Tuesday, April 21, 2015

கூந்தலூர் முருகன்


சாந்திப்பிரியா  

சென்னையில் இருந்து மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பூந்தோட்டம்.  அதன் அருகில் உள்ளதே கூந்தலூர் எனும் சிறு கிராமம். கும்பகோணத்துக்கு தென் கிழக்கே சுமார் 10 அல்லது 12 கிலோ தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது கூந்தலூர் ஆலயம். நாச்சியார் கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் சாலையில் சென்றோ அல்லது நாச்சியார் கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவு பயணித்தோ இங்கு செல்லலாம். சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் பல பேருந்துகள் கூந்தலூர் வழியே செல்கின்றன.

கூந்தலூரில் உள்ள ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான முருகன் ஆலயம் இது ஆகும்.  சனி மற்றும் செவ்வாய் கிரக தோஷங்களை நிவர்த்திக் கொள்ளும் பரிகாரத் தலம் இது. அருணகிரிணாதர் பாடியது போல 'சிலம்பு ஏந்தி, காலிலும் கையிலும் சலங்கையும் தண்டையும் கட்டி, வலிமையான தோளுடன் காட்சி தரும் முருகப் பெருமான் என் முன்  நின்றிருந்தால், நாளோ, பூர்வ ஜென்ம வினையோ அல்லது  கோளின் (கிரஹம்) தாக்கமோ, எதுதான் என்னை என்ன செய்ய முடியும்' என்று கூறியதைப் போல சனி பகவானின் கிரக தோஷங்களும் இங்கு வந்து முருகனை வணங்கித் துதித்தால் தூர விலகும் என்பது ஐதீகம்.

 முருகன் சன்னதி 

இங்குள்ள சிவபெருமான் மற்றும் பார்வதியை 'ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர்'  என்று அழைக்கிறார்கள். ஜம்பு என்றால் நாவல் பழம் அல்லது நரி என்ற இரு அர்த்தம் உண்டு. இந்த ஆலயம் அமைக்கப்பட்ட காலத்தில் இந்தப் பகுதி முழுவதுமே நாவல் பழ மரங்களினால் சூழப்பட்டு இருந்ததினாலும், ஒருமுறை சாபத்தினால் நரி உருவெடுத்த முனிவர் ஒருவர் ஒன்று இங்கு வந்து சிவபெருமானை வணங்கி துதித்து தன்னுடைய சாபத்தை விலக்கிக் கொண்டதினாலும் இந்த ஆலயத்து இறைவனை  ஜம்புகாரணேசுவரர் என அழைக்கப்பட்டதாக செவி வழி வரலாறு உள்ளது.

இந்த ஆலயத்துக்கு சிறப்பு பலவும் உண்டு. அவை அனைத்தும் செவி வழி  வரலாறு என்பதாகவே  உள்ளன. இராமாயண காலத்தில் தசரத மன்னனின் கட்டளைப்படி ராமரும், சீதையும் வனவாசத்துக்கு சென்ற போது இந்த வழியே வந்து இந்த வனத்தில் சில காலம் தங்கி இங்கு எழுந்தருளி இருந்த ஜம்புகாரணேஸ்வரரை வழிபட்டு உள்ளார்கள். அவர்கள் தங்கி இருந்த குடிசையின் அருகில் தாம் குளித்து நீராட சீதா தேவி ஒரு நீர் நிலையை அமைத்தாராம். அந்த நீர் நிலையே சீதா தீர்த்தம் என்பதாகவும், அந்த தீர்த்தத்தின் அருகில் அமர்ந்து கொண்டு சீதா பிராட்டியார் தமது கூந்தலை வருடி விட்டுக் கொள்ளும்போது சீதையின் தலை முடிகள் அந்த நீருக்குள் விழுந்து அந்த தீர்த்தத்தை புனிதமாக்கிக் கொண்டே இருந்ததாம் என்பதாகவும் புராணக் கதை உள்ளது. உண்மையில் கூந்தல் என்பது தலை முடியல்ல, அது காரணப் பெயர் ஆகும். அந்த தலை முடிகள் என்பவை சீதையின்  உடலில் இருந்து வெளியேறிய தேவகணங்களே. சீதை லஷ்மியின் அவதாரம் என்பதினால் அந்த நீர் நிலையைக் காத்தபடி நின்றிருந்த தேவ கணங்கள் அங்கேயே வாசம் செய்தன. இதனால்தான் இந்த இடமே கூந்தல் காத்த ஊர் என்பதாக முன்னர் கூறப்பட்டு, கூந்தலூர் என பின்னர் மருவி உள்ளதாம்.

