவள் கூட இருந்த அவளது தோழியோ அந்தந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் குறித்த அருமைப் பெருமைகளைக் கூறியவாறு அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தபடி ஆவலுடன் கூடவே சென்றவண்ணம் இருந்தாள்.  அந்த மன்னர்களும், ராஜ குமாரர்களும்   இந்துமதி தம் அருகில் வரும்போது தமக்கே உரிய தோரணைகளை  வெளிப்படுத்தியவாறு இருந்து கொண்டு அவள் கவனத்தைக் கவர முயற்சி செய்தார்கள்.

ஒரு அரசன் தனது கையில் வைத்திருந்த ரோஜா மலரை சுற்றி சுற்றி சுயற்றியவண்ணம் அழகு சேட்டை செய்தபடி இருக்க, இன்னொருவன் தான் எத்தனை செல்வந்தன் என்பதைக் காட்ட தங்க இழைகளினால் நெய்யப்பட்ட தனது அங்கவஸ்திரத்தை   (ஒரு பக்க சட்டை மீது போர்த்திக்  கொள்ளும் துணி)  அவ்வபோது கையில் எடுத்தெடுத்து மீண்டும்  தன்னுடைய தோள் மீது போர்த்திக் கொண்டான்.  அதே போல தனது செல்வத்தைக்  கட்ட எண்ணிய இன்னொருவனோ தனது மார்பிலே கிடந்த மின்னும் வைர வைடூரிய மாலையை அலட்சியமாக வெளியில் எடுத்து தனது தோள்  மீது போட்டுக் கொண்டார். அவர்களை எல்லாம் கடந்து சென்றபோது இந்துமதியுடன் சென்ற தோழியோ சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் அவரவர் அருமை பெருமைகளை அவளுக்கு கூறிக் கொண்டே சென்றாள்.  இப்படியாக அவரவர்   இந்துமதியின் கவனத்தைக் கவர பல்வேறு சேஷ்டைகளை   செய்தபடி இருந்தாலும், அவர்களில் மாறுபட்டு அயன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் அருகில் சென்ற இந்துமதியின் கண்களும், அயனுடைய கண்களும் நேருக்கு நேர் மோதின.  அவரது அமைதியான, அடக்கமான முகமே அவர் குணத்தை எடுத்துக் காட்டுவதாக இருக்க அவள் கூடச் சென்ற தோழியோ,  'ராஜகுமாரி அவர்களே மேலே செல்லலாமா' என இந்துமதியை கேட்க அயன் முன் நின்று கொண்டிருந்த இந்துமதியோ  சற்றும் தயங்காமல் தனது கையில் இருந்த மாலையை அவர் கழுத்திலே போட பெரும் கரக ஒலி எழுப்பி அனைவரும் அதை வரவேற்றனர்.

தனது மகள் தேர்வு செய்த ராஜகுமாரனை நோக்கி ஓடோடி வந்த அரசரும், அவரை ஆரத் தழுவி, தன்னுடன் தனது இருக்கைக்கு அழைத்துச் சென்று அவரைக் குறித்த அனைத்து விவரத்தையும் விலாவாரியாக சபையில்  எடுத்துரைத்தப் பின் அனைவர் முன்னிலையிலும் தனது மகளுடன் அயனுக்கு திருமண நிச்சயம் செய்வித்தார். அங்கு அந்த சடங்கை செய்ய தயாராக அமர்ந்திருந்த புரோகிதர்கள் ஹோமக்கிரியை மூட்டி, அக்னி  சாட்சியாக அவர்களுக்கு திருமணம் செய்வித்தார்.  தனது சுற்றார்களுடன் விரைவில் மீண்டும் அங்கு வருவதாக உறுதி கொடுத்து விட்டு இந்துமதியை அழைத்துக் கொண்டு அயன் தனது நாட்டுக்கு திரும்பலானார்.

