Friday, July 22, 2011

Manik Prabhu-1


அத்தியாயம்-1
''தேவா உன் திரு உடல் எங்கும்
தேவர் அனைவரும் திரிந்திடக் கண்டேன்
விலங்குக் கூட்டம் விளையாடுதலையும்
பிறப்புக் கடவுள் பிரும்மா முதல்
முனிவர்வரை அனைவரையும் கண்டேன்
சொல்லில் அடங்கா
அங்கம் அனைத்தும்
அழிவில்லாது ஜொலிக்கும்
வடிவையும் கண்டேன்
இன்னிலே தேவா
முதலும் இல்லை, நடுவும் இல்லை
முடிவோ நிச்சயம் இல்லை.
பகவத் கீதை

தத்தாத்திரேய அவதாரம்

தத்தாத்திரேயர் ஒருமுறை பூமியில் அவதாரம் எடுக்க நினைத்தார். அதனால் ஒரு சிறிய நாடகம் நடத்தி அத்ரி முனிவர் மற்றும் அனுசூயா தம்பதிகளுக்கு சிவா, விஷ்ணு மற்றும் பிரும்மாவின் அவதார மகனாகப் பிறந்தார். உலக நன்மையைக் கருதி அவதூதராக பூமியிலே பிறந்தார். பால்ய லீலைகளை செய்து காட்டியபடி இருந்த அவருடைய யோக சாதனைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்த முனிவர்கள்கூட எண்ணிப் பார்க்க முடிந்திராத லீலைகள் அவை. நன்மையை நாடி வந்தவர்கள், பற்றற்ற வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருந்த மாமுனிவர்கள் போன்றவர்கள் அவர் சாமான்யர் அல்ல என்பதை புரிந்து கொண்டு , அவர் பரப் பிரும்மனின் அவதாரம் என்பதையும் மிகத் தெளிவாகவே அறிந்து கொண்டு இருந்தார்கள். தத்தாத்திரேயர் வேண்டும் என்றே கையில் கள்மொந்தையை வைத்துக் கொண்டும் இறைச்சிகளை கடித்துக் கொண்டும், நிர்வாணமாக நின்றுகொண்டும், உடம்பெல்லாம் சாம்பலை பூசிக் கொண்டு கண்களில் காமவெறி பிடித்தலைந்தவாறு சில பெண்களுடன் விரசமாக சல்லாபித்தபடி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எதிரில் மாயக் காட்சியை தருவது உண்டு. ஆனாலும் ஞானிகள் பலரும் அவற்றை நம்பாமல் அவர் நாடகம் ஆடுகிறார், அவர் காட்டும் காட்சிகள் அனைத்துமே மாயக் காட்சிகள் என்பதை உணர்ந்து கொண்டு அவரை தீர்மானமாக நெருங்கி நின்று அவருடைய முழு ஆசியையும் பெற்றுக் கொண்டு அவருடைய சீடர்கள் ஆயினர்.
வந்தவர்கள் அனைவரும் அதை ரசித்ததும் இல்லை. என்ன கேடு கெட்ட மனிதர் இவர் என்று அவரை புரிந்து கொள்ளாமல் வெறுத்து ஓடியவர்களும் உண்டு. இல்லை அவர் ஆடுவது நாடகமே, அவர் நம்மை சோதிக்கின்றார் என்று கைகூப்பி வணங்கி நின்று அவரை கெட்டியாக மனதில் கட்டிப் பிடித்துக் கொண்டு ஓடாமல் நின்று அவருடைய சிஷ்யர்கள் ஆனவர்களும் உண்டு. பரப்பிரும்மமான தத்தாத்திரேயருக்கு மற்றவர்களை அப்படியெல்லாம் சோதனை செய்வதில் அலாதியான ஆனந்தம் உண்டு.
''ஓ....தத்தாத்திரேயா, அவதார புருஷா, உலகைப் படைத்துக் காத்து தீய சக்திகளை அழிக்க வந்த முமூர்த்களின் அவதாரமானவரே, பரப்பிரும்மமே, உனக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. வேறு எந்த தடையும் இல்லை. வெவ்வேறு ரூபங்களில் உன் ஜோதியைக் கலந்து ரூபங்களை எடுக்கிறாய். இந்த உலகத்தை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு எடுத்துச் செல்ல அத்ரி முனிவர்-அனுசூயா தம்பதியினரின் அவதார புருஷனாகப் பிறந்தவரே, உன் பெயரை உச்சரித்தால் மட்டுமே போதும். பாபங்கள் விலகும், தீமைகள் அழியும். நீயே மூவுலகத்துக்கும் அதிபதி...தூயவனும் நீயே...உன்னை நாங்கள் அனுதினமும் மனம் வற்றும்வரை துதித்துக் கொண்டே இருக்க எங்களுக்கு சக்தி கொடு'' என அவரை வேண்டித் திரிந்தார்கள்.
