Thursday, May 17, 2012

Indore- Gajarana Maha Ganapathi

சங்கடங்களை  களையும் 
கஜரானா  கணபதி

இந்தூர் ஆலய மகிமை

சாந்திப்பிரியா
  
ஆலய சன்னதியில் கஜரானா கணபதி 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நகரங்களில் மிகவும் முக்கியமானது இந்தூர் நகரம். அங்கு பழைய காலத்தில் கட்டப்பட்ட சிறப்பான பல ஆலயங்கள் உண்டு.  இந்தூர் நகரம் முன்பு மால்வா மன்னர்களினால் ஆளப்பட்டது. அந்த மன்னர்கள் கடவுள் பக்தி மிகுந்தவர்கள். மராடா எனக் கூறப்பட்ட அவர்கள் மகாராஷ்டிராவை  சேர்ந்த மராட்டி வம்சத்தினர். அதனால்தான் இங்கு சிவாஜி மன்னர்  பெரிதும் போற்றப்படுபவர். அந்த வம்சத்தில் ஆட்சி செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் தேவி அஹில்யா என்ற குடும்பத்தினர்.  மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், உஜ்ஜயினி மற்றும் தேவாஸ் போன்ற இடங்கள் அவர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. தேவி அஹில்யா  பல ஆலயங்களை நிறுவி உள்ளார். பெரிய பக்திமான். ஓம்காரீஷ்வருக்குப் போகும் பாதையில் வரும் மண்டலீஷ்வர் என்ற ஊரில் அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறியதும், பெரியதுமான சிவலிங்கங்களை ஒரு ஆலயத்தில் வைத்து வணங்கி வந்தார்.  அங்கு மிகப் பெரிய அணையா விளக்கும் உள்ளது.  தேவி அஹில்யா காலத்தில் ஏற்றப்பட்ட அந்த விளக்கு இன்றும் தொடர்ந்து அணையாமல் எரிந்து கொண்டே இருக்குமாறு எண்ணை ஊற்றி அதை பாதுகாத்து வருகிறார்கள்.  இராணி அஹில்யா தேவி இந்தூர் மக்களினால் மிகவும் போற்றப்படுகின்றார். அவருடைய அரச சபையில் எந்த ஒரு முக்கியமான முடிவெடுக்கும் நேரத்திலும் அல்லது  எந்த ஒரு தீர்ப்பை அவர்  வழங்கும் பொழுதும் நீதி தவறாமல் அது இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒரு சிறிய சிவலிங்கத்தை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு அந்த முடிவை எடுப்பார்  என்று அவருடைய தெய்வ பக்தியைக் குறித்துக் கூறுவார்கள்.