இந்துமதியின் தந்தையும் அயனுக்கு அநேக பொருட்களையும், பொன்னையும் தந்து அவருடன் மூன்று நாட்கள் அதாவது பாதி தூரம்வரை அவருடன் பயணித்தப் பின்னர் நாடு திரும்பினார். அதே நேரத்தில் இந்துமதி தமக்கு கிடைக்காத கோபத்தில் வழியில் படையினரோடு பதுங்கி இருந்த பல நாட்டு ராஜகுமாரர்களும் அயனை வழிமறித்து அவனுடன் போர் புரியத் துவங்கினார்கள்.  நான்குபுறமும் படைகள் சூழ்ந்து தம்மை தாக்கினாலும் அவர்கள் அனைவரையும் மூர்கத்தனமாக  அயன் தாக்கத் துவங்கினான். ஒரு கட்ட யுத்தத்தில் பிரியதர்சன் தனக்கு பாதுகாப்பாக இருக்கக் கொடுத்த  விசேஷ பாணம் நினைவுக்கு வர அதை அவன் எதிரிகள் மீது பிரயோகித்தான். அவ்வளவுதான் அந்த பாணம் பல மன்னர்களையும் அவர்களது படையினரையும் கொன்று குவிக்க அயனும் பாதுகாப்பாக இந்துமதியை அழைத்துக் கொண்டு நாடு திரும்பினார்.

அதற்கு இடையில் தனது மகன் அயன் வெற்றிகரமாக நாடு திரும்பி வந்து கொண்டிருந்த செய்தியைக் கேட்ட மன்னன் ரகுராமனும் மனம் மகிழ்ந்து அவர் வரவை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.  அயனும் இந்துமதியுடன் சென்று தாய் தந்தையரைக் வணங்கித் துதிக்க அவர்களும் அவனுக்கு அளவற்ற ஆசிர்வாதம்  .செய்தார்கள். அடுத்த நாளே அயனிடம் தனது ராஜ்ய பரிபாலனத்தைத் தந்துவிட்டு ரகுராமனும் முக்தி தேடி வனத்துக்கு சென்று விட்டார்.  அயனும் தனது தந்தை வழியிலேயே திறமையாக நாட்டையும் ஆண்டு வந்தார். மக்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்க அயனும் அவ்வப்போது தமது பகைவர்களை ஒடுக்கி வந்தார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அயனும் பிராணனை அடக்கி, யோகங்கள் செய்து  சித்திகள் பலவற்றையும் பெற்றார். தந்தை வழி பிழறாமல் நல்ல ஆட்சி தந்து கொண்டு இருக்கையில் ஒருநாள் அவரது தந்தை ரகுராமனும் தமது யோக சக்தியைக் கொண்டு மூச்சை அடக்கி முக்தி தேடிக் கொண்டார் என்ற செய்தி கேட்டு மிக்க துக்கம் அடைந்தார். தனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களை செய்து முடித்தப் பின் மீண்டும் ஆட்சியிலே கவனத்தை செலுத்தலானார். இடையிலே அவருக்கு சூரியனை ஒத்த புத்திரன் ஒருவன் பிறந்தார்.  பத்து திக்குகளும் போற்றும் அளவில் அழகுற இருந்த மைந்தனுக்கு தசரதன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
தொடரும்.......... 6

