Thursday, December 15, 2011

Land of Snakes

நாகங்கள் ஆண்ட பூமி  - காஷ்மீரின்
பந்தேர்வாஹ்  மலைப் பள்ளத்தாக்குப் பகுதி
சாந்திப்பிரியா
 வாசுகி மற்றும் சீமாட் வாஹன் நாகங்கள் 
 
நீங்கள் நாகங்கள் (பாம்புகள்) ஆண்டுள்ளதான   பூமி  பற்றி  கேள்விப்பட்டு உள்ளீர்களா? இல்லை என்றால் காஷ்மீரத்தில் உள்ள பந்தேர்வாஹ் எனும் மலைப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு  செல்லவும். அதுவே நாகங்கள் ஒரு காலத்தில் ஆண்டு வந்த  என்கிறார்கள்.
பந்தேர்வாஹ் என்பது ஜம்மு மற்றும் காஷ்மீரத்தின் பல மொழி பேசும் பல மத மக்கள் ஒற்றுமையாக வாழும் இடம். இமய மலை அடிவாரத்தில் உள்ள இந்த பள்ளத்தாக்கு அற்புதமான இயற்கை அழகுகளைக்  கொண்ட பூமி. அங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். இங்கு மக்கள் பேசும் மொழியான  பந்தேர்வாஹ் என்பது  ஹிமாச்சலப் பிரதேச மொழியுடன் ஒத்து உள்ளது . ஆனால் பந்தேர்வாஹ் மொழியின் சில சொற்களை பந்தேர்வாஹ் பகுதி மக்களால் மட்டுமே உச்சரிக்க முடியுமாம்.
பந்தேர்வாஹ் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி இருந்த இந்த பகுதியைப் பற்றிய புராணக் கதை இது. இதை 'நாகோன் கா பூமி' என ஹிந்தியில் அழைக்கின்றார்கள். அதன் அர்த்தம் 'நாகங்களின் பூமி'  என்பது. முன்னொரு காலத்தில் இந்த இடம்  முழுவதுமே நீரால் மூழ்கிக் கிடந்தது. அங்கு பல நாகங்கள் வசித்து வந்தன. காஷ்யப முனிவரும்  அப்போது அங்கு (காஷ்மீரில்) வசித்துக் கொண்டு இருந்தார். சில விசித்திர காரணங்களினால் அவருக்கு மனித ரூபன்களைத் தவிர வேறு இன பிராணிகளும் குழந்தைகளாகப் பிறந்தன. அவர் பிரஜாபதியின் பதிமூன்று பெண்களை மணந்து கொண்டு இருந்தவர். அவருடைய இரண்டு மனைவிகளான கத்ரு மற்றும் வினிதா என்பவர்கள் மூலம் அவர் நாகங்களையும் கருடன் மற்றும் அருணாவை பெற்று எடுத்தார்.
 ஆலயம் 