கூத்தப்பனை மரம் 
 
கூந்தலூர் என்ற பெயர் வர இன்னொரு காரணமும் உண்டு. நாவல் மரங்களைத் தவிர கூந்தப்பனை எனும் பெயரைக் கொண்ட பனை மரங்கள் நிறைந்த பகுதியாகவும்  இந்த இடம் இருந்ததால் இப்பகுதி கூந்தலூர் என்று பெயர் பெற்றது என்றும் செய்தி உள்ளது.  இந்த மரத்தை கூந்தல்பனை, இரும்பனை, திப்பிலிபனை என்றும் கூறுவார்கள். இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக் கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப் போலவும் தோன்றுவதால் இந்த மரங்கள் அடர்ந்திருந்த இந்தப் பகுதி கூந்தல்பனையூர்  என்ற பெயர் பெற்று இருந்திருக்கலாம் என்கிறார்கள். அதைத்தான் சீதையின் கூந்தல் என்றும், அதுவே பின்னர் மருவி கூந்தலூர் என்றாகிற்று என்கிறார்கள்.
 ரோம ரிஷி

இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு என்ன என்றால், இது சிவன் ஆலயம் என்றாலும் முருகப் பெருமானுக்கே அதிக முக்கியத்துவம் தரும் ஆலயமாக உள்ளது. அதனால்தான் முருகனின் சன்னதியும் ஆலயத்தின் முன்புறத்தில் முதலாவதாக அமைந்துள்ளது. அதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. சித்தர்களில் மேன்மையானவரும் மகா ரிஷியுமான ரோம ரிஷி என்பவர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து கூந்தலூர் ஆலய சிவபெருமானிடம் இருந்து அறிய ஆற்றலைப் பெற்றார். அந்த சக்தியின்படி அவரால் தனது தாடியில் இருந்து தங்கத்தை வரவழைக்க முடிந்தது. அந்த ஆற்றலைக் கொண்டு ரோம ரிஷி அவரை நாடி வந்த ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக தமது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன்னை  வரவழைத்து அவர்களுக்கு அளித்து வந்தார்.

இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருமுறை தாடியில் இருந்து பொன்னை வரவழைக்கும் அவருடைய சக்தியை தடுத்து நிறுத்தினார். சிவபெருமானின் திருவிளையாடல் காரணமாக ரோம ரிஷியின் தாடி வழியே பொன் வந்து கொண்டிருந்தது நின்று விட்டது. அதனால் அவரால் ஏழைகளுக்கு முன்னைப் போல உதவிட முடியவில்லை. என்ன காரணத்தினால் தான் சக்தியை இழக்க வேண்டியதாயிற்று என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் தவித்து  மனம் தளர்ந்து போன ரோம ரிஷி அடுத்த நாளே தனது தாடியை நீக்கி விட்டார். தாடியை எடுத்தப் பின் முடியை சுத்தப்படுத்திக் கொள்ள குளிக்கக் கூட மறந்து விட்டு தன்னை மறந்த நிலையில் சிவபெருமானை தரிசிக்க கூந்தலூர் ஆலயத்துக்குள் செல்லத் துவங்கினார்.

