Friday, August 3, 2012

Kathirkaman Temple, Sri Lanka -7இலங்கை கதிர்காம  ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு

சாந்திப்பிரியா

பாகம்-7

கதிர்காமனில் நடைபெறும் வருடாந்தர கொடியேற்ற விழாவின்போது ஸ்ரீ லங்காவின் ஜாப்னா பிராந்தியத்தில் உள்ள மற்றொரு மிகப் பழைய ஆலயமான செல்வசன்னதி ஆலயத்தில் இருந்து முருகனை -வேல் வடிவிலானவர்- கதிர்காமனுக்கு எடுத்துச் செல்வார்கள். அங்கு நடைபெறும் கடைசி நாள் விழாவான தீர்த்த விழா முடிவடைந்ததும், அதை மீண்டும் திரும்ப எடுத்துச் செல்வார்கள்.  கதிர்காமனில் தினை மாவில் தேனைக் கலந்து  செய்த மாவைக் கொண்டு மாவிளக்கை படைக்கின்றார்கள். அந்த மாவின் மீது சிறு விளக்கை ஏற்றி வைத்து வழிபட்டப் பின் அந்த விளக்குகள் அணிந்ததும் அந்த மாவை பிரசாதமாக அங்குள்ள பக்தர்களுக்குத் தருவார்கள். தினை மாவை அதற்கு எதற்காக உபயோகிக்கிறார்கள் என்றால்  தினை நிலத்தில்தான் வள்ளி அம்மையுடன் முருகப் பெருமானின்  காதல் துவங்கி அது திருமணத்தில் முடிந்தது. அதனால்தான் வள்ளி அம்மனின் ஆறுகள் கிடைக்க  அதை பயன் படுத்துகிறார்கள். பெரிய அளவிலான விளக்கை ஏற்றினால் அது பன்னிரண்டு திரிகளைக் கொண்ட விளக்காக இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். பன்னிரண்டு திரிகளும், முருகனின் பன்னிரண்டு கைகளைக் குறிக்குமாம்.
கதிர்காமத்தில் உள்ள ஸ்கந்த ஆலயம் பற்றிய செய்தி 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு இருந்த சியாமி-பாலி என்ற புத்த நூலான 'ஜினகலாமனி' என்பதில் இருந்துக் கிடைத்தது . 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் புலவரான அருணகிரிநாதர் என்பவர் இயற்றிய பாடல்களில் கதிர்காமனில்  உள்ள முருகனைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்று இருந்ததினால் 15 ஆம் நூற்றாண்டில் ஸ்கந்த முருகனின் ஆலயம் பக்தர்களுக்கு புனிதமான ஒரு யாத்திரை மையமாக இருந்து இருக்க வேண்டும் என்பது புரிகின்றது .
16 ஆம் நூற்றாண்டில் ஆயுதம் ஏந்திய வீரர்களால் கடுமையாகக் காவல் காக்கப்பட்டிருந்த அந்த ஆலயம் மிகுந்த செல்வச் செழிப்போடு இருந்து இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக அந்த ஆலயத்தை கொள்ளை அடிக்க வந்த போர்துகீஸிய படை வீரர்களில் ஒருவனான ரிபிரோ (Ribero) என்பவன் எழுதிய குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. அதில் கூறப்பட்டு இருந்தது இதுதான் :-
