Thursday, September 5, 2013

Mayil Ravanan -2

 
பிரகஸ்தன் சொன்னான் 'ஐயா ஸ்வாமி, உமக்கென்ன ஆயிற்று? உமக்கு எத்தனை தாயாதி உள்ளார்கள் என்று கூட நினைவில்லாமல் இப்படிக் கேட்குறீர்கள்? பாதாள இலங்கையில் உமக்குள்ளவன் மயில் ராவணன் ஒருவன்தானே. அவனே உமக்கு தாயாதி முறை சகோதரன். அவனை அழைத்தால் அவன் யுத்தம் செய்தும், தந்திரம் செய்தும் ராம-லஷ்மணர்களின் படைகளை துவம்சம் செய்து விடுவான். அவனை வெல்ல இன்னும் யாரும் பிறக்கவில்லை. ஜெயிக்க வேணும் என்றல் ஜெயித்தே காட்டுவான் ஐயா ....அவன் ஜெயித்தே காட்டுவான். உடனே மயில் ராவணனை அழைப்பீராக' என்று தூபம் போட்டான்.

பிரகஸ்தன் அப்படிக் கூறிய உடனேயே ராவணன் நினைத்தான் 'அடடா...இந்த யோசனை எனக்கேன் மனதில் வரவில்லை? மயில் ராவணன் அசாத்திய சூரனாயிற்றே!. இந்த யோசனை நல்ல யோசனைதான். போகட்டும், மயில் ராவணா, நான் உன்னைப் பார்க்க வேண்டுமே' என மனதார அவனை நினைத்தான். மனதில் நினைத்தால் போதும், மயில் ராவணனுக்கு அங்கே ராவணன் தன்னை நினைத்தது தெரிந்து விடும். அவன்தான் மாயாவி ஆயிற்றே. மயில் ராவணன் யோசனை செய்தான் 'இதென்ன திடீர் என என்னை என் தமயன் ராவணன் என்னை நினைக்கிறான்? தீர்க்க முடியாத கஷ்டம் இல்லை ஆபத்து என்றால் தவிர என்னை நினைக்க மாட்டனே. அப்படி அவனாலேயே தீர்க்க முடியாத என்ன ஆபத்து அவனுக்கு வந்திருக்கும்? இனி தாமதிக்கலாகாது...யோசனையும் செய்யக் கூடாது' என நினைத்தவன் பாதாளத்தில் இருந்து சூறாவளிக் காற்றைப் போல கிளம்பிச் ராவணனைப் பார்க்க இலங்கைக்குச் வந்தான்.

இலங்கைக்கு வந்தவன் உடனடியாக ராவணனை சந்தித்தான். சகோதரன் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக அவனை தெண்டனிட்டு நமஸ்கரித்தப் பின் கேட்கிறான் 'இதென்ன தமயனாரே, என்ன ஆயிற்று? நான் வரும் வழியெல்லாம் பார்த்தேன் .....நாடெல்லாம் நிர்மூலமாகிக் கிடக்குது? என்ன நடந்ததென விவரம் கூறுவீர்'. அவனை அன்போடு எதிர்கொண்டழைத்த ராவணன் அவனுக்கு பதில் தந்தான் 'வாரும் தம்பியாரே, வாரும். உம்மைதான் பாழாய் போன நான் நினைத்துக் கொண்டே இருந்தேன். தசரதனின் பிள்ளைகள் ரெண்டுபேர் தண்டகாரண்யம் என்ற காட்டில் இருந்தார்கள். அங்கு சென்ற நம் தங்கை சூர்பணகையை லஷ்மணன் மானபங்கம் செய்து காயப்படுத்தினான். அவளும் என்னிடம் வந்து முறையிட்டாள். அதனால் கோபமுற்ற நானும் சீதையை களவாடிக் கொண்டு வந்து சிறையிலிட்டேன். ஆனால் அந்த ராமனோ சீதையை தேடிக் கொண்டு ஒரு வானரத்தை இலங்கைக்கு அனுப்ப, வந்த குரங்கும் நகரெங்கும் தீ வைத்து நாசப்படுத்தி விட்டுப் போயிற்று. அது போனதும் ராமனும் லஷ்மணனும் பெரும் சேனையுடன் வந்து நம் மீது போர் புரிகிறார்கள். நம் சந்ததியினர் அனைவரையும் அழித்து விட்டார்கள். சேனையிலும் பாதி அழிந்து விட்டது. நானென்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து நின்ற வேளையிலே பிரகஸ்தன் உம்மை நினைவு படுத்தினான். அவர்களை அழித்திட நீரே எமக்கு உதவிட வேண்டும். ராம லஷ்மணர்களுக்கு ஆத்ம பலத்தை விட வேறேதோ பலமும் உள்ளது. அதேன்னவென்று தெரியலே. அதனால்தான் அவர்களை மாயத்தாலேயே அழித்திடோணும். மாயாஜால, மந்திர சக்தி உள்ள, ஜெகத்ஜால கில்லாடியான நீரே ராம லஷ்மணர்களையும், வானர சேனைகளையும் அழித்திடோணும்'.

