Friday, September 6, 2013

Mayil Ravanan -3

ராவணனும், மயில் ராவணனும் பேசிக் கொண்டிருந்ததை விபீஷணனின் பெண்ணான திரிசடை ஒட்டுக் கேட்டு விட்டாள். மயில் ராவணன் அங்கு வந்தபோதே அவளுக்கு சந்தேகம். 'என்றைக்கும் இல்லாமல் இன்று ஏனவன் இங்கு வந்துள்ளான்' என்பதை அறிந்து கொள்ளவே அவள் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டாள். அவர்கள் பேசியதைக் கேட்டு விட்ட திரிசடை மிக்க வேதனையையும் கவலையையும் அடைந்தாள். அதற்குக் காரணம் பாதாளக் காளி படு மூர்கமானவள். அவளை ஆராதித்து வேண்டினால் அனைத்தையும் தருவாள் அந்த சக்தி வாய்ந்தவள் என்பதினால்தான் மயில் ராவணன் அவளை ஆராதித்து வந்தான். அதனால்தான் மயில் ராவணனுக்கு அத்தனை சக்தி ! மாயாஜாலங்கள் அனைத்துமே அவன் உள்ளங்கையில் இருந்தது. திரிசடை மனதுக்குள் நினைத்தாள் 'அய்யய்யோ, இதென்ன நிலைமை இப்படி வந்து விட்டது. என் தந்தையோ ராமனிடம் சரணாகதி அடைந்து அவருடன் இருக்கிறார். அவர் ஆலோசனைப்படித்தானே ராமனும் இந் நாள்வரை ராவணனின் பலவீனத்தை அவ்வப்போது அறிந்து கொண்டு ராவணனின் சேனைகளை அழித்து வருகிறார். இப்போ என் தகப்பனுக்கு எப்படி சேதி சொல்வேன்? இந்த மயில் ராவணன் யுத்தத்தில் சேருவது ராமனுக்கு தெரியவில்லை என்றால் காளியின் சக்தியைக் கொண்டு மாயாஜாலம் பண்ணி  மயில்ராவணன் ராம லஷ்மணனை வதம் பண்ணி விடுவானே!!. அய்யோ ..........அய்யய்யோ. அப்படி  ஆகக்கூடாதே' என வினசப்பட்டாள்.

அப்போது அந்த பக்கமாக வாயு பகவான் சென்று கொண்டு இருந்தார். இலங்கை மீது செல்லும்போது அவருக்கு வானத்தில் பறந்து செல்லும் தன்மை மட்டுமே உண்டு. வேறேதும் சக்தி கிடையாது. அதனால்தான் சீதைக்கு அவரால் எந்த வழியிலும் உதவிட முடியவில்லை. ஆனால் வாயு பகவானைக் பார்த்து விட்ட திரிசடை அவரைக் கூவி அழைத்து, கீழே வந்தவரிடம் மயில் ராவணன் சூளுரைத்துச் சென்ற அனைத்து சேதியையும் விலாவாரியாக  சொன்னாள்.

திரிசடை அவரிடம் மேலும் கூறினாள் 'ஸ்வாமி, வாயு பகவானே, உடனே கிளம்பிச் சென்று இந்த செய்தியை என் தந்தை விபீஷணரிடம் கூறி தக்கதொரு மாற்று உபாயத்தை செய்யச் சொல்லும். ....ஐயா...தாமத்திக்காதேயும்...... உடனே கிளம்பிச் செல்லும். இன்றிரவு பதினைந்து நாழிகைக்கு மேல் மயில் ராவணன் ராம லஷ்மணர்களை கடத்திக் கொண்டு போய் பாதாளத்தில் காளிக்கு பலியாக்க பிரதிக்ஞை கொண்டுள்ளான். அவன் பெரும் மாயாவி. எளிதில் அனைவரையும் ஏமாற்றி விடுவான். காளியின் அருளினால் நினைத்ததை நடத்தி விடுவான். அதனால்தான் சொல்கிறேன், உடனே செல்லும்.....என் தந்தையிடம் விஷயம் பூராவும் சொல்லும் '

வாயு பகவானும் 'அம்மணி, உனக்கு பெரும் நன்றி ...நல்லவேளை சேதியை என்னிடம் சொன்னாய். இப்போதே போய் இந்த சங்கதியை, உன் தந்தையிடம் சொல்வேன்...இதோ கிளம்பினேன்' என்று கூறி விட்டு விரைந்து பறந்து சென்று விபீஷணனை சந்தித்து தான் கேட்ட சேதியை சொன்னார். 'விபீஷணா, நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளும். இன்று பின்னிரவு பதினைந்து நாழிகைக்கு மேல் மயில் ராவணன் ராம லஷ்மணர்களை கடத்திக் கொண்டு போய் பாதாளத்தில் காளிக்கு பலியாக்க பிரதிக்ஞை கொண்டுள்ளான். அதென்ன திட்டம் என்று தெரியலே. இந்த சமாச்சாரங்களை உம் மகள் திருச்சடை ஒட்டுக் கேட்டு என்னிடம் கூறி, உமக்கு சேதி கூறுமாறு அனுப்பினாள். தாமதம் செய்யாதேயும். என்ன மாற்று உபாயம் செய்ய வேண்டுமோ அதை உடனே செய்யவும். உம்மாலே மட்டுமே தக்க உபாயம் செய்து அந்த காரியத்தை நிறுத்த முடியும். விபீஷணரே நான் சொல்வதெல்லாம் உமக்குப் புரிந்ததா? நீர் என்ன செய்யப் போகிறீர் ?' என்று கவலையோட வாயு பகவான் கேட்க விபீஷணர் சொன்னார் ' ஐயா, வாயு பகவானே, நீர் என்னிடம் கூறி விட்டீர். என்ன செய்வதென இனி நான் யோசிப்பேன். கவலைக் கொள்ள வேணாம். மயில் ராவணனின் காரியத்தை முறியடிப்பேன் என்பதை மட்டும் உறுதி எழுதிக் கொள்ளும்' என்று கூறிவிட்டு உடனே கிளம்பி ராமனைப் பார்க்கச் சென்றார். அங்கு ராமபிரானுக்கு முன்னால் அனுமான், சுக்ரீவன், அங்காதன், நீலன் என அனைவரும் முட்டி மடித்து  அமர்ந்து கொண்டு இருந்தார்கள்.

