Sunday, August 21, 2011

Kazhugumalai Murugan Temple

 கழுகுமலை முருகன் ஆலயம்
சாந்திப்பிரியா  

கழுகு மலை முருகன் ஆலயம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 20 அல்லது 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள இந்த ஆலயம் சங்கரன் கோவிலில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திலும் , மதுரையில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது .  இது அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம்.  மலையை தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு பறவையைப் போல காட்சி அளிப்பதினாலும்,  இங்கு நிறையவே கழுகுகள் வந்து அமருவது உண்டு  என்பதினாலும் அந்தக் காலத்தில் இதை கழுகு மலை  என்று அழைத்து இருக்க வேண்டும் என்கிறார்கள் என்றாலும்  கழுகு மலை எனப் பெயர் வந்ததின் காரணத்திற்கு கூறப்படும் இராமாயண காலத்து வாய்மொழிக் கதையும் உள்ளது. அந்தக் கதையை கடைசியில்  தந்து உள்ளேன். இந்த ஆலயம் கல்பாறயைக் குடைந்து அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயம்  கல்பாறயை குடைந்து அமைக்கப்பட்டு உள்ளதினால் ஆலயத்தை சுற்றி பிராகாரம் அமைக்கப்படவில்லை. இதனால் இது அஜந்தா மற்றும் எல்லோராவைப் போல குகை ஆலயமாகவே உள்ளது. ஆலயத்துக்கு உள்ளே செல்ல குறுகலான பாதையே உள்ளது.
மேலும் இந்த ஆலயத்து மேல் பகுதியில் மூன்று அடுக்குகளில் பல ஜைன துறவிகள் (தீர்தங்காக்கள் என்பார்கள் ) ஒருவர் பக்கத்தில் ஒருவராக அமர்ந்த நிலையில் த்யானம் செய்து கொண்டு இருப்பது போல சிற்பங்கள் உள்ளதினால் இதை ஜைனர்கள் காலத்து ஆலயமோ எனக் கருத வேண்டி உள்ளது. காரணம் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் இந்த இடம் ஜைன துறவிகள்  வந்து கல்வி பயின்ற இடமாக இருந்துள்ளது என்கிறார்கள் . அதற்குப் பின்னர்தான் அவர்களின் ஆதிக்கம் குறைந்து  சைவ பக்தி மார்க்கம் பரவியபோது இந்த ஆலயம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். சிலர்  இந்த   ஆலயம் சிவபெருமானின் பெருமைக்காக அமைக்கப்பட்டது என்று கூறினாலும் அது சரியான கூற்று அல்ல.  மாறாக இது முருகனுக்காகவே அமைக்கப்பட்ட ஆலயம்  என்பதே உண்மை.

