Thursday, August 21, 2014

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship -1


    1   
வேத காலத்தில் இந்து மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. வேதங்கள் எப்பொழுது படைக்கப்பட்டவை என்பது இன்னும் உறுதியாக கூறப்படவில்லை என்றாலும் வேதங்கள் முதன் முதலாக வியாசரால்தான் தொகுக்கப்பட்டன. இதன் மூலம் தெரிவது என்ன என்றால் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் வேத காலத்துக்கு முன்னர் நிகழ்ந்தவை. இதன் காரணம் மகாபாரதத்தை வியாசர் கூற வினாயகர் எழுதினர் என்பதே.

முன்னர் குல தெய்வம் குறித்து சில கட்டுரைகளை எழுதி உள்ளேன் என்றாலும் அதில் குல தெய்வங்களின் சில முக்கியமான விஷயங்கள் விளக்கப்படாமல் இருந்தது மனதில் நெருடிக் கொண்டே இருந்தது. சிலர் அந்த விஷயம் குறித்து என்னிடம் கேட்கவும் செய்தார்கள். அப்போது உடனடியாக என்னால் அதிக விளக்கம் தர முடியவில்லை. ஆகவே அதை தக்க நேரத்தில் விளக்க வேண்டும் என்பதற்காக செய்திகளை அவ்வபோது சேகரித்துக் கொண்டே இருந்தேன். அது இப்போது நிறைவேறி உள்ளது.

குல தெய்வ வழிபாடு குறித்து ஏற்கனவே விளக்கி உள்ளேன் என்றாலும் இன்னும் சிலவற்றை கூற வேண்டி உள்ளது. ஆகவேதான் குல தெய்வ வழிபாடுகள் துவக்கப்பட்டதின் பின்னணி, அவற்றின் வரலாறு, அவற்றில் பிரிவுகள், அவை வளர்ந்த வரலாறு, அவற்றைக் குறித்த மகான்களின் கருத்துக்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். முதன் முதலில் குல தெய்வ வழிபாடுகள் கிராமப்புறங்களில் இருந்துதான் துவங்கின என்பது அடிப்படை செய்தியாகும். வேத காலம் முதல் துவங்கிய இயற்கை வழிபாடு மெல்ல மெல்ல மாறி எப்படி உருவ வழிபாடாகியது என்கின்ற நிலைமையை ஓரளவு புரிந்து கொண்டால் மட்டுமே குல தெய்வ வழிபாடு துவக்கப்பட்டதின் வரலாறும் அர்த்தமும் விளங்கும். ஆகவே நாம் வேத காலம் முதல் நடைபெற்றுள்ள  சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள சற்று பின் நோக்கிச் செல்ல வேண்டும்.

வேதங்கள் இன்றளவும் வாய் மொழி வழியாகவே தலைமுறை தலைமுறையாக வழங்கி வந்துள்ளன. வெகு காலத்துக்குப் பின்னரே இது எழுத்து வடிவம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. வேதங்களை ஆரியர்களே பரப்பினார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக கி.மு 1500 ஆம் ஆண்டில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தப் பின்னரே பாணினி என்பவர் வாய்மொழியாக இருந்த ஆரியர்களின் மொழியை சமிஸ்கிருத மொழியாக சீர்திருத்தி அமைத்தார் என்றும் அதனால்தான் இன்றைய பீகார் மானிலத்தில் பாடலிபுத்திராவின் அருகில் உள்ள மிதிலையில் கங்கைக் கரையில் யஜுர் வேதம் மற்றும் காயத்திரி மந்திரங்களை ஆரிய வம்சத்தினர் இயற்றியதாகக் கூறி அதற்கு ஆதாரமாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட “Dance Legacy of Pataliputra” என்ற நூலை மேற்கோள் காட்டுகிறார்கள். 
 
வேதங்களை ஆரியர்கள் எழுத்து வடிவில் வைத்திராமல் அநேகமாக அசோகா மன்னனின் ஆட்சி காலம்வரை வாய்மொழியாகவே பரப்பி வந்திருந்தார்கள் என்பது மெஹஸ்தனிஸ் என்ற கிரேக்க தூதுவர் எழுதிய 'இந்தியப் பயண நூலின்' மூலம் அறிய முடிகிறது என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 
 
இதை எதற்காக குறிப்பிட வேண்டி உள்ளது என்றால் இந்தியாவில் வேத வழி வாழ்வு முறை ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் துவக்கப்பட்டு அதில் கூறப்பட்டு உள்ள தெய்வங்களின் உருவ வழிபாடுகளும் வடநாட்டுப் பகுதிகளில் துவங்கின என்பதைக் காட்டவும், வடநாட்டில் வழிபடப்பட்ட தெய்வங்களும், ஆரியர்களின் வருகைக்கு முன்னரே இருந்திருந்த சிந்து சமவெளி நாகரீக காலத்தில் தென் இந்தியப் பகுதிகளில் வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வங்களும் வேறுபட்டவை, ஆரியர்களின் வருகைக்கு முன்னரே தென் பகுதிகளில் எதோ ஒரு தெய்வப் பிரிவு வணங்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் எடுத்துக் காட்டவே. இவற்றைக் குறித்து பின்னர் விளக்குகிறேன்.

