Tuesday, April 24, 2012

Vallakkoattai Murugan Temple

வல்லக்கோட்டை 
முருகன் ஆலயம் 
சாந்திப்பிரியா
(Part of the temple story has been  adapted from the Tamil translated version


சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் வல்லக் கோட்டை முருகன் ஆலயம். இந்த ஆலயத்தைக் கட்டியவர் பகீரதன் என்று நம்புகிறார்கள். அந்த ஆலயத்தை ஒட்டி ஒரு குளமும் உள்ளது. அதை இழந்ததை மீட்டுத் தரும் குளம் என்கிறார்கள். அதாவது தொடர்ந்து ஏதாவது ஒரு கிழமையிலேயே ஏழு வாரங்கள் அதில் குளித்து விட்டு அங்குள்ள முருகனை வேண்டித் துதித்தால் இழந்து போன பொருட்கள், நிலபுலங்கள், பெருமை போன்ற அனைத்துமே மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதற்க்கான காரணத்தை கீழே தரப்பட்டு உள்ள ஆலய வரலாற்றில் படியுங்கள். இந்த ஆலயத்தில் கம்பீரமான தோற்றத்தில் முருகப் பெருமான் தனது மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
இந்த ஆலயம் சென்னையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சீபுரத்தின் அருகில் உள்ளது.
வல்லகோட்டை என்ற இடம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. வல்லக் கோட்டை ஆலயம் சென்னை நகரின் புறப் பகுதியான தாம்பரத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீ பெரம்பத்தூரின் தெற்குப் பகுதியில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீபெரம்பத்தூர்- செங்கல்பட்டு வழித் தடத்தில் உள்ளது. அருணகிரிநாதர் இயற்றியப் பாடல்களில் வல்லக் கோட்டையை கோட்டை நகர் , கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி , மற்றும் கோட்டை என்றெல்லாம் கூறி உள்ளார். அருணகிரிநாதர் இந்த ஆலயத்தைப் பற்றி பல பெயர்களில் எழுதி இருந்தாலும் அந்த ஆலயத்தை வல்லக்கோட்டை என்றே தற்போது அழைக்கின்றார்கள்.
அந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் முக்கியமாக நிற்கும் நிலையில் வடிவமைகபட்டு உள்ள வள்ளி மற்றும் தெய்வானை சிலைகள் பல்லவ நாட்டுக் கலைவண்ணத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து உள்ளது. சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு பல்லவர்கள் பல இடங்களிலும் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். ஆராய்ச்சியில் கிடைத்த ஆவணங்கள் மூலம் கோட்டை நகரில் உள்ள வல்லம் ஆலயமும் அவற்றில் ஒன்று எனத் தெரிகின்றது.
பழுதடைந்து இருந்த ஆலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு விட்டதினால் அங்கு பக்தர்களும் பெருமளவில் வருகின்றார்கள் என்பதில் இருந்தே அந்த ஆலயம் எந்த அளவு மகிமைப் பெற்று இருந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும் . 'தனி நபர்களின் நன்கொடையினால் மட்டும் அந்த ஆலயத்தை புதுப்பிக்க முடியாது. அதற்கு பெரும் அளவு நன்கொடைகள் வேண்டும்' என்பதினால் கிருபானந்தவாரியார், மயிலை ரத்னகிரி முருகன் அடிமை ஸ்வாமிகள் மற்றும் சுவாமி ராமதாஸ் போன்றவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டு அதைப் புதுப்பித்து கும்பாபிஷேகமும் செய்தார்கள்.


ஆலய வரலாறு
இலான்சி ராஜ்யத்தின் மன்னனான பகீரதன் என்பவனே அந்த ஆலயத்தை நிர்மாணித்து உள்ளார். ஆனால் அந்த மன்னன் ஆண்ட காலம் என்பது தெரியவில்லை. அவர்தான் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனா என்பதும் தெரியவில்லை. இலான்சி என்பது மிகச் சிறிய ராஜ்ஜியம். அப்படி என்றால் அத்தனை தொலைவில் இருந்து அவர் ஏன் இங்கு வந்து பல்லவர்கள் ஆண்ட பூமியில் ஆலயத்தை நிர்மாணித்து இருக்க வேண்டும்? அதற்கு ஸ்தல புராணத்தில் விடை உள்ளது.
பகீரதன் மிகவும் கர்வம் பிடித்தவன். ரிஷி முனிவர்களை மதித்தது இல்லை. ஒருமுறை நாரதர் அவனிடம் வந்தபோது அவரை உட்காரச் சொல்லாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டானாம். அதனால் நாரத முனிவர் வருத்தம் அடைந்தார். அப்போது எதிர் திசையில் இருந்து கோரன் எனும் அசுரன் பெரும் படையுடன் வந்து கொண்டு இருந்தான். நாரதரைக் கண்ட அவன் எந்த விதமான கர்வமும் இன்றி அவர் அருகில் சென்று அவரை வணங்கினான். ஆகவே அவன் மூலமே பகீரதனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என நாரதர் எண்ணினார்.
 கோரனை  சந்தித்த  நாரதர்  அவனை 
பகீரதன்  மீது  படை எடுக்குமாறுக்  கூறினார்