அதைக் கேட்ட மயில் ராவணனும் நிலை குலைந்து போய் அழுது புலம்பினான். 'பெரிய தாயாதியாரே, உம நிலை என்னையே நிலைகுலைய வைக்குதையா. உமக்கேன் சோதனை? வீரன் நீர்....சூரனும் நீர்....உமக்கா இந்த கதி? நெஞ்சே பதறுதையா....நீர் என்னை முதலிலேயே அழைத்திருக்கலாமே. நான் இப்போது என்ன செய்ய வேணும் என்று கூறையா. உடனே செய்கிறேன்' என்று கண்கள் சிவக்க கத்திக் கொண்டு ஆக்ரோஷத்தோடு எழுந்து நின்றான்.

அவனைக் கட்டி அணைத்து கண்ணீர் விட்டழுத ராவணன் சொன்னான் 'பிள்ளாய் , நிதானம்....... நிதானம். நீர் நினைப்பது போல ராமனும் லஷ்மணனும் சாமான்யமானவர் அல்ல. மிக்க பலசாலிகள். அவர்களுக்கு எதோ தெய்வ அனுக்ரஹம் உள்ளது போலும். அதனால்தான் நம் சேனைகளையும் காட்டிலே மரத்துக்கு மரம் தாவி பழம் தின்னும் வானரங்களைக் கொண்டே நிர்மூலப்படுத்தி விட்டார்கள். ஆகவே அவர்களை தந்திரம் செய்தே அழிக்கோணும். அதற்கு நல்லதொரு வழியை யோசி' என்று கூறினான்.

அதைக் கேட்ட மயில் ராவணனும் கூறுகிறான் ' ஐயனே, கவலை வேணாம். அவர்களை மாயம் செய்து, தந்திரம் செய்து பாதாளத்துக்கு கொண்டு போய் என் காளிக்கு பலி தருவேன். இது காளிக்கு சத்தியம் ' என சூளுரைத்தான். ராவணன் ஆறுதல் அடைந்தான். ராம லஷ்மணர் அழிவு உறுதி என மனக் கணக்கு போட்டான். சூளுரைத்துச் சென்றவன் மயில் ராவணன் ஆயிற்றே! காளிக்கு பலி தருவேன் என்று அவன் சூளுரைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. அத்தனை சக்தி மயில் ராவணன் பூஜித்து வந்த காளி தேவிக்கு. இதுவரை அவளுக்கு பலி தருவேன் என மயில் ராவணன் சூளுரைத்தால் அந்த பலியை ஏற்காமல் விடவும் மாட்டாள் அந்த அதள பாதாளத்தில் உள்ள உக்ரஹ காளி. அப்படியொரு சக்தி கொண்டவள் சிவபெருமானின் அருளினால் அவனுக்குக் கிட்டியிருந்த அந்தக் காளி .

அதன் பின் சிறிது நேரம் அனைத்து சம்பவங்களையும் கேட்டுக் கொண்ட மயில்ராவணன், 'அண்ணா, நானுனக்கு நிச்சயம் உதவுவேன். அந்த பொடியன்களை வசியம் செய்து பாதாளத்துக்கு கொண்டு போய் காளிக்கு பலிதர ஏற்பாடுகளை செய்துவிட்டு நொடியில் திரும்ப வருவேன். இது காலி மீது சத்தியம். கவலை வேண்டாம்' எனக் கூறிவிட்டு அதற்க்கான ஏற்பாடுகளை செய்ய பாதாளத்தில் இருந்த தன் அரண்மனைக்கு துரிதமாகக் கிளம்பிச் சென்றான். பாதாளத்து காளிக்கு பலி தரும்முன் அவளுக்கு சங்கல்ப்பம் செய்து கொண்டு, யாரை பலி தரவேண்டுமோ அப்படி பாவிக்கப்பட்ட பதுமைகளை காளியின் காலடியில் வைத்து அவர்களைக் கொண்டு வந்தவுடன் அவர்களை ஏற்க வேண்டும், அவர்களைக் கொண்டு வர அவள் சக்தி கொடுக்க வேண்டும் என பதுமைகள் மீது ரத்தத்தையும் சொட்டி, சத்தியமும் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் அதி விரைவாகச் சென்றான்.
...........தொடரும் 

No comments:

Post a Comment