மனைவி காத்ரு மூலம் பிறந்தவர்கள் வாசுகி நாகம், சேஷ நாகம் மற்றும் மஹேல் நாகம் மற்றும் பத்ரா எனும் பதேர்காலி என்ற பெண் போன்றவர்கள் . மனைவி வனிதாவுக்கு பிறந்தவர்கள் கருடன் மற்றும் அவருடைய சகோதரர்கள். இரு மனைவிகளின் பிள்ளைகளும் விரோதம் பாராட்டினார்கள்.  கருடனும் அவர் சகோதரர்களும் நாகங்களை அழிக்க முயற்சித்தார்கள்.அந்த சமயத்தில் அங்கு வந்த காஷ்யப முனிவர் அந்த நீர் முழுவதையும் அங்கிருந்து வெளியேற்றுமாறு நாகங்களுக்கு ஆணையிட்டார். அப்போது அந்த பூமியை ஆண்டு வந்தது நாக (பாம்புகள் )  மன்னர்களே. அங்கிருந்த ஏரியில் மூழ்கிக் கிடந்த  'ஜல்லோட்பாவா' என்ற பறக்கும் நாகம் (டிராகன்) அங்கிருந்த நாகங்களை  கொன்று தின்றபடி  அவற்றை அழிக்கத் துவங்கியது. இதையெல்லாம் கண்டு  மனம் வருந்திய நாகங்கள் அங்கிருந்து கிளம்பி பிற இடங்களுக்கு செல்லத் துவங்கின. அவை சென்ற ஒரு இடமே 'பந்தேர்வாஹ்' மற்றும் 'க்ரிஸ்த்வார்' என்ற மலைப் பள்ளத்தாக்குப் பகுதிகள்.
அவர்கள் செல்லும் முன்னரே நாகங்களின் சகோதரியான பதேர்காலி பந்தேர்வாஹிற்குப் போய் அங்கேயே தங்கி தனக்கு ஒரு ராஜ்யத்தை அமைத்துக் கொண்டு தானே அந்த ராஜ்யத்தின் பட்டத்து ராணியாகி விட்டாள். அங்கு சென்றதும் தனது சகோதரர்களான நாகங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களையும் தான் அரசாண்ட பகுதிக்கு வரவழைத்து தனது  ராஜ்யத்தை மூன்றாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பிரிவாக ஆள்வதற்குக் கொடுத்தாள். பந்தேர்வாஹின் நீரு எனும் நதியின் இடது புறத்தில் உள்ள 'மயோன் பந்தேர்வாஹ்' என்ற பகுதியை வாசுகி நாகம் பெற்றுக் கொள்ள அந்த நாகத்தை உள்ளூரில் இருந்தவர்கள்  பாஸாக்  நாகம் என அழைத்தார்கள். அந்தப் பகுதியின் வலது பக்கத்தில் இருந்த இடம் சேஷ நாகத்தின் ஆளுமைக்கு வர அந்த நாகத்தை  ஸபார் நாகம் என்ற பெயரில்  அழைத்தார்கள். 'பள்லேஸ்சா மற்றும் மர்மெட்' எனும் பகுதிகளை தொட்டபடி இருந்த பகுதிக்கு மகேல் நாகம் அதிபதியாயிற்று. இவை வாசுகி புராணத்தில் காணப்படும் செய்திகள் . இப்படியாக வாசுகி நாகம் பந்தேர்வாஹின் முதல் மன்னனாக ஆக, அவருடைய சகோதரி பத்ரா முதல் பட்டத்து ராணியாக இருந்தாள்.
 ஆலயத்தின் உள்ளே 

அந்த நாகங்களின் ஆலயங்கள் அந்தந்த இடங்களில் அமைக்கப்பட, நாக ஆதிக்கமும் ராஜாங்கமும்  துவங்கியது. தற்போது அந்த நாகங்களை அங்குள்ள மக்கள் தமது குல தேவதையாக வணங்குகிறார்கள். சில காலம் பொறுத்து  தனது சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் பத்ரா அங்கிருந்து கிளம்பிச் சென்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 'வடிபுரா' எனும் பகுதியில் வாழத் துவங்கினாள். அவளுக்கும் அங்கு 'பைன்' எனும் மரக்காட்டில் ஆலயம் அமைந்து உள்ளது. அவளை காஷ்மீர் பண்டிதர்கள் தமது குல தெய்வமாக வழிபடுகின்றார்கள். வருடத்திற்கு ஒரு முறை அவள் நினைவாக விழாவைக் கொண்டாடுகிறார்கள். வாசுகி புராணத்தின் ஸ்லோகம் 303 -304 லில் எழுதப்பட்டு உள்ளது என்ன என்றால் ''எவன் ஒருவன் தேவலோக மனிதர்கள், ரிஷி முனிவர்கள், மற்றும் நாக தேவதைகள் உள்ள இந்த இடத்துக்கு வந்து இந்த தேவியை வழிபடுவார்களோ, அவர்களுக்கு கயாவில் குளித்த புண்ணியம் கிடைக்கும்''.
நாகங்களின் சகோதரியான பத்ரா அங்கிருந்து செல்ல வேண்டியதின் காரணம் குறித்து வரலாற்றுக் கதை இல்லை. ஆனால் வாய் மொழிக் கதையே உள்ளது. கருடாவிற்கு பயந்து தன்னுடைய சகோதரியுடன் பந்தேர்வாஹ் பகுதிக்கு வந்து தங்கிய நாகங்களை தேடி கருடா வந்து வாசுகி மறைந்து கொண்டு இருந்த ஏரியின் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றத் துவங்கியது. அநேகமாக அந்த ஏரி வற்றிவிடும் நிலைக்கு வந்துவிட்டது.  வாசுகியும் பிடிபட்டு விடும் என்ற நிலைமை தோன்றி இருந்தபோது   வாசுகியின் சகோதரி மலை மீது இருந்த தன் நாட்டில் இருந்து நீரை வெளியேற்றி அந்த ஏரியை நிரப்பி வாசுகியைக் காப்பாற்ற  முயலவில்லை. பேசாமல் இருந்து விட்டாள். அதே நேற்றத்தில் சரஸ்வதியை வாசுகி வேண்டிக் கொள்ள சரஸ்வதி தேவி தன் அருகில் இருந்த ஏரியில் இருந்து தண்ணீரை அந்த ஏரிக்கு திருப்பி விட, மீண்டும் வாசுகி மறைந்து இருந்த ஏரியில் நீர் நிரம்பத் துவங்க வாசுகியைப் பிடிக்க முடியாமல் கருடா அங்கிருந்து சென்று விட்டது. ஆகவே சகோதரர்- சகோதரிகளுக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு அவள் வெளியேற வேண்டியதாயிற்று.  வாசுகியை சிவபெருமானும் மற்ற கடவுட்களும் பெரிய அளவில் புகழ்ந்து   உள்ளார்கள்.
ஆலய விழாவின் ஒரு காட்சி
தீ மூட்டி அதை சுற்றி ஓடுவார்கள் 

