Thursday, August 29, 2013

Mayil Ravanan

 முன்னுரை
வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதினர். அது புராணமாயிற்று. ராமாயணக் கதை உலகெங்கும் பல வடிவங்களில் புழங்கி வருகிறது. அது போலவே தமிழ் நாட்டிலும் வங்கத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் ராவணனின் தாயாதி வழி சகோதரன் மயில் ராவணன் என்பவர் தன் சகோதரன் ராவணனுக்கு உதவ ராம லஷ்மணர்களை கடத்தி வந்து காளிக்கு பலி கொடுக்க முயன்ற நாட்டுப்புறக் கதை புழக்கத்தில் இருந்துள்ளது. பல்வேறு வருடங்களாக அது செவி வழிக் கதையாகவே கூறப்பட்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் முதன் முதலாக 1958 ஆம் ஆண்டுகளில் மயில் ராவணனின் கதை எழுத்து வடிவில் வந்ததாக கூறுகிறார்கள்.

அதை கிராமப்புறங்களில் தெருக்கூத்து அல்லதுஒருவிதமான பொம்மலாட்டத்தின் மூலமே கூறி வந்துள்ளார்கள். அந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி பொம்மைகளைக் கொண்டு நடத்தப்பட்டது இல்லை. பதனிடப்பட்ட, தோல்களில் உண்மையான மனிதர் உயரத்தில் வண்ண உருவம் தீட்டி, வெள்ளைத் திரைகளுக்குப் பின்னால் வைத்து பெட்ரோமாஸ் விளக்கு ஒளியின் துணையைக் கொண்டு வெள்ளைத் திரைகள் மீது அவற்றின் உருவை அசைய வைத்து நிழல்லாட்டதின் மூலம் கதையைக் காட்டுவார்கள்.

அந்த நிழல் கலை தஞ்சாவூரை ஆண்டு வந்த மராட்டிய வம்சாவளி மன்னன் சரபோஜி என்பவர் காலத்தில்தான் தோல் பாவைக் கூத்து என்ற பெயரில் பெருமளவில் பரவி வந்துள்ளது என்று கூறுகிறார்கள். வறட்சி நிலவும் காலத்தில் பாவைக் கூத்து நடத்தினால் மட்டுமே மழை பெய்யும் என்ற நம்பிக்கை கிராமத்தில் நிலவியது என்ற நம்பிக்கையில் இதை நடத்தினார்களாம். தோல் பாவைக் கூத்து என்ற பெயரில் பெருமளவில் பரவி வந்துள்ள பின்னரே மயில் ராவணன் கதை தெருக்கூத்து எனும் நாட்டிய நாடகமாகவும் கிராமப்புறங்களில் நடத்தப்பட்டு வந்துள்ளது.

மயில் ராவணனின் கதைக்கான மூல ஆதாரம் எது என்பது தெரியவில்லை. அந்தக் கதை பண்டையக் காலத்தில் இருந்த ராமாயணத்தில் உள்ளதா என்பதும் தெரியவில்லை. ஆனால் அது ராமாயணத்தைப் போல பிரபலமாகவில்லை என்பதினால் உண்மையிலேயே அது ராமாயணத்துடன் எந்த அளவில் சம்மந்தப்பட்டுள்ளது என்பதும் சரிவர விளங்கவில்லை.

ஆனால் ராவணனுடன் சம்மந்தப்பட்ட மயில் ராவணன் என்பவன் இருந்துள்ளார், அவர் ராமாயணத்துடன் சம்மந்தப்பட்டு உள்ளார் எனவும் நம்ப இடமிருக்கிறது என்பதின் காரணம் மயில் ராவணனைக் குறித்த செய்தி விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சவடி எனும் இடத்தில் உள்ள பஞ்சமுக ஆலயத்தின் தலப் பெருமையை இப்படியாக கூறுகிறார்கள்.

''ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்தபோது அனைத்து செவ்னைகளையும் இழந்து நின்ற ராவணன் இன்னொரு அசுரனான மயில் ராவணன் என்பவனின் துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்தத் துவங்கினான். அந்த யாகம் நடந்து முடிந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்திருந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஹனுமாரை அனுப்புமாறு ராமரிடம் கூற, விபீஷணன் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட ராமபிரான் அனுமானிடம் அந்த யாகத்தை தடுத்து நிறுத்துமாறு கூற ஹனுமாரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அப்படி செல்லும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை ஹனுமார் வணங்கி ஆசி பெற்றிட, அவர்களும் ஹனுமார் அந்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கு தத்தம் சக்தியை அவருக்கு அளித்தனர். அவற்றைப் பெற்றுக் கொண்ட ஹனுமாரும் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து யாகசாலைக்கு சென்று மயில் ராவணனை அழித்தார். (இந்த ஆலயத்தின் முகவரி : ஸ்ரீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலயம், பஞ்சவடீ-- 605 111, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு )'' .

நாட்டுப்புறக் கதையில் கூறப்பட்டு வந்துள்ள மயில் ராவணனின் கதையும் ராமாயணக் கதையைப் போல பல திருப்பங்களுடன் காணப்படுகிறது. இதில் அனுமாருக்கு ஒரு மகன் இருந்தார் என்றும் அனுமானுக்கு முக்கிய கட்டத்தில் அவருடைய மகனின் உதவி இருந்ததினால்தான் அனுமானினால் ராம லஷ்மணர்களை மயில் ராவணனிடம் இருந்து மீட்க முடிந்ததாகவும் கதையில் கூறப்பட்டு உள்ளது. ஹனுமார் திருமணம் ஆனவரா இல்லை பிருமச்சாரியா என்பது தெரியவில்லை என்றாலும் 'கல்யாண ஆஞ்சனேயர்' என்ற அவதாரம் உள்ளது. கல்யாண ஆஞ்சனேயர் கோலத்தில் அவரை வேண்டி துதித்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்றும், புத்திரபாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது.

சில புராணத்தில் ஹனுமாரை கல்யாண ஆஞ்சனேயர் எனக் குறிப்பிட்டு உள்ளார்கள் எனவும் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு ஹனுமார் சென்றபோது அவருடைய வியர்வை கடலுக்குள் விழ, அதை மீன் வடிவில் அங்கிருந்த தேவ கன்னிகை முழுங்கிவிட அவளுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததாகவும் அதன் பின் அந்த தேவ கன்னிகை ஹனுமாரை மணந்து கொண்டதாகவும் கதை உள்ளது என்று கூறுகிறார்கள்.

எது எப்படியோ பல நாட்களாக என் மனதில் மயில் ராவணனின் கதையை நினைத்து இருந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உள்ளேன். ராமாயணத்தைப் போன்ற மயில் ராவணனின் கதையை நான் பத்து அல்லது பன்னிரண்டு பாகங்களில் விரைவில் எழுத நினைத்து உள்ளேன். பார்க்கலாம்.

No comments:

Post a Comment