''காடிகாவோ எனப்பட்டா கதிர்காமனில் ஆயுதம் ஏந்திய ஐநூறு படை வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ள இந்த ஆலயத்திற்கு பல ஆண்டுகளாகவே பக்தர்கள் பெரும் அளவில் நன்கொடைகளும் காணிக்கைகளையும் செலுத்தி வந்திருக்க வேண்டும் என்பதின் அடையாளமாக விலை மதிக்க முடியாத தங்கம், வைரக் கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்த நகைகளும் அங்கு இருந்தன. அந்த சொத்துக்களை நாமே எடுத்துக் கொண்டு விடலாம் என எண்ணி அது பற்றிய தகவல்களைத் தருமாறு பலரிடமும் நாங்கள் பல தடவை கேட்டோம். 1642 ஆம் ஆண்டில் இரண்டாயிரம் 'லாஸ்கரினிய' (Lascarins) படை வீரர்களுடனும், உள்ளுர் மக்களின் மொழி மற்றும் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்திருந்தவரும், அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான 'கஸ்பார் பிகூரியா டீ செர்ப்பே' என்ற தலைவரின் கீழ் (Gaspar Figueira de Cerpe), என்னையும் சேர்த்து 150 போர்த்துகீஸிய படை வீரர்கள் அந்தப் பொருட்களைக் கொள்ளை அடிக்கச் சென்றோம் . அந்த ஆலயம் இருந்த இடத்தின் அருகில் இருந்த ஒருவரிடம் அந்த ஆலயம் பற்றி விவரம் கேட்டோம். அவரும் தனக்கு அந்த ஆலயம் உள்ள இடம் தெரியும் என்று கூறி விட்டு எங்களுக்கு வழி காட்டிக் கொண்டு சென்றார் . பல மணி நேரம் காட்டுப் பகுதிகள் நிறைந்து இருந்த மலையை சுற்றி சுற்றி வந்தும் அந்த மலை மீதே இருந்த ஆலயத்தை எங்களால் காண முடியவில்லை . எங்களுடன் வழிகாட்டிக் கொண்டு வந்த ஐந்து பேர்கள் ஒருவரை ஒருவர் அவர்களுக்குத் தெரியாதது போல காட்டிக் கொண்டும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டும், எதை எதையோ சம்மந்தம் இல்லாமல் கூறிக் கொண்டும் வழி நெடுக நடந்து வந்ததினால் வேண்டும் என்றே எங்களை திசைத் திருப்ப அப்படி நாடகம் ஆடுகின்றனர் என எண்ணி அவர்களில் மூவரைக் கொன்று விட்டோம். மிஞ்சி இருந்த இருவரும் அப்படியே நடக்கத் துவங்க வேறு வழி இன்றி காடிகோவில் இருந்த அந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் நாங்கள் வந்த வழிலேயே திரும்ப வேண்டியதாயிற்று.
அவர்களது செய்கைகளைக் கவனித்தபோது அந்த ஆலயத்தை உள்ளுரில் இருந்த மன்னனும், பக்தர்களும் மிகவும் பக்தி பூர்வத்துடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனத் தெரிந்தது. அதன் பக்கத்தில் உப்பேணி வைத்திருந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த வருமானத்தில் ஒரு பங்கினை அந்த ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுப்பது வழக்கம் என்பதைக் கவனித்திருந்த 'இராபரட் நாக்ஸ்' (Robert Knox) என்பவர் எழுதி உள்ள குறிப்பும் அந்தக் கருத்தை உறுதி செய்யும் அளவில் உள்ளது''.
