Wednesday, September 18, 2013

Mayil Ravanan - 15

இதெல்லாம் அரண்மனைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது அதேதும் தெரியாத மயில் ராவணன் அதி பாதாள லோகத்தில் தன் மனைவியுடன் அதி உல்லாசத்தில் இருந்தான். அவன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தான் 'அடியே காமுகி, இப்பத்தான் நான் என் தங்கை தூரதண்டியை பூஜைக்கு தண்ணீர் கொண்டு வர அனுப்பி விட்டு வந்துள்ளேன். அவள் வர இன்னும் ரெண்டு ஜாமமாகும். அதற்குள் நான் உன்னோடு லீலைகளை செய்துட்டு, குளித்துவிட்டு பூஜைக்கு தயாராகணும். அடியே என் செல்லக் கிளியே அருகில் வந்து அமருடி' என மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டிருந்தான்.

ராட்ஷசர்களை துவம்சம் செய்தப் பின் அங்கே அனுமார் காளி கோவிலுக்குச் சென்று பார்த்தால் அந்தக் கதவும் மூடி இருந்தது. அனைத்திடங்களிலும் இருந்தவர்களை துவம்சம் செய்து மரண யாத்திரைக்கு அனுப்பி விட்டதினால் அங்கு அக்கம் பக்கம் கூட சப்தம் எதுவும் இல்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர யாரும் கூட இல்லை. மயில் ராவணனும் மனைவியுடன் உல்லாசம்  செய்த பிறகு பூஜைக்குத் தயாராக்கிக் கொள்ள அங்கிருந்து பல காத தூரத்தில் அடி பாதாளத்தில் எந்த சத்தமுமே கேட்காத தூரத்தில் இருந்த குளம் ஒன்றில் குளிக்கச் சென்று விட்டான். பார்த்தார் அனுமார். காளியும் பார்வதியின் அவதாரந்தானே என்றேண்ணியவர் 'அம்மா, என்னை மன்னித்தருள். இதுவும் உன்னையே வேண்டிக் கொண்டுதான் செய்கிறேன்' என்று மனதில் காளியை வழிபட்டுக் கொண்டே இரு கை முட்டியையும் ஒன்று சேர்த்து கதவை ஓங்கி ஒரு குத்து விட அது அப்படியே பெயர்ந்து விழுந்தது.

உள்ளேயோ அடுக்கடுக்காய் மண்டபங்கள். ஆயிரம் கால் மண்டபம், அபிஷேக மண்டபம், எண்ணை மண்டபம், வண்ண மண்டபம், கல் மண்டபம், கல்யாண மண்டபம், புஷ்ப மண்டபம், வைர, வைடூரிய, பவள, தவழ, மகர மண்டபங்கள் என அடுக்கடுக்காய் மண்டபங்கள் இருக்க அத்துணையையும் அரை நாழிகையில் தாவித் தாவிச் சென்று காளி சன்னதியை அனுமார். அங்கிருந்த காளியும் அகோர உருவமாயிருந்தாள். பார்க்கவே பயங்கரம். பல் ஒவ்வொன்றும் நூறு விரல் நீளம், ஜடையோ பின்னி பின்னி ராஜநாகம் போலவே காணப்பட, வாயோ பலி வேணும், பலி வேணும் எனக் கூவுவது போல காட்சி தந்தது. அந்தக் காளியைக் கண்டாலே யாருமே பயந்து நடுங்குவர். அந்த காளிக்கு முன்னாலே ஒரு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அனுமாருக்கு நீலமேகன்தான் காளிக்கு முன்னால் வைக்கப்பட்டு உள்ள ஒரு பெட்டியில் ராம லஷ்மணர்களை பூட்டி வைத்துள்ள கதையைக் கூறி இருந்தான். அதனால் அனுமாருக்கு ராம லஷ்மணர்களை கண்டுபிடிப்பதில் அதிக சிரமம் ஏற்படவில்லை. காளிக்கு முன்னால் ஒரு பெட்டி இருந்ததைக் கண்ட அனுமார் ஆடாமல், அசையாமல் மெல்ல மெல்ல அந்தப் பெட்டியை திறந்து பார்த்தார். அதை திறந்ததும் அப்படியே திடுக்கிட்டார். அவர் கண்களில் நீர் வழிந்தது. காரணம் அதில் மயில் ராவணன் போட்டு இருந்த மாய சூத்திரம் மற்றும் மந்திரக் கட்டினால் ராமரும் லஷ்மணரும் ஆடாமல் அசையாமல் அதில் மயங்கிக் கிடக்க அவர்களுக்கு ஸ்மரணை இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க அவர்களை தடவிக் கொடுத்தார். அது மட்டும் அல்ல அவர்கள் கண் விழிக்க வேண்டும் என அவர் தோத்திரம் செய்யத் துவங்கினார். பல கடவுளையும் அழைத்து துதி பாடியதும் ராமபிரான் மெல்லக் கண் விழித்தார்.

