Wednesday, January 25, 2012

Thiru Pullaboothangudi

திருப்புள்ளபூதங்குடி 
வல்வில் ராமர் ஆலயம் 
சாந்திப்பிரியா


திவ்ய தேசங்களில் ஒன்பதாவதாக கூறப்படும் திருப்புள்ளபூதங்குடி அல்லது திருப்புல்லபூதங்குடி எனப்படும் ஆலயம் கும்பகோணத்தில் இருந்து ஸ்வாமி மலைக்குச் செல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  இந்த ஆலயத்தை நவகிரஹ பரிஹார ஸ்தலம் என்று கருதுகிறார்கள். எந்த ஒரு ஆலயத்திலுமே ராமபிரான் நின்று உள்ள நிலையிலும், அல்லது அமர்ந்து உள்ள நிலையிலுமே காணப்படுவார் . ஆனால் இந்த ஆலயத்தில்தான் ராமபிரான் படுத்துக் கொண்டு அனந்தசயன கோலத்திலான விஷ்ணுவைப் போல காட்சி தருகிறார் என்பது இந்த ஆலயத்தின் மிகப் பெரிய விசேஷம் ஆகும். அதாவது விஷ்ணுவே தன்னை ராமர் உருவில் தரிசித்துக் கொண்டாராம்.
இந்த ஆலயத் தலவரலாறு அற்புதமானது . ராமபிரான் வாழ்க்கையில் ஜடாயு அவருக்குப் பெரிய தந்தையைப் போல கருதப்பட்டவர். ஜடாயு பறவைகளில் ஒரு இனமான 'புல்ல' எனும் பிரிவை சேர்ந்தவர்.  நீண்ட நெருக்கமான தலை முடிகளைக் கொண்ட அவருடைய உயிரே அவரது இறக்கைகளில்தான் இருந்தது என்பார்கள். அப்படிப்பட்ட ஜடாயுவின் ஆதிக்கத்தில் இருந்த வனப் பிரதேசத்தில்தான் ராமபிரான் சீதையுடன் வனவாசனம் சென்ற போது லஷ்மணருடன் தங்கி இருந்தாராம். 
 

அந்த நேரத்தில்தான் சீதையை ராவணன் அபகரித்துக் கொண்டு சென்றான். அதைக் கண்ட ஜடாயு ராவணனை எதிர்த்து யுத்தம் செய்து அவனை மேலே செல்ல விடாமல் தடுத்தார். ஆனால் ராவணனுக்கு ஜடாயுவின் பலம் தெரிந்து இருந்ததினால் ஜடாயுவை நேரடியாகக் கொல்லாமல் அவர் சிறகுகளை மட்டும் வஞ்சகமாக வெட்டி வீழ்த்தினார். அதனால் ஜடாயு அப்படியே பூமியில் வீழ்ந்தார். 'ராமா......ராமா' என முனகிக் கொண்டே  உயிரை தாங்கிப் பிடித்துக் கொண்டபடிக் கிடந்தார். மாய மானைத் தேடிச் சென்ற ராமரும், ராமரை தேடிச்சென்ற லஷ்மணரும் தமது பர்ணசாலையின் அருகில் வந்தபோது ஜடாயுவின் முனகல் குரல் கேட்க அவரைத் தேடி ஓடோடிச் சென்றார்கள் . குற்றுயிராய் கிடந்த ஜடாயு ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போன கதையைக் கூறிவிட்டு ' ராமா எனக்கு நீதான் ஈமக்க்கிரியை செய்ய வேண்டும்' எனக் கூறி விட்டு உயிர் நீத்தார்.
அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராமபிரானால் தனது மடிந்து போன தந்தையின் சடங்குகளை செய்ய இயலாமல் போனது மனதை வாட்டிக் கொண்டு இருக்க, இப்போது தான் தனது பெரிய தந்தை என எண்ணிக் கொண்டு இருந்த ஜடாயுவும் இறந்து போனது மனதை அதிகம் வாட்டினாலும், அப்படியாவது தன்னுடைய தந்தைக்கு இறுதிக் கடனை செய்ய முடியாமல் போனதை மனதளவில் நிவர்த்தி செய்து கொள்ளலாம் ஜடாயுவிற்கு அங்கேயே ஈமக்கிரியைகளை செய்ய முடிவு செய்தார். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை. அப்படிப்பட்ட  சடங்கை செய்பவரின் மனைவி உயிருடன் இருந்தால்  அவர் பக்கத்தில் மனைவி இல்லாமல் அந்த சடங்கை செய்யக் கூடாது. அடிமேல் அடியாக இப்படியெல்லாம் விழுகிறதே, நீர்க்கடன், நேர்த்திக் கடன் என்பார்களே அந்தக் கடனை எப்படிச் செய்வது என வேதனைப்பட்டவாறு என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பினார். மனதிலே மானசீகமாக தனது மனைவி சீதையை நினைத்தார். 'சீதா...இந்த நேரத்தில் நீ வரமாட்டாயா' என மனம் உருகி சீதையை நினைக்க அதைக் கேட்ட லஷ்மி தேவியின் அவதாரமான பூமா தேவியானவள் தானே சீதையின் நிழலாக அருகில் இருந்த தாமரைக் குளத்தில் இருந்து வெளி வந்தாள். சீதாபிராட்டியானவள்  லஷ்மி தேவியின் அவதாரம். அதுபோல லஷ்மியின் அவதாரமே பூமா தேவியும்.  ராமரோ விஷ்ணுவின் அவதாரம். ஆகவே பூமாதேவியே சீதையாக வந்ததில் எந்த தவறும் இல்லை என்பதினால் நிழல் போல சீதையாக வந்து அமர்ந்த பூமாதேவியை பக்கத்தில் வைத்துக் கொண்டே ஜடாயுவின் இறுதிக் காரியங்களை ராமபிரான் ஆலயம் தற்போது உள்ள இடமான திருப்புல்லபூதங்குடியில் நடத்தி முடித்தார். அதன் பின் ஏற்பட்ட மனக் களைப்பினால் அப்படியே அங்கே  இருந்த புன்னை மரத்தடியில் படுத்துக் கொண்டார். பூமாதேவி அவர் காலடியில் அவருக்குக் காவலாக அமர்ந்து கொண்டு  அவர் விழிக்கும் வரை காத்திருந்தாள் . 
 

