Wednesday, November 28, 2012

Tirupathi Sree Venkateswar - 20


சாந்திப்பிரியா 

குறத்தி குறி சொல்லி விட்டுப் போனதும் அரசனும் அரசியும் யோசனையில் ஆழ்ந்தார்கள். இதென்னடா கூத்து, நம் பெண் ஒரு வேடனைக் காதலிக்கிறாள். குறி சொல்ல வந்த குறத்தியோ அந்த வேடன்தான்  மாப்பிள்ளையாகப் போகிறார் என்கிறாள். நாரதரோ வரவுள்ள  உன் கணவர் நாராயணனின் அவதாரமாக இருப்பார் என்று நம் பெண்ணிடம் கூறினார்.  இதென்ன குழப்பமாக உள்ளதே  என்று நினைத்தார்கள்.
அதற்கு முன்னால் தனது பெண்ணை அழைத்து ஆகாசராஜன் பேசினார். 'மகளே, உண்மையாகவே நீ அந்த  வேடனைதான் விரும்புகிறாயா? உனக்கு நல்ல மாப்பிள்ளையாக நாங்கள் பார்த்து ஏற்பாடு செய்து தருகிறோமே அம்மா..... உன்னால் அந்த வேடனை திருமணம் செய்து கொண்டு காட்டில் வசிக்க முடியுமா? நீ எங்கே, அந்த வேடனின் வசதி எங்கே?......நன்கு யோசனை செய்து பார்த்து கூறம்மா ' என்று அறிவுரை செய்ய, பத்மாவதியோ ' அப்பா...நான்  உங்கள் மனதுக்கு எதிராக எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால் எப்போது மனதார ஒருவரை காதலித்து அவரே என் கணவனாக வர வேண்டும் என ஒரு பெண் நினைத்து ஏங்கத் துவங்குவாளோ அப்போதே அவளுக்கு அந்த ஆண்தான் கணவராகி விடுகிறார். அதை விடுத்து அவள் வேறு புருஷனை மணந்தால் அது அவள் கற்பை இழந்ததற்கு சமமாகி விடும் என்பது அனைத்து சாஸ்திரமும் தெரிந்த உமக்கும் தெரியாமல் இருக்காது. வேடனாக இருந்தால் என்ன? காட்டில் வசித்தால் என்ன? அவர் வசிக்கும் அந்தக்  காட்டையும், இந்த நாட்டையும் ஆள்வதும் நீர்தானே. ராமருடன் சீதாபிராட்டி சென்று பதினான்கு வருடங்கள் வனவாசம் செய்யவில்லையா? காட்டில் வசிப்பவர்கள் இறந்தா போய் விட்டார்கள்? ஆகவே என் மனதில் முழுமையாக நிறைந்துள்ள அந்த வேடரைத் தவிர என்னால் வேறு யாரையும் மணம் செய்து கொள்ள முடியாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா' என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள் .

 இதென்ன புதுபுது குழப்பங்கள் என் மகளின் 
திருமணத்தைக் குறித்து செய்திகள் வந்து கொண்டே 
உள்ளது  என்று மன்னன் யோசனை செய்தான் 