தத்தாத்திரேயர் எதிலும் பற்றில்லாமல் திரிவார். அவர் மனது எந்த விதத்திலும் களங்கம் அடைந்தது இல்லை. ஜடத் தன்மையுடன் வெளியில் தெரியும் உடலுக்கும் உள்ளிருக்கும் புனித ஆத்மாவிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பார். அவர் எந்த நேரத்தில் எங்கு இருப்பார், எங்கு போவார் என எவருக்கும் புரியாத, தெரியாத புதிர் அவர். ஒருமுறைப் பார்த்தால் பிச்சைக்காரனைப் போல துணி உடுத்தி அரைகுறை ஆடைகள் அணிந்துகொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிவார். நான்கு நாய்கள் பின் தொடர, பசு மாடு பின்னால் நின்று கொண்டு இருக்க அப்படியும் காட்சி தருவார். இன்னொரு சமயத்திலோ ஏரிகளிலும், குளங்களிலும் முழ்கி நின்றும், சுடுகாடுகளில் உருண்டு புரண்டு கிடந்தும் நாட்கணக்கில் ஏகாந்தத்தை அனுபவித்தபடி இருப்பார். ஏரிகளில் முழ்கி பலமணி நேரம் அப்படியே கிடப்பது அவரது வாழ்கையில் சர்வ சாதாரணம். இப்படியாக அவரது வாழ்கை பல நூற்றாண்டு காலம் தொடர்ந்தது.
அவர் உலகிலேயே மிகப் பெரிய அவதாரம் என்றாலும் மனித உருவில் அவதாரம் எடுத்து இருந்ததினால் ஒரு துறவி போலவே அவதூதராகவே வாழ்ந்து கொண்டு இருந்தார். மும் மூர்த்திகளை ஒன்றடக்கி இருந்த அவதூதர் அவர். பல்வேறு இடங்களுக்கும் சென்று அலைந்து கொண்டு இருந்தாலும் அவருக்கு பிடித்த இடம் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதே. உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டும், புலித்தோலை உடைப் போல உடுத்திக் கொண்டும் இருப்பார். அமைதியான ஆனால் ஜொலிக்கும் முகத்தையும் கொண்டவர் அவர்.
தத்தாத்திரேயர் தன்னுடன் வைத்துக் கொண்டு உள்ள சில பொருட்களின் சிறப்பை எப்படி எனக் கூறுவது?
கேட்ட அனைத்தையும் தந்தபடி உலகையும் தர்மத்தையும் காப்பதை குறிக்கும் விதத்தில் காமதேனுப் பசு.
ஆன்மீகத்தின் மூல நூல்களான நான்கு வேதங்களும் என் காலடில்தான் என்பதைக் குறிக்கும் விதத்தில் நான்கு நாய்கள்.
தான் என்ற அகந்தையை அழிப்பதைக் குறிக்கும் திரிசூலம்.
அறியாமையை அழித்து ஒருவனுடைய மனசாட்சியை தட்டி எழுப்புவதைக் குறிக்க கையில் குடுகுடுப்பை.
முக்காலத்தையும் கடந்து நிற்பவர். அனைத்து காலத்தையும் இயக்குபவர் மற்றும் ஆரம்பமும் முடிவும் அட்ட்றவர் என்பதைக் காட்டும் சுதர்சன சக்கரம்.
ஆத்மாவை, மனசாட்சியை தட்டி எழுப்ப சங்கு.
வைராக்யத்தையும் , பிறந்த எதற்கும் அழிவு நிச்சயம் என்பதைக் காட்டும் வீபுதி.
நமக்கு உள்ளத்தில் எதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் பிட்ஷைப் பாத்திரம்.
எப்போதுமே பகவானின் நாமத்தையே ஜெபித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க ஜெபமாலை.
இப்படிப்பட்ட ரூபங்களைக் கொண்டவர் யுகயுகமாக பல்வேறு ரூபங்களை எடுத்துக் கொண்டு அனைவரையும் ரட்சித்து வருகிறார். பூமியிலே என்றெல்லாம் அதர்மம் தோன்றுகிறதோ, தர்மம் உருக் குலைந்து போகத் துவங்குகிறதோ அப்போதெல்லாம் தெய்வீக அவதாரங்கள் தோன்றி உலகை காப்பாற்றுகின்றன. இதைதான் கண்ணபிரான் அர்ஜுனனுக்கு உபதேசித்து இப்படியாகக் கூறினார்:-''யதாயதாஹி தர்மஸ்ய கிலானிர்பவதி பர்தா, அப்யுத்தானம் தர்மஸ்ய ததாத்மான் சுருஜான்மயஹம் பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனாத்யாய சம்பவாமி யுகே யுகே''.
அதனால்தான் பூமியிலே துயரங்களை துடைத்து மனித மேம்பாடு நிலவ தத்தாத்ரேயர் ஸ்ரீ மானிக் பிரபு மகராஜ் என்ற உருவிலே அவதரித்தார்.
.......2

No comments:

Post a Comment