 ஆலயத்துக்குள் நுழைய வந்த 
ரோம ரிஷியை முருகனும், 
வினாயகரும் தடுத்து  நிறுத்தினார்கள்  

அப்படிப்பட்ட நிலையில் நீராடாமல் சிவனை தரிசிக்க ஆலயத்துக்குள் நுழைய வந்த ரோம ரிஷியை உள்ளே நுழைய விடாமல் வாயிலிலேயே வினாயகப் பெருமானும் முருகனும் அவரை தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகே தன்  நினைவுக்கு வந்து தன் தவறை உணர்ந்த ரோம ரிஷியும் மனம் வருந்தி ஆலய வாயிலிலேயே அமர்ந்து கொண்டு சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்கும் வகையில் தவம் இருந்தார். அவர் பக்தியையும், தவத்தையும் மெச்சிய சிவபெருமானும் ஆலயத்திற்கு வெளியே வந்து அந்த ரிஷிக்கு காட்சி தந்ததும் இல்லாமல் மீண்டும் அவருக்கு இன்னும் பல ஆற்றல்களையும் சக்தியையும் தந்தருளினார். வெளித் தூய்மையை விட மனத் தூய்மையே பெரியது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அந்த திருவிளையாடலை சிவபெருமான் நடத்தியதாக தல வரலாறு கூறுகிறது.

நடந்தேறிய அந்த நாடகத்தில் ரோம ரிஷியை ஆலயத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தப் பின் முருகப்பெருமான் அங்கேயே அமர்ந்து கொண்டார். அதனால் முருகப் பெருமான் அங்கு அமர்ந்திருந்த ஆலயத்தில் அதே முன் பகுதியில் அவருடைய சன்னதி  அமைந்தது.  அதற்கு முன்பாக தனக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள அங்கு வந்து சிவபெருமானை துதித்தபடி பல காலம் தவத்தில் இருந்த சனிபகவான் அன்றும்  நீர் நிலையில் குளித்தப் பின் உள்ளே நுழைய வந்தபோது அவரையும் முருகன் தடுத்து நிறுத்தி கூறினாராம் 'இனி இந்த தலத்தில் வந்து என்னை வழிபடுபவர்களின் அனைத்து சனி தோஷங்களையும் அந்த நிமிடமே விலக்கிக் கொள்ள நீங்கள் சம்மதித்தால் மட்டுமே உங்களை உள்ளே நுழைய விடுவேன்' என்று கோபத்துடன் கூற அதைக் கண்டு பயந்து போன சனி பகவானும் தனக்கு ஏற்பட்ட சாபம் விலக வேண்டும் எனில்  கூந்தலூர் ஜம்புகேஸ்வரரின் அருள் வேண்டுமே என்பதற்காக வேறு வழி இன்றி அந்த உறுதிமொழியை அனைவர் முன்னிலையிலும் முருகனுக்குத் தந்த பின்னரே சனி பகவானை உள்ளே நுழைய முருகன் அனுமதித்தாராம். அதன் பின் சனி பகவானும் முருகன் சன்னதிக்கு எதிர்புறத்தில் சென்று அமர்ந்து கொண்டு தமது தவத்தை தொடர்ந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்று  சாபத்தை விலக்கிக் கொண்டாராம்.  சனி பகவான் அமர்ந்திருந்த  இடத்திலேயே சனி பகவானுக்கும் சன்னதி அமைந்தது.
தேவ மயிலுடன் முருகன் 

இத் தலத்தில் முருகன் ஈசான்ய மூலையில் தனது இரு தேவியருடன் மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சூரசம்ஹாரத்திற்கு முன்பே முருகனுக்கு இருந்த மயில் வாகனம் இது என்பதினால்தான் இங்குள்ள மயில் தேவ மயில் என்ற பெயரைப் பெற்றது. ஈசான்ய மூலையில் தேவமயிலுடன் தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருவதும், ஈசான்யப் பார்வையால் சனீச்வரரை நோக்கி இருப்பதினாலும் சனிஸ்வரரின் தொல்லைகளை இந்த முருகனே களைவதாக ஐதீகம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் சனி மற்றும் செவ்வாய் கிரக சன்னதிகள் இந்த ஆலயத்தில் எதிர் எதிராக அமைந்துள்ளதால் இத்தலம் சனி-செவ்வாய் கிரக பாதிப்புகள் நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.


