Wednesday, January 8, 2014

Two different Temples in Bangalore

சாந்திப்பிரியா

சமீபத்தில் பெங்களூரில் இரண்டு வித்தியாசமான ஆலயங்களைப் பார்த்தேன். முதலாவது ஆலயத்தில் 108 வினாயகர் சிலைகள் பிரமிட் போல நிறுவப்பட்டு உள்ள படியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அவற்றை ஆகம முறைப்படி 108 வினாயக உருவங்களுக்கு உண்டான மந்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அவை 108 பிள்ளையார் தத்துவத்தை பிரதிபலிக்கிறதாம். அதை 108 பிள்ளையார் ஆலயம் என்று கூறுகிறார்கள்.

அந்த ஆலயம் எழுந்ததின் பின்னணியும், வரலாறும் கிடைக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னால் குமாரசாமி லேஅவுட் எனும் இடத்தில் கட்டிடங்கள் எழும்ப அங்கு சாலைகள் போடப்பட்டதாம். அப்போது சாலை அமைக்கும் ஒரு ஒப்பந்தக்காரரின் கனவில் வினாயகர் தோன்றி அங்கு தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறியதாகவும், அவரும் அவர் கனவில் வந்தது போலவே அங்கு ஆலயம் அமைத்ததாகவும் சிலர் கூறினார்கள். ஆனால் அந்த ஆலயம் எழுந்ததற்கான வேறு எந்த வரலாறும் கிடைக்கவில்லை.
அந்த ஆலயத்தின் பண்டிதரை அந்த ஆலயத்தின் மகிமையைக் குறித்துக் கேட்டபோது அவரால் விஷேசமாக எதையும் கூற முடியவில்லை என்றாலும், கர்னாடகத்தில் 108 வினாயகர் சிலைகளை கருவறை சன்னிதானத்தில் கொண்ட ஆலயம் வேறு எதுவுமே கிடையாது என்றும், அங்கு பல நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பிரார்த்தனைகளை செய்து விட்டுப் போவதாகவும் கூறினார். அங்கு வருபவர்கள் பிராத்தனைகளை நிறைவேற அர்சிக்கும்போது 108 வினாயகருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்யும் விதமாக அந்த சிலைகளின் கீழ் மட்டத்தில் உள்ள மூல வினாயகருக்கே பூஜைகளை செய்த பின் அனைத்து வினாயகரின் சிலைக்கும் கற்பூர ஆரத்தியைக் காட்டுகிறார்கள். ஆலயம் செல்லும் வழி சற்று கடினமாக இருக்கிறது என்றாலும் குமாரசாமி லேஅவுட்டில் அந்த ஆலயம் செல்லும் வழியைக் கேட்டால் அங்கு செல்லும் வழியைக் கூறுகிறார்கள்.

இது போல 108 வினாயகர் சிலைகளைக் கொண்ட ஆலயம் ஒன்று கோயம்பத்தூர் அல்லது பழனியிலும் உள்ளதாகக் கூறுகிறார்கள். விவரம் கிடைக்கவில்லை. 
இன்னொரு வித்தியாசமான பூஜை முறையைக் கொண்ட ஒரு அம்மன் ஆலயத்தை பெனர்கட்டா பஸ் நிலையத்தின் அருகில் காண நேரிட்டது. அங்குள்ள மாரி அம்மன் அற்புதமாக காட்சி தருகிறாள். அந்த சன்னிதானத்தின் அருகில் தனியாக ஒரு அம்மன் சிலையை குந்து மணி நிரம்பிய தாம்பாளத்தில் வைத்து இருக்கிறார்கள். அனவரவருக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்குமாறு அந்த அம்மனிடம் மனதில் வேண்டிக் கொண்டு அந்த தாம்பாளத்தில் உள்ள குந்துமணிகளை  இரு கை நிறைய எடுத்துக் கொண்டு அந்த அம்மன் மீது அபிஷேகம் செய்வது போல  மூன்று முறை போட வேண்டும். அதன் பின் அந்த அம்மனை வணங்கி விட்டு வந்தால் எண்ணியது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டில் கிராமங்கள் சிலவற்றில் குந்துமணியை அம்மனின் கண்களாக  பாவித்து அதை பூஜிப்பார்களாம். அம்மனின் சிவந்த முகத்தில் உள்ள கரிய கண்களை பிரதிபலிக்கிறதாம்  அந்த கருப்பு நிற விழி போன்ற பாகம். அதனால்தான் அந்த காலங்களில் செய்யப்பட்ட தெய்வ பொம்மைகளின் முகத்தில் கண்களாக குந்துமணிகளைப் பதிப்பார்களாம். அதன் ஐதீகம் என்ன என்றால் அந்த பொம்மையை வைத்து உள்ளவர்கள் வீட்டில் அம்மனே துணையாக விழித்திருந்து காப்பாற்றி வருவாராம்.
 
