Saturday, June 30, 2012

Jalasayana- Vishnu Temple, Katmandu

ஜலசயனா- - காட்மாண்டு
படுத்த நிலையில் உள்ள விஷ்ணு ஆலயம்

சாந்திப்பிரியாஎனக்கு சுகன்யா என்ற சாயி பக்தர் சமீபத்தில் அவர் மேற்கொண்டு இருந்த யாத்திரையில் காட்மாண்டுவில் கண்ட ஆலயம் ஒன்றின் செய்தியை அனுப்பி இருந்தார். அதனுடன் மேலும் கிடைத்த செய்திகளை சேர்த்து அதை அனைவருடனும் பங்கீட்டுக் கொள்கிறேன். நன்றி சுகன்யா...நன்றி. ஏரியில் படுத்துள்ள விஷ்ணுவின் சிலையை தத்ரூபமாகக் காட்டும் படம் அற்புதம்.
காட்மாண்டுவின் வடக்கு பகுதியில் உள்ள சிவபுரி மலைப் பள்ளத்தாக்குப் பக்தியில் உள்ளது புத்தநீல்கண்டா எனும் விஷ்ணுவின் ஆலயம். இதன் அர்த்தம் பழைய நீல நிற தொண்டை என்பது. ஆலயம் நகரின் மையப் பகுதியில் இருந்து சுமார் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நகரில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அங்கு செல்ல பஸ்கள் உள்ளன. காட்மாண்டுவில் தங்கிக் கொண்டால் இந்த ஆலயத்தில் தரிசனம் செய்தப் பின் அங்கிருந்து பசுபதிநாதர் ஆலயம், ஸ்வயம்புநாத் எனும் புத்தநாத் மற்றும் குகேஸ்வரி போன்ற ஆலயங்களுக்கும் சென்று தரிசிக்கலாம்.
இந்த ஆலயத்தில் உள்ள மூர்த்தி ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம். விஷ்ணு குப்தா என்ற லிச்சாவி வம்ச மன்னர் காலத்தில் இந்த சிலை செய்யப்பட்டு உள்ளதாம். நாற்பத்தி மூன்று அடி (43 அடி ) நீளமான ஒரு செயற்கைக் குளத்தில் பதினேழரை (17 அடி ) அடி நீளமான விஷ்ணுவின் சிலைக் காணப்படுகிறது. பாற்கடலில் ஆயிரம் தலை ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான் படுத்து இருந்ததைப் போலவே பதினோரு தலை ஆதிசேஷன் மீது படுத்த காட்சியில் செதுக்கப்பட்டு உள்ள நிலையில் விஷ்ணு காணப்படுகிறார். கால்களை மடித்து வைத்தவாறு படுத்துக் கொண்டு இருக்கும் விஷ்ணுவின் நான்கு கைகளில் அவருடைய சின்னமான சங்கு, சக்கரம், தாமரை மலர் மற்றும் கதை போன்றவை உள்ளன. அதை செதுக்கி உள்ள கல்லைப் போன்ற கல் அந்த நாட்டில் வேறு எங்குமே கிடைக்கவில்லையாம். இந்த சிலை எட்டாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
இந்த சிலை கிடைத்தக் கதை ஒன்றை அங்குள்ளவர்கள் கூறுகிறார்களாம். எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த அந்த சிலைக் காணாமல் போய் விட்டது. ஒருமுறை அந்தப் பகுதியில் இருந்த ஒரு கணவனும், மனைவியும் நிலத்தை உழுது கொண்டு இருந்தபோது அவர்களது கலப்பை எதோ பாறை ஒன்றின் மீது இடித்ததைப் போல சப்தம் கொடுத்தது. ஓரளவு தெரிந்த ஒரு கல் பாறையில் ரத்தமும் இருந்தது. ஆகவே அதை மேலும் தோண்டிப் பார்த்தபோது அவர்கள் இந்த சிலையைக் கண்டார்கள். பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன் ஆலயம் அமைத்து உள்ளார்கள்.


ஆனால் இது குறித்த இன்னொரு செய்தியும் உள்ளது. அந்த நாட்டை ஆண்டு வந்த பிரதாப மல்லா எனும் மன்னனுக்கு கனவில் வந்த விஷ்ணு தனக்கு ஒரு ஆலயத்தை இங்கு அமைக்குமாறு கூறியதினால் பூமியில் இருந்து கிடைத்த அந்த சிலையைக் கொண்டு இந்த ஆலயத்தை அவர் நிறுவினார் என்றும் கூறுகிறார்கள். இன்னொரு விசேஷமான செய்தி என்ன என்றால் இந்த நாட்டை சேர்ந்த மன்னர்கள் தாம் ஆட்சியில் இருக்கும்போது இந்த ஆலயத்துக்கு செல்ல மாட்டார்களாம். அப்படி சென்றுவிட்டுத் திரும்பினால் அவர்கள் அழிவை சந்திப்பார்கள் என்பது நம்பிக்கையாம் . அந்த நூற்றாண்டிலேயே செதுக்கப்பட்டு உள்ள மூன்று விஷ்ணுவின் சிலைகளில் ஒன்று இந்த ஆலயத்தில் இருக்க, அதை மன்னர்கள் பார்க்க இயலாது என்பதினால் மற்ற இரண்டையும் பாலாஜு கார்டன் என்ற பொது இடத்திலும் மூன்றாவதை மன்னர்களின் அரண்மனையிலும் வைத்து இருக்கின்றார்கள்.
இன்னொரு செய்தி என்ன என்றால், நீலத் தொண்டை என்பது சிவபெருமானைக் குறிப்பது. ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் தொண்டை நீல நிறமாயிற்று. அந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் போனவர் கோசைன்குண்ட் என்ற நதியில் வந்து படுத்துக் கொண்டார் என்றும் , அங்கிருந்து தண்ணீர் இங்கு வருவதினால் அதற்கு பழைய நீலத் தொண்டை என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் படிக்கட்டில் இறங்கி விஷ்ணுவின் கால்களைத் தொட்டு வணங்க இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பிற மதத்தவர்களுக்கு அந்த அனுமதி கிடையாது. தூரத்தில் இருந்து மட்டுமே அவரை தரிசிக்க முடியும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து கலந்து கொள்கிறார்கள். அப்போது வரும் ஹரிபோதிசினி ஏகாதசி தினத்தன்று விஷ்ணு விழித்தெழுந்து கொள்வதாக நம்புகிறார்கள். இந்த விஷ்ணுவை ஜலசயனா என்றும் அழைக்கின்றார்கள்.

1 comment:

  1. Recently a temple was built at Poonga nagar ,kaakkalur mear Tiruvallur in Tiruvallur District Tamil Nadu for Jala Narayan at Siva Vishnu temple. This is the second temple for this deity after Nepal.Those who are not able to go to Nepal can visit this temple and have darshan of the SriJalNarayana.

    ReplyDelete