ஈசான்ய மூலை என்பது என்ன? எட்டு திசைகளில் வடக்கு திசையும், கிழக்கு திசையும் சந்திக்கும் இடமே ஈசான்ய மூலை என்பதாகும். ஈசான்ய மூலை என்பது ஈசனானவர், அதாவது சிவபெருமான் வசிக்கும் இடம் என்பது பொதுவான நம்பிக்கை ஆகும். ஆகவேதான் வீட்டிலும் கூட ஈசான்ய மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அங்கு பூஜை அறையையோ அல்லது பூஜை அறை அமைக்க முடியாதவர்கள் தெய்வத்தின் படத்தையோ அங்கு வைத்து வணங்குவது சிறப்பு என்பதாக பண்டிதர்கள் அறிவுறுத்துவார்கள். வடக்கு திசையும், கிழக்கு திசையும் சந்திக்கும் ஈசான்ய மூலையில் தெய்வப் படத்தை வைத்து நமஸ்கரித்து வணங்கலாம். ஒருவர் வீட்டிலேயே கூட வடகிழக்கு மூலை ஈசன் உள்ள இடம் என்பதினால்தான் வடகிழக்கு மூலை ஒரு இடத்தின் ஆற்றல் தரும் இடம் என்பார்கள்.

  எட்டு பட்டைகள்  உள்ள  தாரா லிங்கம்

இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு என்ன என்றால் இங்குள்ள ஒரு சன்னதியில் பதினாறு பட்டைகள் (16) கொண்ட தாரா லிங்கம் அல்லது பாணப்பட்டை சிவலிங்கம்  எனப்படும் சிவலிங்கம் ஒன்றும் காணப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவகை லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உண்டு. அவற்றில் ஒன்றே தாரா லிங்கம் என்பதாகும். பல்லவர் காலத்தை சார்ந்த அபூர்வமான தாரா லிங்கம் என்பது பாணப் பகுதியில் பட்டைகளோடு காட்சி தரும் லிங்கங்கள் ஆகும். அப்படிப்பட்ட லிங்கங்கள் அனைத்து ஆலயங்களிலும் இருக்காது. தாரா லிங்கங்களில் எட்டு பட்டை, பதினாறு பட்டை மற்றும் பன்னிரண்டு பட்டைகளைக் கொண்ட தாரா லிங்கத்தை வணங்கி வந்தால் பல செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை ஆகும்.

இது போன்ற மேலும் சில அபூர்வமான தாரா லிங்கங்கள் இலங்கையிலும்  அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.   அனைத்து சிவன் ஆலயத்து பிரகாரத்திலும் காணப்படும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பாலசுப்ரமணியர், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் போன்றவர்கள் சன்னதிகள் இங்கும் அமைந்துள்ளன.

Monday, April 20, 2015

கீழ்சூரியமூலை- சூர்யகோடீஸ்வரர்


-சாந்திப்பிரியா-

கும்பகோணத்தின் அருகில் உள்ள கஞ்சனூருக்கு அருகில் உள்ளது கீழச்சூரியமூலை என்றொரு சிற்றூர். அங்குள்ள சூர்ய கோடீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஆலயம் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் சூரிய பகவான் தினமும் காலை முதல் மாலைவரை சிவபெருமானை வணங்கித் துதிப்பதாக ஐதீகம் உள்ளது.  அப்படி துதிப்பதின் மூலமே சூரிய  ஒளிக்கதிர் சக்தி குறையாமல் கிடைப்பதாகவும் ஐதீகமுள்ளதாம். இந்த ஆலயத்தின் புராணக் கதை என்ன?