Friday, June 19, 2015

Raguvamsam - 4

ரகுவம்சம் - 4
- சாந்திப்பிரியா - 
கெளட்ச முனிவர் யாசகம் 
கேட்டு வந்த  கதை

வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர் கௌட்ச முனிவர் ஆவார். அவருக்கு அவரது குருவிடம் இருந்து கிடைத்த கல்வி அறிவுக்கு ஈடாக குரு தட்க்ஷணை  கொடுக்க வேண்டும் என்ற நிலை தோன்றியபோது  கௌட்ச முனிவர் அதற்குத் தேவையான செல்வத்தை மன்னனிடம் இருந்து யாசகமாக பெற்றுக் கொண்டு செல்லலாம் என வந்திருந்தார். ஆனால் அனைத்து செல்வத்தையும் தானங்களைத் தந்தே இழந்து விட்டு, இனி யார் வந்து தானம் கேட்டாலும் கொடுக்க கையில் எந்த செல்வமும் இல்லாமல் நின்றிருந்த வேளையில்  முனிவர் மன்னனிடம் யாசகம் பெற வந்தார். அந்த முனிவர் வந்த நேரத்திலோ ரகுராமனிடம் மண் பாண்டத்தைத் தவிர வேறு எதுவுமே கொடுப்பதற்கு இல்லை. இருந்த அனைத்து தங்கக் குடங்களையும் தானமாக தந்தாகி விட்டது.  இவருக்கு எதைக் கொடுப்பது என மனம் தடுமாறினாலும், தன்னிடம் யாசகம் கேட்டு வந்தவருக்கு ஒன்றும் கொடுக்காமல் அனுப்ப விருப்பம் இன்றி அவரை அமரச் சொல்லி அர்கியம் கொடுத்து அன்புடன் நலம் விசாரிக்கலானார். 'முனிவர் பெருமானே, தங்களுடைய குருநாதர் வரதந்து முனிவர் நலமாக இருக்கிறாரா. அவருக்கும் என் வந்தனங்கள்'. என்று கூறியவாறு வந்தவரை உபசரித்தார்.  பேச்சை வளர்த்தபடி 'ஆஸ்ரமத்தில் மரங்கள் வாடாமல் உள்ளனவா? மாடுகளும் மான்களும் அவற்றின் கன்றுகளும்  இடையூறு இல்லாமல் உலாவுகின்றனவா?' என்றெல்லாம் எதை எதையோ கேட்டு வந்த முனிவரை அன்புடன் உபசரித்தார்.

அதைக் கேட்ட கௌட்ச முனிவர் கூறினார் 'மன்னா, உனது ஆட்சியிலே என் குருநாதர் இருப்பிடத்தில் மட்டும் அல்ல அனைத்து இடங்களிலும்  உள்ள மக்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல்தான் வாழ்கிறார்கள். அரசனே, முன்னோர்களிடம் இருந்துதான் ஒருவர்  வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தையும், பக்தியையும்  கற்றறிய வேண்டும்.  அப்படிக் கற்ற பின் அதை பிழறாமல்தமது வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். ஆனால் நீயோ உன் முன்னோர்களை அனைத்து விதத்திலும் மிஞ்சி விட்டாய் என்பதைக் காணவே ஆனந்தமாக உள்ளது.  அதே சமயத்தில் எனக்கு  போதாத காலமோ என்னவோ நான் உன்னிடம் வந்துள்ள நேரம் காலம் கடந்து விட்ட நேரமாக உள்ளதாகவே உணர்கிறேன். வேள்வி செய்து, அதில்  உன்னிடம் இருந்த அனைத்தையுமே அனைவருக்கும் தானம் செய்து விட்டு இப்போது நொடிந்து விட்டாய். அதைக் கேட்க  எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனாலும் நீ நலமாக இருக்க வேண்டும். உனக்கு மங்களம் உண்டாகட்டும்'.

இப்படியாக கூறி விட்டு மன்னரிடம் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பிய  முனிவரை தடுத்து நிறுத்தி ரகுராமன் கேட்டார் 'மரியாதைக்குரிய முனிவரே நான் மனம் நொடிந்து இருந்ததினால் நீங்கள் வந்த விவரத்தைக் கேட்காமல்  ஏதேதோ பேசிக் கொண்டு இருந்து விட்டேன். என்னை தாயைக் கூர்ந்து மன்னித்து விடுங்கள். நீங்கள் வந்த காரியம் யாது? அதை கூறுவீர்களா?' என்று கேட்க, சற்றே சங்கடத்தில் ஆழ்ந்த முனிவர்  கௌட்ச முனிவர் கூறினார் 'மன்னா எனக்கே நான் வந்த விவரத்தைக் கூற சங்கடமாக உள்ளது.  நான் வரந்து எனும் முனிவரின் சீடராக இருந்தேன். அவரிடம் இருந்து பதினான்கு வித்தைகள், நான்கு வேதங்கள், அனைத்து புராணங்கள், மிமிம்சை, தருமசாஸ்திரம்  என அனைத்தையும்  கற்றறிந்தேன். நான் அவரிடம் கல்வி கற்கத் துவங்கி சில காலமானதுமே அவருக்கான  குரு தட்க்ஷணை என்ன தர வேண்டும் என்று கேட்டபோது நான் அவருக்கு செய்யும் பணிவிடையும், அவரிடம் காட்டும் அன்பும் பக்தியும்  மட்டுமே குரு தட்க்ஷணையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதுவே தனக்குப் போதுமானது என்றார்.

