Thursday, September 12, 2013

Mayil Ravanan - 9

'என் பிள்ளாய்....நான் உனக்கொரு சேதி சொல்றேன். கேளும். நான் வணங்கும் நாயகனின் மனைவியை பத்து தலை ராவணன் தூக்கிப் போய் சிறையில்  வைத்தான்.  அவளை விடுதலை செய்து அழைத்துப் போக ராமன் தன் சகோதரன் லஷ்மணனையும் சுக்ரீவன் சேனையையும் அழைத்து வந்து இலங்கையில் யுத்தம் செய்தார். அதிலே பத்து தலை ராவணனின் சைனியங்கள் நிர்மூலமாகி, அவன் சந்ததியினரும் அழிந்து போக, அவனும் தனது தாயாதியான மயில் ராவணனின் உதவியை நாடினான். மயில் ராவணனும் தன் தாயாதிக்கு அநீதி வந்துதுட்டதென நினைத்து ராம லஷ்மணர்களை கொன்று பழிவாங்குவதாக சபதமும் செய்து, அவர்களை வஞ்சகமாக இங்கே கொண்டு வந்துட்டான். அவர்களை காளிக்கும் பலி தரப்போறானாம். நியாயமில்லாத, நேர்மை இல்லாத பத்து தலை ராவணனுக்காக அவன் தாயாதி மயில் ராவணன் ராம லஷ்மணர்களை கொல்வதும் நியாயமில்லையே. ஒருவன் மனைவியை இன்னொருத்தன்  அபகரிப்பது தர்ம சாஸ்திரத்திலுண்டா? நீரே சொல்லும் பிள்ளாய்.........தர்மம் பேசும் நீரே சொல்லும்.  அதனால்தான் உள்ளே போய் மயில் ராவணனைக் கொன்று ராம லஷ்மணர்களை மீட்கோணும் என்று நான் வந்திருக்க என்னை தடுப்பது உனக்கே  நியாயமாப்படுதா ' என்றார்.

அதைக் கேட்ட மச்சவல்லபனும் நிலை குலைந்து போய் கூறுகிறான் ''எனக்கு  தந்தையானவரே, நீர் கூறியது என் மனதுக்கும் புரிகிறது. ஆனால் என் நிலையைப்  பாருமையா? நானும் தர்மம் காப்பவன். அதை நோவடிக்காதவன். என்னை பெற்றெடுத்தவள் என்னை சமுத்ரகரையிலே விட்டுட்டு  போன பின்னே சமுத்ரத்தைத் தாண்டி வேட்டையாட வந்த மயில் ராவணன் என்னைப் பார்த்தார். அவனுக்கோ பார்த்த மட்டிலேயே  ஜாதகம் பூராவும் புரிந்திடும். அத்தனை வித்தை, அத்தனை சக்தி  உள்ளவன். என்னப்  பார்த்ததும் 'அடே பொடிப்பயலே...... உன்னை யாரும் ஒண்ணும் பண்ணிட முடியாது. நீயொரு பராக்கிரசாலி, ஒன்னை யாரும் ஜெயித்திடவும் முடியாது' என்று கூறியவன் நான் சிறுவனென்றும்  பார்க்காமல் என் முன்னே தண்டனிட்டு  அமர்ந்து என் காலையும் தொட்டு வரம் ஒண்ணு கேட்டான்.

இதென்னடா, இவன் போய் என் காலில் விழுகிறானே, என்னிடம் போய் வரமும் கேட்கிறானே என்றெண்ணி 'ஐயா பெரியவரே சிறுவன் என் காலில் நீர் ஏன் விழுகிறீர்?' என்று கேட்டபோது, அவர் கூறினார் 'நான் ஆளும் பாதாள இலங்கையை பாதுகாக்க பராக்கிரமசாலி ஒருவனை தேடினேன். வாயு பகவான் ஆசிர்வாதம் கொடுத்த நீதானப்பா அதற்கு ஏற்ற ஆள் என என் மனது கூறுது. அதான் நீ வந்து என் அரண்மணைய காக்கோணும்' என்று கேட்க நானும் இங்கு வந்து  சிறு வயது முதலே என் சேவகத்தை மயில் ராவணனுக்கும் செய்கிறேன். அதனால்தான் இதுவரை என் முகம் கோணாமல், எனக்கு வலி இல்லாமல், நோவு இல்லாமல், சோறு போட்டு வளர்த்தவனுக்கு நன்றியோடு இருக்கிறேன். அதனால் உம்மை எப்படி ஐயா நான் உள்ளே விடமுடியும்? அது என் மன சாட்சிக்கு விரோதம் இல்லையா? தர்ம நெறிக்கு முரணானது இல்லையா? நான் உயிருடன் இருக்கும்போது எனக்கு சோறு போட்டவனுக்கு துரோகம் செய்வது சரியா?' என்றும் கூற இருவரும் இருவர் பக்கமும் நியாயம் இருந்ததால், இருவரும் தர்ம நெறியை மீறக் கூடாது என்பதால் வேறென்ன வழி செய்யலாம் என யோசனை செய்தார்கள்.

