Wednesday, June 27, 2012

Ramanujar and temple priest

ஆறுவது சினம் 
 
சாந்திப்பிரியா 
 

திருவரங்க ஆலயம் ரங்கநாதப் பெருமாளுக்கு உகந்த ஆலயம். அந்த ஆலயத்தில் ஒரு பண்டிதர் இருந்தார். அவர் நல்லவர் அல்ல. பொய் பித்தலாட்டன்களை  நிறையவே செய்து வந்தவர். அவருடைய வாழ்கையின் குறிகோள் எத்தனை விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டுமோ அத்தனை விரைவாக சம்பாதிக்க வேண்டும். பணம் எந்த வழியில் வந்தாலும் அவருக்கு திருப்தியே.  வெளிக்கு மக்களுக்கு நல்வழிப்  போதனைகளை நிறையவே செய்வார். ஆனால் அவர் வாழ்க்கையோ முற்றிலும் மாறாக இருந்ததினால் மக்கள் அவர் மீது மரியாதையை இழந்து கொண்டே இருந்தார்கள். அர்ச்சகரின் வயதும் ஏறிக்  கொண்டே இருந்தாலும் அறிவு மட்டும் வளரவே இல்லை.
ஒருமுறை அந்த ஊருக்கு ராமானுஜர்  விஜயம் செய்து சொற்பொழிவுகளை ஆற்றி  வரலானார் . அவர் வந்ததினால் ராமானுஜரின் புகழ் பரவி அர்ச்சகரின் பெருமையும் வருமானமும்  குறையலாயிற்று.  ராமானுஜர் போதானைகளை ஏற்ற மக்கள் ஆலய அர்ச்சகரின் போதனைகளை தள்ளி வைத்தார்கள். ஆகவே அந்த அர்ச்சகர் ராமானுஜரை தமது முதல் எதிரியாகக் கருதி அவர் உயிருடன் இருக்கும்வரை தனக்கு மதிப்பு இருக்காது என்று  கோபமுற்று அவரை கொன்று விட முடிவு செய்தார். ஆனால் வெளியிலோ ராமானுஜரை மிகவும் மதிப்பவர் போல நாடகம் ஆடிக் கொண்டு இருந்தார். ஒருநாள் தனது மனைவியிடம்  ராமானுஜர் அடுத்த ஊருக்கு சென்று விட்டு வர உள்ளதாகவும், ஆகவே ஊருக்குப் போகும் முன்  தான் ராமானுஜரை வீட்டிற்கு சாப்பிட அழைக்க உள்ளதாகவும் அவருக்கு பரிமாறும் உணவில் தான் தரும் விஷத்தைக் கலந்து பறிமாறி விடுமாறும் , உணவு அருந்தியதும்  கிளம்பிச் செல்லும் ராமானுஜரை அந்த விஷம் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் சாகடித்து விடும்  என்றும், வழியில் இறந்து விட்டால் அது யாருக்கும் அதன் காரணம்  தெரிய வராது என்றும்  கூறினார். அதைக் கேட்ட அவர் மனைவி திடுக்கிட்டாள்.  வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு விஷம் வைத்துக் கொல்வதா, அது பெரும் மகாபாபம் ஆயிற்றே என்று வருந்தியவள் அந்த திட்டத்தைக் கை விடுமாறு அவருக்கு அறிவுரை கொடுத்தாள். ஆனால் பண்டிதரோ அவளை மிரட்டி அவளைக் கட்டாயப் படுத்தி விட்டார்.  அந்த காலங்களில் பெண்களால் தமது கணவருடன் சண்டைப் போட முடியாத நிலைமை.  ஆகவே மனம் வருந்தியவள், கணவருக்குத் தெரியாமல் ராமானுஜரை ஆலயத்தில் சந்தித்து அவரிடம் நடக்க  உள்ள நிலைமையை அவசரம் அவசரமாகக்  கூறி, ஆகவே தன் வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் எச்சரித்து விட்டுச் சென்று விட்டாள். ராமானுஜருக்குக் குழப்பம் ஆகி விட்டது. இப்படிக் கூட நடக்குமா என யோசனை செய்தவர் சரி இதுவும் திருவரங்கனின் நாடகமே  என மனதை தேற்றிக் கொண்டு, தன்னை வீட்டிற்கு அழைத்த பண்டிதரிடம், தனக்கு வேறு வேலை உள்ளதாகக் கூறி விட்டு அடுத்த முறை வருவதாக உறுதி அழைத்தார். ஆலய பண்டிதருக்கு ஒரே கோபம். தனது திட்டம் பாழாகிவிட்டதே, திரும்ப இவர் வந்துவிட்டால் தன் பிழைப்புக் கெட்டு விடுமே என்று கவலைக் கொண்டு  வேறு திட்டம் தீட்டினார்.
இரண்டே நாளில் ராமானுஜர் வெளியூருக்கு கிளம்ப இருந்தார். ஆகவே அவர் ஆலயத்துக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்யாமல் போக மாட்டார். அப்போது ஸ்வாமி தீர்த்தம் தரும் தண்ணீரில் விஷத்தைக் கலந்து அதை அவருக்கு தந்து விட வேண்டும் என்று மனதில் திட்டம் போட்டார்.  அதற்காக முதல் நாள் இரவே அந்த விஷத்தை ஸ்வாமிக்கு வைக்கும் தீர்த்தத்தில் கலந்து அதை தனியாக வைத்து விட்டார். எப்போது ராமானுஜர் வந்து ஸ்வாமியின் அர்ச்சனை தண்ணீர் கேட்டாலும் அதை தர வேண்டும் என்பதற்காக அதை தனியாக வைத்து  இருந்தார்.  அது யாருக்கும் தெரியாது.  காரணம் கருவறையில் அந்த அர்ச்சகரைத் தவிர வேறு  யாரும் செல்ல முடியாது.