தன் முன் வந்து நின்ற விபீஷணரின் முகம் கறுத்து அம்மாவாசைப் போல இருந்ததைக் கண்ட ராமபிரான் அவரிடம் கேட்கலானார் ' என்ன விபீஷணரே, இன்று உம் முகம் வாடி வதங்கி உள்ளது? இன்று அம்மாவாசைக் கூட இல்லையே. உமக்கென்ன ஆயிற்று இன்று?' என்று கேட்கவும் அரண்டு போய் நின்றிருந்த இருந்த விபீஷணர் ராமபிரான் காதில் மட்டும் கேட்குமாறு வாயு பகவான் மூலம் தனக்கு கிடைத்த சேதி அனைத்தையுமே அவருக்குக் கூறினார்.

அதைக் கேட்ட ராமபிரான் விபீஷணனிடம் கூறினார் 'விபீஷணா, இதென்ன பெரிய விஷயம்? இதற்கென்ன கவலை??! மயில் ராவணன் மாயாவியாயிருந்தால் நமக்கென்ன?? கவலை கொள்ளேல். இதை சுக்ரீவனிடமும் ஜாம்புவான்தரிடமும் கூறி அவர்களுடைய ஆலோசனைக் கேட்டறியலாம். அவர்கள் நல்ல உயபாயம் சொல்லக் கூடியவர்கள். இப்போது எமக்குக் கூறும். யாரந்த மயில் ராவணன் ? அவனுக்கென்ன பலம் என்பதை இவர்களுக்கு கூறுவீராக' என்று கூறியதும் விபீஷணர் சுக்ரீவனிடம் கூறலானார்.

'ஐயா, ராமதூதர்களே .....ஐயா, வானர சேனைகளே, ஐயா சத்ய புத்ரர்களே. வாருமையா அனைவரும் இங்கு வாரும். இங்கு வந்தமர்ந்து நான் கூறுவதனைத்தையும் காது கொடுத்துக் கேளும். மயில் ராவணன் அதல பாதாளத்தில் வசிப்பவன். அங்கு அவனே அதிபதி.  அங்கு செல்வது எளிதல்ல. சமுத்திரத்திலே, ஒரு இடத்திலே பல்லாயிரக்கணக்கான தாமரை செடிகளுண்டு. அதிலே மிகப் பெரிய தாமரை செடி ஒன்றின் தண்டின் மூலமே அந்த லோகத்துக்கும் செல்ல முடியும்.  அது பல அரண்மனைகளை ஒன்றன் பின் ஒன்றாக  கொண்டு அமைந்த லோகமாகும். செங்கல், பித்தளை, தாமிரம், இரும்பு, செம்பு, தங்கம் என அடுக்கடுக்காய் உள்ள கோட்டைகளுக்குள்    மயில் ராவணனும் வாசம் செய்வான். அந்த கோட்டையை எல்லாம்  பல லட்சக்கணக்கான ராட்சஷர்கள் காவல் காத்து நிற்ப்பார்கள். அந்த மயில் ராவணன் தாயாதி வழி முறையில் ராவணனுக்கு சகோதரன். மகா மாயாவி, சூத்ரதாரி, தந்திரக்காரன். எந்த ரூபத்தையும் எடுத்து வருவான். ஏமார்ந்தால் போதும், நினைத்ததை நடத்திக் காட்டி விடுவான்.

இன்னும் கேளுங்கள் வானப் படைகளே, அவனுக்கு உலகில் உள்ள அத்தனை யுக்திகளும் அயோக்கியத்தனமும் அத்துப்படி. அவனுக்கு இஷ்ட தெய்வமும், அவன் வழிபடுவதும் உக்ரஹ  காளி தேவதயையே.  அவள் மஹா சக்திசாலி. சிவபெருமானின் அருளினால் அவன் பெற்றுள்ள அந்த காளியின் அருள் இருந்தால் அனைத்துமே நடக்கும். அதனால்தான் அவளுக்கு ராம லஷ்மணர்களை பலி தந்து காளியின் பலத்தை ராவணனுக்கு கொடுக்க சூளுரைத்திருக்கிறான் அந்த மயில் ராவணன். இரவு பதினைந்து நாழிகைக்கு அவன் கையில் ராம லஷ்மணர்கள் கிடைத்து விட்டால் அதன் பின் அவர்களை அவன் பாதாளத்துக்கு கொண்டு போய் விடுவான். அப்புறம் அவர்களை மீட்பது கடினம். அதை  அனுமானால்  மட்டுமே தடுக்க முடியும் என்று சோழியும் சாஸ்திரமும் பட்ஷி ஜோசியமும் கூறுது என்பதால் உடனே சென்று அவரை அழைத்து வாருங்கள். ராம லஷ்மணர்களை எப்படிக் காக்கலாம் என்று அவர் ஆலோசனையும் நாம் கேட்கலாம்' .
........தொடரும்

No comments:

Post a Comment