அதன் பின் கேட்டார் 'வாரும் அனுமாரே, இப்போ நாம் எங்கே இருக்கோம்? நான் ஏன் இந்த பெட்டியில் கிடக்கிறேன்? இதென்ன தேசம்? இதென்ன ஊர்' எனக் கேட்டபடி எழுந்திருக்க முயல இருந்ததால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அதைக் கேட்டதும் அனுமானுக்கு கண்களில் தண்ணீர் குளம் போல வந்து விழ, அவரும் கூறினார் ' ஹே ராமச்சந்திர மூர்த்தியானவரே, ஜகத் குருவே, என்னை ஏமாற்றி உம்மை மயில் ராவணன் இங்கே கொண்டு வந்து வைத்து மாயக் கட்டும் போட்டுவிட்டான். உங்களை மீட்டு அழைத்துக் கொண்டு போகவே நானும் இங்கே வந்துள்ளேன். கவலை வேண்டாம். முதலில் அவனைக் கொன்று விட்டு உங்களை மாயக்கட்டில் இருந்து விடுவிப்பேன். அவன் வருவதற்குள் உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்று விடுவேன். அதுவரை பத்திரமாக இதில் இருங்கள்' என்று அழுகையினூடே கூறியவர் காளியை வேண்டிக் கொண்டார்.

அவர் மீண்டும் பெட்டியை பார்த்தபோது ராமர் கண்களை மூடியபடியே இருந்தார். அவரால் கண்களையும் முழுவதாக திறக்க முடியாமல் மயில் ராவணனின் மாயக்கட்டு அவருடைய கண்களையும் மூட வைத்திருந்தது. இனி தாமதிக்க வேண்டாம் என எண்ணியவர் காளியை நூறுதரம் வணங்கி எழுந்தார் 'தாயே, இவரை நீதானம்மா காப்பாற்றணும்' என்று வேண்டிக் கொண்டு அந்த பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு அங்கிருந்து என்பது கோட்டை தாண்டி இருந்த 'அங்கனமிருக்கா' எனும் மலையில் இருந்த குகையில் அதை கொண்டு போய் பத்திரமாக வைத்து விட்டு வந்தார்.

அந்த மலையும்  பாதாள லோகத்தில்தான் இருந்தது. மயில் ராவணனை அழிக்காதவரை பாதாளத்தில் இருந்து ராம லஷ்மணர்களை அங்கிருந்து தாமரத் தண்டின் வழியே எடுத்துச் செல்ல முடியாது. அதனால்தான் அவர்களை பாதாள லோகத்திலேயே பூமா தேவியின் பொறுப்பில் மறைத்து வைக்க வேண்டி இருந்தது.

அப்போது பூமாதேவியிடம் அனுமான் வேண்டினார் 'அம்மா, பூமா தேவி, நான் வரும்வரை இவர்களை நீதானம்மா பத்திரமா காப்பாத்தணும். உன் தங்கை இலங்கையிலே அசோகவனத்திலே ஒரு மரத்தடியில் ராவணனின் பிடியில் சிக்கி இருக்கிறாள். இவர்களையும் மயில் ராவணன் மாயக் கட்டு போட்டு கட்டி வைத்திருக்கான். நான் சென்று மயில் ராவணனைக் கொன்று விட்டு மாயக்கட்டின் சூத்திரத்தையும் உடைத்து விட்டு இங்கு வந்து இவர்களை எழ வைப்பேன். அதுவரை நீங்கதான் அம்மா இவர்களை காத்து இருந்து நான் வந்ததும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என வேண்டினார்.

பூமா தேவியும் அதை ஆமாதிப்பது போல படீர் என தன்னுள் ஒரு வெடிப்பை ஏற்படுத்த அந்த பெட்டியை அந்த வெடிப்புக்குள் வைத்து விட்டு அனுமார் கிளம்பிச் சென்றார். அவர் கிளம்பிச் சென்றதும் வெடிப்பும் தானாகவே மூடிக் கொண்டது.
...........தொடரும் 

No comments:

Post a Comment