Saturday, May 12, 2012

Brahmakumari Hrathayapushpa

இராஜயோகினி
பிரும்மகுமாரி ஹிருதயபுஷ்பா
வாழ்க்கை வரலாறு

ஆங்கில புத்தகத்தின் கருத்தை தழுவி தமிழில் எழுதியவர் :- சாந்திப்பிரியா
(மூலக் கதை கன்னடத்தில்:- ஹன்னர்மத் 
 ஆங்கில மொழி பெயர்ப்பு :- ரேவனாசித்தையா ஹன்னர்மத் , ஹூப்ளி )
 


 
ஹிருதயபுஷ்பா

தாதி ஹிருதயபுஷ்பா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பிரும்மகுமாரி ஒரு தெய்வீகப் பெண்மணி . இந்த பூமியில் தனக்கு கொடுக்கப்பட்டு உள்ள நாடகப் பாத்திரத்தை நிறைவேற்ற அவதரித்தவர். அவருடைய பிறப்புக் குறித்து சரியான தகவல் இல்லை. அவருடைய பெற்றோர்கள் முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆசிய துணை கண்டத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து இருந்த பாகிஸ்தான் பகுதியில் இருந்த சிந்த் ஹைதிராபாத் மானிலத்தில் இருந்தவர்கள். அவருடைய தந்தையின் பெயர் ரதன்சந்த் ஜமத்மால். அவர் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தவர். தாயாரின் பெயர் சீதாதேவி. அவருடைய தாயார் பெயருக்கேற்ப ஒழுக்கமுடையவர். சிந்தி மதத்தினரான அவர்கள் கப்பலைப் போன்ற தோற்றம் கொண்ட மூன்று அடுக்கு மாளிகையில் வசித்து வந்தனர். ஹிருதயபுஷ்பாவுடன் உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். அவர்களில் ஐந்தாமவர்தான் திக்கி என்கின்ற தாதி ஹிருதயபுஷ்பா.
அந்த காலங்களில் மத இணக்கம் கிடையாது. அவரவர் அவரவருடைய மத முறைப்படி வாழ்ந்து வந்தனர். தாதி ஹிருதயபுஷ்பாவின் வீட்டில் அனு தினமும் பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் என எதாவது படிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். மூன்று வேளை பிரசாதம் வழங்கப்படும். தெய்வ அறையில் விளக்கு எரிய தூய நெய் மட்டுமே உபயோகிக்கப்படும். ரதன்சந்த் வீட்டில் இருந்து அருகில் இருந்த ஒரு ஆலயத்திற்கு நெய் விளக்கு ஏற்ற மாதா மாதம் ஒரு டின் நெய் அனுப்புவார்கள். அவர்கள் எந்த அளவிற்கு செழுமையாக வாழ்ந்து வந்தனர் என்பதை இது விளக்கும்.
ஹிருதயபுஷ்பாவின் தாயாரான சீதாதேவி அனு தினமும் பகவத் கீதை மற்றும் பாகவதம் படிப்பது உண்டு. கிருஷ்ணர் மீதும் குருநானக் மீதும் அபார பற்றுதல் கொண்டவர். குழந்தை ஜூரத்தில் படுத்து விட்டால் மருத்துவரிடம் போக மாட்டார். குருநானக்கின் போதனையை ஒரு காகிதத்தில் எழுதி அதை நீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை மருந்து போல கொடுப்பார். குழந்தைகள் உடல் குணமாகி விடும். அனு தினமும் திக்கன் எனும் ஹிருதய புஷ்பாவிற்கு கிருஷ்ணரைப் பற்றி முக்கியமாக அவர் கோபிகா ஸ்திரீக்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை கூறும் பாகத்தை அவருடைய தாயார் படித்துக் கூறுவார். அதனாலோ என்னவோ திக்கனுடைய மனதில் ஒரு தீராத ஆசை எழும்பிக் கொண்டே இருந்தது. குழலூதும் என்னுடைய கிருஷ்ணன் எப்போது வருவார்? அந்த கோபிகைகள் யார் ? அதனால் பள்ளிப் பாடங்களில் அவருடைய மனம் நாட்டம் கொள்ளவில்லை. அவருடன்
பள்ளியில் படித்து வந்தவர்களில் பின்னர் மம்மா என அழைக்கப்பட்ட ஓம் ராதே என்பரும் படித்து வந்தார். இருவரும் நல்ல நண்பர்கள். திக்கன் செல்வந்தவருடைய மகள், ஆனால் ஓம் ராதே மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தவர். திக்கன் செல்வந்தர் வீட்டு குழந்தை என்பதினால் பள்ளிக்கு குதிரை வண்டியில் ஏறிப் போவாள். ஆனால் ஓம் ராதே நடந்தே செல்வார். பலமுறை அவரை வண்டியில் தன்னுடன் வருமாறு திக்கன் அழைத்தாலும் அவர் அதில் ஏறிக் கொள்ள மறுத்து விடுவார். அது போலவே அந்த ஊரில் இருந்த மற்றொரு பள்ளியில் பிற் காலத்தில் சந்திரமணி தாதி என அழைக்கப்பட்ட மோதி என்பவரும், குமாரிகா தாதி என அழைக்கப்பட்ட ரமாவும் படித்து வந்தனர். ஆக பிரும்மகுமாரி சமாஜத்தின் தூண்களான அந்த நால்வரும் ஒரே ஊரில் இருந்த பள்ளியில் படித்து வந்திருக்கின்றனர் என்பது ஒரு விஜித்திரமான உண்மை. அந்த பூமியின் மகத்துவம் அதுவோ?

 
தாதா யார்? – மனதில் எழுந்த கேள்வி

திக்கன்அவருடைய வீட்டில் செல்லக் குழந்தை. பல நேரங்களில் தனிமையில் தன்னை மறந்தபடி அமர்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்திருப்பார். அடிக்கடி எவரோ தன்னை அழைப்பது போல ஒரு பிரமை ஏற்படுவது உண்டு. ஒருநாள் திக்கன் தனிமையில் அமர்ந்தவண்ணம் பகவத் கீதையை படித்துக் கொண்டு இருந்த பொழுது காதுகளில் ஒரு இனம் புரியாத குரல் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தது. “தாதாவிடம் நீ செல்லும் பொழுது நான் உன்னை சந்திப்பேன்”. தாதா என்பவர் யார் ... அவர் எங்கு இருக்கின்றார், எனக்கும் தாதாவிற்கும் என்ன சம்மந்தம் ?.... மனதில் குழப்பம் தோன்றியது. ஆனால் விடை கிடைக்கவில்லை.
திக்கனுடைய ஒரு சகோதர் ஆன தீர்த்தாவிடம் திக்கனுக்கு அதிக அன்பு உண்டு. அவர் ஒரு முறை வியாபார நிமித்தம் சிலோன் நகருக்குச் சென்று இருந்த பொழுது திக்கனுடைய மனதில் தோன்றியது “அவர் இனி திரும்பி வரமாட்டார்”. அது போலவேதான் நடந்த நிகழ்ச்சியும் அமைந்து இருந்தது. சிலோனுக்குச் சென்ற சகோதரர் நோயினால் அவதியுற்று அதனால் மரணம் அடைந்து விட்டார். திக்கனின் கைகளில் அந்த செய்தி தந்தி மூலம் கிடைக்க துயரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. ஆனால் அது சில நிமிடங்கள்தான் நீடித்தது. மனதில் ஒரு நிமிடத்தில் எழுந்து மறைந்த பெரும் துக்கம் அதிகமாகும் முன்னரே ஒரு அசாதரணமான அமைதியும் தானாகவே தோன்றியது. அவளுடைய மனதிலே துயரம் இல்லை. என்ன ஆயிற்று ? மனதுடன் ஒன்றி இருந்த ஒருவரின் மரணம் கூட மனதிற்கு அமைதியைத் தருமா ?

 
இயற்கை தந்த தனிமை

காலம் கடந்தது. இளம் வயதினரான திக்கனுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்றாலும், அவரை மணமுடிக்க இருந்தவர் ஒரு நோயாளி என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே அவருடைய பெற்றோர் பலவந்தமாக அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அது அவளுடைய வாழ்வில் தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்குப் பிறகு மாமனார் வீட்டிற்கு சென்றவர் கணவருடன் எந்தவிதமான சுகத்தையும் அனுபவிக்கவில்லை. காரணம் அவர் நோயினால் படுத்திருந்ததினால்தான். அவர் நோய்வாய்பட்டு படுத்திருந்த கணவனுக்கு ஒரு நர்ஸ் போல பணிவிடை செய்தார். திருமணமாகி ஆறே மாதங்களில் அவர் மரணம் அடைய திக்கன் விதவையாக நேர்ந்தது. தான் யாருமற்ற அனாதை போல நின்றார். தங்களுடைய மகனின் மறைவு குறித்து அடைந்திருந்த வேதனை மறையும் முன்னரே மகளும் விதவையாகி நின்றதைக் கண்ட அவருடைய பெற்றோர் கண்கலங்கி அழுதனர். படுத்தப் படுக்கையில் விழுந்தனர். திக்கனை சுற்றி சூனியப் பிரதேசம் இன்னும் விரிவடைந்தது. என்ன செய்வாள் சிறு பெண் ?