உலகில் உள்ள அனைவரும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்து பல பயன்களை அடைகிறார்களே, ஆனால் தன்னால் மட்டும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சூரிய பகவானுக்கு ஏற்பட அவர் தன்னுடைய சீடரும் மாமுனிவருமான யாக்கியவல்லவரிடம் தனது மன வருத்தத்தையும் வேதனையையும் எடுத்துரைத்தார்.  அதைக் கேட்டு வேதனை அடைந்த அந்த மாமுனிவரும், அவருக்கு ஆறுதல் கூறி விட்டு, சூரிய பகவானுக்காக தானே சிவபெருமானை வழிபட்டு அதன் மூலம் சூரியனுக்கு   தன்னால் ஆன உதவியை செய்வதாக வாக்குறுதி கொடுத்தப் பின் தினமும் சிவபெருமானின் சன்னதிக்கு சென்று மாலையில் தான் பெற்று இருந்த அனைத்து வேத சக்தியையும் சூரிய கிரண சக்திகளாக மாற்றி அதை  இலுப்ப எண்ணை தீபத்தில் இறக்கி  வைத்து  சிவபெருமானை வழிபடலானார். தினமும் ஒரு கோடி  இலுப்பை எண்ணை  தீபம் ஏற்றி சூரியனுக்காக தவம் இருந்தார்.

 தினமும் ஒரு கோடி இலுப்பை எண்ணை
 தீபம் ஏற்றி சிவபெருமானை துதித்தபடி 
யாக்யவால்யகர் தவத்தில் இருந்தார்

பல காலம் இப்படியாக சிவபெருமானை வழிபட்டு வந்த யாக்யவால்யகருக்கு நாளடைவில் இலுப்ப எண்ணை கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படத் துவங்கியது.  அனைத்து இடங்களிலும் இருந்த  இலுப்ப எண்ணையை   பயன் படுத்தி விட்டதினால் மேலும் இலுப்ப எண்ணை  கிடைப்பது கஷ்டமாகியது. அதனால் அவரது வழிபாடு தடைபடலாயிற்று. மாமுனிவர் அங்கும் இங்கும் அலைந்து இலுப்ப காய்களைக் கொண்டு வந்து எண்ணை எடுத்து அதனால் விளக்கு ஏற்றி வழிபட வேண்டியதாயிற்று.  அதைக் கண்ட வேத சக்திகள் அந்த இலுப்ப எண்ணை தீபத்தினால் ஏற்றப்பட்ட விளக்கு அணைந்ததும் பூமியிலே சென்று புதைந்து கொண்டு இலுப்ப மரமாக மாறி வளரத் துவங்கின. இப்படியாக இலுப்ப மரங்களாக மாறிய மரங்களினால் அந்த இடமே இலுப்ப மரத்தினால் சூழ்ந்த அடர்ந்த வனப்பிரதேசமாக மாறி விட அது முதல் மாமுனிவருக்கு இலுப்பை எண்ணை கிடைப்பதில் எந்த தடங்கலும் இல்லாமல் போயிற்று.