'இராபரட் நாக்ஸ்' என்பவர் எழுதி இருந்தார்: "பக்கத்தில் இருந்த நிலங்கள் மூலமோ, கடல்களில் கப்பல்கள் மூலமோ சென்று நெருங்க முடியாதபடி அமைந்து இருந்தது அந்த மலைப்பாங்கானப் பிரதேசம். கடவுள் அருளால் ஏற்பட்டிருந்த கடிக்கிராம் என்ற அந்த மலைப்பாங்கான பிரதேசத்தில் உப்பளத்தை வைத்திருந்த எழைப் பணக்காரர் அனைவருமே தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை அந்த ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்ற நியதி இருந்தது."
இந்த ஆலயம் அங்கு எழுந்த விவரமும் அதன் சிறப்புக்களும் வரலாற்றில் சிறிதளவு  கூறப்பட்டு உள்ளது.  தனது நாட்டை தமிழக மன்னர்களுடன் போர் செய்து இழந்து விட்டு, அனுராதபுரத்தில் வந்து தங்கி கதர்காமத்தில் கிரி விஹாரா என்பதை நிறுவிய மஹானகா என்ற மன்னனின் வம்சத்தவரான 'தத்தகாமனி' என்ற மன்னன், மீண்டும்  தமிழ் மன்னன் 'இலாரா' என்பவன் மீது படை எடுத்து அனுராதபுராவின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஸ்கந்தன் துணை வேண்டும் என அவரை பிரார்த்தனை செய்தான். அதன் பலனாக அவனுக்கு கிடைத்த வெற்றிக்கு அந்தக் கடவுளே தனக்கு அருள் புரிந்ததாகக் கருதி பழமையான அந்த ஆலயத்தை மீண்டும் அழகான ஆலயமாக மாற்றிக் கட்டினான் என்கிறார்கள் . ஆனால் இதற்கு சரித்திர பூர்வமாக எந்த விதமான ஆதாரங்களும் இல்லை.
இப்படிப்பட்ட அபூர்வமான ஆலயத்துக்கு வருடத்துக்கு ஒருமுறை ஸ்ரீ லங்காவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் பாத யாத்திரையை மேற்கொள்கிறார்கள். முன் காலத்தில் அங்கு செல்வதற்கு சரியான பாதை இல்லாமல் இருந்தது என்பதினால் அந்த புனித யாத்திரையை மேற்கொண்ட யாராவது அனுபவசாலியைத் துணையாகவே கொண்டு ஒரு குழுவாக பாத யாத்திரையை மேற்கொள்வார்கள். அந்த யாத்திரை முடிவதற்கு  சுமார் இரண்டு அல்லது  மூன்று மாதங்கள் பிடிக்கும். அதற்குக் காரணம் அவர்கள் காடுகளின் வழியே கல்லிலும், மண்ணிலும், முட்புதர்களைத் தாண்டியும் நடந்து செல்ல வேண்டும். வழியில் எதுவும் கிடைக்காது என்பதினால் தம்முடன் உணவுப் பொருட்களையும் கட்டி எடுத்துச் செல்வார்கள். காலில் காலணி கூட இல்லாமல் பாத யாத்திரையை மேற்கொண்டவர்களின் மன திடம்  உறுதியாகவே உள்ளதினால் அவர்களுக்கு கால் வழிக் கூடத் தெரியாது.  வழியில் அங்காங்கே தங்கிக் கொண்டு நடைப் பயணம் தொடரும். இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தொடர்ந்து நடந்து செல்ல வேண்டி இருந்த அந்தப் பாத யாத்திரைப் பயணத்தில்  வழியில் ஒவ்வொரு புனித இடங்களுக்கும் விஜயம் செய்தப் பின் முடிவாக பதினைந்து நாட்கள் விழா நடைபெறும் கதிர்காமனை சென்றடைவார்கள்.  ஆனால் தற்போது கதிர்காமனுக்கு செல்ல நல்ல பாதை உள்ளது.