 
பரமாத்மா பிரஜாபிதா ஆனார்

1937 ஆம் ஆண்டு. சிந்த் ஹைதிராபாத் மானிலத்தில் அனைத்திற்கும் மேலான பரமாத்மா என்ற ஆத்மா தாதா லேக்கராஜ் என்ற நகை வியாபாரி உருவில் வந்திருந்தார். ஜோதிபிந்து ஸ்வரூபமான சிவபெருமான் கலியுக முடிவில் தர்மம் அழியப் போகின்றது என்பதை உணர்ந்து கொண்டதினால் முதன் முதலில் மும்மூர்த்திகளை சூட்சுமத்தில் படைத்தப் பின் தானே மனித உலகிற்கு இறங்கி வந்து சாதாரணமானவரும் வயோதிகருமான லேக்கராஜ் என்ற நகை வியாபாரியின் சரீரத்தில் புகுந்து கொண்டார். அவருடைய சரீரத்தில் புகுந்து கொண்டு ஒரு ஆசானாக, சத்குருவாக, தந்தையாக பிரஜாபிதா பிரும்மாவாக மாறி உலகை ரஷிக்கத் துவங்கினார்.
அதுவே துயரத்தில் உழன்று கொண்டு இருந்த திக்கனுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அன்று மகாநவமி நாள். திண்ணையில் அமர்ந்திருந்த திக்கனிடம் அவளுடைய மாமி வந்து பேச்சுக் கொடுத்தார். தான் சமீபத்தில் ஒருவருடைய சரீரத்தில் கிருஷ்ணரைப் பார்த்ததாகவும், தன்னுடன் வந்தால் அவளுக்கும் அவரைக் காட்டுவதாகவும் கூற,அதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல திக்கன் உடனடியாக மாமியுடன் கிளம்பிச் சென்றாள்.
திக்கனை சுமார் அறுபது வாயதான பிரஜாபிதாவிடம் அழைத்துச் சென்றவள், அவரைக் காட்டி அவர் மீதே தான் கிருஷ்ணருடைய உருவைக் கண்டதாகக் கூறினாள். அந்த வயதோகியரைக் கண்ட திக்கன் தான் மாமியினால் ஏமாற்றப்பட்டு விட்டதாக வருந்தினாள். ஆனால் தன் எதிரில் வந்து நின்று ஏமாற்றம் அடைந்த அந்த பெண்ணை பார்த்த அந்த மனிதரோ சில கணங்களில் அவளுடைய மனநிலையை புரிந்து கொண்டு அவளையே சில உற்று நோக்கினார். அவ்வளவுதான், திக்கன் தன்னை மறந்தாள், தான் மனதில் எண்ணி இருந்த கிருஷ்ணரை மறந்தாள். அனைத்தையும் மறந்து ஜடமாகி நின்றிருந்தாள்.
நீ யார்?
அவளைத் தன் அருகில் அழைத்த அந்த வயதானவர் கேட்டார் “குழந்தாய், நீ யார் ?”
“நான் துயரத்தில் உழல்பவள்”
“அப்படியா, சரி இந்த உலகில் உள்ளவர்கள் துன்பத்தில் உழல்கின்றனரா இல்லை இன்பத்தில் மிதக்கின்றனரா?”
“ இந்த உலகமே துயரத்தில்தான் சிக்கி உள்ளது”
“அப்படியா. நான் கூறுவதை சற்று கவனமாகக் கேள். வா….இப்படி அருகில் வந்து அமர்ந்து கொள்” என்றவர் ஒரு காகிதத்தில் ஒரு மனித உருவத்தை வரைந்தார். அதன் நெற்றிப் பொட்டின் நடுவில் ஒரு பொட்டு வைத்தார். அதை திக்கனிடம் காட்டிக் கூறினார் “குழந்தாய், இதைப் பார். இந்த உருவத்தில் உள்ளது போன்ற உடல் அழியக் கூடியது. நிலையில்லாதது. ஆனால் இதோ தெரிகின்றதே, ஆத்மா என்ற பொட்டு,அதற்கு அழிவில்லை. அது சுதந்திரமானது. அந்த ஆத்மா சரீரம் போன்றது அல்ல. அதை உடலில் இருந்து வெளியேற்றி விட்டு வெகு தூரம் அதனுடன் சென்று பார். ஒரு ஒளி விளக்காகவே அது தெரியும். அதனுடன் செல்லும் நீயும்- அதாவது உன் ஆத்மா, ஒரு விளக்குப் போல ஆகிவிடும். ஆகவே இப்போது நினைத்துப் பார்….இறந்து விட்டதாக நீ நினைக்கும் உன் கணவர் யார், உனக்கும் அவருக்கும், அதாவது இருவரின் உடலில் குடி கொண்டு உள்ள ஜீவாத்மாவிற்கும் என்ன சம்மந்தம்?. இப்படித்தான் உலகில் உள்ள அனைத்து உடலில் உள்ள ஆத்மாக்களும் எந்த சம்மந்தமும் இல்லாமல் உள்ளன. நாம் இருப்பது ஸ்தூல உலகம். சதாசிவனின் இருப்பிடத்தில் சுற்றிக் கொண்டு அங்கிருந்து மீண்டும் பூமிக்கு வந்து தத்தம்முடைய நாடக பாத்திரத்தை நடிக்க வரும் ஆத்மாக்கள் எலும்பு, சதைகளைக் கொண்ட உடல் மூலம் அதை நிறைவேற்றுகின்றன ”
பாபா பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேசப் பேச சிறுமியாக இருந்த திக்கனுடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வும் தொடர்ந்து கொண்டே இருந்தது. தன் உடலை விட்டு ஆத்மா பிரிந்து எங்கோ செல்வதை உணர்ந்தாள். ஆகாயத்தில் நட்சத்திரக் கூட்டத்தின் இடையே ஒரு பறவையைப்போல தான் பறப்பது போல உணர்ந்தாள். அப்படியே இருந்தவள் சமாதி நிலையில் அமர்ந்துவிட்டாள். சமாதி நிலையில் அமர்ந்து இருந்தவள் தன்னை மறந்து சிரித்துக் கொண்டே இருந்தாள். சுமார் இரண்டு மணிநேரம் அவள் எதையோ நினைத்தபடி பெரியதாக சிரித்துக் கொண்டே இருந்த நிலைமை தொடர, அவளை பாபா தன் சுய நிலைக்கு வருமாறு அழைத்தார்.
“வா…மகளே…திரும்பி வா…”
அவர் மீண்டும் மீண்டும் பலமுறை அழைத்தப் பின்னரே அவள் சமாதி நிலையில் இருந்து வெளி வந்தாள். அவள் உள்ளத்தில் எந்த துன்பமும் இல்லை. மனது அமைதியாக சலனம் இன்றி இருந்தது. பாபா கேட்டார்.
“ மகளே...... இப்போது சொல்........ நீ யார் ? “
அதைக் கேட்ட திக்கன் இன்னமும் பலமாக சிரித்தாள். அந்த கேள்வி அர்த்தமற்ற கேள்வி போல அவளுக்குத் தோன்றியது. “ நான் யாரா ?”
அதைக் கண்ட பாபா சிரித்தபடிக் கேட்டார்
“ மகளே.... இப்போது சொல்...... நீ ஏன் சிரிக்கின்றாய்?
“நான் ஒரு ஜூவாத்மா..... என்னைப் பார்த்து நீ யார் என்று கேட்டால் நான் என்ன சொல்வது ?” அவள் தொடர்ந்து கூறினாள்:
“உங்களுடைய குரல் ஒரு சங்கின் ஒலி போல தோன்றியது. அதைக் கேட்டுத்தான் நான் திரும்பி வந்தேன். உங்களுடைய கண்களில் என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை ? ஆனால் அதைக் கண்டு என் மனம் உருகி நான் வந்தேன். என்னை என்ன குரலில் அழைத்தீர்கள் என்று புரியவில்லை. அந்தக் குரலில் கடல்போல் இருந்த என் துன்பம் மறைந்ததை மட்டும் உணருகின்றேன். ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்த என்னை கட்டி எழுப்பி சிரிக்க வைத்தீர்கள். உடல் என்ற உணர்வு அழிந்தது போல இருக்க நான் ஒரு ஆத்மா என்ற எண்ணம் மேலெழுந்துவிட்டது.
ஐந்து மாயைகளையும் விலக்கிக் கொண்டு யோகத்தை ஏற்க வந்துள்ளேன். துன்பத்தின் இடையே இன்பகரமான எண்ணம் மிதந்து வருகின்றது.
இனிய சாந்தி கீதம் ஒலிப்பதையும் ஆத்மா சிலிர்பதையும், சிவனுடைய குரல் கேட்பதையும் போல உணருகின்றேன்”
அவள் கூறிய பதிலைக் கேட்ட பாபா மன மகிழ்சியுற்றார். “சரி, நீ இனி உன் வீட்டிற்குச் செல்” என்றவரிடம் “என் வீடா, எது என் வீடு? இதுவும்
என் வீடுதானே ” என்றவளிடம் பக்குவமாக அவளைப் பெற்றெடுத்தவர்கள் வீட்டிற்குச் செல்லுமாறு கூறி அனுப்பினார். வீடு திரும்பிய சிறுமி திக்கன் தன்னுடையத் தாயாரிடம் நேரடியாகக் கேட்டாள் “ நீ யார்? உனக்கும் எனக்கும் உள்ள சம்மந்தம் என்ன ? அதைக் கேட்ட தாயார் திடுக்கிட்டாள். அவள் நெற்றியில் ஒரு அடி கொடுத்தவள் “எதற்காக இப்படி அசட்டுத்தனமாகக் கேட்கின்றாய்? நான் உன்னை பெற்றெடுத்தத் தாயார்” எனக் கூற கலகலவெனச் சிரித்த திக்கன் கூறினாள் “என்னுடைய தாயாரா? எவராவது ஒரு சுதந்திரமான ஆத்மாவிற்குத் தாயாராக முடியுமா?”