வேத காலத்துக்கு பிறகே இந்து மதம் தழைத்தோங்கியது என்பதில் சந்தேகம் இல்லை. வேதகாலம் என்பது மனித நாகரிகம் அடைந்த பிறகு உருவான காலமாகும். அதாவது உலோக காலத்திற்கு பிறகு வந்த காலம். வேதங்களில் முதன்மையான ரிக் வேதம் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னால் மற்றும் அதர்வண வேதம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்க வேண்டும் என்பது ஐதிகம். பல பிரிவுகள் இந்து மதத்திலேயே அமைந்துள்ளது  என்றாலும் சுமார் ஐந்து அல்லது ஆறாயிரம் ஆண்டுகள் பழமையான ரிக் வேத காலத்தில் அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் என்ற பிரிவுகள் காணப்படவில்லை. உருவ வழிபாடுகளும் இருந்திடவில்லை. சைவ, வைஷ்ணவ, ஜைன மற்றும் புத்த மதங்களும் இருந்திடவில்லை. 
 
ரிக்வேத காலத்தில் இறை வழிபாடு என்பது இயற்கை வழிபாடாகவே இருந்துள்ளது. அதாவது அக்னி, வாயு, வருணன் போன்றவை எதோ சக்தி உள்ளவையாக பார்க்கப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளன. வேத காலத்தில் சிவன், கிருஷ்ணர், விஷ்ணு, சக்தி போன்றவர்களின் உருவ வழிபாடுகள் இருந்துள்ளதாக தெரியவில்லை. ஆனால் அதே சமயத்தில் அவர்களைப் பற்றிய மறைமுக குறிப்புக்கள் அவற்றில் காணப்படுவதாகவும் கூறுகிறார்கள். ஆகவே உருவ வழிபாடு வெகு காலத்துக்குப் பிறகே துவங்கி உள்ளது என்பதே சரியானது.

    
 வேதகாலத்தைப் பற்றிய சில புத்தகங்கள் 

இராமாயண மற்றும் மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் சமிஸ்கிருத மொழியிலும், வேதங்களிலும் வல்லுனர்களாக விளங்கிய ஆரியர்கள் இந்தியாவில் வடக்கு பகுதியில் இருந்துள்ளார்கள். அந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட யாகங்கள் மற்றும் வேள்விகளில் சமிஸ்கிருத மொழியிலான மந்திரங்களை ஓதியது அவற்றில் ஞானம் கொண்ட பண்டிதர்களே என்பதினால் அந்த பண்டிதர்கள் ஆரியர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதாக நம்புகிறார்கள். இரும்பு உலோகத் தொழிற்கலையில் ஆரியர்கள் சிறந்து விளங்கினார்கள், வேதங்களை நன்கு கற்றறிந்து இருந்தார்கள் என்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதினால்தான் உத்திரப் பிரதேச மானிலத்தின் ஹஸ்தினாபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ள உலோகத்திலான பொருட்கள் மூலம் அந்த காலகட்டத்தில் ஆரியர்கள் அங்கிருந்ததை உறுதி செய்கின்றன. மேலும்  இதன் மூலம் ஆரியர்கள் இராமாயண மற்றும் மகாபாரத காலத்திலும்  இருந்திருக்க வேண்டும் என்பதாக தெரிகிறது.

சிந்து நாகரீகம் தழைத்த இடங்கள் 

அதே சமயம் இன்னும் சில ஆய்வாளர்கள், ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகைத் தரும் முன் நிலவிய சிந்து சமவெளி நாகரீக காலத்தில் சிவன், மற்றும் கிருஷ்ண வழிபாடு இருந்துள்ளதாக கூறுகிறார்கள்.  இதற்கும் காரணம் வேத காலத்துக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மகாபாரத யுத்தம் நடந்துள்ளது. அப்போது கிருஷ்ணர் துவாரகையில் இருந்துள்ளார். சிந்து சமவெளியில் மதுரா மற்றும் துவாரகையும்  அடக்கம் ஆகும். சிந்து சமவெளி ஆராய்ச்சியில் கிடைத்த சில பொருட்களில் இரண்டு நாகங்கள் படுத்த நிலையில் உள்ள காட்சி காணப்படுவதினால் நாக வழிபாடும் இருந்திருக்கலாம். மேலும் கிருஷ்ணர்  மற்றும்  சிவன் இருவருமே பாம்புகளுடன் சம்மந்தப்பட்டவர்கள்.