இப்படி பல்வேறு குழப்பத்தில் அவர்கள் மூழ்கி இருந்தபோதுதான் வகுளா தேவி அங்கு வந்தாள். அவளைக் கண்டதும் அவளை அன்புடன் வரவேற்றார் மன்னர். ' நீ யாரம்மா? யோகினியைப் போல தோற்றம் தரும் நீங்கள் எங்களை எதற்காக   பார்க்க வந்தீர்கள் ? ' என்று கேட்க வகுளா தேவி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் . 'மன்னா என் பெயர் வகுளாதேவி. என் மகனின் பெயரே ஸ்ரீனிவாசன் என்பது.  அவன் ஒரு வேடன். அவன் உமது மகளை பார்த்ததில் இருந்து அவளைக் காதலித்து விட்டான்.  அவளையே  மணக்கவும் விரும்புகிறான். ஜோதிடர்கள் அவனை நாராயணனின் அத்தனை அம்சமும் நிறைந்தவன் என்று கூறுகிறார்கள். அவனுக்கு ராஜ சம்மந்தம் உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆகவேதான் உங்கள் மகளைக் காதலிக்கும் அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ள வந்தேன்' என்று நேரடியாகவே பேச்சைத் துவக்கி விட்டாள்.
அதைக் கேட்டதும் மன்னனும் அவர் மனைவியும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.  இதென்ன ஒன்று மாற்றி இன்னொன்று எங்கள் மகளின் திருமணத்தைக் குறித்தப் பேச்சு  அடுத்தடுத்து நடக்கிறது.  நாரதர் கூறிவிட்டுச் செல்ல, குறத்தி குறி சொல்ல அது போலவே இவளும் வந்து தனது மகனை நாராயணனின் அம்சம் என்று கூறிக் கொண்டு வருகிறாள்.  இவளைப் பார்த்தால் ஒரு யோகினியைப் போலத்தான் உள்ளது. பொய்யாக எதையுமே கூற வாய்ப்பில்லை என நினைத்தவர்கள் 'அம்மா உங்கள் மனதை நாங்கள் புண்படுத்த விரும்பவில்லை.  இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற விதி இருந்தால் உங்கள் மகனுக்கு எங்கள் பெண் மனைவியாவாள். ஆனால் சம்பிரதாயங்கள், நியமங்கள் என்று பலவும் இருப்பதினால் நாங்கள் எங்கள் ராஜகுருவான சுக மகரிஷியுடன் ஆலோசனை செய்து விட்டு உங்களுக்குக் கூறுகிறோம். ஆகவே நாளை வரை நீங்கள் பொறுத்திருங்கள். அதற்கு முன்னால் உங்கள் மகனின் ஜாதகத்தை எமக்குக் கொடுக்க முடியுமா' என்று கேட்டார்கள். அவளும் ' அதற்கென்ன மன்னா, நான் அனைத்தையும் அல்லவா கொண்டு வந்துள்ளேன். நியமப்படியே நீங்கள் அனைத்தையும் செய்யுங்கள். பிராப்தம் என்று இருந்தால் இது நடக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். சந்தர்ப்ப வசத்தினால்தான் நாங்கள் தற்போது செல்வத்தை இழந்து நிற்கிறோம். ஆனால் நாங்கள்  இழந்த செல்வம்  விரைவில் எங்களுக்கு மீண்டும் கிட்டும்'  என்று மனதில் ஸ்ரீனிவாசர் அவளுக்குக் கூறி இருந்த உண்மைகளை ஏந்தி அப்படிப் பேசியப் பின் ஸ்ரீனிவாசரின்  ஜாதகத்தை அவர்களிடம் தந்து விட்டு அங்கிருந்துக் கிளம்பிச்   சென்றாள்.

மன்னன் சுக முனிவரிடம் ஆலோசனைக் கேட்டார் 
 
அவள் சென்றப் பின் ஆகாசராஜன் உடனடியாக சுக முனிவரை அழைத்து வரச் சொல்லி நடந்த அனைத்தையும் கூறி அவருடைய ஆலோசனைக் கேட்டார். அனைத்தையும் ஆராய்ந்த சுக முனிவர் கூறினார்' மன்னா இந்த திருமணம் நிச்சயமாக உன் பெண் பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும்தான் நடக்கும் என்பது தெரிகிறது. காரணம் ஸ்ரீனிவாசனின்  ஜாதகப்படி அவருக்கு நாராயணரின்  அனைத்து  அம்சங்களும் ஒன்று கூட குறைவில்லாமல் ஒத்து உள்ளது. அவரே கூட நாராயணரின்  அம்சமாக இருக்கலாம் என்று என் மனம் கூறுகிறது. ஆகவே எந்த சங்கடமும் இல்லாமல் இந்த திருமணத்துக்கு மனதார ஒப்புதல் தந்து திருமணத்தை நடத்தி வையுங்கள். நடப்பவை நல்லதாகவே இருக்கப் போகின்றன என்று அனைத்து சமிக்கைகளும் சொல்கின்றன. அதற்குக் காரணம் தேவ சமிக்கைகளின்படி இந்த உலகில் விஷ்ணு மீண்டும் அவதரிக்கும் நேரம் வந்துள்ளது. அதுவும் அவர் ஒரு வனத்தில் இருந்து வெளி வர உள்ளார் என்பதும் , நாம் அரசாளும்  இந்த நாட்டில்தான் ஒரு ஆலயத்தில் அவர் அமர உள்ளார் என்பதும் தேவ சமிக்கைகளாக தெரிகின்றன.  ஆகவே தயங்காமல் திருமணத்தை நடத்தி வையுங்கள்' என்று கூற அதைக் கேட்ட மன்னனும் தாரிணி தேவியும் மனம் மகிழ்ந்தார்கள். ஸ்ரீனிவாசன் மற்றும் பத்மாவதியின்  திருமணத்துக்கு இசைவு தெரிவித்து வகுளா தேவிக்கு  உடனடியாக  ஆனந்த செய்தியை அனுப்பினார்கள்.
........தொடரும்

No comments:

Post a Comment