சரணாகதி

அந்த சிறு பெண் கூறியதை எல்லாம் விவரமாகக் கேட்ட தாயார் அதிசயத்தை காண்பது போல நின்றிருந்தாள். தன் மகளிடம் பேசப் பேச எதோ ஞானியிடம் பேசுவது போல இருப்பதை உணர்தாள். மெல்ல மெல்ல அவளைப் போலவே தானும் மன மாற்றம் பெறத் துவங்கியதை கண்டாள். அவளுக்கு அந்த பாபாவை தானும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது. ஆனால் பாபாவிடம் எப்படிப் போவது? அந்த காலங்களில் ஒருவர் வீட்டில் மரணம் நிகழ்ந்து விட்டால் அடுத்த ஒரு வருடம் ஆலயங்களுக்கோ, புனித காரியங்களுக்கோ செல்லக் கூடாது என்பது நடைமுறையில் ஏற்கப்பட்டிருந்த சட்டம். அதை மீறி எப்படி பாபாவை சந்திப்பது?
இரண்டாம் நாள். பாபாவிடம் சென்ற திக்கன் தமது தாயாருடைய இக்கட்டான நிலைமை குறித்துக் கூறினாள். தன்னுடைய தாயாருக்கு பாபாவை சந்திக்க ஆவல் இருந்தும் எதனால் வர இயலாமல் உள்ளது என்ற வருத்தத்தை வெளிப்படுத்த பாபா கூறினார் “ குழந்தாய், நீ ஏன் கவலைப்படுகின்றாய்? உன் தாயாரினால் இங்கு வர முடியாவிடில் நானே வருகின்றேன் “ எனக் கூறிவிட்டு மறுநாள் மதியம் இரண்டு கல் தொலைவில் இருந்த அவளுடைய வீட்டிற்குத் நடந்து சென்றார்.
திக்கனுடைய தாயார் தன்னுடைய சேலையினால் முகத்தை மறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளைக் கண்ட பாபா “ முகமூடியை எடுத்து விட்டு என்னைப் பார்” என்றதும் ஒரு கட்டளைக்கு உட்பட்ட சிப்பாயைப் போல படுதாவை விலக்கி விட்டு தன் எதிரில் வந்து நின்று கொண்டு இருந்த பாபாவை நோக்கினாள் திக்கனுடைய தாயாரான சீதாமாதா. என்ன அதிசயம். அவள் முன் நின்றிருந்தவர் பாபா உருவில் காணப்படவில்லை. சாட்சாத் மகாவிஷ்ணுவே தன்னுடைய கைகளில் சங்கையும், சக்கரத்தையும் ஏந்தியவாறு நின்றிருந்ததைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள். அவர் காலடியில் தடாலென விழுந்து வணங்கினாள்.
பாபா திக்கனிடம் கூறினார் “ நாளை முதல் உன் தாயாரை காலை வேளையில் என்னிடம் அழைத்து வராதே. யாரேனும் பார்த்து விட்டால் உங்களுக்கு அனாவசியப் பிரச்சனை ஏற்பட்டுவிடும். ஆகவே அவளை இருட்டிய பிறகு என்னிடம் அழைத்து வா”. மூன்று நாட்கள் எவரும் பார்க்காத நேரத்தில் கிளம்பிச் சென்று பாபாவை தரிசித்து ஆத்மா, உயிர், உடல் போன்ற தத்துவங்களில் பாடம் பெற்றவள் மூன்றாம் நாள் “ நான் யாருக்கு இனி பயப்பட வேண்டும்? நான் கடவுளின் குழந்தை. இனி எனக்கு இன்பமோ துன்பமோ கிடையாது. நான் ஒரு சுதந்திரப் பறவை. ஆகவே இனி நான் பாபாவை காலை பொழுதிலேயே சந்திப்பேன்” என தீர்மானம் செய்து கொண்டாள். அதன்படியே செயல் புரிந்தாள்.
நாட்கள் நகர்ந்தன. தாயும், மகளும் பாபாவின் ஆசிரமத்திற்கு சென்று வரத் துவங்கியது முதல் அவர்கள் வாழ்வில் அமைதி ஏற்பட்டிருந்தது. அது அவர்களுடைய செயலிலும் தெரிந்தது. அதைக் கண்ட அவளுடைய தந்தையும் மன ஆறுதல் அடைந்திருந்தார். ஆனால் அவருக்கு பாபாவின் ஆசிரமம் செல்வதற்கான விருப்பம் தோன்றவில்லை. வழக்கம் போல அவர் மது அருந்தியபடியும், புகை பிடித்தபடியும் இருந்தவண்ணம் அசைவ உணவையும் உண்டும் வந்தார். ஆனால் அவருடைய மனைவியோ இல்லை மகளோ அசைவ உணவை முழுமையாக விலக்கி வைத்து இருந்தனர். பலமுறை அவர்கள் அழைத்தும் பாபாவிடம் அவர் செல்லாததினால் மனம் வருந்திய சீதாதேவி பாபாவிடம் அது குறித்துக் கூறினாள். அவரோ அதற்காக கவலைப்படத் தேவை இல்லை எனவும் கூறிவிட்டார்.
பின் ஒரு நாள் பாபா திக்கனின் தந்தை ரதன்சந்திடம் தான் அவரை நினைத்ததாகக் கூறுமாறு செய்தி அனுப்பினார். அவர் கூறி அனுப்பி இருந்தபடி தந்தையிடம் சென்ற திக்கன் பாபா அவரை நினைத்துக் கொண்டு இருப்பதாகக் கூறினார் எனக் கூற ஒரு மின்னல் போன்ற அடி அவருடைய மனதில் விழுந்தது. “என்ன என்னை அவர் நினைத்துக் கொண்டு இருக்கின்றாரா? ஏதற்காக என்னை நினைக்க வேண்டும். அவரைப் பார்க்க நான் முயன்றேனா? இல்லை தவத்தில்தான் அமர்ந்தேனா ? நான் ஒரு தவமும் செய்யவில்லை, கடவுளை மனிதன் நினைக்க வேண்டுமே தவிற ஒரு அவதாரப் புருடர் என்னை பற்றி ஏன் நினைத்துக் கொண்டே இருக்கின்றார்?” அவருடைய மனதில் அந்த கேள்வி திரும்பத் திரும்ப எழும்பி நின்றது. அன்று முழுவதும் அது தொடர மறுநாள் காலையில் தன் மகளுடன் பாபாவைக் காண அவரும் கிளம்பிச் சென்றார். ரதன் சந்தை சந்தித்த பாபா அவரிடம் கேட்டார்” நீங்கள் ஆலயத்திற்கு செல்வது உண்டா ?”
“ ஏன், தினமும் நான் ஆலயத்திற்குச் செல்கின்றேனே…” என தடுமாறிக் கூறியவரிடம் பாபா “ அங்கு கடவுளுக்கு என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து இருக்கின்றீர்களா?” எனக் கேட்க ரதன்சந்த் “ அங்கு பால், நெய், மற்றும் பழங்களை கடவுளுக்கு நியவேத்தியமாகப் படைத்து பூஜிக்கின்றனரே” என்றார்.
சிரித்தபடியே பாபா கேட்டார் “ மகனே, ஒரு கல் உருவில் அமர்ந்து உள்ள கடவுளின் சிலைக்கே அத்தனை புனிதமான பொருட்களை பக்தர்கள் படைத்து பூஜிக்கையில் உன் உள்ளத்துக்குள்ளேயே குடி கொண்டு உள்ள கடவுளுக்கு நீ ஏன் மதுவையும், புலால் உணவையும் படைத்து அதன் முகம் கரிய நிறம் பெறும் வகையில் புகையை உள்ளே இழுத்து அவர் மீது விடவேண்டும்?”
பாபா கூறியது பெரும் அர்த்தம் வாய்ந்த செய்தி. ரதன்சந்த் மூளையில் அது மின்னலாகத் தாக்க, பாபாவின் காலடியில் தடாலென விழுந்தவர் தேம்பித் தேம்பி அழுது தன் தவறை மன்னிக்கும்படிக் கேட்டார். நடந்ததை மறந்துவிட்டு புது வாழ்வைத் துவக்குமாறு அறிவுறை கூறி அனுப்பினார் பாபா. அன்று முதல் திக்கன் குடும்பத்தினர் அனைவரும் பாபாவின் பக்தர்கள ஆயினர். நாட்கள் கழிந்தன. ரதன்சந்த் நோயினால் அவதியுற்று படுத்தப் படுக்கையிலானார். மருத்துவர்கள் அவருடைய உடல் நலம் தேற முட்டையை அருந்துமாறு எவ்வளவு கூறியும் பிடிவாதமாக ரதன்சந்த அதை உண்ண மறுத்து விட்டார். அவரைக் காண வந்த உறவினர்கள் அவருடைய சொத்தில் தம்முடைய பங்கு பறி போய்விடுமே என பயந்து ரதன்சந்திடம் “நீங்கள்தான் ஞானம் அடைந்து விட்டீர்களே, இனி உங்கள் சொத்தை எமக்குத் தந்து விடுங்களேன்” என லஞ்சை இன்றிக் கேட்ட பொழுது mரதன்சந்த் மறுத்து விட “இனி நீங்கள் மரணம் அடைந்தால் உங்களை பார்க்க வரமாட்டோம், உங்களுடைய இறந்த உடலை தூக்கிச் செல்லவும் மாட்டோம்” எனவும் பயமுறுத்திப் பார்த்தனர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை ரதன்சந்த். அவர்கள் இல்லை எனில் மனசாட்சி உள்ள வேறு பலர் அந்த காரியத்தை செய்ய முன்வருவார்கள் என்று கூறி அவர்களை அனுப்பி விட்டார். அதன் பிறகு தன்னுடைய மற்ற மகள்களுடைய திருமணத்திற்கென வைத்திருந்த அனைத்தையும் பொறாமை கொண்டு அலைந்த உறவினர்களுக்கு தானமாக ரதன்சந்த் கொடுக்க அவர்கள் வெட்கி தலை குனிந்தனர்.
ஓவ்ஒரு மாதமும் சீதா தேவி அருகில் இருந்த ஆலயத்திற்கு நெய் டின் ஒன்றை தவறாமல் அனுப்பி வந்தார். ஆனால் பாபாவின் ஆசிரமத்தில் சேர்ந்த பிறகு அதை நிறுத்தி விட அந்த ஆலயத்தின் பூஜாரி வந்து அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டார். சீதா தேவியோ மனிதப் பிறவி எடுத்துள்ள ஒவ் ஒருவரும் விளக்குப் போல எரியும் ஜோதியின் ஸ்வருபமே எனக் கூறி இனி தாம் தேவையற்ற அந்த காரியத்திற்கு நெய் அனுப்ப விரும்பவில்லை என அவரை அனுப்பி விட்டார். இப்படியாக அவருடைய குடும்ப வாழ்க்கை ஆலயத்தை தவிர்த்தது. பாபாவின் பக்தர்களாயினர்.