தனது வேண்டுகோள் நிறைவேற வேண்டும் என்பதற்காக மாமுனிவர் யாக்யவால்யகர் தொடர்ந்து சூரிய கிரணங்களை இலுப்பை எண்ணை தீபத்தின் ஒளியாகவும், சூரியனார் தனக்கு அளித்த சக்திகள் அனைத்தையும் பாஸ்கர சக்கரம் எனும் ஒரு சக்கரமாகவும்  மாற்றி அமைத்து அதை சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்து வழிபடலானார். இப்படியாக தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு ஒரு கோடி இலுப்பை எண்ணை தீபங்களை தொடர்ந்து ஏற்றி, அந்த இடத்தையே காலை வேளையோ என்று அதிசயிக்க வைக்கும் அளவுக்கு சூரிய கிரணங்களினால் மினுமினுக்க வைத்து, சிவபெருமானை வழிபட்டு வந்த மாமுனிவர் யாக்யவால்யகர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன்னால் தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, யாக்யவால்யகரும் தனக்கு வேதங்களை பயில்வித்த தனது குருவான சூரியனின் வேதனையை சிவபெருமானிடம் எடுத்துக் கூறி அதற்கு தக்க உபாயம் செய்து பிரதோஷ காலத்தில் சூரியனும் சிவபெருமானை வணங்கித் துதிக்க சிவபெருமான் ஏற்பாடு செய்ய வேண்டும், சூரியனின் கிரணங்களைக் கொண்ட தீபத்தை தான் ஏற்றி வழிபட்டதினால் சூரியன் இழந்த ஆற்றலையும் திரும்பத் தந்து, சூரியனுக்கு இன்னும் அதிக ஒளிச் சக்தியை தினம் தினம் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த மாமுனிவருக்கு சிவபெருமான்  காட்சி தந்தது பிரதோஷ வழிபாடு துவங்கும் காலம் ஆகும். அதைக் கேட்ட சிவபெருமானும் அந்த இலுப்பை எண்ணையில் சூரியனின் கிரண சக்திகளை ஏற்றி யாக்யவால்யகர் வழிபட்டதினால் இனி மாலை வேளையில் இலுப்பை எண்ணை ஊற்றிய தீபத்தை தான் தங்கி உள்ள அந்த இடத்திலேயே ஏற்றி வழிபடும்போது சூரியனின் அருள் அங்குள்ளவர்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும்,   சூரியனின் கிரணத்தையே இலுப்பை எண்ணையில் ஏற்றி வழிபட்டதினால் சூரியனும் தினமும் காலை முதல் மாலைவரை தன்னை அங்கு வழிபட முடியும் என்றும்,  அதன் மூலம் இலுப்ப எண்ணை தீபத்தில்  இழந்த கிரண சக்திகள் சூரியனுக்கு மீண்டும் கைகூடுவது மட்டும் இல்லாமல், அது மேலும் மேலும் அதிகரிக்கும் என்றும் வரம் அருளினார். அது மட்டும் அல்லாமல் மாலை வேளையில் அந்த இலுப்பை எண்ணை விளக்கு தீபம் சூரிய கிரணத்தால் ஒளி விடுகிறது என்பதினால் தினமும் தனது ஒளியை பூமியில் வெளிப்படுத்தாமல் சூரியனால் மாலையிலும் அந்த இடத்தில் வந்து இலுப்ப எண்ணை ஒளி மூலம் தன்னை வணங்கித் துதிக்க முடியும் என்றும் அருள் புரிந்தார்.

அதைக் கேட்டு மகிழ்ந்து காலையில் உதித்தெழுந்த சூரியன் அன்று மாலையிலேயே, சூரிய அஸ்தமனம் ஆகிய உடனேயே, பிரதோஷ காலம் முடியும் முன்பாகவே இலுப்பை எண்ணெய் தீப ஒளியில் பிரவேசித்து அதன் மூலம் சிவபெருமானை தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றாராம். இப்படியாக மாமுனிவர் யாக்யவால்யகர் மூலம் சூரியனுக்கும் பிரதோஷ காலத்தில் மாலையிலும் பூமியிலே வந்து அந்த ஆலயத்தில் சிவபெருமானை வணங்கித் துதிக்க முடிந்தது. அது முதல் சூரியன் மட்டுமல்லாது பலகோடி மண்டலத்து சூரிய அவதாரங்களும் சூரிய கணங்களும் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாலும் சூரியனுக்கு பிரகாசமான ஒளியை தரும் ஆற்றலை தந்தபடி சிவபெருமான் அங்கு தங்கி  இருப்பதினாலும் இங்குள்ள  சிவபெருமான் சூரிய கோடீஸ்வரர் என்ற பெயர் பெற்று  இங்கேயே தங்கி  அருள் புரிகிறார். யாக்யவால்யகரும் பல காலம் அங்கேயே தங்கி இருந்தார்.  அப்போது அவர் சிவபெருமானுக்காக செய்த ஒரு யாகத்தை தவறின்றி நடத்தி முடிக்க பைரவர் அவருக்கு ஆசானாக இருந்து அதை நிறைவேற்றித் தந்தார். அதனால் அந்த இடத்தில் தங்கிய பைரவரும் சொர்ண பைரவர் என்ற பெயரைப் பெற்றார்.