நன்றியுடன் பின் குறிப்பு
 
இந்த மகாத்மியத்தின் நான் கடந்த சில மாதங்களாகவே எழுத நினைத்தாலும்  முடியாமல் இருந்தது. இதில் உள்ள பல செய்திகள் நான் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்துள்ள முருகன் பக்தி இணையதளத்து செய்திகளே. அதைத் தவிர நான் பல இடங்களிலும் படித்த செய்திகளையும் அவ்வபோது சேகரித்து வைத்து அனைத்தையும் சேர்த்தே இந்தக் கட்டுரையை எழுதினேன். எதற்குமே  காலம் கனிந்து வர வேண்டும்  என்பார்கள். இந்தக் கட்டுரை  எனது நண்பரான திரு பேட்ரிக் ஹாரிகனுக்கு என்பவறுக்கு காணிக்கையாக்குகிறேன். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக  முருகன் பக்தி என்ற இணையதளத்தில் பல கட்டுரைகளை மொழி பெயர்த்து தர அவை வெளியாகி வந்த நிலையில் என்னுடைய நண்பரும், அந்த தளத்தை நிர்வாகிப்பவருமான திரு பேட்ரிக் ஹாரிகன் இந்த மாதம்  (ஆகஸ்ட் 2012 ) மலேஷியாவில் நான்கு நாட்களுக்கு நடைபெறும் முருக பக்தி கருத்தரங்கிற்கு என்னையும்  அழைத்திருந்தார். போக வர இலவசமாக விமான டிக்கெட்டுடன், தங்க அறை, உணவு, போக்குவரத்து போன்ற அனைத்து செலவுகளையும் அவர்கள் ஏற்பதாகக் கூறி இருந்தார்கள். ஆனால் என்னால் இந்த நேரத்தில் நான் அதை  ஏற்க முடியாத நிலையில் இருந்ததினால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அதற்கு மாறாக அவர் தளத்தில் வெளியான என்னுடைய தமிழ் கட்டுரைகளின் செய்திகள் மற்றும் பிற இடங்களில் இருந்து கிடைத்த செய்திகளைக் கொண்டும்  இந்தக் கட்டுரையை எழுதினேன். இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றே நினைக்கிறேன். காரணம் திரு பேட்ரிக் ஹாரிகன் தீவீரமான கதிர்காமனின் பக்தர் ஆவார்.
திரு பேட்ரிக் ஹாரிகனைக்  குறித்து தினமணிக் கதிர் என்ற பத்திரிகை 1998 ஆம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதில் உள்ள குறிப்பு இது. 
''முருக பக்தரான -முக்கியமாக கதிர்காமனின் பக்தரான பேட்ரிக் ஹாரிகன் ஒரு அமெரிக்கர்.  தமிழ் தவிர சமிஸ்கிருதம், ஹிந்தி, உருது, சிங்களம், ஜெர்மன், நேபாளி போன்ற மொழிகளும் இவருக்கு அத்துப்படி. அமெரிக்காவின் புகழ் பெற்ற பல் கழகங்களில் ஒன்றான மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் இறுதி நிலைப் பட்டம் பயின்றபோது இவருடைய முக்கிய பாடங்கள் மத சம்மந்தப்பட்டவை. பிறகு ஆசியாவில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிய மொழிகளும் இலக்கியங்களும் இவரைப் பெரிதும் கவரவே பௌத்த மதம் குறித்து ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தார். ஆகவே மேலும் பௌத்த மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பௌத்த மதம் மிகவும் பரவலாக காணப்பட்ட இடமான இலங்கையை நோக்கிப் படை எடுத்தார். இதற்கு முன்னர் ஜப்பான், தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இதே முயற்சியாக சென்ற போதும் அங்கும் இவருடைய தேடலுக்குப் பற்றாக்குறை ஏற்படவே முடிவாக இலங்கைக்குச் சென்றார்.  இலங்கைக்கு வந்தவர் யாழ்ப்பாணத்தில் கெளரிபாலா என்ற மகானை சந்தித்தார். அதன் பிறகு இவரது வாழ்கை திசை மாறியது. தான் யார் என்று தன்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பித்தார். மெல்ல மெல்ல முருக பக்தரானார். தமிழ் மொழி மேல் ஏற்கனவே ஓரளவுக்கு இவருக்கு ஆர்வம் இருந்தது. தமிழையும் கற்க ஆரம்பித்தார்.