 
முதல் கட்டம்

சிவன் ஆலயங்களில் சிவனுக்கு முன்பாக நந்தியைக் காணலாம். சிவனுக்கு எந்த ஒரு தனி உருவமும் இல்லை. அவருக்கு அழிவும் இல்லை, பிறப்பும் இல்லை. இறப்பிற்கும் பிறப்பிற்கும் அப்பாற்பட்டவர் அவர். ஜோதி ஸ்வரூபத்தில் உள்ளவர். சிவன் ஞான சக்தியை தருபவர். நந்தி அவருடைய ஞானத்தை ஏற்றிச் செல்லும் வாகனம். ஆக நந்தியும் சிவனும் உருவம் அற்றவர்கள். மக்களுக்கு புரிய வைக்கவே ஒரு உருவ வடிவில் தோன்றியவர்கள். ஓவ்ஒரு 5000 வருட முடிவிலும் கலியுகம் தோன்றி இந்த உலகம் அழிந்து புது பிறப்பு எடுக்கும். பிறப்பு எடுக்கும் அனைத்துமே ஆத்மா எனும் ஜோதி பிந்து வடிவமான ஆத்மாக்கள். அவை தத்தம் கர்மாக்களுக்கு தகுந்தாற்போல் பலனை அனுபவித்தப் பின் முழுத் தூய்மை அடைந்த நிலையில் மீண்டும் பூமிக்கு வந்து மனித உடலில் புகுந்து கொண்டு அவரவருக்கு கொடுக்கப்பட்டு உள்ள கதா பாத்திரத்தை, நடந்தேறும் நாடகததில் அரங்கேற்றிச் செல்பவர்கள்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் கலியுகம் பிறந்தது. ஜோதி ஸ்வரூபமான பரமாத்மா எனும் சதாசிவர் தன்னுடைய வாகனமான நந்தியை தேடினார். அதாவது எவர் மூலமாவது ஞானத்தையும், யோகத்தையும் பூமியிலே பரப்பி மீண்டும் அனைத்து மானிடப் பிறவிகளையும் நல்வழிப்படுத்தி தீமைகளை உலகில் இருந்து அகற்ற முடிவு கொண்ட பொழுது அவருக்குக் கிடைத்தவரே தாதா லேக்ராஜ் என்ற வியாபாரி. அவர்
மூலம் பிரும்மனின் குழந்தைகள் எனப்பட்ட பிரும்ம குமாரர்களை மற்றும் பிரும்ம குமாரிகளை உருவாக்கி பூமியை தூய்மைப்படுத்தினார்.
அப்படிப்பட்ட நிலையில் முதலில் கிடைத்த மாணிக்கக்கல் போன்ற பிரும்ம குமாரியே ஹிருதய புஷ்பா. அவருடைய சொந்த சகோதரியான மோதில் என்பவரே சந்திராமணி தாதியாவார். அவருடன் பள்ளியில் படித்த ரமா தேவியே பிரகாஷ்மணி என்பவர். ஓம்ராதே மம்மா எனும் ஜகதாம்பா என்பவர் ஸரஸ்வதியானார். முதலில் 260 பிரும்மகுமாரிகளே இருந்த ஓம் மண்டலி மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. சிறு வயது முதலே தன்னுடைய மனக் கண்களில் தோன்றிய கிருஷ்ணரைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஹிருதயபுஷ்பா இப்பொழுது அவருடைய பதினெட்டாம் வயதில் மெத்த ஞானம் பெற்ற யோகினியாகி விட்டார். சிவயோக மந்திர் ஸ்கூல் என ஆரம்பிக்கப்பட்ட பாபாவின் ஆசிரமப் பள்ளியில் முதலில் அவர் ஒரு ஆசிரியையாக சேர்ந்தார். அந்த பள்ளியில் ஆத்மா, பரமாத்மா,கால சக்கரம், திருமூர்த்தி தத்துவம், உலக மாற்றங்கள், போதனைகள் போன்றவை போதிக்கப்பட்டன. அவரிடம் பாடம் பயில குல்சார், இஷா சரளா பெஹன் போன்றோரும் கடவுளின் குழந்தைகளான பிரும்மகுமாரிகளாக இணைந்தனர்.
ராதா அவர்கள் ஓம் ராதே என அனைவரினாலும் அழைக்கப்பட்டார். அவள் அழகிய உருவம் கொண்டவராக இருந்தாலும் ஆண்களைப் போன்ற சுபாவத்தைக் கொண்டு இருந்தார். அவர் ஞான மார்கத்தில் சிறந்து விளங்கியவர். பாபா அவர்கள் வாணி எனும் போதனைகளை தரும் பொழுது ஆனந்தத்தில் குதித்தாடுவார். அவர் லஷ்மி தேவிக்கு இணையானவர். அவர் அந்த ஆசிரமத்தில் வந்து சேரும் முன்பே பாபாவின் மனைவியான யசோத மாதா என்பவர் ஓம் ராதே ஜகதாம்பா ஒரு காலத்தில் சரஸ்வதியாக வருவார் என்பதை உணர்ந்து இருந்தார். ஆக சங்கம் யுகத்தில் வந்த ஓம் ராதேயை அனைவரும் மம்மா எனவே அழைக்கத் துவங்கினர். பாபாவின் உள்ளத்தில் இருந்து வந்த வாணியும், குரலும் அவருடையது அல்ல எனவும், பரமாத்மனே அவரது வாயில் இருந்து சொற்களை கூறுகின்றார் என அனைவரும் உணர்ந்தனர். ஓம் ராதே ஆசிரமத்திற்கு வந்த பின் சிவபெருமானின் வாகனமான நந்தியைப் போலவே அவரும் பாபாவின் வாகனமாக இருக்க வந்துள்ளார் என்பதையும் புரிந்து கொண்டனர்.

 
போதனைகள்

ஹிருதயபுஷ்பா செல்வந்தர் வீட்டில் இருந்து வந்த பெண்மணி என்பதினால் அவருக்கு எந்த வேலையையும் செய்ய வாய்ப்பு இருந்ததில்லை. ஒரு முறை அவரை குறிப்பிட்ட ஒரு சமையல் செய்ய பிரும்மகுமாரி ஒருவர் கூறிய பொழுது தனக்கு அதை செய்யத் தெரியாது என அவர் கூறி முடிக்கவும் அவருடைய பின்னால் பாபா வந்து நின்று இருந்தார். தெரியாது என்பதே இருக்கக் கூடாது என்ற சித்ததந்தத்தைக் கடை பிடிக்க
வேண்டும் எனக் கூறிய அவர் ஹிருதயபுஷ்பாவிற்கு அந்த சமையலை எப்படி செய்ய வேண்டும் என்ற செய்முறையை தானே கற்றுக் கொடுக்க அவரும் அதை திறமையுடன் செய்தார்.
இன்னொரு முறை எரிந்து கொண்டு இருந்த விறகுக் கட்டைகள் மீது வைக்கப்பட்டு இருந்த பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக் கொண்டு இருந்தது. அடுப்பு எரிந்து கொண்டு இருக்கையில் அதில் வைக்கப்பட்டு இருந்த சில விறகுகள் அடுப்பின் வெளிப் பகுதிக்கு வந்து எரிந்து கொண்டு இருந்தது. அந்த வழியாகச் சென்ற ஹிருதயபுஷ்பா ஒரு நிமிடம் நின்று கொண்டு அதை பார்த்தார். ஆனால் விறகுகளை சரிப்படுத்த
முயலவில்லை. தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல செல்லத் துவங்கினார். அப்பொழுது அந்த வழியே வந்து கொண்டு இருந்த பாபா ஹிருதயபுஷ்பாவின் நடத்தையைக் கண்டார். அடுப்பை விட்டு வெளியே வீணாக எரிந்து கொண்டு இருந்த விறகுகளை ஏன் சரியாக மாற்றி வைக்கவில்லை என அவளிடம் கேட்ட பொழுது அந்த வேலை தன்னுடையது அல்லவே என ஹிருதயபுஷ்பா கூறினார். பாபா தானே அந்த விறகுகளை சரி செய்த பின் வேலை எவருடையதாக இருந்தாலும்; வீணாகிக் கொண்டு இருப்பதை சரி செய்த பின் தன்னிடம் வந்து அதை செய்யத் தவறியவர் குறித்துக் கூற வேண்டுமே தவிற ஒரு சக்தி வீணாவதைப் பார்த்துக் கொண்டு இருப்பது தவறு என பாபா அவரை திருத்தினார். அதன் மூலம்
அவர் தெரிவித்த கருத்து என்ன எனில் என்னை நீ வழிகாட்டியாக அமைத்துக் கொள் என்ற தத்துவமே.
ஒருநாள் அவளிடம் பாபா கூறினாள் “ எப்பொழுதும் யோகா செய்து கொண்டு இருக்க வேண்டும்”. ஹிருதயபுஷ்பா நினைத்தாள் எப்பொழுதும் யோகா செய் என்றால் உறங்குவது எப்பொழுது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது எப்படி?, மற்றும் சாப்பிடுவது எப்படி? அதற்கான விளக்கத்தை பாபாவிடம் அவள் கேட்டபொழுது பாபா கூறினார் “ எப்போதும் யோகா செய்ய வேண்டும் என்றால், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தபடி செய்ய வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. நீ எந்த வேலையில் இருந்தாலும் உன் நினைவு மட்டும் சிவா என்ற ஜோதியுடன் கலந்து இருக்க வேண்டும். அந்த வேலைகளை அவருடைய வேலையாக நினைத்தபடி செய்து கொண்டு இருக்க வேண்டும். மனதின் நோக்கமும் உடலுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கும் இடைவெளியோடு அந்த வேலையை ஒரு ஜடமாக செய்து கொண்டு சதா அவர் நினைவுடன் இருந்தால் அதுவே யோகாவை தொடர்ச்சியாக செய்வதற்கு சமம்”
ஹிருதயபுஷ்பா செல்வந்தர் வீட்டில் இருந்து வந்திருந்ததினால் அவரால் சாதாரணமாக மற்றவர் செய்யும் வேலைகளை செய்யத் தெரியவில்லை. அவரை ஒரு நாள் பாபா அழைத்து  அங்குள்ள கழிவறைகள் அனைத்தையும் சுத்தம் செய்யுமாறு கூறி விட்டார். மிகவும் மோசமான நிலையில் இருந்த கழிவரைகளை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பது தெரியாததினால் தனது வெறும் கைகளினால் சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் சோப்புக்களை எடுத்து கமோடுகளை தனது கைகளினால் தேய்த்து அலம்பத் துவங்கினார். கைகள் புண்ணாகி விட்டன. அதைக் கண்ட பாபா பதறிப் போய் அவளை தன் அருகில் அழைத்து மென்மையாகத் தடவிக் கொடுத்து கைகளை சுத்தமாக்கிக் கொண்டு வருமாறு ஆணையிட்டார். அன்றும் தன்னுடைய கைகளினாலேயே அவளுக்கு உணவை ஊட்டி விட்டார்.
இன்னொருமுறை பாபாவிடம் சென்ற ஹிருதயபுஷ்பா தனக்கு மூன்று கால வேலைகளை தொடர்ந்து கொடுக்கும்படி வேண்டினார். பாபாவும் அவரை காலை ஐந்து மணி முதல் இரவு பதினோறு மணிவரை காவல் காக்கும் பணியில் அமர்த்தினர். ஹிருதயபுஷ்பாவும் ஆண்களைப் போல சட்டை மற்றும் அரை டிராயரை போட்டுக் கொண்டு ஆசிரமத்தின் வாயிலில் காவல் பணியில் நின்றுக் கொண்டு இருந்தார். அப்போது அவளுடைய சகோதரர் தன்னுடைய பெற்றோர்களைப் பார்க்க ஆசிரமத்திற்கு வந்த பொழுதும் அவரை உள்ளே நுழைவதற்கான விதிமுறைகளை கண்டிப்பாக செய்த பின்தான் உள்ளே அனுப்பினாள். அவள் ஆண்கள் உடையில் இருப்பதைக் கண்ட பாபா ஆச்சரியத்துடன் அவளிடம் அந்த கோலத்தில் இருக்கலாமா எனக் கேட்க அவரிடம் அவளுடைய சகோதரனும் அதே கேள்வியைக் கேட்ட பொழுது தான் அவனிடம் தன் உடலைப் பார்க்காமல் தன்னுடைய ஆத்மாவைப் பார்க்க வேண்டும் எனக் கூறி விட்டதாகத் தெரிவிக்க பாபா மகிழ்ச்சி அடைந்துக் கூறினார் “குழந்தாய், நீ முழுமையாகத் தேறி விட்டாய். போ.......... உன் சகோதரனை உன் பெற்றோரிடம் அழைத்துச் செல்” எனக் கூறி அனுப்பினார்.
ஆசிரமத்தில் உள்ளவர்கள் தாங்கள் எத்தனை நேரம் வேலை செய்தோம் என்ற குறிப்பு வைத்திருப்பார்கள. அவற்றை திடீர் திடீர் என பாபா வந்து பார்த்து மதிப்பெண்கள் தருவார். ஒரு நாள் அனைத்து குறிப்புக்களையும் பார்த்த பாபா ஹிருதயபுஷ்பாவின் குறிப்பில் வேலை செய்த நேரம் பதினேழு என இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்து அவளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என எண்ணினார். மற்றொரு பிராமணியை ஹிருதயபுஷ்பாவின் காவல் பணியில் இரண்டு மணி நேரம் காவல் புரியுமாறும் அந்த இரண்டு மணி நேரம் ஹிருதயபுஷ்பா ஓய்வு எடுக்கட்டும் எனவும் கூறி அனுப்பினார். ஆனால் ஹிருதயபுஷ்பா என்ன செய்தார் தெரியுமா? அந்த இரண்டு மணி நேர அவகாசத்தில் யோகாவில் அமர்ந்து இருந்தார். அது குறித்து பாபா அவளிடம் கேட்டதற்கு “தான் தனக்கு கிடைத்துள்ள நேரத்தை வீணடித்து தனக்கு பின்னர் கிடைக்க இருக்கும் பல நன்மைகளை இழக்க விரும்பவில்லை” எனக் கூறி விட்டார்.