ஆலயம் எழுந்த கதை
இந்த ஆலயத்தைக் குறித்து முறையான வரலாற்றுக் கதை கிடைக்கவில்லை.  அனைத்துமே வாய்மொழிக் கதையாகவே உள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு  முன்பு பெருமை வாய்ந்த ராணி அஹில்யா தேவியின்  கனவில் ஒரு  வினாயகர் தோன்றி தான் இந்தூரில் கஜரானா என்ற பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கிக் கிடப்பதாகவும், ஆகவே  தன்னை வெளியில் எடுத்து ஒரு ஆலயம் அமைத்து வழிபடுமாறும் கூறினாராம். வேறு சிலர் அந்தக் கனவு ஒரு பண்டிதருக்கு வந்ததாகவும் அதை அவர் சென்று தேவி அஹில்யாவிடம் கூறினார்  என்றும் கூறுகிறார்கள். கஜரானா  என்ற பகுதி இந்தூரில் மிகவும் நெரிச்சல் மிக்க பகுதியாக இருந்தது. ஆகவே  என்ன செய்வது என முதலில் குழம்பியவள், தன்னுடைய கனவு பற்றி மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்தப் பின் வினாயகர் கொடுத்த கட்டளையை மீறக் கூடாதென முடிவெடுத்து கஜரானாவில்  அவர் கனவில் விநாயகர் கூறியக் குளம் எங்கு உள்ளது எனத் தேடுமாறுக் கூறினார். தற்போது ஆலயம் உள்ள இடத்தின் அருகில் இருந்த ஒரு குளத்தை கண்டுபிடித்தார்கள்.  அது மிகவும் அசுத்தமாக இருந்தது.  ஆகவே அதை சுத்தம் செய்து தூர் வாரச் செய்தார். அப்படி செய்கையில் அந்த குளத்தினுள் புதைந்து இருந்த ஒரு வினாயகரின் மிகப் பெரிய சிலை  கிடைத்தது. என்ன ஆச்சரியம். அந்த பிள்ளையாரும் அவருடைய கனவிலே தோன்றிய வினாயகரும் ஒரே மாதிரி இருந்தனர். உடனே அந்த விக்ரகத்தை சுத்தம் செய்து அந்த குளத்தின் எதிரிலேயே அகம முறைப்படி ஆலயம் ஒன்றை எழுப்பி, விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து 1735 ஆம் ஆண்டு அந்த ஆலயத்தில் பூஜைகளைத் துவக்கினாராம். இந்த ஆலயத்தில் வேதமூர்த்தி பட்  என்பவரே 1759 ஆம் ஆண்டில் பிரதான பண்டிதராக இருந்தார் என்றும், மகாராஜா ஹோல்கர் காலத்தில் 1875 அம ஆண்டு இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அங்கு இருந்த சிறிய மண்மேடு போன்ற பகுதியில் ஒரு மிகப் பழைய ஆலயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதன் மீதே புதிய ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளதாகவும்  கூறுகிறார்கள்.  
இந்த ஆலயத்தில் சுமார் எட்டு மீட்டர் நீளத்தில் உள்ள விநாயகரின் உருவத்தை யார் செதுக்கினார்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை. ஆனால் அது வெள்ளம், பல இடங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட மண், யானை மற்றும் குதிரைகள் மிதித்த மணல் போன்ற கலவையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறுகிறார்கள். அதை சுற்றி உள்ள சித்திர வேலைபாடுகளைக் கொண்ட தடுப்புத் தகடுகள் தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் இரும்பு போன்ற உலோகங்களின் கலவையில் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆகவே இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற மகிமை வாய்ந்த ஆலயம் என இந்தூர் மக்கள் அனைவருமே ஒப்புக் கொள்கிறார்கள். நினைத்ததை நிறைவேற்றி வைப்பார் கஜரானா கணபதி என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களுக்கு அதிக அளவில் உள்ளது.

ஆலய முகப்பு 

ஆலய மகிமை
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உள்ள  சுமார் ஆறு அடி உயரமுள்ள வினாயகரின் சிலைக்கு இரு பக்கத்திலும் இரண்டு மனைவிகளை வடிவமைத்து உள்ளனர். அந்த ஆலயத்தில் ஏழு அல்லது எட்டுத் தலைமுறையாக பூஜைகளை செய்து வரும் பண்டிதர் அதன் பெருமையை மனம் மகிழ்ந்து கூறினார். பண்டிகை தினங்களிலும், புதன் கிழமைகளிலும் நடு இரவுவரை நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்து வினாயகரின் அருகில் சென்று அவரை வணங்கி  வேண்டுகிறார்கள். குடும்பத்தில் அமைதியின்மை,  தடை பெற்று வரும் காரியங்கள் சித்தி பெற, குடும்பச் சண்டை  முற்றுப் பெற என பல கோரிக்கைகளுடன்  வேண்டுதல் செய்கின்றனர். வினாயகரை வேண்டிக் கொண்டு அந்த ஆலத்தில் உள்ள ஒரு மரத்தில் நோம்புக் கயிற்றைக் கட்டி வைத்து விட்டு ஒரு தேங்காயை பூசாரியிடம் தந்து விட்டு வேண்டுதல்களை அவரிடம் கூறி விட்டுச் செல்கின்றனர். அதை அவர் ஸ்வாமி பீடத்தில் வைத்து விடுகின்றார். எப்பொழுது தன் வேண்டுதல் பலிக்கின்றதோ அப்பொழுது அவர் அந்த ஆலயத்திற்குச் மீண்டும் சென்று பூசாரியிடம் அதைப் பற்றிக் கூற அவர் பீடத்தில் இருந்து ஒரு தேங்காயை பிரசாதமாகத் தருகிறார்.
ஆந்த ஆலயத்திற்கு செல்லும் பல பக்தர்கள் கூறும் கதைகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஒரு முறை ஒருவருடைய வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள பணமும் நகைகளும் திருட்டுப் போய் விட்ன. வெகு நாட்கள் ஆகியும்  திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் ஜோதிடரிடம் சென்று கேட்ட பொழுது அவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தைக் கூறி அதற்குள் அவனைப் பிடிக்காவிடில் அதன் பிறகு அந்த திருடனை பிடிக்கவே முடியாது என்றும் அதற்குப்  பிறகு  அவன் பிடிக்க முடியாத இடத்திற்கு சென்று விடுவான் எனக் கூறி விட்டனர். அவர்கள் கொடுத்திருந்த கெடுவும் முடிந்தது. திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மாதங்கள் ஓடிவிட்டன. மனம் வெறுத்துப் போன அந்த வீட்டினரிடம் எதேற்சையாக ஒருவர் நீங்கள் கஜரானா ஆலயம் சென்று அங்கு வேண்டிக் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வேண்டுதலை நிறைவேற்றுவார் எனக் கூறி அவர்களை கட்டாயப் படுத்தி ஆலயத்திற்கு தாமே அழைத்துச் சென்றனர். அந்த தம்பதியினரும் அங்கு சென்று வேண்டிக் கொண்டு திரும்பினர். என்ன அதிசயம். அதற்கு அடுத்த சில நாட்களிலேயே வெளியூருக்குத் தப்பி ஓடி விட்டிருந்த அதே திருடன் மீண்டும் முதலில் திருடியவருடைய வீட்டை ஒட்டியபடி பின்னால் இருந்த வீட்டில் திருட வந்தான். சொன்னால் நம்ப நம்பமாட்டீர்கள். எதிர்பாராத விதத்தில் அவன் வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறு சிறுவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டான்.   களவு போன பொருட்களில்  பத்து சதவிகிதம்  கூட திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் மிகவும் போற்றி வைத்திருந்த முக்கியமான ஒரு பொருள் கிடைத்தது. பிடிக்க முடியாதென ஜோதிடர் முதல் காவல்துறையினர்வரை கூறியும் பல மாதங்களுக்குப் பின் அதே திருடன் கஜரானா ஆலயத்தில் வேண்டிக் கொண்டப் பின் கிடைத்தான். அதை என்னவென்று சொல்வது?