 அந்த நேரத்தில் அந்த வழியே  விஷ்ணு பகவானை தரிசனம் செய்யச் சென்று கொண்டு இருந்த திருமங்கை ஆழ்வார் யாரோ ஒருவர் இரண்டு கைகளிலும் ஆயுதத்தை ஏந்திக் கொண்டு படுத்திருக்கின்றார் என எண்ணிக் கொண்டு நடந்து செல்ல 'அப்பனே, அப்படியே நில்.... நின்று என்னை திரும்பிப்  பார் ' என்றக் குரல் வர ஆச்சர்யப்பட்டு திரும்பியவர் அங்கு பெரிய ஒளியாக சங்கு சக்கரத்துடன் நின்று இருந்த ராமரைக் கண்டு பிரமித்துப் போனாராம்.  எப்போதுமே ராமர் வில் அம்புடந்தான் காட்சி தருபவர். ஆனால் இங்கேயோ சங்கு சக்கரதாரியாக நான்கு கைகளைக் கொண்டு சாட்ஷாத் விஷ்ணு பகவானே ராமபகவான் உருவில் இருந்ததைக் கண்டு ' அறிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் சென்று விட்டேனே ' என வருந்தி அப்படியே விழுந்து வணங்கி பத்து பாசுரங்கள் பாடினாராம்.
\
படம் நன்றி: http://chitra-mypilgrimage.blogspot.com/

இப்படியாக இந்த இடத்தில் குடி இருந்த புல்ல வம்சத்தை சார்ந்த ஜடாயுவிற்கு இறுதிக் காரியத்தை செய்ததினால் இந்த இடம் திரு + புல்ல+ பூத உடல் + குடி என்பது ஒன்றிணைந்து திருப்புல்லக்குடி என ஆயிற்று.  சீதையுடன் வனத்துக்கு வந்த ராமர் தன்னுடன் வில் மற்றும் அம்புகளை மட்டுமே வைத்து இருந்தார்.  ஆனால் திருமங்கை ஆழ்வாருக்கு அவர் காட்சி தந்ததோ சங்கு சக்கரங்களுடன்.  அதனால்தான் என் வாழ்வில் வில் இல்லாத ராமரைக் கண்டேன் என அவர் மனம் மகிழ்ந்ததைக் குறிக்கும் வாழ்வில் வில் இல்லா ராமனைக் கண்டேன்  என்பது  வாழ்வு+வில்+ராமர் என்பது மருகி வல்வில்ராமர் என ஆகி விட்டதினால் இந்த ஆலயத்தில் உள்ள மூலவரை வல்வில் ராமபிரான் என்கிறார்களாம்.  கிழக்கு நோக்கி சயனிக்கும் சதுர்புஜ (நான்கு கைகள் ) ராமரின் காலடியில் போமாதேவி அமர்ந்து உள்ளார். ஆனால் உற்சவ மூர்த்தியில் ராமர் சீதையுடனேயே காணப்படுகிறார்.  இங்கு பூமாதேவி ஒரு போற்குலத்தில் இருந்து  சீதையாக வந்ததினால் தாயாரை பொற்றாமரையாள் அல்லது ஹேமபுஜவல்லி என்ற பெயரில் அழைக்கின்றார்கள்.  இந்த ஆலயம் எப்படி யாரால் கட்டப்பட்டது என்ற  விவரம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். ஆலயம் அஹோபால  மடத்தின் மேற்பார்வையில் உள்ளது.
 
மன நிம்மதி இல்லாதவர்கள், பித்தருக் கடனை சரிவர செய்யாதவர்கள் போன்றவர்கள் இந்த தலத்தில் வந்து வணங்கினால் தோஷங்கள் விலகும் என்கின்றார்கள் . மேலும் வேலை இல்லாதவர்கள் இங்குள்ள யோகா நரசிம்மர் சன்னதிக்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயமாக விரைவில் நல்ல வேலைக் கிடைக்கின்றது என்கிறார்கள். அதனால் அதை உத்தியோகம் தரும் உத்யோக  நரசிம்மர் எனக் கூறுகிறார்கள்.

ஆலய விலாசம்

Thiru Pullaboothangudi Temple
(Valvil Ramar Temple)
5/17 Sannidhi Street,
Pullam Bhoothangudi SO
Swami Malai Via 612301.
Contact:-
Gopal Bhattachar:Tel No. 94435 25365

6 comments:

 1. nice article and lot of information. I went to this temple yesterday. I travelled alone and walked from Aadhanur temple to this temple. very nice village

  ReplyDelete
 2. Very very interesting and informative.It was like reading a story with so many details. Simple and lucid, which is very easy to follow and understand.

  ReplyDelete
 3. Thanks for the blog, I have shared it with the Facebook group on Ancient Indian monuments currently discussing Ramavataram.

  ReplyDelete
 4. As it is in tamil, many of us unable to know the significance of your write-up. Pl., feel free to provide a free english summary of your write-up

  ReplyDelete
 5. As the write up is in english, many of us are not knowing the importance of your observation. Feel free to furnish a summary of your write up in english and oblige

  ReplyDelete