 
சோதனைகள்

ஹிருதயபுஷ்பாவிற்கு பாபா கூறும் வாணி (சொற்பொழிவு) கேட்பதும் யோகாவில் அமருவதும் மிகவும் பிடித்தமானது. ஒரு முறை அவர் உடல் நலம் இன்றி இருந்த பொழுது பாபா அவரை உடல் நலம் அடையும்வரை பயிற்சிக்கு வரவேண்டாம் எனவும், மாடி அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்குமாறும் கூறிவிட்டார். ஆனால் ஹிருதயபுஷ்பாவினால் முரளியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. பாபா முரளி கூறிக் கொண்டு இருந்த அறைக்கு வெளியில் போய் நின்று கொண்டு அவர் கூறுவதைக் கேட்டு மகிழ்ந்தார். கிருஷ்ணர் குழல் ஊதும் பொழுது தம்மை அழைக்கவில்லை என்றாலும் அந்த ஓசையினால் ஈர்கப்பட்ட கோபிகைகள் ஓடிப் போய் அதைக் கேட்டு ரசிப்பதில்லையா ? அது போலத்தானே இதுவும்!
ஒரு முறை அந்த ஊரில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று இருந்த சில குடும்பத்தினர் திரும்ப வந்து விட்டனர். திரும்பி வந்து விட்டவர்களின் வீட்டுப் பெண்கள் சிலர் ஓம் மண்டலி குறித்துக் கேள்விப்பட்டு தாமும் ஓம் மண்டலியில் சேர விரும்பினர். மேலும் ஓம் மண்டலி தத்துவத்தில் நம்பிக்கை ஏற்பட்ட சில திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அந்த பெண்மணிகளும் ஓம் மண்டலியில் சேர விரும்பினர். ஆனால் அவர்கள் வீட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தப் பெண்களை வீட்டில் இருந்த ஆண்கள் அடித்து உதைத்து கொடுமைப் படுத்தத் துவங்கி ஓம் மண்டலி எதிர்ப்பு இயக்கத்தையும் துவக்கினர். நாளாக நாளாக ஓம் மண்டலி அப்படிப்பட்ட எதிர்புக்களை சமாளிக்க முடியாமல் திணறியது. 1938 ஆம் ஆண்டு அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து ஆசிரமத்திற்கு தீ வைக்க முயன்றனர். பாபா அவர்களிடம் தாம் மண்டலியை உருவாக்கவில்லை எனவும், அதை நிறுவியவர் தன் உடலில் உள்ள பரமாத்மனே என எத்தனை கூறியும் அவர்கள் அதை கேட்பதாக இல்லை. கடைசியாக காவல்துறையினர் வந்து தீயை அணைத்து விபத்தை தவிர்த்தனர்.
அது போல மீண்டும் இரண்டாம் முறை ஆசிரமம் தாக்கப்பட இருந்த பொழுது, ஹிருதயபுஷ்பா தன்னுடன் இருந்த மற்ற பிரும்மகுமாரிகளுடன் சேர்ந்து ஆசிரமத்தின் வாசலில் சென்று நின்று கொண்டு காவல் பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. தனது வீட்டில் இருந்த ஒரு பெண்ணை கயிற்றினால் நன்கு கட்டிப் போட்டுவிட்டு அவளை ஒரு அறைக்குள் தள்ளி இரட்டை தாப்பாள் போட்டுவிட்டு வந்து விட்டதாகவும், இனி அவள் எப்படி ஓம் மண்டலிக்கு அவள் வருவாள் எனப் பார்ப்போம் என ஒரு ஆண் கொக்கரித்த பொழுது, அந்தப் பெண் சிரித்தபடி அந்த இடத்திற்கு வந்து பிரும்மகுமாரிகளுடன் நின்றாள். அவன் வெட்கப்பட வேண்டியதாயிற்று. நாளாக நாளாக அந்த ஊரில் இருந்த ஆண் மக்களினால் பிரச்சனை அதிகரிக்கத் துவங்கியதினால் ஆசிரமத்தை கராச்சி நகருக்கு மாற்ற பாபா முடிவு செய்தார். அதன்படி 1938 ஆம் ஆண்டு கராச்சிக்குச் சென்று அங்கு ஐந்து பங்களாக்களை வாடகைக்கு எடுத்து பேபி பவன், மாணவர் பவன், அன்பு பவன், ராதா பவன் மற்றும் ஓம் நிவாஸ் என்பவற்றை நிறுவினார்.
ஒரு முறை ஹிருதயபுஷ்பாவிற்கு ஹடயோகத்தைப் பற்றிய சந்தேகம் தோன்றியது. யோகாவில் அமர ஓவ்ஒருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஹிருதயபுஷ்பாவிற்கு இரவு 12.00 முதல் இரண்டு மணிவரை யோகா செய்ய நேரம் தரப்பட்டு இருந்தது. அவள் இளம் பெண்ணாகவே இருந்ததினால் அந்த நேரத்தில் தூக்கம் வந்து கொண்டே இருந்தது. அது குறித்து பாபாவிடம் அவள் வினவியபொழுது அவர் கூறினார் ”தீய சக்தியான கும்பகர்ணன் உன் பிறவியில் பாதியை ஆக்கரமித்துக் கொண்டு உள்ளான். அவனை நீ விரட்டாவிடில் உன்னுள் அவன் புகுந்து கொண்டு உன்னை ஆக்ரமித்து விடுவான். ஆகவே அவனை துரத்த முயற்சி செய்ய வேண்டும்” எனக் கூறியது அவளுடைய உடலில் மின்சாரத்தை செலுத்தியது போல இருந்தது. அன்று முதல் கண் அயராமல் இரண்டு மணி நேரம் அல்ல நான்கு மணி நேரம் விடியற் காலப் பொழுதில் அவள் தூக்கத்தை வெற்றி கொண்டு யோகாவை செய்யத் துவங்கினார்.
மற்றொரு சம்பவம். ஹிருதயபுஷ்பாவனால் மனதில் தன்னை அறியாமல் எழுந்திருந்த துக்கத்தைத் தாங்க முடியவில்லை. பாபா...... பாபா உன்னை பார்க்க வேண்டும் என இரவெல்லாம் விழித்திருந்தபடி அழுது கொண்டு இருந்தாள். அதை உணர்ந்த பாபா அவள் இருந்த அறைக்குச் சென்று அவளுடைய கண்களை பார்த்தபடி நான்கு மணிநேரம் அமர்ந்திருக்க அவள் யோக நிலைக்குச் சென்று விட்டாள். மனம் அமைதி அடைந்தது. அதிகாலை எப்பொழுதும் போல தன் உணர்வுக்கு வந்தவள் யோக செய்யத் துவங்கினாள், பாபா அவள் மனதை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு விட்டார் என்பதினால் அவள் மனதில் சஞ்சலம் ஏழவில்லை. பாபாவின் நினைவின்றி இருக்க முடியாமல் ஹிருதயபுஷ்பாவின் மனம் அழுது புலம்பியது. ஆசிரமத்தின் மாடியில் வசித்த வந்த அவள் ஒரு நாள் பாபாவிற்கு கடிதம் அனுப்பினாள் “பாபா, சதா உங்கள் நினைவுடனேயே இருக்கும் எனக்கு நாள் முழுவதும் உங்கள் எதிரில் அமர்ந்து கொள்ள வேண்டும் போல உள்ளது. என்னை நாள் முழுவதும் அமர்ந்தபடி உங்கள் மீது தியானம் செய்ய அனுமதிப்பீர்களா?” என எழுத மாடியில் வசித்து வந்த பாபா அவளுக்கு பதில் அனுப்பினார் “ சரி, நீ நாள் முழுவதும் தியானத்தில் இரு. உனக்கு இடையிடையே தண்ணீர் தர நான் ஒரு பிரும்மகுமாரியை அனுப்பி வைக்கின்றேன்”.
ஹிருதயபுஷ்பா யோகாவில் அமர்ந்து விட்டாள். சில மணி நேரம் கழிந்தது. தாகம் எடுக்கத் துவங்கியது. தாகம் அதிகரிக்க அதிகரிக்க யோகாவை தொடர முடியாமல் எழுந்து சென்று அந்த பிரும்மகுமாரியைத் தேடினாள். அவள் எங்கும் காணவில்லை. சற்று நேரம் தேடிய பின் திரும்பி வந்த ஹிருதயபுஷ்பாவின் மனதில் குற்ற உணர்வு தோன்றியது “என்ன காரியம் செய்துள்ளேன். ஆத்மாவான நான் சுதந்திரமாக சிந்தித்தால் தாகம் எடுக்குமா? தாகம் இந்த உடலுக்குத்தானே ஒழிய என் ஆத்மாவிற்கு அல்லவே என உணர்ந்தவள் மீண்டும் யோகவில் ஆழ்ந்தாள், தன்னை மறந்தாள், சமாதி நிலைக்குச் சென்று விட்டாள்.
இரவு முடிந்தும் ஹிருதயபுஷ்பா கீழே வரவில்லையே என யோசித்தபடி அவளைத் தேடிக் கொண்டு சென்ற ஒரு பிரும்மகுமாரி ஹிருதயபுஷ்பா சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு மனம் பதறி அவள் எதிரில் சென்று அமர்ந்து கொண்டு அவளுக்கு தன்னுடைய சக்தியை யோக சக்தியினால் செலுத்த தன் நிலைக்குச் வந்த ஹிருதயபுஷ்பா எப்போதும் போல பாபாவின் முன் சென்று நின்றாள். அவளை பரிவுடன் கண்ட பாபா மம்மாவிடம் அந்த குழந்தைக்கு சாப்பாடு கொண்டு வரும்படிக் கூறிவிட்டு அதை தானே தன்னுடைய கைகளால் ஹிருதயபுஷ்பாவிற்கு ஊட்டி விட்டார். என்னே அந்த அன்பின் வலிமை!