ஆனாலும் நான் அவரிடம் இருந்து அனைத்தையும் கற்றரிந்தப் பின்னர் அவர் ஆஸ்ரமத்தில் இருந்து போகும் முன் மீண்டும் அவருக்கு நான் என்ன தட்ஷணைத் தர வேண்டும் என்று கேட்க அவரும் என் ஏழ்மை நிலையையும் பார்க்காமல் 'நீ எனக்கு இதுவரை குரு தட்க்ஷணை தரவில்லை என்பதினால் ஒரு வித்தைக்கு ஒரு கோடி என  பதினான்கு வித்தைகளுக்கு தட்க்ஷணையாக பதினான்கு கோடி தங்க நாணயங்கள் கொண்டு வா' என்று கூறி என்னை அனுப்பி விட்டார். நான் அதற்கு எங்கு போவது எனத் தெரியாமல் உம்மிடம் வந்து உம்மைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு செல்லலாம் என இங்கு வந்ததும்தான் உன்னுடைய அனைத்துச் செல்வத்தையும் நீயும் துறந்து விட்டு மண் பாண்டத்தைக் கொண்டு  எனக்கு அர்க்கியம் தரும் நிலையில் உள்ளதைக் காண நேரிட்டது. ஆகவே மன்னா,  இதை எண்ணி நீ யோசனை செய்ய வேண்டாம்.  இங்கு வந்து உன் நிலையைக் கண்டதும் நாம் வேறு யாரிடமாவது சென்று யாசகம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என என் மனதில் யோசனை தோன்றியது. ஆகவே வேறு யாரிடமாவது சென்று யாசகம் கேட்கலாம் எனக் கிளம்பினேன்' என்று கூறி விட்டு கிளம்பிய  முனிவரை மீண்டும்  தடுத்து நிறுத்தினார்  ரகுராமன். அவரிடம் கூறினார் 'மகா முனிவரே, என்னிடம் வந்து தானம் கேட்டப்பின் அதை பெற்றுக் கொள்ளாமல் வெறும் கையோடு  போக என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? ஆகவே தயை கூர்ந்து நீங்கள் இங்கு இன்னும் இரண்டு நாள் தங்கி விட்டுச் செல்லுங்கள். நான் எங்கிருந்தாவது நீங்கள் கேட்ட தானத்தை  கொண்டு வந்து தருகிறேன்' என்று கூறிவிட்டு  அவரை  ஒய்வு எடுக்குமாறு கூறினார்.

இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்த மன்னன் மறுநாள் காலை விழித்தெழுந்ததும் குபேரனிடம் சென்று செல்வம் கேட்கலாம், அவர் கொடுக்க மறுத்தால் போர் தொடுத்தாவது திரவியத்தைக் கொண்டு வரலாம் என்ற நினைப்புடன், காலைப் பொழுதை எதிர்பார்த்தபடி  பல ஆயுதங்களையும் இரவிலேயே எடுத்து வைத்துக் கொண்டு தனது தேரில் அமர்ந்திருந்தவர் அப்படியே தன்னை மறந்து  உறங்கி விட்டார். மறுநாள் பொழுது விடிந்தது. அவரது அரண்மனையின் பொக்கிஷங்களைக் காப்பவர் விடியற்காலை ஓடோடி வந்து மன்னனை எழுப்பி 'மன்னா நமது பொக்கிஷ அறையில் இடமில்லாமல் பொன்னும் பொருளும் நிரம்பிக் கிடக்கின்றன' என்ற சேதியைக் கூற மன்னனும் அதிசயப்பட்டு அங்கு சென்று பார்க்க அவர் முன் வந்த குபேரன்  'மன்னா இது போதுமா, இல்லை இன்னும் வேண்டுமா?' எனக் கேட்க மன்னனும்  'நன்றி குபேரா, நன்றி' எனக் கூறி அவருக்கு விடை கொடுத்து அனுப்பிய பின் அந்த பொக்கிஷங்களை அப்படியே தன்னிடம் யாசகம் கேட்டு வந்திருந்த  கௌட்ச முனிவருக்குக் கொடுத்தார். அந்த முனிவரும் 'மன்னா நான் கேட்டுப் பெற வேண்டிய அளவைக் காட்டிலும் அதிகமாக பெற்றுக் கொண்டு சென்று அவற்றை எடுத்துச் சென்று எங்கு வைக்க முடியும்?  நீ வாக்கு தவறாதவன் என்பதை உணர்கிறேன். ஆகவே எனக்கு குரு தட்ஷணைத் தருவதற்கு பதினான்கு கோடி தங்க நாணயங்கள் மட்டும் போதும். அதற்கு மேல் ஒரு நாணயம் கூட வேண்டாம்.   நீ நீடூழி வாழ்ந்தவண்ணம் இருந்து கொண்டும், உன் ராஜ்யத்தை தொடர்ந்து  ஆள்வதற்கு நல்ல மகன் பேறு பெற்றுக் கொண்டும்   வாழ உனக்கு  என் ஆசிகள்' என மன்னனை வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார்' . நாளடைவில்  ரகுராமனுக்கும்  ஒரு மகன் பிறக்க அவனுக்கு அயன் என்ற நாமதேயம் சூட்டினார்கள்.

அயன் சாபம் தீர்த்த கதை 

அயனும் வயதுக்கு வந்தபோது பல கலைகளையும் கற்றறிந்தவனாக இருந்தான்.  அப்போது விதர்ப தேசத்தை சேர்ந்த பேரரசன் ஒருவன் தனது தங்கையான இந்துமதிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து ஸ்யம்வரத்தை நடத்த முடிவு செய்து இருந்தார். அதில் பங்கேற்பதற்கு பல நாட்டு ராஜகுமாரர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.  அதில் கலந்து கொள்ள ரகுராமனின் மகன் அயனுக்கும் அழைப்பு  விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அயனும் அந்த ஸ்யம்வரத்தில் கலந்து கொள்ள நான்கு வகைப் படைகளுடன் விதர்ப தேசத்துக்கு கிளம்பிச் சென்றார். அவர்கள் சென்ற வழியிலே நர்மதை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடியவண்ணம் இருந்தது.  நதிக்கரையை அவர்கள் அடைய இன்னும் சில கஜ தூரமே இருந்தது. அந்த நேரத்தில் நதியின் அடுத்த பக்கத்தில் இருந்து மதம் பிடித்த மிகப் பெரிய யானை ஒன்று நதியிலே நீந்தி இந்தப் பக்கம் வந்து கரையில் இறங்கி  ஆக்ரோஷமாக கோஷமிட்டபடி அவர்களை நோக்கி ஓடி வந்தது.  அது கிட்டே வந்து விட்டால் ஒரு சிலருக்காவது காவு நிச்சயம் என்பதை உணர்ந்த மன்னன் அயனும் சற்றும் தயங்காமல் தனது வில்லை எடுத்து அம்பு தொடுத்து அதன் நெற்றிப் பொட்டில் அதை செலுத்தினார். அந்த அம்பும் அந்த யானையின் நெற்றியை துளைத்துக் கொண்டு அதன் உடலில் புகுந்ததும், அந்த யானை மறைந்து போனது. யானைக்கு பதில் அங்கு ஒரு அழகிய மனிதர் நின்று இருந்தார்.  அடுத்த வினாடி அவர் மன்னரை நோக்கி நடந்து வந்தார். அப்படியே மன்னனின் கால்களில் விழுந்து வணங்கினார்.

