Friday, September 20, 2013

Mayil Ravanan - 17

குதிரைகள் தடதடென நடக்க, படையினர் படபடவென குதித்தோடிவர ........ஹூ....ஹா... ஹோய்....ஹோய்...என சப்தமிட்டபடி பல்வேறு ஜனங்களும் சேர்ந்தோடிவர மயில் ராவணன் மழைபோல விட்ட அம்புகளையும் அஸ்திரங்களையும் நொடிப் பொழுதில் அனுமன் பொடிப்பொடியாக்கி விட மயில் ராவணன் யோசனை செய்யலானான் 'அடடா...என் பத்தினி வர்ணமாலி அன்று சொன்னது நடந்து விடும் போலிருக்கே. நான்தான் தப்பு செய்துட்டேனோ ? அனாவசியமா அத்தனை சேனையும் இழந்து தசமுக ராவணனைப் போலாகி விட்டேனோ? இவனை எப்படி ஜெயிப்பது? எத்தனை அஸ்திரமானாலும் அஸ்க், புஸ்க் என்று அடித்து நொறுக்குறானே' இது மயில் ராவணன் மனதிலே வந்த கிலி .

யுத்தம் தொடர அனுமான் வந்து மயில் ராவணனின் முதுகிலே தனது இரண்டு கை முஷ்டியினாலும் பலமாகத் தாக்கினார். அடுத்தகணம் அதே குத்து தன் முதுகிலும் விழுதே என அனுமார் திரும்பினால் அங்கே திடகார்த்தமாக அக்ரோஷத்துடனே மயில் ராவணன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். இரண்டு பேரும் மாறி மாறி அடித்துக் கொண்டே இருக்க அனுமார் மயில் ராவணனை கீழே தள்ளி கொன்று சுக்குநூறா அவன் உடலைக் கிழித்து நாலாபக்கமும் சதைகளை வீசி எறிந்துவிட்டு 'அப்படா ஒருவழியா மயில் ராவணனை கொன்று விட்டேன்' என சந்தோஷப்பட்டுக் கொண்டே 'ராமச்சந்திரா' என பிராத்தனையை செய்ய பல நூறு யோஜனைக்கப்பால் விழுந்த அத்தனை சதைகளும் காற்று போல பறந்து வந்து யுத்தகளத்திலே மீண்டும் மயில்  ராவணனாகி நின்றிருப்பதைப் பார்த்த அனுமார் குழம்பியே போனார்.

'இதென்னடா சாமி இவன் வலிமை....இவன் மாயம்? இவனுக்கென்ன இத்தனை தவ வலிமை? எத்தனை அடித்தாலும் என்னையும் அடிக்கிறான். உடம்பை சல்லடயாக்கிப் போட்டால் மீண்டும் மீண்டும் ஒன்றுமாகாதது போல திடகார்த்த உடம்போடு திரும்பித் திரும்பி வந்து யுத்தமும் செய்கிறான். இவனை நானெப்படி ஜெயிப்பது? தெரியலயே ...இதெல்லாம் நமக்கு விபீஷணனும் சொல்லலயே........இவன் மர்மத்தை எனக்கெவர் விளக்குவார்?' என வினசத்துடன் தலை மீது தன் கையை வைத்துக் கொண்டு யோசனை செய்து கொண்டிருந்தவர் பொறி தட்டினாற்போல தூரதண்டியை இதைக் குறித்துக் கேட்டுப் பார்க்கலாம் என்றெண்ணி அவளைப் பார்க்கச் சென்றார்.

அதற்கு ஏதுவாக இருக்குமாறு முதலில் அனுமான் மயில் ராவணனை தனது வாலினால் நன்றாகக் கட்டி, ஆகாயத்தில் பறந்து சென்று நாலு சுற்று சுற்றி தூக்கி தூரத்தில் விழுமாறு எறிந்தார். அவனும் நூறு யோசனை தூரத்தில் போய் விழுந்தவுடன் மீண்டும் அதே பலத்துடன் எழுந்து வரலானான். அதைதான் அனுமானும் விரும்பி இருந்தார். அவன் எழுந்து வருவதற்குள் தூரதண்டியிடமோ, நீலமேகனிடமோ சென்று மயில் ராவணனை கொல்வது எப்படி என்பதை கேட்டு விட்டு வரலாம் என்று அந்த அவகாசத்துக்காக அப்படி செய்திருந்தார். அவசரவசரமாக தூரதண்டியை சந்திக்கச் சென்றார். அவர் வந்ததும் தன்னால் மயில் ராவணனைக் கொல்ல முடியலையேன்னும் எத்தனை தடவை அவனைக் கொன்றாலும் அவன் பிழைத்து வந்து விடுகிறானே என ஆதாங்கப்பட்டு அவனைக் கொல்ல உபாயம் ஏதும் உண்டா எனக் கவலையோடு அவளைக் கேட்டார்.