 
மவுண்ட் அபுவில் ஆசிரமம்

இப்படியாக அவர்கள் அந்த ஆசிரமத்தில் 1937 முதல் 1950 ஆம் ஆண்டுவரை வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது சில காரணங்களினால் பாபா தன்னுடைய ஆசிரமத்தை இந்தியப் பகுதியில் உள்ள அபு மலைக்கருகில் மாற்ற வேண்டி வந்தது. மவுண்ட் அபு புண்ணிய பூமியாகக் கருதப்பட்டது. அங்குதான் பிரும்மாவும், ஸரஸ்வதியும், சிவபெருமானும் தவத்தில் இருந்திருக்கின்றனர். பல சன்யாசிகளும் சாதுக்களும் வாழ்ந்த இடம் அதுவாம்.
மவுண்ட் அபுவிற்கு வந்த ஹிருதயபுஷ்பா அங்கு நிலவிய சீதோஷ்ட நிலையினால் உடல் நோய் உற்றார். படுத்தப் படுக்கையில் விழுந்த அவருக்கு ஜகதாம்பா சரஸ்வதி தானே பக்கத்தில் அமர்ந்து இருந்தபடி ஏழு நாட்கள் பணிவிடைகள் செய்தார். அது போல மம்மாவும் அவளை தன் மடியிலேயே தலை வைத்துப் படுக்குமாறு கூறி அவளுக்கு துணையாக இருந்தார். ஹிருதயபுஷ்பா எந்த அளவு அவர்களால் அன்பு செலுத்தப்பட்டு இருந்திருக்கின்றார் என்பது இதன் மூலம் தெரியும்.

 
சோதனைக்கு மேல் சோதனை

எந்த ஒரு நிலையிலும் அவர் மனம் கலங்கியது இல்லை. பதினான்கு வருடங்கள் கழிந்திருந்தன. அவள் யோக சித்தியை முழுமையாகப் பெற்று இருந்தாள். ஆசிரமத்தில் வந்த மாணவர்களுக்கு யோகாவை போதித்து வந்தார். அப்படிப்பட்ட நிலையில் ஒரு
முறை ஒரு சன்யாசி மதுபனுக்கு வந்தார். அவருக்கு ராஜயோகாவை கற்றுத் தரும்படி பாபா கூறினார். ஹிருதயபுஷ்பாவும் அந்த சன்யாசிக்கு இராஜயோகாவை கற்றுத் தந்தார். அந்த சன்யாசி மிகவும் மகிழ்வுற்று தனக்குக் கிடைத்த அந்த இன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டும் எனக் கூறி யோகாவை கற்றுத் தர எவரையாவது சித்தாபூருக்கு அனுப்புமாறு பாபாவிடம் கேட்டார். பபாபாவும் அதற்கேற்ப ஹிருதயபுஷ்பாவை அங்கு அனுப்பினார்.
சித்தாபூரை அடைந்ததும் அந்த சன்யாசி அவரை வரவேற்று அருகில் இருந்த ஆலயம் ஒன்றில் தங்க வைத்து விட்டு சென்று விட்டார். மூன்று நாட்கள் அவரும் வரவில்லை. குடிக்க தண்ணீரோ, சாப்பிட உணவோ எதுவும் கிடையாது. ஆனால் ஹிருதயபுஷ்பா மனம் கலங்கவில்லை. யோகாவில் அமர்ந்துவிட்டார். பசி, தூக்கம், தாகம் என எதுவுமே அவருக்கு வரவில்லை. மூன்றாம் நாள் அங்கு வந்த சன்யாசி அவர் எதுவும் சாப்பிடவில்லை என்பதை அறிந்து கொண்டு சிறிது மண்கள் கலந்த மாவையும், அடுப்பு மூட்டிக் கொள்ள ரயில் இஞ்சினில் பயன்படுத்தப்படும் கரித் துண்டையும் தந்து விட்டுச் சென்றார். அதை ஹிருதயபுஷ்பாவினால் சாப்பிட முடியாத அளவு மண்ணாக இருந்ததினால் மீண்டும் அவர் யோகாவில் அமர்ந்து விட சாப்பாடும் தண்ணீரும் இன்றி அடுத்த நாளும் இருந்தார். உடல் நிலை எந்த விதத்திலும் மோசம் அடையவில்லை. அவர் வெளியூர் சென்று முதல் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டார்.
ஒருநாள் திடீரென ஒரு தம்பதியினர் அங்கு வந்தனர். தம்மை பாபா அனுப்பி உள்ளார் எனவும் தங்களுடன் மகாசனாவுக்கு வந்து அங்கு யோகாவை கற்றுத் தருமாறும் வேண்டினர். ஆனால் ஹிருதயபுஷ்பாவோ பாபாவின் அனுமதி இன்றி அந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் எனக் கூறி விட்டு பாபாவின் அனுமதியைக் கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பினார். பாபா தான்தான் அவர்களை அனுப்பியதாகக் கூறி அவரை மகாசனாவுக்குச் செல்வுமாறு ஆணையிட்டார். மகாசனாவுக்குச் சென்றவருக்கு நல்ல ஒரு வீட்டில் இடம் தரப்பட்டது. அனைத்து வசதிகளும் போதுமான உணவும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் அங்கும் அவருக்கு ஒரு சோதனை.

 
பயணம்

அவருடைய தந்தை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் உடனே புறப்பட்டு வருமாறும் அழைப்பு வந்தது. அதைத் தவிற பாபாவிடம் இருந்தும் செய்தி வந்தும் ஹிருதயபுஷ்பா தன்னுடைய கடமையை விட்டு விட்டுச் செல்ல மறுத்துவிட்டார். ஆகவே பாபா அவளுடைய வீட்டிற்கு தைரியபுஷ்பா என்பவரை அனுப்பி அவருடைய அன்னைக்கு ஆறுதல் கூறினார். சில நாட்களில் ஹிருதயபுஷ்பாவின் தந்தை குணம் அடைந்து விட்டார். இந்த சம்பவத்தின் மூலம் அவருடைய கடமைப் பற்றையும் திடமான மன உறுதியையும் மற்றவர்களுக்கு பாபா புரிய வைத்தார். அவருக்கு மட்டும் அல்லவா தெரியும் நடந்தது அனைத்தும் நாடகமே என. அங்கிருந்து கிளம்பிச் சென்று அஜ்மீர், புதுடில்லி மற்றும் மதராஸ் என அன்று அழைக்கப்பட்ட சென்னை நகருக்கும் சென்று பலருக்கும் யோகா பயிற்சியை கற்றுத் தந்தார். அடுத்த சில தினங்களில் மவுணட் அபுவிற்கே திரும்புமாறு கட்டளை வர அவரும் மவுண்ட் அபுவிற்குத் திரும்பி விட்டார்.
மவுண்ட் அபுவிற்குத் திரும்பியவுடன் அவர் யோகாவில் இருந்த பொழுது எல்லாம் “உடனே கிளப்பிச் செல்ää உடனே கிளப்பிச் செல்” என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதில் ஒலிக்க அதை பாபாவிடம்; கூறினார். அவர் அந்த வார்த்தைகளைக் கூறியது மகாதேவ்தான் எனவும் அவள் உடனே கிளம்பி கர்னாடகாவுக்குச் சென்று அங்கு யோகக் கலையை பரப்ப வேண்டும் என ஆணையிட்டார். மவுண்ட் அபுவில் இருந்து கிளம்ப ஹிருதயபுஷ்பாவிற்கு மனம் இல்லை. ஆனாலும் பாபாவின் நிர்பந்தத்தினால் அவர் கர்னாடகாவிற்குக் கிளம்பிச் செல்ல வேண்டியதாயிற்று. அவருடைய கையில் ஐந்து ருபாய் கொடுத்து பம்பாய் சென்றுவிட்டு அங்கிருந்து கிளம்பி கர்னாடகா செல்லுமாறு கூறிய பின் ரெயிலில் அவரை அனுப்பினார்.
முதலில் தர்மசாலாவிற்குச் சென்றார். அவருடைய மற்றொரு சகோதரி பம்பாயில் இருந்தார். மூன்று நாட்கள் தர்மசாலாவில் தங்கி அங்கு பலருக்கும் பாபாவின் ஞானத்தைப் பரப்பி யோகாவை கற்றுக் கொடுத்தார். அதன் பின் தன்னுடைய மூத்த சகோதரியான கிகாபென் என்பவருடன் கிளம்பி பெங்களூருக்கு சென்றார். பெங்களூரில்தான் அவருடைய சகோதரியான கிகாபென் இருந்தார். அவருடன் பெங்களூருக்கு 1954 ஆம் ஆண்டு வந்தவர் ஒருவருடைய வீட்டில் சென்று யோகா கலையை கற்றுத் தரத் துவங்கினார். அவருடைய சகோதரியான கிகாபென் ஹிருதயபுஷ்பாவின் நடைமுறைகளுக்கு– உணவுப் பழக்கத்தில் இருந்து உடைகள் உடுத்துவது வரை- அனைத்திலும் முற்றிலும் மாறுபட்டவர்.

