Tuesday, February 7, 2012

Searvanga Sunthari Sarguneswar Temple- Karuveli

சர்வாங்க சுந்தரி சமேத 
சர்குணேஸ்வரர்
திருக்கோவில்

சாந்திப்பிரியா 
 அன்னை சர்வாங்க  சுந்தரி  
படம் நன்றி: http://www.panoramio.com/photo/48920177 
 
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள கருவேலி எனும் ஊரில் சர்வாங்க சுந்தரி சமேத சர்குணேஸ்வரர் திருக்கோவில் எனும் ஆலயம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள கூந்தலூர் எனும் சிற்றூரை அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசல் நதியின் புதுப் பாலத்தைக் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். கருவேலி எனும் இந்த தலத்தை அந்த காலத்தில் கொட்டிட்டை என்றும் அழைத்து உள்ளார்கள். இந்த ஆலயம் கட்டப்பட்ட காலத்தின் வரலாறு தெரியவில்லை. ஆனால்  திருநாவுக்கரசர் போன்ற  சிவன் அடியார்கள் இந்த ஆலயத்து மூலவரின் பெருமையை புகழ்ந்து பாடி உள்ளதினால் இந்த ஆலயம் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு  இருக்கலாம் எனத் தெரிகின்றது . இனி ஆலய மகிமையைக் காணலாம். 
தக்ஷ யாகத்தில் ஏற்பட்ட அவமானத்தினால் உயிர் இழந்த தாக்ஷாயினி எனப்பட்ட பார்வதியின் உடலை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக சிவபெருமான் உக்ரஹ தாண்டவம் ஆடியவாறு சென்றபோது அவர் கோபத்தைத் தணிக்க பார்வதியின் உடலை தனது சக்ராயுதத்தினால் துண்டுகளாக்கி விஷ்ணு பகவான் கீழே விழச் செய்ய அவள் உடலின் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் ஆயின என்பதை அனைவரும் படித்து இருக்கலாம். அதன் பிறகு கோபம் தணிந்த அவர் விரக்தி அடைந்து அமைதியான இடத்தைத் தேடி அலைந்தார். அப்போது அவர் வந்த இடங்களில் ஒன்று கருவேலி என்கிறார்கள். கருவேலிக்கு அருகில் உள்ள அம்பா சமுத்திரத்தில் இருந்த வனப் பகுதியில் அமைதியாக கண்களை மூடியவாறு இருந்தவர் கண்களில் இமயவனின் மகளாக அவதரித்து இருந்த பார்வதியின் முகம் தோன்றியது. அப்போது பார்வதியும் சிவனைத் தேடிக் கொண்டு இங்கு வந்தாள். அவர் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு பார்வதி தனது  அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு  வந்தவள்  பக்கத்து  ஊரில் சில காலம் தங்கி  இருந்து  சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் சென்று நிற்க  இருவரும் மீண்டும் சந்தித்தார்கள். அப்போது அவள் அவர் முன் அவள் நடனமாடி அவரை மகிழ்வித்தாள். அவள் நடனம் ஆடிய இடமே கொட்டிட்டை என்பது. அங்கேயே மீண்டும் திருமணம் செய்து கொண்டார்கள். தனக்கு சர்வ அழகையும் கொண்டு சுந்தர வதனத்தில் அங்கு வந்த பார்வதியை அடையாளம் காட்டிய இந்த தலத்தில் அவளை மணந்து கொண்டு  அமர்ந்து கொண்டார் என்பதினால் இந்த தலத்தில் வந்து வணங்குபவர்களுக்கு இனி மறு பிறவி இல்லை, நேராக மோட்ஷத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். அதாவது கருவேலி என்றால் மீண்டும் ஒரு கருவில் அவதரிக்க வேண்டாம் என்பது பொருள் என்பதினால் இந்த தலத்தின் பெயர் கருவேலி என ஆயிற்று. இந்த தலத்தில் பார்வதியின் பெயர் சர்வாங்க சுந்தரி , அதுபோல சர்வ குணங்களையும் கொண்ட சிவபெருமான் சர்குணேஸ்வரராக லிங்க வடிவில்  குடி கொண்டார்.

சர்குணேஸ்வரர் 

இந்த தலம் மிகவும் மகிமை வாய்ந்தது என்பதினால் தேவலோகத்தின் அதிபதியான இந்திரன் இங்கு வந்து சர்வாங்க சுந்தரி சமேத சர்குணேஸ்வரரை வழிபாட்டு வந்தார். இந்திரனைத் தவிர  தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். அதுபோல அந்த காலத்தில் மாபெரும் மன்னனாக இருந்த சற்குண பாண்டியனும் இங்கு வந்து ஆலயம் அமைத்து சர்வாங்க சுந்தரி சமேத சர்குணேஸ்வரரை வழிபட்டு வணங்கியதினால் இங்குள்ள சிவனுக்கு சர்குணேஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் தல வரலாறு கூறுகின்றது.


யமதேவரும் தமக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தைக் களைந்து கொள்ள இந்த தலத்துக்கு வந்து ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் குளித்தப் பின் சிவபெருமானை வழிபாட்டு வந்தார் என்றும் அதனால் ஆலயத்தின் எதிரில் உள்ள தீர்த்தத்தின் பெயர் யம தீர்த்தம் என ஆயிற்றாம். அந்தக் குளத்தின் நடுவில் கங்கையை தனது தலை முடியில் வைத்துக் கொண்டு உள்ள சிவபெருமானின் சிலை காணப்படுகின்றது. இந்த ஆலயத்தில் வந்து வணங்குபவர்களுக்கு யம பயமும் நீங்கும் என்கிறார்கள்.
ஆலயத்தின் நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன்  விசாலமான நடைபாதை காணப்படுகின்றது . நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபம் உள்ளது. அதைத் தாண்டிச் சென்றால்  கிழக்கு நோக்கிய மூன்று  நிலை இராஜ கோபுரம் உள்ளதைக் காணலாம் . கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்தில் சர்வாங்க சுந்தரி கிழக்கு நோக்கி நின்றவாறு  நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள்.  சர்குணேஸ்வரர்  லிங்க வடிவில் காணப்படுகிறார். இக் கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சன்னதி இல்லை என்பது இன்னொரு  விசேஷம். இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய விலாசம்

அருள்மிகு சர்குணேஸ்வரர் திருக்கோவில்
கருவேலி (சர்குணேஸ்வரபுரம்)
கூந்தலூர் அஞ்சல்
எரவாஞ்சேரி S.O.
தஞ்சாவூர் மாவட்டம்
PIN – 605 501

2 comments:

 1. I have visited this temple in the year 2007 and I am really Happy after the
  renovation. Well maintained. I had been blessed by this Goddess.

  ReplyDelete
 2. I had visited this temple in the year 2009 and I am really surprised by seeing
  the temple and the maintenance.
  Vijaykrishnan O A, Bangalore

  ReplyDelete