மலை மீது அமைந்து உள்ள இந்த ஆலயத்தில் உள்ள முருகப் பெருமானின் பெயரை கழுகாசலமூர்த்தி என்கிறார்கள். ஆலயம் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாம். ஆலயத்தில் உள்ள முருகனை பாறை மீது  செதுக்கி வடிவமைத்து உள்ளார்கள். இந்த ஆலயத்தின் மிகவும் விசேஷமான காட்சி என்ன என்றால், மயில் மீது அமர்ந்து உள்ள முருகனின் காட்சியில் அவர் வாகனமான மயில் எப்போதும் முருகனுக்கு வலது புறத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள மயில் ஆறு கைகளுடன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தரும் முருகனுக்கு இடப்புறமாக உள்ளது.  இன்னொரு விசேஷக் காட்சி என்ன என்றால்  இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி தனது கையில் மத்தளத்தை வைத்துக் கொண்டு  காட்சி தருகிறார்.  அவருடைய இந்த  மாதிரியான தோற்றத்தை வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது.  ஆலயத்தில் வள்ளி மற்றும் தெய்வானை என்ற  இருவருக்கும் தனி சன்னதிகள் உள்ளன்.
மலையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள நதியின் பெயர்  ஆம்பல் நதி.  இதை தோஷங்களைக் களையும்   புண்ணிய தீர்த்தம் என்கிறார்கள் . அதன் அருகில் உள்ள 'வள்ளி சுனை' என்ற நீர் ஊற்றில் இதுவரை  நீர் வற்றியதே இல்லை என்கிறார்கள். பழனி ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதி மேற்கு முகமாக அமைக்கப்பட்டு உள்ளதைப் போலவே இங்கும் மேற்குபுறமாக சன்னதி அமைந்து உள்ளதினால் இந்த ஆலயத்தை தென் பழனி என்று கூறுகிறார்கள். அதன் காரணம் தெரியவில்லை. இந்த ஆலயம் எழுந்ததின் காரணத்தை  கூறும் கதை இது.
  படம்  நன்றி : http://www.kaumaram.com/aalayam/kazhugumalai/09.html
  ஒரு நாள் அதிமதுரப் பாண்டியன் என்ற மன்னன் வேட்டை ஆடிவிட்டு வந்து களைப்பு மேலிட ஒரு மரத்தடியில் படுத்துக் கிடந்தான். கண் அயர்ந்த நேரத்தில் தூரத்தில் இருந்த ஒரு மலை அடிவாரத்தில் இருந்து ஆலய மணி ஓசை கேட்டது. அந்த ஓசை வந்த இடத்தில் இருந்த மலைப் பாறை மீது நின்று கொண்டு இருந்த ஒரு பசுவின் மடியில் இருந்து பால் வழிந்து கொண்டு இருந்தது. எதன் மீதோ அது தொடர்ந்து பாலை சுரப்பது போல இருந்ததைக் கண்டு அதிசயித்த மன்னன் அங்கு விரைந்து சென்றுப் பார்த்தான். ஆனால் யாரும் அங்கு தென்படவில்லை. எந்தக் கட்டிடமும் இல்லை, பசுவையும் காணவில்லை. ஆலய மணி ஓசையும் நின்றுவிட்டது. 
அன்று நகரில் ஒரு முருக பக்தரின் கனவில் முருகன் தோன்றி அன்று காலையில் நடந்த செய்தியை விரிவாகக் கூறி விட்டு அந்த நாட்டு மன்னனிடம் கூறி  அந்த இடத்தில் தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு ஆணையிட்டப் பின் மறைந்து விட்டார். அந்த முருக பக்தரும் அரசரிடம் சென்று தனது கனவைப் பற்றிக் கூற மன்னன் இன்னும் ஆச்சர்யம் அடைந்தார். காலையில் தான் பார்த்த அதே நிகழ்ச்சியை முருக பக்தரின் கனவில் அப்படியே  கூறி உள்ளதினால் அந்த இடத்தில் எதோ மகிமை உள்ளது எனக் கருதியவர் அந்த இடத்தை அடைந்து அங்கு இருந்த பாறையை நகர்த்துமாறு தனது சேவகர்களிடம் கூற அவர்களும் கஷ்டப்பட்டு அந்தப் பாறையை நகர்த்தினார்கள். அந்த பாறைக்குப் பின்புறத்தில் ஒரு குகை இருந்தது. அதனுள் ஒரு முருகனின் சிலை கிடைத்தது. மிகவும் மகிழ்வுற்ற மன்னன் அந்த சிலையை எடுத்து வைத்து அங்கு ஒரு ஆலயம் எழுப்பினார். இன்னொரு கதையின்படி அந்த பாறையை நகர்த்திய மன்னன் அங்கு மலைக்குள் இருந்த முருகன் சிலை செதுக்கப்பட்டு இருந்த காட்சியைக்  கண்டு திகைத்து நின்றதாகவும், அதையே ஆலயமாக மாற்றி அமைத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இரண்டு கதைகளுமே அந்த ஆலயம் பற்றிக் கூறப்படும் வாய்மொழிக் கதைகளே  என்றாலும் அந்த ஆலயம் அங்கு எழுந்ததின் காரணம் அந்த பாண்டிய மன்னனே என்பது உண்மை என்பதை கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றனவாம் . 