மறுநாள் ராமானுஜர் வெளியூருக்கு புறப்பட இருந்தார். காலை ஆலயம் திறந்ததும்  ராமானுஜர் ஆலயத்துக்கு வந்தார். ஸ்வாமிக்கு பூஜைகள் நடந்தப் பின், பண்டிதர் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதம் கொடுத்ததும் அனைவரும் சென்று விட்டார்கள்.ஆனால் ராமானுஜர்  ஊருக்கு கிளம்புவதினால் அர்ச்சனைப் பூவுடன் சேர்த்து தீர்த்தப் பிரசாதம்  தருவதாகக் கூறி விட்டு, உள்ளே சென்று ஸ்வாமியின் பாதத்தில் இருந்து பூக்களை எடுத்து வரும்போது விஷ தீர்த்தப் பாத்திரத்தையும் மாற்றி எடுத்துக்  கொண்டு வந்து   தீர்த்தப் பிரசாதத்தையும் பூக்களையும்  கொடுத்து விட்டார். ராமானுஜர் அங்கிருந்து சென்றதும்  மீண்டும் உள்ளே சென்று  விஷ ஜலத்தைக் கீழேக் கொட்டி விட்டார்.  மனது நிம்மதி அடைந்தது. அப்பாடா இனி ஊருக்குச் சென்று விட்டு இவர் எங்கிருந்து வரப்போகின்றார், வழியில்தான் இரண்டுவிடுவாரே என்று மனதிற்குள் சந்தோசம் அடைந்தவாறு அப்படியே அமர்ந்து கொள்ள  அரை மணி நேரம் கழிந்தது. 
மெல்ல ஸ்தோத்திரம் கூறியபடியே ராமானுஜர் ஆலயத்துக்குள் நுழைந்தார்.  அவரைக் கண்ட பண்டிதர் துணுக்குற்றார். மீண்டும் எதற்காக ஆலயத்துக்குள் வருகிறார்?. சன்னதிக்கு வந்த ராமானுஜர், ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்யுமாறு அவரைக் கேட்க பண்டிதரோ, இப்போதுதானே அர்ச்சனை செய்துவிட்டுப் போனீர்கள், மீண்டுமா என அவரிடம்  குழப்பத்துடன்  கேட்க, நான் இப்போதுதானே வருகிறேன்...எதற்காகக் கேட்கின்றீர்கள் என ராமானுஜரும் குழப்பத்துடன் கேட்க,  அடுத்த நிமிடம் கருவறைக்குள் இருந்த ரங்கநாதரின் கழுத்தில் இருந்த மாலை அறுந்து தீர்த்த பாத்திரத்தின் மீதும் மற்ற பிரசாதங்கள் மீதும் விழுந்து அத்தனையையும் கீழே தள்ளியது.   எரிந்து கொண்டு இருந்த திரி விளக்கும் கீழே விழுந்து அணைந்தது.  என்ன அபசகுனம் ஆகிவிட்டது என பயந்தவாறே உள்ளே ஓடிய பண்டிதர் கண்களுக்கு சன்னதிக்குள் ரங்கநாதரே மரணம் அடைந்து விழுவது போல காட்சி தெரிய, கதறியபடி வெளியில் ஓடி வந்து தடால் என ராமானுஜரின் கால்களில் விழுந்தார்.  தம்மை மன்னித்து விடுமாறும், உடனே கருவறைக்குச் சென்று , ரங்கநாதரை எழுப்புமாறும் கூறி  கதறி அழுதார்.  ராமானுஜருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் காலில் அர்ச்சகர் விழுவதா என திடுக்கிட்டு அவரை எழுப்பி என்ன நடந்தது என அவரை கேட்க நடந்தது அனைத்தையும் அர்ச்சகர் கூறிவிட்டு, தன்னை மன்னிக்குமாறு கேட்டு கதறினார். அவரை சாந்தப்படுத்திய ராமானுஜர் கருவறைக்குள்  சென்று அலங்கோலமாகக் கிடந்த அனைத்தையும் சரி செய்து விட்டு மீண்டும் பூஜைகளை  செய்யுமாறு  அர்ச்சகரிடம் கூற அவரும் தன் வீட்டிற்கு ஓடோடிச் சென்று குளித்து விட்டு வந்து மீண்டும் அனைத்து பூஜைகளை செய்தார்.  அப்போதுதான் ராமானுஜர் உருவில் வந்திருந்து விஷ  தீர்த்ததைப் பெற்று சென்றது ரங்கநாதரே என்பது புரிந்தது.  ராமானுஜர் எந்த அளவு ரங்கநாதாரின் அருளுக்கு ஆளாகி இருந்தால் இப்படி திருவரங்கரே செய்வார் என்பதை எண்ணி  வியந்து நின்றார்.  ராமானுஜர் நாம் நினைப்பது போல சாதாரணமான மனிதர் அல்ல,  அவர் தெய்வ அருளை பூரணமாக அடைந்தவர் என்பதைப் புரிந்து கொண்டார். அதன் பின் அந்த ஆலய அர்ச்சகர் ராமானுஜரின் பரம பக்தராகி விட்டார்.

நீதி: சினத்தைக் குறைத்து நற் சிந்தனையை வளர்த்துக் கொள்

No comments:

Post a Comment