Wednesday, February 8, 2012

Garbarakshambigai Temple- Kumbakonam

கர்பரக்ஷாம்பிகை சமேத
முல்லைநாதர் ஆலயம்

சாந்திப்பிரியா

கர்பரக்ஷாம்பிகை 
கருதரித்தவர்களும், கர்ப்பம் அடைந்தவர்களும் தமது பிரசவம் நல்ல முறையில் அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு வணங்குவது கர்பரக்ஷாம்பிகை எனும் ஆலயத்தில்தான். இந்த ஆலயம் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தின் அருகில் உள்ள திருக்கருகாவூர் எனும் கிராமத்தில் வனப் பகுதியில் உள்ளது. இந்த கிராமம் பாபநாசத்தில் இருந்து சுமார் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் இருந்து நிறைய பஸ்கள் உள்ளன என்றாலும் தனி வாகனத்தில் சென்று அமைதியாகத் திரும்புவது ஆனந்தமாகவே இருக்கும். ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதின் காரணம் இது சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்பதுதான்.  ஆலயம் காவேரி நதியின் கிளை நதியான வெட்டாட்றின் நதிக் கரையில் உள்ளது. 
முன் காலத்தில் இந்த ஆலயம் முல்லைப் பூக்கள் நிறைந்த வனப் பகுதியில் அமைந்து இருந்தது. ஆகவே இங்குள்ள சிவபெருமான் முல்லைநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் எறும்புப் புற்றினால் ஆன உருவையே முல்லைநாதராக கருதி வணங்குவதினால் அந்த சிலைக்கு தண்ணீர் சம்மந்தப்பட்ட எந்த பொருட்களினாலும் அர்ச்சனைகளும் செய்யப்படுவது இல்லை. மாறாக புனுகுப் பூனையிடம் இருந்து பெறப்படும் புனுகு எனும் வாசனை திரவியத்தை (வாசனை பவுடர் போன்றப் பொருள் ) அர்ச்சனைக்காக பயன்படுத்துகிறார்கள்.

முல்லைநாதர்  
இங்குள்ள முல்லைநாதரின் சமேதகராக அவருடைய மனைவி அன்னை பார்வதி தேவியே கர்பரக்ஷாம்பிகை என்ற பெயரில்  நின்று கொண்டு காட்சி தருகிறாள். அவளே இங்கு வந்து தன்னை வேண்டி வணங்கும் கர்பிணிகளுக்கு அடைக்கலம் தந்து  அவர்களை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மழலைப் பேறு பெற அருள் பாலிக்கின்றாள் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தின் வரலாறு என்ன? முன்னொரு காலத்தில் இந்த ஷேத்திர வனப் பகுதியில் நித்ருவா எனும் ரிஷி தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். நித்ருவா காஷ்யப ரிஷியின் பரம்பரையை  சேர்ந்தவர். வாயு புராண  செய்திப்படி அவர் வாத்சாய ரிஷியின் மகன் ஆவார். அவர் வாயுவின் மைந்தரான ச்யாவனா மற்றும் சுகன்யா என்ற தம்பதியினருக்கு பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டவர். கணவன் மனைவி இருவருமே சிவ-பார்வதியின் பக்தர்கள்.  தமது குடிலுக்கு எதிரில் முல்லை வனப்பகுதியில் சிவ லிங்கம் போன்ற உருவில் இயற்கையாக அமைந்து இருந்த எறும்புப் புற்றின் மீது தடுப்புப் போட்டு அதையே சிவலிங்கமாகக் கருதி தினமும் பல மணி நேரம்  அதற்கு பூஜை செய்து விட்டே உணவு அருந்துவார்கள்.
இப்படியாக எளிமையான  வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருந்த அவர் மனைவி வேதிகை ஒருமுறை கர்ப்பம் அடைந்தாள். வெகு காலம் கற்பமே தரிக்காமல்,  குழந்தைப் பேறு அமையாமல் இருந்ததினால் வருத்தத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்தவர்களுக்கு அந்த செய்தி மகிழ்ச்சியாகவே இருந்தது.  ஒருநாள் மதியம் அந்த ரிஷி வெளியில் சென்று இருந்தார். நிறைமாத கர்பிணியான வேதிகை களைப்பினால் படுத்து இருந்தாள். அந்த நேரத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் அவர்கள் குடிலுக்கு வந்து பிட்ஷைக் கேட்டு நின்றார்.  அறைகுறை மயக்கத்தில் உறங்கிக்  கொண்டு இருந்தவளுக்கு அவர் கூப்பிட்டது காதில் விழவில்லை. ஆகவே அவள் எழுந்து வரவில்லை. பிட்ஷையும் போடவில்லை. ஊர்த்துவ ரிஷி அதைக் கண்டு கடும் கோபம் அடைந்தார்.  உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் 'பிட்ஷைக் கேட்டு வந்த என்னை அவமானப்படுத்தும் விதமாக படுத்துக் கிடைக்கின்றாளே' என கோபமுற்றவர் அவள் கரு கலையட்டும் என சாபம் இட்டு விட்டுச் சென்றார். அவள் சப்தமாக போட்ட சாபத்தைக் கேட்டு கண் விழித்து எழுந்தாள் வேதிகை. அழுது புரண்டாள்.  வெளியில் சென்று இருந்த நித்ருவா ரிஷி  வந்ததும் அவரிடம் நடந்ததைக் கூறி அழுதாள். செய்யாத குற்றத்துக்கு தண்டனையா?....இத்தனைக் காலமும் குழந்தை இல்லாமல் இருந்த தமக்கு  பிறக்க இருந்தக் குழந்தை மடிய வேண்டுமா?? மனமுருகி அவர்கள்  தாம் பூஜை செய்து வந்த இடத்தில் போய் சிவ - பார்வதியை வேண்டினார்கள்.
அவர்களுடைய அழுகுரல் கைலாயத்தில் இருந்த பார்வதியின் காதுகளில் ஒலித்தது . மனம் வருந்தினாள்  பார்வதி. தனது பக்தர்கள் செய்யாத பாவத்துக்கு ஊர்த்துவ ரிஷி தண்டனை தருவதா என கோபமுற்று ' என்ன ஆனாலும் சரி, என் பக்தர்களின் குலம் காப்பேன்' என உறுதி மொழி எடுத்துக் கொண்டு அவர்கள் முன்  தோன்றி ஆறுதல் அளித்தாள்.  'என்னை  நம்பி வந்துள்ள உங்களைக் கைவிட மாட்டேன். கவலை வேண்டாம்'  எனக் கூறியவள் வேதிகையின் கர்பத்தில் இறக்க இருந்தக் குழந்தையை வெளியில் எடுத்து அதை ஒரு தங்கப் பாத்திரத்தில் போட்டு வைத்துக்  கொடுத்தால். அதை அப்படியே வைத்து இருக்குமாறும் நிறை மாதத்தில் அதன் அழஊகுரல் ஒலிக்கும் எனவும் அப்போது அதை வெளியில் எடுத்து வளர்க்குமாறும் கூறிவிட்டு மறைந்தாள். அதைக் கண்ட நித்ருவா-வேதிகை தம்பதிகள் பார்வதியின் கருணையை எண்ணி வியந்தார்கள். அவளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறி வணங்கினார்கள். அதன் பின் குடத்தில் வைக்கப்பட்டு இருந்த கருவை  அவள் கூறியது போலவே அந்த தம்பதியினரும்  மிகவும் கவனமாக காப்பற்றி வந்து பத்து மாதம் ஆனதும் அந்தக் குடத்தில் வைக்கப்பட்டு இருந்து குழந்தை வயிற்றில் இருந்தக்  குழந்தை சுகப் பிரசவம் பெற்றது போல வெளியில் எடுத்து வளர்த்தார்கள்.

கர்பரக்ஷாம்பிகை வணங்கும் கர்பிணிப் பெண்
படம் நன்றி:   http://anushankarn.blogspot.in/2008/10/navaratri-experiences-3.html

ஆனால் அதே சமயத்தில்  ஒரு ரிஷி கொடுத்த சாபத்தையும் தடை செய்வது சரி அல்ல என்பதை உணர்ந்த பார்வதி பிறந்தக் குழந்தையின் தாயாரின் மார்பில் குழந்தைக்கு தரும் பால் மட்டும் சுரக்காமல் இருக்கட்டும் என அந்த சாபத்தை மாற்றி அமைத்தாள். அதனால் குழந்தையை வெளியில் எடுத்ததும் வேதிகையின் மார்பில் பால் சுரக்கவில்லை. ஆகவே ஏற்கனவே ஏற்பாடு செய்து இருந்ததுபோல  பச்சிளம் குழந்தைக்கு உணவு எப்படித் தராமல் இருப்பது என்பதற்காக அந்தக் குழந்தைக்கு பால் தருவதற்காக பார்வதி தேவி காமதேனுப் பசுவின் பெண்ணான நந்தினியை பூமிக்கு அனுப்பி வைத்தாள். நந்தினியும் பூமிக்கு வந்து அந்த முனிவரின் பர்ணசாலையில் தங்கி தினமும் தன்னுடைய மடியில் இருந்து சுரந்தப் பாலை ஒரு பாத்திரத்தில் நிரப்பிக் கொடுக்க நித்ருவா-வேதிகை தம்பதிகள் அச்சம் இன்றி குழந்தைக்கு அந்தப் பாலைக் கொடுத்து வளர்த்தார்கள்.

காமதேனுப் பசுவின் பெண் நந்தினி 
தனது தாயார் காமதேனுவுடன்   

இன்னொரு கிராமியக் கதை என்ன என்றால் அந்த ரிஷி தம்பதிகள் அந்தக் கீட்றுக் கொட்டகை  ஆலயத்தில்  அழுது கொண்டு இருந்தபோது ஒரு மூதாட்டி அங்கு வந்தாள். அறுபது அல்லது எழுபது வயதான அந்த மூதாட்டி  தான் அந்த வனப் பகுதியின் இன்னொரு இடத்தில் தனிமையில் வசிப்பதாகவும் எதற்காக அழுகின்றீர்கள் எனக் கேட்டு விவரத்தை அறிந்து கொண்டப் பின் 'கவலைப் படாதீர்கள். இந்தப் புற்றில் உள்ள சிவ-சக்தி மகிமை வாய்ந்தவளாக இருப்பாள் போலத் தெரிகின்றது. அதனால்தான் என்னை இன்று இங்கு அனுப்பி உள்ளார்கள் போலும். நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் தோன்றிய தேவி என் புற்றின் அருகில் அழுது கொண்டு இருக்கும் தம்பதியினருக்கு உதவி செய் என என்னிடம் கூறி தான் உள்ள இடத்தையும் தெரிவித்தாள். அதனால்தான் நான் இன்று  இங்கு வந்தேன். நான் கர்பிணிகளுக்கு வைத்தியம் பார்ப்பவள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்களுடன் தங்கி இருந்து உன் பிரசவம் நல்ல முறையில்  நடக்க உதவத் தயாராக உள்ளேன்' என்று கூறியதும்  அவர்கள் மகிழ்ச்சியோடு அவளை தம்முடன் இருக்குமாறு கூறினார்கள். அந்த மூதாட்டியும் தினமும் அந்தக் கர்பிணி வேதிகையின் வயிற்றில் காட்டில் இருந்து எடுத்து வந்த ஆமணக்கு விதையில் (விளக்கெண்ணை  கொட்டையில்)  இருந்து எடுத்த எண்ணையை தடவி உருவி விட்டு வந்தாள். நிறை மாதம் ஆனதும் வேதிகைக்கு நல்ல முறையில் பிரசவம் ஆனது. ஆனால் அவள் மார்பில் பால் சுரக்கவில்லை என்பதினால் அந்த மூதாட்டி ஒரு பசுவின் பாலைக் கறந்து வந்து அதை அந்தக் குழந்தைக்கு ஊட்டி வந்தாள்.

குழந்தை வளர்ந்ததும் திடீர் என ஒரு நாள் அந்த மூதாட்டி எங்கோ கிளம்பிச்  சென்று விட்டாள்.  அதன் பின்தான் அவர்களுக்குப் புரிந்தது வந்து தமக்கு உதவியது பார்வதி தேவியே என்பதும், பால் கொடுத்தப் பசு நந்தினி என்பதும்.
இன்று அந்த ரிஷி பத்தினிகள் வாழ்ந்த இடத்தில்தான் இந்த ஆலயம் அமைந்துள்ளதாகவும் முல்லை வனப்பகுதியில் சிவ லிங்கம் போன்ற உருவில் எந்த எறும்புப் புற்றை சிவலிங்கமாகக் கருதி வணங்கி அதற்கு பூஜை செய்து ரிஷி தம்பதியினர்  வழிபட்டார்களோ அந்தப் புற்றே இன்றும் இந்த ஆலயத்தின் முல்லைநாதராக உள்ளார் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது  . 
கர்ப்பம் அடைந்தப் பெண்கள் இங்கு வந்து சுகப் பிரசவம் ஆகவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் விளக்கெண்ணை அல்லது நெய் போன்றவற்றை கர்பரக்ஷாம்பிகை- முல்லைநாதருக்கு காணிக்கையாக செலுத்தி   அங்கு அம்பாளை வேண்டுகிறார்கள். அவர்கள் படைக்கும் அந்த விளக்கெண்ணை அல்லது நெய் அவர்களுக்குப் பிரசாதமாக தரப்படுகிறது. விளக்கெண்ணையை கர்பிணிகள் சுகப் பிரசவம் ஆகா வேண்டும் என்பதற்காக  தமது வயிற்றில் தடவிக் கொள்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் வந்து வேண்டிக் கொண்டு செல்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இன்றி வேண்டுதல் பலித்து வருவதாக பெரும் பரவலான நம்பிக்கை ஆழமாகவே உள்ளது. இந்த ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால் இங்கு உள்ள நவகிரகங்கள் அனைத்தும் வெவ்வேறு திசைகளை நோக்கி அமர்ந்து கொண்டு இல்லாமல் அனைத்தும் சூரிய தேவரைப் பார்த்தபடியே உள்ளனர்.
ஆலய விலாசம்
The Executive Officer
Arulmigu Mullai Vananathar Thirukkoil
Thirukkarugavur (P.O)
Papanasam Tk.
Thanjavur Dt. 614 302
Tamil Nadu

2 comments:

  1. Sir, Could we know from where you got these information? Because the temple history book publishes another version.

    ReplyDelete
  2. Sir,
    Thanks for your query.
    I heard the said story when I visited the temples in Kumbakonam, Mayavaram and surrounding places few years back from some people in the temple. One of them was a Gurukkal like person. Also the person who accompanied us to the temples in Kumbakonam gave us some information. Most of the stories that I hear from the temple towns are stories flowing from word of mouth and some of which are also found in the web sites. We believe the stories and publish them as there are no culverts or written documents available in most of the cases. I also normally collect some booklets from the temple shops to read the stories. But I am not sure what the temple history book says. Could you kindly briefly let me know the contents so that it can also be published. Shall be thankful for your information.

    ReplyDelete