திருகோண மலையில் இருந்து கதிர்காமம் வரை வருஷம்தோறும் முருக பக்தர்கள் மேற்கொள்ளும் கதிர்காமனின் பாத யாத்திரையில் தானும் சென்றால் என்ன என்ற எண்ணம் மேலோங்க 1972 ஆம் ஆண்டு முதன் முறையாக அந்தப் பாத யாத்திரையில் கலந்து கொண்டு பக்தர்களோடு பக்தனாக கந்தனை சந்திக்கக் கிளம்பினார். 44 நாட்கள் நடையாய் நடந்த இந்த யாத்திரை இவருக்கு புதியதோர் அனுபவத்தை தந்தது. இந்தப் பாதயாத்திரயைதான் படையப்பனாகிய முருகனோடு இவருக்கு ஏற்பட்ட முதல் தொடர்ப்பு. முருகனைப் பற்றி அறிந்து கொள்ளவும் முருக பக்தியை புரிந்து கொள்ளவும் வேண்டுமானால் இந்த பக்தர்களோடு சங்கமம் ஆகிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தார். இந்து மதக் கோட்பாடுகள் இவரை பெரிதும் கவறவே படையப்பனோடு ஐக்கியமாகி விட்டார். 
அமெரிக்கா திரும்பினார். தன் தாயாரிடமும் சகோதரிகளிடமும் விடைப் பெற்றுக் கொண்டு மீண்டும் இலங்கை திரும்பினார். இலங்கையில் தங்கி இருந்து வருடா வருடம் இந்தப் பாத யாத்திரையில் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பதை தலையாயக் கடமையாகக் கொண்டார். 44 நாட்கள் காட்டுவெளிப் பயணம். நிறையப் பழங்குடி மக்களை சந்தித்தார். பழங்குடியினரின் முருக பக்தியை பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுத ஆரம்பித்தார். பழங்குடியினரை பேட்டி கண்டு வீடியோ பதிவுகளும் செய்தார்.  இந்த பாதயாத்திரையை மேற்கொண்டப் பிறகு முருகன் மேல் இவரது பக்தி வளர்ந்து கொண்டே போய் 'கதிர்காம அடிகளார் தர்ம நிலையம்' என்ற அமைப்பில் தன்னை ஒரு தொண்டனாக இணைத்துக் கொண்டார். இந்தப் பாத யாத்திரையின் போது மிகச் சாதாரணாமாக நடைபெறும் ஒரு நிகழ்வு இவரை மிகவும் பாதித்ததாக கூறுகிறார். தமிழர்கள், சிங்களவர்கள், பௌத்தர்கள், மற்றும் காடு வாழ் வேடர்கள் எனப் பலரும் ஒன்றாக இணைந்து இன ஒருமைப்பட்டுடனும் மகிழ்ச்சியுடனும் முருகனை தரிசிக்கச் செல்வதுதான் அது. ஒருமைப்பாட்டுக்கான முக்கியக் கடவுள் முருகன் என்பது இவர் ஆழ்ந்து, ஆராய்ந்து உணர்ந்த உண்மை''.
இதை நான் படித்தபோது என்னையும் அறியாமால் கதிர்காமனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை  எண்ணம் என் மனதில் எழுந்தது. ஆனால் அது எப்படி முடியும்  என்று நினைத்தேன். மலேஷியாவுக்கு அழைப்பு வந்தது.  அதுபோலவே அடுத்து கதிர்காமனில் இப்படி ஒரு கருத்தரங்கு நடந்தால்  அதற்கு அழைப்பு வந்தால் கதிர்காமனுக்கு செல்லலாம் என்று ஆசைப்பட்டேன். கதிர்காமன் அத்தனை சக்தி வாய்ந்தக் கடவுளா என்பதை எண்ணிக் கொண்டு மனம் அசை போட்டுப் பார்த்ததின் விளைவு இந்தக் கட்டுரை. ஆகவே இந்தக் கட்டுரை எழுவதற்குக் காரணமான திரு பேட்ரிக் ஹாரிகனுக்கே இதை  அர்பணிக்கிறேன். 
 
------------சாந்திப்பிரியா

2 comments:

 1. I received the following e mail today from:venkatesh ramamurthy
  venkatesh37@gmail.com
  Sir
  I came across your blog recently and read about Kathirkamam temple. It was very nice story to read. I thought I can share somthing which I have read in another blog.
  The Murugan yanthram kept in the box behind the screen was made by Siddhar Boghur himself using the same" Navabhashanam" he used for making Palani Murugan deity. The above picture showing the saravanabhava yanthram was one of the rarest taken in olden days and produced in that blog. In this regard there are some clues are available in the temple it self as stated in the blog.
  Regards,
  Venkatesh.

  ReplyDelete
 2. Thanks Mr. Venkatesh for your observation.

  ReplyDelete