மன்னர் காலில் விழுந்து வணங்கியவர் அவரிடம் கூறினார் 'மன்னா, நான் பிரியம்வதன் எனும் கந்தர்வ புருஷன் ஆவேன். முன் ஒரு காலத்தில் என்னுடைய தந்தையான பிரியதர்சனன் என்பவர் மாதங்க முனிவரின் சாபத்தைப் பெற்றார். அதன் காரணமாக நான் யானை உருவில் இத்தனைக் காலமும் வாழ வேண்டியதாயிற்று. மாதங்க முனிவரிடம் இருந்து சாபத்தைப் பெற்று யானை உருவை அடைந்த எனக்கு ஆறுதலாக மாதங்க முனிவர் என்னிடம் கூறினார் 'பின் காலத்தில் இங்கு வர உள்ள அயன் எனும் மன்னன் மூலமே சாப விமோசனம் கிடைக்கும். அவர் உன் மீது அம்பை  எய்தும் அளவுக்கு நீ அவரைக் கோபப்பட வைக்க வேண்டும். அப்போது அவர் விடுக்கும் அம்பு  உன் உடலில் புகுந்ததும் உனக்கு சாப விமோசனம் கிடைத்து நீ பழைய உருவை அடைவாய்'.

பிரியம்வதன் தொடர்ந்து கூறலானார் 'மன்னா, நானும் இத்தனைக் காலமும் உன் வரவுக்காக இங்கே காத்துக் கிடந்தேன்.  மாதங்க முனிவர் கூறியது போல இன்று உன்னால் எனக்கு சாப விமோசனம் கிடைத்து விட்டது. அதற்கு மிக்க நன்றி.  மன்னா, என்னிடம் சில சக்திகள் உள்ளன. அவற்றை உனக்குத் தருகிறேன். அவை உனக்கு தக்க நேரத்தில் உதவிடும்'  என்று கூறிய பின் அவருக்கு ஒரு பாணத்தை தந்து விட்டுக் கூறினார் 'மன்னா, நான் கொடுக்கும் சம்மோகனம் எனும் இந்த பாணமானது பல சக்திகளை உள்ளடக்கிக் கொண்ட ஒரு பெரிய படையைப் போன்றது. அது இரண்டு மந்திரங்களைக் கொண்டது. இதை எய்யும்போது ஒரு மந்திரத்தையும், அதை திரும்ப அழைக்கும்போது இன்னொரு மந்திரத்தையும் ஓத வேண்டும். இதற்கு அழிவே கிடையாது.  இதை பயன்படுத்தினால் எதிரிகளை இந்த பாணம்  முற்றிலும் அழிக்கும். உனக்கும் வெற்றியைக்  கொடுக்கும்'. அயனும் அந்த கந்தர்வ புருஷன் கொடுத்த சம்மோகனம் எனும் படையை உள்ளடக்கிய பாணத்தை மனதார பெற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறிய பின் அங்கிருந்து கிளம்பி விதர்பாவை நோக்கிச் சென்றார்.

நகர் பகுதியை அயன் வந்தடைந்து விட்ட செய்தியைக் கேட்ட விதர்ப அரசனும் நகர் எல்லைக்கே வந்து அவரை வரவேற்று சபைக்கு அழைத்துச் சென்றார். அங்கோ அரண்மனையில் ஸ்வயம்வரத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருந்த நிலையில் பல மன்னர்களும், ராஜ குமாரர்களும் ஏற்கனவே அங்கு வந்து கூடி அவரவர் ஆசனங்களில் அமர்ந்து கொண்டு இருக்க, அங்கு போய் சேர்ந்த அயனும் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.
தொடரும்......5