Friday, July 19, 2013

Village Deities - 28

கிராம தேவதைகள் - 28


ஐந்து ஊர் நல்லதங்காள்
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

மதுரை- உசிலம்பட்டி சாலையில் இருபத்தி ஏழு கிலோ தொலைவில் உள்ளதே கோடைக்குளம் கிராமம். அதை சார்ந்த பிற கிராமங்கள் வடுகபட்டி, உடன் காட்டுப்பட்டி, பிரவியான்பட்டி மற்றும் அகிலாண்டபுரம் என்பவை. அங்கெல்லாம் ஐந்து ஊர்  நல்லதங்காளே கிராம தெய்வமாக இருக்கிறாள்.

ஒரு காலத்தில் அந்த இடங்களில் பஞ்சம் தலை விரித்தாடியது. பலரும் வேலை தேடி ஊரை விட்டு வெளியேறினார்கள். அதில் ஒருவரே  படிவு தேவன் என்பவர் ஒருவர். அவர் நல்லதங்காள் தன்னுடைய குழந்தைகளாய் கிணற்றில் போட்டுக் கொன்ற ஊரான வதிராப்பூக்கு சென்றார். அந்த ஊரில் அவளுக்கு சிறு ஆலயம் இருந்தது.  ஆனால் அது சரிவரப் பராமரிக்கப்படாமல் இருந்தது.  அவன் ஒரு பணக்காரன் வீட்டில் மாடு மேய்ப்பவனாக வேலைக்கு சேர்ந்தான். ஒரு நாள் அவன் காட்டில் அவற்றை ஓடிச் சென்றபோது அவனுடைய கூடையில் சிறு பெண் புகுந்து கொண்டு உறங்கி விட்டது. திரும்பி வரும் வழியில் அதை பார்த்து திடுக்கிட்டவன் அதை வழியிலேயே  இறக்கி விட்டு வந்து விட்டான். 

மறு நாள் அவனுடைய மாடுகளில் இரண்டைக் காணவில்லை. அதை அவன் எஜமானரிடம் கூற அதனால் கோபமடைந்த அவன் முதலாளி அவனை நையப் புடைத்து விட்டு உணவு தராமல் மூலையில் தள்ளி விட்டார். உணவு இல்லாமல், வலியை பொறுத்துக் கொண்டே மூலையில் கிடந்தவன் முன்னால் அந்த  சிறுமி  தோன்றினாள். அவன் மடியில் வந்து அமர்ந்த குழந்தை தான் நல்லதங்காள் என்றும், தனக்கு அந்த ஊரில் இருக்கப் பிடிக்கவில்லை என்றும் அவனுடைய ஊருக்கு தன்னை எடுத்துப் போகுமாறும் கூறியது. அதை அவன் நம்பவில்லை என்பதினால் அது அவன் தொலைந்து போன மாடுகளை நதியின் தண்ணீருக்கு பக்கத்தில் ஒளித்து வைத்து உள்ளதாகக் கூற அவன் அங்கு சென்று அவற்றை மீட்டு வந்தான்.

அந்த நிலையைக் கண்டவன்  நல்லதங்காளுக்கு எதோ சக்தி உள்ளது என்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே  மீண்டும் அந்தக்  குழந்தையை தன் கூடையில் வைத்துக் கொண்டு தன்னுடைய ஊரான கோடைகுளத்துக்கு கிளம்பிச் சென்றான். அந்த ஊரின் எல்லையை அடைந்ததும் அந்தக் குழந்தை தன்னை அங்கேயே விட்டு விடுமாறும் தான் தன்னுடைய சகோதரர் ராமனிடம் சென்று தனக்கு ஒரு இடம் தருமாறு கேட்டு விட்டு வருவதாகக் கூற அவனும் அதை அங்கேயே இறக்கி விட்டான்.  அந்தக் குழந்தை விஷ்ணு ஆலயத்துக்கு சென்று தனக்கு தங்க இடம் கேட்க அவரும் அந்தக் குழந்தை அமர்ந்து கொள்ள ஒரு இடத்தைக் காட்ட, விஷ்ணு காட்டிய இடத்திலேயே படிவு தேவன் அந்த  அந்த குழந்தைக்கு ஒரு ஆலயம் அமைத்தான். ஆனால் அதைப் பார்த்த அவன் சகோதரன் பிரவ தேவன் அவனுடன் சண்டை போட்டான்.  தான் அந்த குழந்தையை தெய்வம் என நம்பமாட்டேன் எனவும், அவளை அங்கே தங்க விட மாட்டேன் எனவும் கூறினான்.