கோரனிடம் நாரதர் அந்த பெரும் படையுடன் அவன் எங்கு செல்கிறான் எனக் கேட்க அவனும் தான் ஒரு அஸ்வமேத யாகம் செய்ய உள்ளதினால் அதற்கு முன் நூறு மன்னர்களை வெல்ல வேண்டி உள்ளது என்றும் அதற்காக அவன் படையுடன் செல்வதாகக் கூற, அதைக் கேட்ட நாரதர் அவனை இலான்சி நாட்டு மன்னன் மீது படையெடுத்து அவனை வென்றப் பின் பின் மற்ற நூறு மன்னர்களையும் வென்று அஸ்வமேத யாகத்தை நடத்துமாறுக் கூற அவனும் நாரதரின் அறிவுரையை ஏற்று பகீரதன் மீது படை எடுத்து அவன் நாட்டைப் பிடித்துக் கொள்ள பகீரதனும் நாட்டை விட்டு தப்பிச் சென்று என்ன செய்வது எனப் புரியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். ஒருநாள் வழியில் அவன் நாரத முனியைக் கண்டான். ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த அவமரியாதைக்கு மன்னிப்புக் கோரி அவரை தனக்கு உதவுமாறு வேண்டினான். அப்போது அவனது கர்வமும், ஆணவமும் முற்றிலும் அழிந்து போய் இருந்தது. ஆகவே அவன் மீது கருணைக் கொண்ட நாரதரும் அவனிடம் துர்வாச முனிவரை சந்தித்து அவரிடம் அதற்கு வழி கேட்குமாறுக் கூறி அனுப்பினார்.
அவனும் தயங்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று துர்வாச முனிவரிடம் தான் இழந்த வீடுகளையும் நாட்டையும் திரும்பிப் பெற தனக்கு உதவுமாறுக் கூற அவரோ அவன் இழந்து விட்ட ராஜ்ஜியத்தை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் எனில் அப்படியே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட திசை வழியே சென்று கொண்டு இருந்தால் ஒரு இடத்தில் முருகன் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரு பட்டரி மரத்தின் கீழ் வாசம் செய்வதைக் காண முடியும் என்றும், அங்கு சென்று வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து அவரை வழிபட்டால் விடிவு காலம் பிறக்கும் என்றார். பகீரதனும் அவர் கூறியபடியே அங்கும் இங்கும் சுற்றியப் பின் கோட்டை நகரை அடைந்தார். துர்வாச முனிவர் கூறிய அனைத்து அடையாளங்களும் அங்கு இருந்தன. ஆகவே அவன் முனிவர் கூறியபடியே அங்கு தவம் இருந்து முருகனின் அருளினால் தான் இழந்த அனைத்தையுமே சில காலங்களில் திரும்பப் பெற்றான். அதனால் மனம் மகிழ்ந்து அவன் அந்த இடத்தில் முருகனுக்கு ஆலயம் ஒன்றை அமைத்தான்.

 பகீரதனுக்கு காட்சி அளித்தார் 
 முருகப் பெருமான்

அந்தக் கட்டத்தில்தான் திருபோரூரில் இருந்து திருத்தணிக்கு சென்று கொண்டு இருந்த அருணகிரிநாதர் முருகனின் இருப்பிடமான பட்டரி மரம் இருந்த இடத்தை அடைந்தார். அதன் அருகில் இருந்தக் குளத்தின் அருகில் இருந்த இன்னொரு மரத்தின் அடியில் சென்று உறங்கியவர் 'என்னை மறந்து விட்டாயா அருணகிரி?' என்றக் குரல் கேட்டு எழுந்தார். அந்தக் குரல் மூன்று முறை ஒலித்தது. எழுந்தவர் குரல் கொடுத்தவரைத் தேடினார். அருகில் யாருமே தென்படவில்லை. அப்போது அவர் பட்டரி மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த முருகனைக் கண்டு ஆனந்த கூத்தாடி அவர் மீது ஏழு பாடல்களைப் திருப்புகழ் என்ற பெயரில் பாடினார். வல்லக் கோட்டை ஆலயத்தை கோட ஆண்டவர் ஆலயம் என்று அழைத்தார்கள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் மகாபிஷேகம் நடைபெறுகின்றது. சென்னையில் இருந்தும் அதை சுற்றி உள்ளப் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அங்கு வருகிறார்கள். அப்போது அங்கு அன்னதானமும் நடை பெறுகின்றது. தமிழ் புத்தாண்டு, கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் விசேஷ பூஜை நடைபெறுகின்றது.


ஆலய நடை திறக்கும் நேரங்கள்
  • காலை 5.30 முதல் 1.00 மணி வரை
  • மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை 
  • விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆலயம் மதியம் மூடப்படுவது இல்லை
ஆலய விலாசம்

EXECUTIVE OFFICER
A/M. SUBRAMANIYA SWAMY TEMPLE
Vallakkottai
Sri Perumbudur Taluk, Kanchipuram- 602 105.
Tamil Nadu, India.
Phone : 04111-272225.
E-mail : vallakkottaimurugan@sancharnet.in

No comments:

Post a Comment