பிற காலத்தில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் வாசுகியை குல தெய்வமாக  ஏற்றுக் கொண்டு இருந்தாலும், அவளுக்கு வழிபாடுகளில் பிரதான இடத்தை தராமல், அவளுக்கு உறு துணையாக இருந்த 'சீமாட் வாஹன்' என்ற நாகத்துக்கே அதிக முக்கியத்துவம் தந்து உள்ளதினால் அதன்  சிலை வாசுகியின் சிலைக்கு பக்கத்தில் காணப்படுகின்றது. அதனால் வாசுகிக்கு கிடைக்க வேண்டிய தனித்துவ முக்கியத்துவம் ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான  காரணம் தெரியவில்லை. அதே நேரத்தில்  வாசுகி ஆலயங்களில் அதனுடைய சகோதரியான பட்ராவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அவளை அங்குள்ள மக்கள்  யாருமே வணங்குவதில்லை.
 ஆலய விழாவின் ஒரு காட்சி 
தீ மூட்டி அதை சுற்றி ஓடுவார்கள் 

காலம் கடந்தது. நாகங்களின் ஆட்சியையும் முடிவுக்கு வந்து மனிதர்கள் ஆட்சி செய்யத் துவங்கினார்கள். கடைசி நாக மன்னன் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த நேரத்தில் அங்கு வந்த பாண்டவ சகோதரர்கள்,  வித்தியாசமான அஸ்வமேத யாகத்தை நடத்தினார்கள். அதற்கு சாதாரண குதிரைகளை விட வித்தியாசமான குதிரையை தேடினார்கள்.  அப்போது அங்கு ஆட்சியில் இருந்த ஜோப் நாத் எனும் மன்னனிடம் அதிசய குதிரை உள்ளதைக் கேள்விப்பட்டு அதை யாகத்துக்கு தருமாறு கேட்டார்கள்.  ஆனால் அவன் அதை தர மறுக்கவே அவர்கள் அவன் மீது போர் தொடுத்து அவனைக் கொன்று விட்டார்கள் . ஆகவே அவனுக்குப் பின்னர் யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது குறித்து தெரியாமல் போய்விட்டது. அந்த காலகட்டத்தைப் பற்றி  எழுதப்பட்ட அல்லது வாய்மொழிச் செய்திகளோ எதுவுமே இல்லை. வெகு காலத்துக்குப் பிறகு  தாகூர் மற்றும் ரானா போன்றவர்கள் ஆட்சியில் வந்தார்கள். நாக ஆட்சி மறைந்தது.

---------------------------
நன்றி:  இந்த கட்டுரை கீழ் குறிப்பிடப்பட்டு உள்ள புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டு உள்ளது.
History of Bhaderwah Courtsey : Book by Sh. Swami Raj Sharma M.A. (Gold Medalist), LLB, IAS (Retd.) From Rainda Bhaderwah
"A concise history of Jammu, Kashmir and Ladakh upto 1947 A.D and Essay on the Philosophy of History". available at - 66-B/D, Gandhi Nagar Jammu and Modern Printing Press Vasuki Vihar Bhaderwah

அதில் உள்ள சாரத்தை வெளியிட்டுக் கொள்ள அன்புடன் அனுமதி கொடுத்த  www.mybhaderwah.com  இணையதளத்திற்கு நன்றி.

Acknowledgement with thanks : I sincerely thank   www.mybhaderwah.com site which gave me permission to make out an article based on the contents of the above mentioned  abridged book published by their site.

No comments:

Post a Comment