மேலும் அந்த கால கட்டத்தில் சிவனை லிங்க உருவில் மட்டுமே வழிபட்டு வந்திருக்க வேண்டும். ஏன் எனில் எந்த புராணத்தைப் படித்தாலும் தெய்வங்களில் வேறு எந்த தெய்வங்களின் உருவத்தையும் பற்றிக் குறிப்புக்கள் இல்லை. ஆகவே லிங்க உருவையே சிவனாக பாவித்து வணங்கி வந்துள்ளார்கள் என்பது தெரியும். சிவலிங்கமே சிவபெருமான் என்பதினால் தெய்வங்களின் உருவமற்ற நிலை இருந்தபோது சிவலிங்க உருவம் மட்டும் தெய்வத்தின் ஒரு வடிவமாக இருந்துள்ளது. அதன் காரணத்தை யாரும் சரியாக விளக்கிடவில்லை என்றாலும் கற்களை எதோ ஒரு தெய்வமாக வணங்கி வந்திருந்த மக்கள் சிவலிங்கத்தை அதன் மகிமை தெரியாமல் எதோ சக்தி உள்ள கல்லாகவே நினைத்து வழிபாட்டு இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

சில கிராம எல்லைகளில் இருந்த வழிபாட்டு சிலைகள் 

லிங்க வழிபாடு தவிர  அரச மர வழிபாடு, மிருக வழிபாடு, பெண் தெய்வ  வழிபாடுகள் போன்றவை இருந்துள்ளன என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த சிந்து சமவெளியை சார்ந்த மக்கள் பசுபதியை வணங்கினார்கள் எனக் கூறப்பட்டு இருப்பதில் இருந்து  ஆரியர்களின் வருகைக்கு முன்னரே சிவபெருமானையும் தமிழ் மொழி பேசிய மக்கள் வணங்கி  வந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. சிலர் பசுவை காமதேனுவான பெண் தெய்வமாகவும் வணங்கி இருக்கலாம் என்கிறார்கள். மேலும் சிந்து சமவெளி நாகரீக காலத்தை சேர்ந்தவர்கள் சித்திர எழுத்துக்களையும் அறிந்திருந்தார்கள் என்பதினால் தெய்வ உருவங்களும் அவர்களால் வரையப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

 
பசுபதியின் உருவம் 

இவை அனைத்தில் இருந்தும் புலனாவது என்ன என்றால் சிவலிங்க உருவே அனைத்து தெய்வ உருவங்களும்  தோன்றுவதற்கு முன் இருந்த ஒரே ஒரு தெய்வ உருவம் என்பதாகும்.  அங்காங்கே சிவலிங்க உருவங்களிலான கற்கள் பலவும் இருந்துள்ளதின் காரணம் இராமாயண மற்றும் மகாபாரத காலத்தில் ராமபிரான் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் சிவபெருமானை லிங்க உருவில் வணங்கி வந்துள்ளார்கள் என்ற உண்மையே.  லிங்க உருவைத் தவிர சிவபெருமானின் வேறு எந்த உருவமும் வரையுறுத்துக் கூறப்படவில்லை.

மகாபாரதத்தின் இரண்டாம் கட்டக் காலத்தில், அதாவது யுத்தம் முடிந்தப் பின் பாண்டவர்கள் ஆண்டு வந்ததாக கூறப்படும் 36 ஆண்டு இடைப்பட்ட காலத்தில் பஞ்சபாண்டவர்கள் இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று தமது தோஷங்களைக் களைய சிவபெருமானிடம் அருள் வேண்டி இருக்கிறார்கள். அவர்கள் வழிபட்ட இடங்கள் பலவும் சிவலிங்கங்கள் இருந்த இடங்களே. அவை அனைத்தும் பிற்காலத்தில் ஆலயங்களாகி உள்ளன. இதன் மூலம் தெரிவது என்ன என்றால் மகாபாரத காலகட்டத்தில் உருவ வழிபாடு இருந்திருக்க வேண்டும் என்பதே. அவர்கள் பூஜித்து வணங்கிய லிங்கங்கள் பிற்கால மனிதர்களினால் எதோ சக்தி பெற்ற கல் என்பதாகவே பார்க்கப்பட்டு இருந்திருக்க வேண்டும்.  பின்னரே அதன் மகிமைகளை புரிந்து கொண்டு ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள் என்பது தெளிவு.
................தொடரும்

6 comments:

 1. அறியாதன அறிந்தேன் ஐயா
  தொடருங்கள்
  தொடரக் காத்திருக்கிறேன்
  நன்றி ஐயா

  ReplyDelete
 2. we are awaiting next issue

  ReplyDelete
 3. The 12 parts have been already published one after the other in a row . kindly see the blogger and you can see action like old post and new post below each article . you must click the new post to go to the next page/article

  ReplyDelete