அதன் பெயர் கழுகு மலை என வந்தது ஏன்? அதற்கு இன்னொரு கதை உள்ளது. ராமாயணக் காலத்தில் நடந்ததாக கூறப்படுவது இது. ராமர் சீதையைத் தேடி அலைந்து கொண்டு இருந்தார். அவர் இந்த இடம் வழியே செல்லும்போது அங்கிருந்த நதியில் குளித்து விட்டு  தனது மகன் முருகனுடன் இருந்த ஈசனையும் உமையையும் அங்கு  பூஜித்து வணங்கிச் சென்றாராம். இலங்கைக்கு செல்லும் வழியில் சீதையை தூக்கிக் கொண்டு போன ராவணனை எதிர்த்து யுத்தம் செய்து மடிந்துபோன ஜடாயுவின் சகோதரரான சம்பாதி என்ற கழுகு அவரை வழியிலே சந்தித்தார். ராவணனுடன் சண்டைப் போட்டு இறந்து போன சகோதரனுக்கு தன்னால் ஈமக்கிரியைகளை செய்ய முடியாமல் போனதினால் தனக்கு ஏற்பட்டு உள்ள தோஷத்தை களைந்து கொள்ள முடியாமல் மன வருத்தத்துடன் உள்ளதாகவும் அதற்கு ஒரு வழி கூற வேண்டும் எனவும் ராமரை வேண்டினார். ராமரும் தற்போது கழுகுமலை ஆலயம் உள்ள இடத்தைப் பற்றிக் கூறி அங்கு சென்று அங்குள்ள ஆம்பல் நதியில் குளித்துவிட்டு, அங்குள்ள முருகனை ஆராதித்தால் தோஷ நிவாரணம் பெறலாம் என்று கூற அந்தக் கழுகான சம்பாதியும் இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு வந்து அருகில் இருந்த ஆம்பல் என்ற நதியில் குளித்து முருகப் பெருமானை வேண்டி வணங்கி தோஷ நிவாரணம் பெற்றாராம். ஆகவே கழுகார் இந்த மலைக்கு வந்து தோஷ நிவாரணம் பெற்றதினால் அந்த மலை கழுகு மலை என்றாயிற்று. அதனால்தான் அந்த ஆலயம் அங்கு எழுந்ததும் அந்த ஆலயத்தின் பெயரும் கழுகுமலை ஆலயம் என ஆகியதாம். 
ஆறு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம்  காலை 6 முதல் மதியம் 12 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகின்றது.  கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவற்றை ஒட்டி இங்கு கூடும் மாட்டுத்தாவணி எனும் விழா புகழ் பெற்றது. முருகனை வேண்டிக் கொண்டு இங்கு வந்து  காவடி எடுத்தல், முடி இறக்குதல், திருமணம் செய்து கொள்ளுதல் போன்றவை உண்டு. இங்கு சென்று வணங்குவத்தின் மூலம் தீராத குறைகள் தீரும் என்றும், பலவிதமான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றது என்பதும்,  முக்கியமாக மனக் குறைகள் விலகும் என்பதும் தீராத நம்பிக்கையாக உள்ளன.
முடிவுரை
தமிழ்நாடு தொல்லியல் துறையின்  ஒரு கல்வெட்டு இந்த ஆலயம் பற்றி இப்படி குறிப்பிடுகிறது:-
அரை மலை எனும் பெயரைக் கொண்ட இக் கழுகு மலையின் கிழக்குப் பக்கம் வெட்டுவான் கோவிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணத் தீர்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவார் கோவில் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலைப் போன்றது. ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. பெரிய மலையில் ஏறக்குறைய 7.50 மீட்டர் ஆழத்துக்கு வெட்டி எடுத்து அதன் நடுப் பகுதியை கோவிலாக செதுக்கி உள்ளனர்.  இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக் கல் கோவிலாகும். கோவில் பணி முடிவு பெறவில்லை. சிகரம் மட்டும்  முற்றுப் பெற்று உள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. இதன் காலம் கி.பி . 8 ஆம் நூற்றாண்டாகும். இதில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து உள்ளன. இக் கோவிலிலுள்ள உமா மகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, திருமால், பிரும்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை.  விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரும்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவாரியும் கபோதகமும் அமைந்து உள்ளன.
சமணர்களின் முக்கியப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் இவ்விடத்திலுள்ள மலையின் சரிவில் சமணதீர்தங்கர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்தங்கர் சிற்பங்களை உருவாக்கி உள்ளனர். இச் சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவர் பெயர் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன. இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச் சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை.
இக் கலை சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

No comments:

Post a Comment