சற்று நேரம் பொறுத்து மச்சவல்லபனே மௌனம் கலைத்துச் சொன்னான் 'பிதாவே, உங்களுக்கு அபகீர்த்தி என்றால் எனக்கும் அது வந்து சேருமல்லவா. நான் உயிரோடு இருக்கும் வரையில் மயில் ராவணனுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அதையும் செய்வது தர்ம நெறிக்கு முரணானது. மயில் ராவணனது அந்தரங்க விஷயங்களை நான் கூறுவது அதை விட பெரிய துரோகம்......... .........அதை விட பெரும் பாபமாகும். தாமரை மலர்த்தண்டில் நீர் புகுந்து வந்தபோது அதைக் காத்துனின்ற  இரண்டரை லட்சம் அசுரர்களை கொன்று விட்டுத்தானே இங்கு வந்தீர்கள். ஆனால் அது போல இங்கு நானினிருக்கும் வரை என்னையும் உம்மால் கொல்லவும் முடியாதென்பதற்கு   காரணம் எம் பாட்டனாரும் உம் பிதாவும் கொடுத்த வரமல்லவா.   அதனாலே உம்மால் என்ன ஜெயிக்க முடியாது. ஆகவே அதற்கொரு ஒரு காரியம் பண்ணினால்தான் நீங்கள் கோட்டைக்குள் நுழைய முடியும். உன் உயிர் நிலை நடு மார்பில்தான் உள்ளது. ஆகவே ஓங்கி ஒரு குத்து என் நடு மார்பில் விட்டால் நான் மூர்ச்சை ஆகி விடுவேன். அதன் பின் நீங்கள் சாவகாசமாக உள்ளே சென்று காரியத்தை முடிக்கலாம். அதை தடுக்க நானும் இருக்க மாட்டேன்' என்று கூற அனுமார் கண்ணில் நீர் கொட்டியது

'என்னே உன் சாமர்த்தியம் என் புத்திசாலிப் புத்திரனே, நான் என்ன சொல்வதென்று எனக்கே புரியவில்லை. உன்னை நான் எப்படிக் கொல்வேன் ?. புத்திர சோகம் மகா சோகமும்மாயிற்றே ? நன் மார்க்கத்தைக் கடைபிடிக்கும் தர்ம துரையான பிள்ளையை தகப்பன் கொல்லலாமா?  இது தர்மமாகுமா' எனக் கூற மச்சவல்லபன் கூறினான் 'பிதாவே, தர்மமும் நியாயமும்  பேசும்  நேரமல்ல இது. அதனாலேதான் சொல்வேன் பிதாவே...... இப்போது அது நடைமுறைக்கு ஆகாது. நீர் நேரம் கடத்தினால் நீர் வந்த காரியமும் ஆகாது. இப்போ மயில் ராவணன் ராம லஷ்மணர்களை பலி தர ஏற்பாடுகளை செய்யவும் ஆரம்பித்திருப்பான். அதனாலேதான் சொல்கிறேன், மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு என் நடு மார்பிலே குத்துவீராக. அப்படிக் குத்தினால் நான் இறந்து  போக மாட்டேன். ஐம்பது ஜாமமும் மயங்கி மட்டுமே  கிடப்பேன். அதன் பின் பாதாள இலங்கைக்குச் சென்று ராம லஷ்மணர்களை காப்பாற்றும்' என்று கூற அனுமானும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தனது ஐந்து விரல்களையும் மடக்கி வைத்துக் கொண்டு, ஓங்கி ஒரு குத்தை மச்சவல்லபனின் நடு மார்பில் விட அப்படியே மயங்கி சாய்ந்தான் மச்சவல்லபன்.

இனி அடுத்த ஐம்பது  ஜாமத்துக்கும்  அவன் விழிக்கவே மாட்டான். மயங்கியே கிடப்பான். மயங்கிக் கிடந்த மச்சவல்லபனும் மனதுக்குள்ளேயே நினைத்தான் 'நான் முழிக்கும் முன்னேயே  மயில் ராவணனை வதம் பண்ணிட்டும், ராம லஷ்மணர்களை மீட்டுக் கொண்டும்  என் அப்பனார்  வந்துடலாம். அப்படி வரும்போது நானும் அவர்களுடைய ஆசிகளை பெற்றுக் கொண்டு இத்தனைனாளும் நான்  செய்த பாவத்துக்கெல்லாம் பரிகாரமும் பெறலாம்'.
............தொடரும்

No comments:

Post a Comment