சாதாரணமாக கேரளத்து ஆலயங்கள் சிலவற்றில் குந்துமணியைக் கொண்டு அர்ச்சனை செய்வதும், பிரார்த்தனை செய்யும் வழக்கமும்  உள்ளதாம். குருவாயூர் ஆலயத்திலேயே கிருஷ்ணரை வேண்டிக் கொண்டு அங்கு ஒரு உருளியில் வைக்கப்பட்டு உள்ள குந்துமணிகளை கையில் எடுத்துக்  கொண்டு அவற்றை அதில் மீண்டும் போட வேண்டுமாம். குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய் நொடிகள் தீரவும் இந்த விதமான பிராத்தனை நடைபெறுகிறதாம். மேலும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின், தங்கள் குழந்தைகளை அந்த குந்துமணிகளை வாரி எடுத்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர். இதனால் குழந்தைகள்  வரும் காலத்தில் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் குந்துமணிக்கு முக்கியத்துவம் வந்ததின் பின்னணிக் கதை ஒன்றைக் கூறுகிறார்கள். ஒருமுறை கிருஷ்ணரின் பரம பக்தையான ஏழை  ஒருவள்  அவள் வீட்டில் இருந்த குந்துமணி மரத்தில் இருந்து எடுத்த குந்துமணிகளை விற்பனை செய்ய  கடைவீதிக்கு   சென்றாள். வழியில் அவளுக்கு கிருஷ்ணரைக் காண ஆசை வந்துவிட அந்த ஆலயத்துக்கு சென்றாள். அப்போது அங்கு   அரசனின் யானையை அழைத்து வந்த சேவகர்களின் தள்ளுமுள்ளினால் அவள் கீழே விழ அவள் பையில் இருந்து அனைத்து குந்துமணிகளும் மண்ணில் விழுந்தன. அதன் மீது காலை வைத்து விட்ட யானை மதம் பிடித்து அங்கிருந்த அனைத்தையும் நாசம் செய்தது.  அதே நேரத்தில் அந்த நாட்டு  மன்னனின்   கனவில் வந்த கிருஷ்ணர் தனது பக்தைக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு பரிகாரமாக இனி அவர் ஆலயத்தில் அந்த ஏழைப் பெண்மணியின்  நினைவாக குந்துமணிக்கும்  மகத்துவம் இருக்கும் என்று கூறியதினால் கிருஷ்ண பூஜையில் குந்துமணி பூஜையும் முக்கியமானதாக ஆயிற்றாம்.

3 comments:

  1. அறியாத தகவல்...அதை அழகாக சொல்லி பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. sir,in karaikudi district 108 vinayagar vigrahams(stonemade) are worshipped by peoples for along time call any persons in this area if u know anybody.ganeshshanmugam.tirunelveli

    ReplyDelete
  3. Thank you for sharing this information. But are the 108 Vinayagar vigrahams are kept in any temple and worshiped? If you give me the temple detail I shall feel thankful to you.

    ReplyDelete