இப்படியாக தினம் தினம் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகும், வெளித் தெரியாமல் இலுப்பை எண்ணை தீப ஒளி மூலம் சூரிய பகவான் அங்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதிப்பதினால், மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னால் அங்கு வந்து சிவபெருமானுக்கு இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வணங்கித் துதித்தால் சிவபெருமானின் அருள் மூலம் சூரியனின் அருளையும் பெற்று செய்வாய் கிரக தோஷங்களை விலக்கிக் கொள்ளலாம் என்பதாக ஐதீகம் ஏற்பட்டது. சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம் உள்ளது என்பதினால் காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை சூரிய கோடீஸ்வரராக லிங்க உருவில் அமர்ந்துள்ள மூல லிங்கத்தின் உருவம் நிழலாக கருவறை சுவற்றில் தொடர்ந்து தெரிகிறது. இத்தனைக்கும் அந்த கருவறையில் சிவலிங்கத்தின் உருவத்தை நிழலாகத் தரும் வகையில் சூரிய கிரணங்கள் நேரடியாக விழுவது இல்லை என்பது பெரிய அதிசயம் ஆகும்.

அங்குள்ள சன்னதியில் பவளக்கொடி எனும் பெயரில் பார்வதி தேவியும் சிவபெருமானுடன் தங்கி உள்ளார். அவர்களுக்குக் காவலாக சொர்ண பைரவர் எனும் பெயரில் பைரவரும் தங்கி உள்ளார். அந்த பைரவருக்கு பிரதோஷ காலத்தில் தீபாராதனை காட்டும்போது அவரது கழுத்தில் பவளமணி அளவில் சிவப்பு ஒளி தோன்றி மறைவதும் அது மெல்ல அசைவது போலவும் காட்சி தருவது அற்புதமான காட்சியாகும் என்கிறார்கள்.

இங்குள்ள ஒரு சன்னதியில் குடி உள்ள துர்க்கையின் சிலையில் ஒரு காலில் மட்டுமே மெட்டி காணப்படுகிறது.  தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் ஆகும். சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும், நிம்மதி கிடைக்கும், பார்வைக் கோளாறு நீங்கும் என்கிறார்கள்.  இக் கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும். கடன், நோய், எதிரிகள் பிரச்னை எளிதில் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ஆலயம் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும், மாலை நான்கு முதல் ஏழு மணிவரையிலும்  திறந்து இருக்கும். இங்கு ஆலயத்தில் உள்ள சூர்யகோடீஸ்வரர் ஸ்வயம்புவாக எழுந்தருளியவர் ஆகும். நாங்கள் சென்ற ஆண்டு இந்த ஆலயத்துக்கு சென்று இருந்தபோது மதியம் ஆகிவிட்டதினால் சன்னதிகள் மூடப்பட்டு இருந்தன. ஆனாலும் கதவு  வழியே சிவபெருமானை தரிசித்து விட்டு வந்தோம்.
 

  சன்னதியில் துர்க்கை 

 பவளக் கொடி  மற்றும் சூர்யகோடீஸ்வரர் 


: ஆலய விலாசம் :

அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,
 கீழச்சூரியமூலை,
தஞ்சாவூர். -613001,
தமிழ்நாடு.