 கஜரானா கணபதியின் இன்னொரு தோற்றம் 

இப்படி பல்வேறு கதைகளை அங்கு நிவாரணம் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.  பிளவு பட்ட குடும்பம் ஒன்றானது, பிழைப்பது சாத்தியம் இல்லை என மருத்துவர்களினால்  கைவிடப்பட்டவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் அந்த காயம் கூடத் தெரியாமல் நலமடைந்தார்.  வருடக் கணக்கில் தேங்கிக் கிடந்த வழக்கினால் மன அமைதியை இழந்தவர் ஆலயத்தில் சென்று வேண்டிக் கொள்ள அடுத்த சில நாட்களில் வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு அவருக்கு சாதகமாக முடிந்தது. இப்படி பல பல கதைகள் உண்டு.
முதலின்  சன்னதியை மட்டுமே உள்ளடக்கி இருந்த  ஆலயம்  பின்னர் விரிவாக்கப்பட்டு உள்ளது.  இந்த ஆலயத்தின் சன்னதியை சுற்றி மிகப் பெரிய மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. சன்னதியை சுற்றி வரும் வகையில் அதை கட்டி உள்ளார்கள்.  பிரதான   ஆலய வளாகத்துக்குள்  ஹனுமான் சன்னதி, சனீஸ்வரர் ஆலயம், சாயிபாபா ஆலயம், அன்னபூரணி சன்னதி , கால பைரவர் சன்னதி  போன்றவை பின்னர் எழுப்பப்பட்டு உள்ளன.  கஜரானா கணபதியின் சன்னதிக்குப் பின்புறத்தில்  பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ள சன்னதியில் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்தூர் செல்பவர்கள் அவசியம் காண வேண்டிய ஆலயம் கஜரானா கணபதி ஆலயம்.

ஆலயம் செல்லும் வழி
இந்தூர் நகரத்திற்குச் சென்றால் அங்குள்ள ரெயில் நிலையத்தில் இருந்தும், பஸ் நிலயத்தில் இருந்தும் சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ தொலைவில் நகரத்துக்கு உள்ளேயே உள்ள கஜரானா கணபதி ஆலயத்திற்கு நேரடியாக சென்று வர டெம்போ, ஆட்டோ மற்றும் பஸ்கள் நிறைய கிடைக்கின்றன.

No comments:

Post a Comment