அவளும் அனுமானிடம் தனக்கு உண்மையிலேயே மயில் ராவனனை பற்றிய விவரம் அதிகம் தெரியாது எனவும், ஆனால் தன் கணவன் உயிரோடு இருந்தபோது ஒருமுறை மயில் ராவணன் தன் வீட்டுக்கு உணவு அருந்த வந்தான் என்றும் அப்போது தன்னுடைய உயிர் ஸ்தானம் எங்கு உள்ளது என்பதை கள்ளம் கபடமில்லாமல் கூறினான் எனவும் கூறினாள். அந்த விவரத்தை அவள் இப்படியாக அனுமானுக்கு கூறத் துவங்கினாள் 'ஐயா ராமதாசா, அவன் கூறிய விசித்திர விஷயத்தை நான் அப்படியே உமக்கும் கூறுகிறேன், கேளும். ஒரு முறை மயில் இராவணன் பிரும்மாவை வேண்டிக் கொண்டு உடலையும் வருத்திக் கொண்டு தன்னையே அழித்துக் கொள்ளுமளவு கடுமையான தவம் இருந்தான். அவனுக்கு முன்னால் பிரும்மா தோன்றியபோது, அவன் ஒரு வரம் கேட்டான்.

அந்த வரம் யாதெனில் எப்போது அவன் யாருடனும் சண்டைப் போட்டாலும் அவனுக்கே (மயில் ராவணனுக்கு ) வெற்றி கிட்ட வேண்டும். அந்த யுத்தத்தில் அவன் உயிர் இழந்தாலும் மீண்டும் மீண்டும் அவன் பிழைத்து எழ வேண்டும்'. பிரும்மா அவனுக்குக் அதைக் கொடுப்பது கடினம் என்றும் அதன் காரணம் ஒருமுறை உயிரை விட்டால் உடலில் உள்ள பஞ்ச பூதமும் உடலில் இருந்து வெளியேறி விடும் என்பதினால் அதைத் தர முடியாது என்றார். அவனும் விடாக்கண்டன் கொடாக் கண்டன் அல்லவா. அவன் பிரும்மாவிடம் கூறினான் அப்படி என்றால் என் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் பாதாள இலங்கையில் இருந்து மூவாயிரம் யோசனை தூரத்தில் உள்ள பர்வதம் ஒன்றில் ஐந்து குகையில் ஐந்து வண்டுகளாக இருக்க வேண்டும். அவற்றை ஒருசேரக் கொன்றால் மட்டுமே என் உயிரும் போகும் என்பதான வரத்தைத் தாரும். இல்லை என்றால் என் உயிரை இப்போதே நான் எடுத்துக் கொள்வேன் என்று தன் வாளை உருவினான்.

எந்த தெய்வமுமே தவத்தினால் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றிவிட்டால் அவர்களை சாக விடாது. பிரும்மாவும் யோசனை செய்தார். இவனுக்கு வரம் தந்தாலும் அவன் அட்டகாசம் அடங்கப் போவது இல்லை. இவனை வரம் தராமலும் சாகடிக்க முடியாது. அது தனது சக்தியை குறைத்து விடும். ஆகவே ஏதாவது சமயோசிதமாக உபாயம் செய்தே இதை சமாளிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு அவனுக்கு அந்த வரம் தர சம்மதித்தாலும் ஒரு சின்ன பொடியை அதில் வைத்து இருந்தார். அவர் அவனிடம் பஞ்ச பூதங்களையும் ஐந்து வண்டில் தனித் தனியாக வைத்தாலும், மயில் ராவணனைக் கொல்ல வருபவர்கள் அவன் மீது காலை வைத்துக் கொண்டு, அவனை பூமியில் அழுத்திக் கொண்டு, அந்த ஐந்து வண்டுகளையும் பிடித்து தன் உள்ளங்கையில் வைத்து அவற்றை நசுக்கிக் கொன்றால் மட்டுமே அவன் உயிரும் பிரியும் என்று வரம் கொடுக்க அவனும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். ஏன் எனில் யாரால் அவனை பூமியில் அழுத்தி வைத்துக் கொண்டு மூவாயிரம் யோசனை தூரத்தில் உள்ள குகையில் இருக்கும் வண்டுகளைப் பிடித்து நசுக்கிக் கொல்ல முடியட்டும்? அத்தனை பெரிய உருவம் படைத்தவர் எவருமில்லையே என்று நினைத்தான். அப்போது அவனுக்கு மனதில் தோன்றவில்லை, எந்த தெய்வமாவது ஆகாயத்துக்கும் பூமிக்கும் அளவிலான விஸ்வரூபத்தை எடுத்து விட்டால் அதையும் செய்யலாமே என்று'. இதைக் கூறியவள் 'இதை விட வேறேதும் எனக்குத் தெரியாது சுவாமி' என்றாள் .
...........தொடரும்

2 comments:

 1. தலையே சுற்றுதையா
  மயில் ராவணன் கதையை படித்து.
  வல்லவனுக்கு ஒரு வல்லவன் ஒருவன்
  பூமியில் உண்டு என்பது .இந்த கதையின் மூலம் நன்கு தெரிய வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கை முறையிலும், போர் திறனிலும் வளர்ச்சியடைந்த சமுதாயம் இருந்ததை தெளிவான விவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
  பதிவை தந்த உமக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. தலையே சுற்றுதையா
  மயில் ராவணன் கதையை படித்து.
  வல்லவனுக்கு ஒரு வல்லவன் ஒருவன்
  பூமியில் உண்டு என்பது .இந்த கதையின் மூலம் நன்கு தெரிய வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கை முறையிலும், போர் திறனிலும் வளர்ச்சியடைந்த சமுதாயம் இருந்ததை தெளிவான விவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
  பதிவை தந்த உமக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete