Thursday, September 19, 2013

Mayil Ravanan -16

இப்படியாக அனுமார் ஒரு பக்கத்தில் வேலைகளை செய்து கொண்டிருக்க, இன்னொர் பக்கம் அனுமாரிடம் இருந்து தப்பி ஓடிச் சென்ற கடகன் ஓடோடிச் சென்று மயில் ராவணனின் இருப்பிடத்தை அடைந்தான். மயில் ராவணனின் அரண்மனைக்கு வந்தபோது அங்கே பன்னிரண்டாயிரம் கோடி அரக்கர்கள் ஆயுதங்களை தமக்கு தலையணி போல வைத்துக் கொண்டு உறங்குவதைக் கண்ட கடகன் அனைவரையும் சப்தம் போட்டு எழுப்பினான். 'அசுரர்களே... அனைவரும் எழுந்திருங்கள். அந்த வானரம் வந்து விட்டால் உங்கள் அனைவரையும் நொடியில் துவம்சம் செய்திடும்' என உரக்கக் கத்தியவாறே, 'சுவாமி...சுவாமி...எழுந்திரும். உமக்கொரு முக்கியமான விஷயம் கொண்டு வந்திருக்கேன். அதைக் கேட்டாலே உமக்கு தலையே சுற்றும் ஐயா' எனக் கூவிக்கொண்டே மயில் ராவணனின் அரண்மனையில் புகுந்து அவனுடைய அறைக்கு முன்னாலே சென்று நின்று கொண்டான்.

அங்கே மயில் ராவணன் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டிருந்த வேளையில் அங்கு சென்ற கடகன் படபடவென அவன் அறைக் கதவைத் தட்டி அறைக்குள்ளிருந்து எழுந்து வந்த மயில் ராவணனிடம் நடந்தனைத்தையும் விலாவாரியாகக் கூறினான். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த மயில் ராவணனை ஆஸ்வாசப்படுத்தி விட்டு கடகன் சொன்னான் 'சுவாமி, இந்த விஷயத்தை சற்று நிதானமா கேளுமையா....அனைவரையும் துவம்சம் செய்த அந்த வானரம் காளி கோவிலுக்கு பக்கத்தில் ஓடினதாக செய்தி கிடைத்ததால்தான் சுவாமி இங்கு வந்து உம்மிடம் கூறினேன்' என்று கூறவும் ' அடே நாராசப் பயலே, உடனே காளி கோவிலுக்குச் சென்று அந்த பெட்டி பத்திரமாயிருக்கான்னு பார்த்து விட்டு வா........நானும் இந்த வாளுடன் கிளம்பி வருகிறேன்' என்று கூறிவிட்டு காளி கோவிலுக்கு ஓடிச் சென்று பார்த்தாலோ காளிக்கு முன்னாலிருந்த பெட்டி காணாததைக் கண்டு வெகுண்டெழுந்தான். 'ஏமார்ந்துட்டோம்....கடகா.... ஏமார்ந்துட்டோம்.....அந்த வானரம் வந்து பெட்டியை தூக்கிண்டு போயிட்டுதே ' என கோபத்தில் குதித்தான்.

'கடகா, இப்போ என்ன செய்யறது? அந்த வானரம் பெட்டியில் இருந்த ராம லஷ்மணர்களை கொண்டு சென்று விட்டதே. அவரோடு காளியும் சேர்ந்து போய் விட்டாளா எனத் தெரியலயே ....இவள் முகத்தைப் பார்த்தாலே அவளும் சந்தோஷமாக அவருடன் சேர்ந்து போய்விட்டது போலத் தோணுதே. இப்போ என்ன பண்ணலாம்? அந்த வானரம் இங்கே வந்துடுத்தூன்னா அதுக்குக் காரணம் தூரதண்டியாத்தான் இருக்கும். அவள்தானே தண்ணி எடுக்க வெளியில் போனா. அப்போது அந்த வானக் குரங்கை அழைத்து வந்திருப்பாளோ. இப்போதே போய் அவளை வெட்டிக் கொன்று விட்டு வா ' என கடகனுக்கு மயில் ராவணன் ஆணையிட்டான். அனுமார் அடித்த அடியில் உடம்பெல்லாம் ரணமாகிருந்த கடகனும் ஒளிந்து ஒளிந்து கொண்டு தூரதண்டியை பார்க்கப் போனான். எங்காவது அனுமானின் கண்ணில் பட்டு விட்டால் தன்னை இன்னும் நுங்கி நொய்து எடுத்திடுவார் என பயந்தான். போகும் போது வழியில் தனக்கு துணையா இருக்க ஆளும் சேர்த்துக் கொண்டு சென்றான்.

தூரதண்டியின் வீட்டை அடைந்ததும் அங்கே தூரதண்டியும் அனுமானும் நீலமேகனுடன் பேசிக் கொண்டு இருந்ததைக் கண்டு வந்த வேகத்திலேயே ஓடிப் போய் மயில் ராவணனிடம் 'ஐயா சுவாமி அங்கு அந்த வானரம் தூரதண்டியோடும், நீலமேகனோடும் கூடிக் கூடிக் குலாவி பேசிக் கொண்டிருக்கிறார் ' என்று விஷயம் கூற அந்த சங்கதியைக் கேட்ட மயில் ராவணன் தன் சேனையின் பல்லாயிரம்பேரை உடனே அங்கு அனுப்பி அந்த வானரத்தைக் கொன்று விட்டு வாருங்கள் என அனுப்பினான். அந்த வீரர்களும் அனுமானைக் கொல்ல கத்தி, கபடா, ஈட்டி, கதை என அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு செல்ல சற்று நேரத்திலேயே அவர்களும் போன வேகத்திலேயே திரும்பி ஓடி வந்தார்கள். பல்லாயிரம் பேர் சென்ற பட்டாளத்தில் பத்து பேர் மட்டுமே உயிருடன் திரும்பி வந்தார்கள். அவர்கள் வந்ததும் இன்னும் பெரும் சேனையை கதாசிங்கன் எனும் அரக்கன் தலைமையில் மயில் ராவணன் அனுப்பி வைக்க அவர்கள் வந்து அனுமான் மீது பாணங்களை மழைபோல பொழிந்தார்கள். நொடியிலே கதாசின்கனும் மடிந்து விழ அவனை தொடர்ந்து வித்யாசிம்மன் களத்துக்கு வர, அவனும் காலும் கையும் வெட்டப்பட்டு அழிந்தான்.

இனி அவர்களையெல்லாம் துரத்திச் சென்று மயில் ராவணனுடன் நேரிலே மோதணும் என எண்ணிய அனுமானும் அடுத்தடுத்த வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த அரக்கர்களை அழித்த வண்ணம் சென்றார். வழியிலே ரத்தம் கக்கி கடகரோமான் என்பவன் மாண்டான். அவனை தொடர்ந்து காலதேஷன் என்பவனும் மாண்டான். அவர்கள் அனைவரும் மூர்கமான அரக்கர்கள். மயில் ராவணனின் படையில் முக்கிய தளபதிகள். அடுத்தடுத்து முக்கிய தளபதிகள் உக்ரசேனன், வக்ரசேனன், தீரசிம்மானவன், வெம்புலியான், சம்புலியான் மற்றும் அநேக லட்ஷ அரக்கர்களைக் கொன்று குவித்த அனுமனுடன் நேரிலே மோத தன்னை சுற்றி நின்றிருந்த அரக்கர் சேனையோடு மயில் ராவணனே நேரில் சென்றான்.
............தொடரும்

No comments:

Post a Comment