Sunday, April 21, 2013

Chandi Saptha Sathi -3

சண்டி சப்த சதி -3

சாந்திப்பிரியா 

மேதஸ் ரிஷி கூறலானார் '' மன்னனே கேள் . சப்த சதியை பாராயணம் செய்ய சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும். அதை பாராயணம் செய்யும்போது உச்சஸ்தாயியில் பாராயணத்தை செய்யாமல் மிகவும் மெதுவாகவும், நமக்குள் மட்டும் கேட்கும் குரலிலும் மட்டுமே படிக்க வேண்டும். இதை பாராயணம் செய்யும் முன்னால் சில அத்தியாயங்களை முதலில் படிக்க வேண்டும். இதை பாராயணம் செய்ய நித்திய கர்மாவை முடித்துக் கொண்டு  பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு  ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு அதன் பின்னரே கீழ் கூறி  உள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் பாராயணதைக் கைக்கொள்ள  வேண்டும். 
ஆனால் அதே நேரத்தில் தேவி மகாத்மியத்தை பாராயணம் என்று  செய்யாமல் நேரடியாகப் படிப்பதும் வாழ்க்கைக்கு தேவையான பலவிதமான நல்ல பலனையே தரும் என்றாலும், ஒருவனுக்கு உலகத்தில் இருந்து - அதாவது மாயையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் நல்ல குருவிடம் தீட்ஷை பெற்றுக் கொண்டு முறைப்படி அதை மந்திர பாராயணம் செய்ய வேண்டும்.  ஸ்லோகங்கள் இல்லாமல்  நேரடியாகப் படிக்கும்  தேவி மஹாத்மியத்தின் கதை மந்திர பாவங்களைக் கொண்டது அல்ல.
சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரர் பார்வதிக்குக் கூறினார் ? 'தேவியே! ஸப்த சதீயின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மையினின்று விடுபடுவர், மாயையில் இருந்து விடுதலை ஆவார்கள். சின்மயமான திரிபுரா என்பவள் மூன்று வடிவைக்  கொண்டவள். அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுப் பரதேவதை காளி உருவைக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும்  தோன்றினாள்'. 
அப்படி அவர் கூறியதைக் கேட்ட பரமேஸ்வரி அழகாக சிரித்தாள். அதைக் கண்ட சிவபெருமான் துணுக்குற்று அவளிடம் கேட்டார் ' பத்தினியே, நீ ஏன் நான் கூறியதைக் கேட்டு சிரித்தாய்?' 
பரமேஸ்வரி கூறினாள் 'நாதா அவை அனைத்துமே என்னுள்  இருந்து உருவானவைகள்தானே!  அப்படி இருக்கும்போது நானே எடுத்த அவதாரத்தை எனக்கே ஒரு புதிர் போலக் கூறியதினால் அதைக் கேட்டு சிரித்தேன் ' என்றாள். அதைக் கேட்ட பரமேஸ்வரரும் தன்னை மறந்து அவளுடன் சேர்ந்து சிரித்தார். அவர்கள் சிரித்த சிரிப்பினால் உலகமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவர்கள் ஆனந்தமயமாக சிரித்த அந்த ஷணத்திலே உலகில் வேறெங்குமே துன்பம் இல்லை. அந்தக் கோலம் ஏற்பட்டதின் காரணம் சப்த சதி எனும் பெயரினால் விளைந்தவை அல்லவா?  ஆகவேதான் கூறுகிறேன் மன்னா, நீயும் தேவியான அந்த பரமேஸ்வரியைச் சரணடைவாய். அவளை ஆராதித்தால் அவள் இகலோக இன்பங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பாள்''.
இப்படியாகக் கூறியவர் சப்த சதியை பாராயணம் செய்ய தேவையான  நியமங்களைக் கூறலானார்.

கவசம்
ஒரு போர் வீரன் கவசத்தை அணிந்து கொண்டு போருக்குப் போவது போன்ற மந்திரம் இது. பத்து திக்குக்களின் சக்திகள், சப்த மாத்ருகைகள் (பெண்) , பல இடங்களிலும் பல கோலத்துடன் காட்சி தரும் சக்திகள் என அனைவரையும் அழைத்து வணங்கி, நம் ( பாராயணம் செய்பவரின்) உடலின் புற மற்றும் அக உறுப்புக்கள், சுவாசிக்கும் பிராண்ணன், மனைவி, உடன் பிறந்த மக்கள், புத்திர புத்திரிகள், செல்வம் என அனைத்தையும் காக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கப்படுகிறது. ஆகவே சப்த சதியை பாராயணம் செய்யும் முன் மற்ற இடைஞ்சல்களில் இருந்து நம்மைக் காத்தருள ஓத வேண்டிய மந்திரத்தையே கவச மந்திரம்'' என்று கூறியவர் கவச மந்திரத்தையும் அவர்களுக்குக் போதித்தார். (கவச மந்திரம் சுமார் 101 வரிகளானது என்பதினால் அதை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).

அர்க்கலம்
மேதஸ் ரிஷி அடுத்து பாராயணம் செய்ய வேண்டிய அர்க்கலம் என்பதைப் பற்றிக் கூறினார். ''அர்க்கலம் என்பது எந்த ஒரு காரியத்தையும் வெற்றியுடன் செய்யும்போது ஏற்படக் கூடிய இடையூறுகளை அகற்றுவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனை ஸ்லோகம். அதனால்தான்  சப்த சாதியைப் பாராயணம் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை தடுக்க இந்த தோத்திரத்தை படிக்காமல் தேவி மகாத்மியத்தைப் படித்தால் பூரண பலன் கிடைக்காது. இதைப் படிப்பதினால் சிறந்த பல பலன்கள் கிட்டும்'' என்பதாகக் கூறிய பின்னர் அந்த சுலோகங்களையும் கூறினார். (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).
...........தொடரும்

No comments:

Post a Comment