 
பிரும்மகுமாரர்களும் மற்றும் பிரும்மகுமாரிகளும்

முதலில் வகுப்பிற்கு வந்தவர்களில் சுந்தரிமாதாவும், இராதா மாதாவும் முக்கியமானவர்கள். பயிற்சியின் பொழுது இராதா மாதாவின் கணவர் இறந்துபோன செய்தி ஹிருதயபுஷ்பாவின் மூலமே அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த செய்தி கிடைத்தவுடன் ஹிருதயபுஷ்பா முதலில் அந்த சேதியை இராதாவிற்கு தெரிவிக்காமல் ஆத்மா என்பது என்ன, அதன் தன்மை என்ன, நமக்கும் இந்த உடலுக்கும் என்ன சம்மந்தம், ஆத்மாவிற்கு இறப்பும் பிறப்பும் இல்லை போன்ற அனைத்தையும் மிகத் தெளிவாக கூறினார். அதன் பின்னரே மெல்ல அவருடைய கணவர் மறைந்த செய்தியைக் கூறினார். அதைக் கேட்ட இராதா மாதா மயக்கம் அடைந்தார். மயக்கம் அடைந்து தன் நிலைக்கு வந்தவர் எந்த விதமான சலனமும் இன்றி இருந்தார்.
இராதா மாமாவிற்கு ஹிருதயபுஷ்பா போதனைகள் செய்து கொண்டிருந்த பொழுது சற்று தூரத்தில் அமர்ந்தபடி லஷ்மம்மா என்ற பெண்மணியும் அவற்றைக் கேட்டுக் கொண்டு இருந்தார். என்ன அதிசயம். அப்படியே அவரும் அங்கேயே யோகா செய்யத் துவங்கி சமாதி நிலைக்குச் சென்று விட்டார். முழித்தெழுந்தவர் அப்படியே சென்று ஹிருதயபுஷ்பாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கும் அவர் வந்து யோகாவை கற்றுத் தரவேண்டும் என வேண்டினார். அன்று மவுண்ட் அபுவில் இருந்து ஒரு கடிதம் இராதா மாதாவிற்கு வந்தது. அதை அவர் தன்னுடைய தலையாணிக்கு அடியில் வைத்துக் கொண்டு உறங்கி விட்ட இராதா மாதா தன்னுடன் கிருஷ்ணர் மற்றும் கோபிகைகள் இணைந்து நடனம் ஆடுவது போல இருந்ததைக் கண்டார். அன்று முதல் அவர் இராதிகாவாக மாறினார். இராதிகா மற்றும் லஷ்மம்மா எதிரில் மற்றும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
ஹிருதயபுஷ்பாவின் கைகளில் கொதிக்கும் எண்ணை கொட்டி விட வலியினால் அவர் துடித்தாலும் வலி உடலுக்குத்தானே ஒழிய அதனுள் உள்ள ஆத்மாவுக்கு அல்ல எனக் கூறி மருந்துகள் எதையும் போடாமல் யோகாவில் இருந்தபடி தன்னை குணமாக்கிக் கொண்டார். அதன் மூலம் ஐந்தாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் நடந்தேறும் நாடகத்தின் கதையே இது என அவர்கள் புரிந்து கொண்டனர்.
லஷ்மம்மாவின் கனவில் ஒருநாள் பாபா தோன்றி ஹிருதயபுஷ்பாவின் மூலம் அவளுக்கு ஒரு இரகசியத்தைக் கூற உள்ளதாகக் கூறினார். அவர் கூறியது போலவே இரவு எட்டு மணிக்கு ஹிருதயபுஷ்பா அங்கு வந்தார். அவளுக்கு சிவபாபா கூறிய சில இரகசியங்களைக் கூற இருப்பதாகக் கூறி விட்டு ஆத்மாக்களின் பயணம், எண்பத்தி நான்கு பிறவிகள், நாலாயிரம் வருட உலக சக்கரம், உலக நாடகம், ஆரம்பமும் முடிவுமற்றவருடைய உண்மைகள் போன்ற பலவற்றை விலாவாரியாக விளக்கினார். அதைக் கேட்ட லஷ்மம்மா கடவுளே ஹிருதயபுஷ்பாவின் உருவில் தாம் அனைவரையும் நல்வழிப்படுத்த கர்னாடகாவிற்கு வந்து உள்ளார் எனப் புரிந்து கொண்டார்.
லஷ்மியம்மாவிற்கு ரோஸி மற்றும் சந்துரு என்ற மகளும் மகனும் உண்டு. ரோஸி மிகவும் மென்னையானவர் சந்துருவுக்கு பாபாவின் போதனைகளில் ஈடுபாடு இல்லை. ஆனால் ஹிருதயபுஷ்பாவிடம் அது குறித்துக் கேட்க தைரியமும் இல்லை. லஷ்மியம்மாவிற்கு அவர்களுடைய குணம் தெரியும் என்பதினால் சந்துருவின் சந்தேகத்திற்கு ஹிருதயபுஷ்பா மூலம் விளக்கம் அளிப்பது முக்கியம் என கருதி அவர்கள் முன்னால் தனக்கு ஒன்றும் தெரியாதது போல சில கேள்விகளை தாம் கேட்பேன் எனவும் அதற்கு ஹிருதயபுஷ்பா பதில் தரவேண்டும் எனவும் முன்னேற்பாடு செய்து இருந்தாள். ஒருநாள் அனைவரும் அமர்ந்து இருக்கையில் லஷ்மியம்மா பேச்சைத் துவக்கும் விதமாக கேட்டாள் “ தாதி, சிவபாபா அவர்கள் பிரும்மபாபாவின் உடலில் புகுந்து கொண்டு அனைத்தையும் நடத்தி வருகின்றார் என்பதை எப்படி நம்புவது ?” ஹிருதயபுஷ்பா கூறினார் “ இந்த உலகில் பல்வேறு இடங்களில் இப்போது பாபா ஏற்படுத்தி வரும் மாற்றத்தை ஒரு மனிதனாக அவர் செய்ய முடியாது. ஒரு வீடு இடிந்து விழுந்தால் முதலில் ஓடி வருவது யார்? அந்த வீட்டின் சொந்தக்காரர்தானே. அது போல கலியுகத்தில் இந்த உலகம் அழியப் போகின்ற நிலையில் உள்ள பொழுது அதை காப்பாற்ற எவரால் முடியும்? ஒரு தனி மனிதனால் அதை செய்ய முடியுமா ?”
அவர் தொடர்ந்து கூறினார் “ கிருஸ்துவ மத நூல் என்ன கூறியது. ஏசு வருவதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொர்கம் என ஒன்று இருந்தது. இன்று ஏசு கிருஸ்து இறந்து எத்தனை காலம் ஆகி விட்டது ? இரண்டாயிரம் வருடங்கள். ஆக சொர்க்கம் தோன்றி ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதினால் இனி மீண்டும் அந்த சொர்க்கம் திரும்பிப் போக உள்ளது. எப்படி ஒரு கடியாரம் இருபத்தி நான்கு மணி நேரத்தில் பாதியை இரவாகவும் பாதியை பகலாகவும் காட்டுகின்றதோ அப்படித்தான் சொர்கமும் கலியுகமும் சில சில ஆண்டுகளாகப் பிரிந்து உள்ளன. பகலில் இருந்து இரவு வரும் பொழுது பிற் பகல், மதியம், மாலை, அந்திப் பொழுது என காலம் மெல்ல மெல்ல இரவை நோக்கி எப்படி நகருகின்றதோ, அப்படித்தான் கல்ப விருஷ்சத்தின் ஆயுளான 5000 வருடங்கள் சத்யுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என பிரிந்து ஒரு சக்கரமாக உள்ளது. இறுதியில் மீண்டும் சங்கம் என்ற யுகம் பிறக்கும், சக்கரம் மீண்டும் சுழலும்”.
அன்று முதல் சந்துரு அவளை தன்னுடைய தெய்வ அன்னை என மனதால் ஏற்றுக் கொண்டான். அவனுடைய தந்தை நாராயணதாஸ் என்பவர் தானும் அந்த போதனைகளை கற்றறிந்து நாராயணகுமாரர் ஆனார். இப்படியே மெல்ல மெல்ல பலரும் பிரும்ம குமாரர்களாகவும், பிரும்மகுமாரிகளுமாக மாறி வந்தனர்.