 நல்லதங்காள்  ஆலயமும் அதன் மேல்மாடத்தில்  
காணப்படும் நல்லதங்காள்  சிலையும் 

படிவு தேவன் நல்லதங்காளிடம் சென்று அதை கூற அவளோ பச்சை வாழை இலைகளையும், சுட்டு பதமாகாத களிமண் பானையும் எடுத்து வரச் சொன்னாள் . அந்த பச்சை வாழை இலையை விறகு போல எரித்து அரிசியை வேகாத அந்த பானைகளில் போட்டு களைந்து பால் பாயசம் செய்தாள். அதை கண்ட பிரவ தேவன் அவள் சக்தியைப் புரிந்து கொண்டான். தனுடைய சகோதரன் பதிவு தேவனுடன் சேர்ந்து நல்லதங்காள் கால்களில் விழுந்து வணங்கியப் பின், அவர்கள் இருவரும் சேர்ந்து அவளுக்கு ஆலயம் அமைத்தனர். அந்த ஆலயத்தில் அவளைத் தவிர   ஐயன், மாயன், அரசமகன், ஆண்டி, அக்னிவீரன், கருப்பன் போன்றவர்களுக்கும் சிலைகள் அமைத்து வழிபட்டனர். இன்று வரை படிவு தேவனின் வம்சாவளியினரே ஆலயத்தின் பூசாரிகளாகவும், பிரவ தேவனின் வம்சாவளியினர் உப பூசாரிகளாகவும்  இருந்து கொண்டு அந்த ஆலய பணிகளை  மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.

சிவராத்தரி பண்டிகை மட்டுமே அங்கு கொண்டாடப் படுகின்றது. பூசாரியின் வீட்டில்தான் நல்ல தங்காளின் ஆபரணங்கள் வைக்கப்பட்டு உள்ளன. சிவராத்தரி தினத்தன்று மேள தாளத்துடன் அவை அனைத்தும் ஊர்வலமாக ஆலயத்துக்கு எடுத்து வரப்படும். அவர்களுடன் இருபத்தி ஒரு கடவுட்கள் எடுத்து வரப்படுவார்கள். அந்த ஊர்வலத்தில் சாமி ஆடிகளும் சேர்ந்து கொண்டு வருவார்கள். மாயனின் சாமியாண்டி ஆணியால் செய்த செருப்பில் நின்று கொண்டு பக்தர்களின் கேள்விகளுக்கு விடை தருவார். அவர்களுக்குப் பின்னால் நல்லதங்காளின் சாமியாடிகள் வருவார்கள். அடுத்த நாள் கருப்பருக்கு பொங்கல் படைக்கப்பட்டு ஆடு பலி தரப்படும்.

தீய பேய், பிசாசுகளை  நல்லதங்காள் விரட்டி அடிப்பாள் என கிராமத்தினர் நம்புகிறார்கள்.  ஆலயத்துக்கு வேண்டுதல்களுடன் வரும் பக்தர்கள் அங்குள்ள மாயாண்டி சாமியிடம் குழந்தை வரம் கேட்கிறார்கள்.

-----------------------
பின் குறிப்பு:-

நல்லதங்காள்  என்ற பெண்ணின் கதை தமிழ்நாட்டில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கிராமப்புறங்களில் கூறப்பட்டு வரும் கிராமிய பாடல் கதை ஆகும்.  அதை கிராமிய நாட்டிய நாடகமாகவும் நடத்தி வந்துள்ளனர். நல்லதங்காள் கதை ஒரு சோகக் கதையாகும். நல்லதங்காள் வறுமையின் கொடுமை மற்றும் புகுந்த வீட்டாரின் கொடுமை  போன்றவற்றினால் அவதிப்பட்டு தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும்  கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து  இறந்து போனாள் என்பது கதை. அவளது மரணத்தைத் தாங்க முடியாமல் அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். இப்படியாக நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை என்பது  சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.  அவர்களது  பக்தியை மெச்சிய சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி கொடுத்து அனைவரையும் உயிர் பிழைக்க வைத்து சொர்கத்துக்கு அனுப்பினாராம்.  அது மட்டும் அல்லாமல் நல்லதங்காளை ஊர்க் காக்கும் தெய்வமாக ஆக்கினார் என்றக் கதையும் உண்டு. அதனால்தான்  அவளை பல கிராமங்களிலும் உள்ளவர்கள் தெய்வமாக  வழிபடுகிறார்கள்.

 நல்லதங்காளுக்கு திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் நல்ல தங்காளுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.  அது போலவே விருது நகரிலும் அவளுக்கு ஆலயம் உள்ளது. - சாந்திப்பிரியா

No comments:

Post a Comment