கடின வாழ்க்கை

ஹிருதயபுஷ்பா தன்னுடைய சகோதரியின் வீட்டில் இருந்த பொழுதும் தன்னுடைய உணவை தானே சமைத்துக் கொண்டார். காரணம் யோகாவை முழுமையாகக் கடைபிடிக்காதவர்கள் மாயையான பல்வேறு எண்ணங்களில் மிதப்பார்கள். அவர்கள் தயாரிக்கும் உணவு அந்த எண்ணங்களுடன் தயாரிக்கப்படுவதினால் அவர்களுடைய எண்ணங்களும் அந்த உணவுடன் நேர்ந்து விடுகின்றது. ஆகவே அதை தான் சாப்பிட்டால் தானும் அந்த மாயையில் விழுந்து விட வேண்டி வரும் என்பதே காரணம். மேலும் படுக்க ஒரு ஜமக்காளமும் தன்னுடைய சூடிதாரையும் மட்டுமே உபயோகித்தார். அந்த வீட்டில் கொசுக் கடி அதிகமாக இருந்ததினால் தன்னை மறந்து இருக்க இரவு முழுவதும் யோகாவில் அமர்ந்திருப்பார். வாடகைக் கொடுக்க பணம் இல்லை என்பதினால் தன்னுடைய சாப்பாட்டை குறைத்துக் கொண்டார். காலை ஒரு பிரெட், இரவு ஒரு பிரெட் மட்டுமே உணவாயிற்று. அதற்கு சுவையூட்ட காய்கறிகள் இல்லாத பொழுது தண்ணீரில் அதைத் தோய்த்து உண்டார். இப்படியாக அவர் அவதியில் வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது அதைக் கேள்விப்பட்ட பாபா தனது மற்ற பக்தர்கள் மூலம் சிறிய அளவில் பண உதவிகளை அவ்வப்பொழுது ஏற்பாடு செய்தார். அந்த பணத்தைக் கொண்டு ஹிருதயபுஷ்பா வாடகையையும் தந்து கொண்டு உணவுக்கும் பயன்படுத்தினார். உணவுக்கு போதுமான அளவு பணம் இல்லாதபொழுது யோகாவே உணவாயிற்று. இப்படியாக பலரும் கொடுத்து வந்த உதவித் தொகையைக் கொண்டு ஹிருதயபுஷ்பா தன் கடமையை திறமையாகச் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுதுதான் மீண்டும் ஒரு அதிர்சியான செய்தி. பெங்களூருக்கு மம்மா வருகை தர உள்ளாள். அந்த செய்தியைக் கேட்ட ஹிருதயபுஷ்பா அதிர்ச்சி அடைந்தார். தான் இருப்பதோ மிகச் சிறிய அறை. அந்த காம்பவுண்டில் இருந்த ஏழு வீட்டினருக்கும் ஒரே ஒரு கழிவறைதான். அதுவும் மிக அலங்கோலமாக உள்ளது. சரியான தண்ணீர் வசதியும், மின்சார வசதியும் கூடக் கிடையாது. ஏன்ன செய்வது? மம்மாவை எப்படி அங்கு தங்க வைத்துக் கொள்வது?
மறுநாள் அவளுடைய கனவில் பாபா தோன்றி உடனே “ஜூவல்லரி தெருவுக்குப் போ..... அங்கு இன்ன இடத்தில் உனக்கு வீடு கிடைக்கும்” என திரும்பத் திரும்பக் கூறினார். மறு நாள் அந்த ஜூவல்லரி தெருவுக்குப் போனவளுக்கு ஒரு அதிசயம். அவள் சென்ற வீட்டின் சொந்தக்காரர் என்ன, ஏது எனக் கூடக் கேட்டகாமல் அவளை எதிர் பர்த்து நின்றிருந்தவர் போல அவளிடம் அனைத்து வசதிகளும் இருந்த அந்த வீட்டு சாவியை கொடுத்து விட்டுச் சென்று விட்டார். அடுத்து மம்மாவின் வருகை குறித்து பத்திரிகை அடிக்க வேண்டும். அதற்கு நூறு ரூபாய் தேவை. சிந்தித்துக் கொண்டே இருக்கையில் எவரோ எதற்காகவோ வந்து நூறு ரூபாய் கொடுத்து விட்டுச் சென்றார். இன்னொருவர் வந்தார். தன்னுடைய கார், டிரைவர், பெட்ரோல் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டுப் போனார். இன்னொரு பூ வியாபாரி வந்து பூக்களை கொடுத்துவிட்டுச் சென்றார். இப்படியாக பலர் தாமாகவே முன்வந்து எதையெதையோ செய்து விட்டுச் சென்றனர். எப்படி அனைத்தும் எவரோ சொல்லிச் செய்து உள்ளது போல உள்ளது ? அதுதான் பாபாவின் அற்புதம்.
மம்மா வந்து விட்டார். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று அவரை காரில் அழைத்து வந்து அந்த புதிய வீட்டில் தங்க வைத்தார். தான் இருந்த இடத்தைப் பற்றிக் கூறவில்லை. பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த பொழுது மம்மா என்ற ராதே அவருடன் படித்தவர். மிகுந்த ஏழை. ஆனால் ஹிருதயபுஷ்பா அப்பொழுது பெரும் செல்வந்தர் மகள். அனைத்து வசதிகளும் குறைவின்றி அடைந்து இருந்தவர். இன்று கடினமான வாழ்வை தானே தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றார். மம்மா என்ற ராதே இப்போது எந்த குறையும் இன்றி வளமான வாழ்வில் இருந்தாள். இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. மம்மாவிற்கு அந்த வீட்டில் நிம்மதி இல்லை. இது பாபாவின் வீடல்ல. உண்மையில் பாபா வீடு எங்கே என ஹிருதயபுஷ்பாவை நச்சரிக்கத் துவங்க வேறு வழி இன்றி தான் இருந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றாள். நான் இப்பொழுதுதான் பாபாவின் உண்மையான வீட்டிற்கு வந்துள்ளேன் என பெருமையுடன் கூறிய பின் தன்னுடன் மீண்டும் மதுபனுக்கு அவள் திரும்பி விட வேண்டும் என ஹிருதயபுஷ்பாவை நிர்பந்தித்தார். வசதியாக வாழ்ந்து கொண்டு இருந்தவள் துன்ப வாழ்வில் இருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் எத்தனைக் கூறியும் ஹிருதயபுஷ்பா அவருடன் செல்ல சம்மதிக்கவில்லை. ஒரு தூய வீரன் யுத்தப் பகுதியை விட்டு கோழயைப் போல ஓடி விடக்கூடாது, யுத்தத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என பாபா தன்னிடம் கூறி இருந்தது போல தான் இருக்க விரும்புவதாகக் கூறிவிட்டார். தான் மரணம் அடைந்தாலும் சரி அந்த புனித வாழ்க்கையை விட்டு ஓட மாட்டேன் எனத் தீர்மானமாகக் கூறிவிட்டார்.


பிரும்மகுமாரி சமாஜம் விரிவடைந்தது

மம்மாவின் விஜயத்தை வெற்றிகரமாக முடித்துத் தந்த பின் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்து ஏழு நாட்களுக்கான யோகா பாடமும் போதனைகளும் செய்யப்பட்டன. பிரும்மகுமாரி சமாஜம் மெல்ல மெல்ல விரிவாகத் துவங்கியது. இருக்கும் இடம் போதவில்லை என ஆசிரமத்தை பல இடங்களுக்கும் மாற்ற வேண்டியதாயிற்று. முதலில் சாப்லிங் ரோட்டில் ஒரு இடம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. பிறகு நேருநகர், மல்லேஸ்வரம், ஜெயநகர் என பல பகுதிகளுக்கும் அதன் கிளைகள் விரிந்தது. இரண்டாம் முறையாக மம்மா வந்து மூன்று மாதங்கள் பெங்களூரில் தங்கினார். லால்பாக் மைதானத்தில் பெரிய விழா நடக்க பலரும் வந்து அவரை தரிசித்து பிரும்மகுமாரி மையத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அடுத்தடுத்து பல மையங்கள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும், மைசூரிலும் தோன்றின. முதலில் மைசூர் நகரில் கீதா ஆலயத்தில் சுமார் 30-40 பிரும்மகுமாரர்களும் பிரும்மகுமாரிகளும் பயிற்சி பெற்றனர். அங்கு சுமார் மூன்று மாதங்கள் தங்கி பலருக்கும் ஈஸ்வர விஷ்வ வித்யாலயாவின் இராஜயோக பயிற்சியை தந்தனர். மைசூரில் இருந்த பொழுது மீரா என்ற சகோதரி ஹிருதயபுஷ்பாவின் சக்தியை புரிந்து கொண்டு தன்னை ஈஸ்வர விஷ்வ வித்யாலயாவில் இணைத்துக் கொண்டு அவரிடம் பயிற்சி பெற்று அவர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தற்பொழுது மீராவின் முயற்சியினால் கயானா,
சிங்கப்பூர், ஜாம்பியா, ஆப்ரிகா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் ஈஸ்வர விஷ்வ வித்யாலயாவின் இராஜயோக பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. மைசூர் மகராஜாவை சந்தித்து அவருடைய அரண்மனைக்கும் சென்று தசரா விழாவில் ஹிருதயபுஷ்பா ஈஸ்வர விஷ்வ வித்யாலயாவின் இராஜயோக பயிற்சி கலை நிகழ்சியை நடத்தினார். பெங்களூரில் தன்னிடம் பயிற்சி பெற்ற சாதி என்பவரை கேரளத்தில் உள்ள கிளைகளின் தலைமை பொறுப்பில் அமர்த்த ஏற்பாடு செய்தார். இப்படியாக தன்னால் முடிந்த அளவு பாபாவின் ஈஸ்வர விஷ்வ வித்யாலயாவின் புகழை மெல்ல மெல்ல தென் பகுதிகளில் பரப்பினார். 1969 ஆம் ஆண்டு பாபா மறைந்தவுடன் துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தார். கர்னாடகாவில் உடுப்பி, சிக்கபல்லபுரா, பாகிபல்லி, முல்லபாகல், மடிக்கரே,கர்வார், கோலார், போன்ற இடங்களிலும், ஆந்திராவில் நெல்லூர்,,மர்காபுரம், கர்னூல், விஜயவாடா போன்ற இடங்களிலும், கேரளாவில் காலிகட், கண்ணனூர், மற்றும் தர்மாபுரம் போன்ற பல்வேறு இடங்களில் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா தோன்றி வளரக் காரணமானவர் ஹிருதயபுஷ்பா. 1970 ஆம் ஆண்டு சென்னையில் கிளைத் துவக்கி அங்கும் பாபாவின் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா புகழை பரப்பினார். இன்று உலகம் முழுவதும் 8500 கிளைகளுடன் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா இயங்க இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரும்ம குமாரர்களும், பிரும்மகுமாரிகளும் சுமார் 110 நாடுகளில் தம்மை ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாவில் இணைத்துக் கொண்டு உள்ளனர்.

No comments:

Post a Comment