Friday, July 22, 2011

Manik Prabhu - 8

அத்தியாயம் - 8

பரமாத்மா
நான் பற்றிய தலைவா பார்
படைப்புக் கடவுளை படைத்தவன் நீயே
யார் உன்னைப் பணியார்?
முடிவே இல்லாத மூலத்தின் மூலமே
சத்திய தேவன் ஜகன்னாதன் நீ
உண்மை, இன்மை இரண்டிலும் உயர்ந்தவன் நீ
அழிவில்லாதவன் நீ
ஆத்மா தத்துவம், பூரண புருஷன்
பூமியின் மூலமும் அறிந்தவன் நீ
பரமபதம் நீ,
உலகம் எங்கும்
பரவி நிற்பவனும் நீயே
பகவத் கீதையில் அர்ஜுனன்


என்னைப் பார்...என் சக்தியைப் பார்

ஸ்ரீ மானிக் பிரபுவை மக்கள் அனைவரும் அவர் ஜார்னி நரசிம்மா என்ற அந்த இடத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என விரும்பினாலும் அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மற்ற இடங்களில் உள்ளவர்களும் அவர் தமது பகுதிகளில் வந்து வசிக்க வேண்டும் என விரும்பினார்கள். இப்படி வேண்டுகோட்கள் வந்த இடங்கள் பல இடங்களிலும் பரவி இருந்தன. அவர்கள் அனைவருடைய வேண்டுகோட்களையும் ஸ்ரீ  மானிக் பிரபுவினால் தட்டவும் முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை. ஆனால் ஸ்ரீ மானிக் பிரபு எவரையும் ஏமாற்ற விரும்பவில்லை. நான் நிச்சயம் வருவேன். எதிர்பார்த்து காத்திருங்கள் என்றே அனைவரிடமும் கூறுவார். பிரபுவின் சிஷ்யர்களோ இடைவிடாது அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தபடி தங்களது குருவின் உடல் நிலை குறித்தும் கவலை கொண்டு இருந்தார்கள்.அவரை சில காலம் ஒய்வு எடுக்கும்படிக் கூறியும் அவர் ஒய்வு எடுக்கவில்லை . காலம் ஓடியது . ஒரு நாள் ஜார்னி நரசிம்மாவில் ஸ்ரீ மானிக் பிரபு உறங்கிக் கொண்டு இருந்தார். மதிய வேலை. பீதார் நகரில் அன்றைக்கு எதோ ஒரு பண்டிகை. பல பக்தர்களுக்கு அந்த பண்டிகை தினத்தன்று தான் வருவதாக ஸ்ரீ மானிக் பிரபு வாக்கு தந்து இருந்தார். அதனால் பீதார் நகரில் இருந்த அவர் பக்தர்கள் என்னும் பிரபு வாக்கு தந்தபடி வரவில்லையே என காத்து இருந்தார்கள்.
திடீர் என அவர்கள் அனைவரின் வீடுகளிலும் ஆரவாரம், மகிழ்ச்சி. ஸ்ரீ மானிக் பிரபு யாருடைய வீடுகளுக்கு எல்லாம் வருவதாக வாக்கு தந்து இருந்தாரோ அனைவரது வீடுகளுக்கும் சென்றார். எப்படி என்கின்றீர்களா? ஒரே நேரத்தில் அனைவரது வீடுகளுக்கும் சென்றார், அனைவருக்கும் ஆசி வழங்கியப் பின் சென்றுவிட்டார். ஒருவர் வீட்டிற்குச் சென்றது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் பிரபு அவர்கள் வீட்டிற்க்குச் சென்றுவிட்டு திரும்பிப் போனதுமே அது பற்றிய செய்தி ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு தெரிந்தது.. பிரபு என் வீட்டிற்கு இத்தனை மனைக்கு வந்தார், இத்தனை மணிக்கு வந்தார் என அனைவரும் சொல்லிக் கொள்ள அனைவருக்கும் அதிர்ச்சி. காரணம் அவர் அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில்தான் இருந்துள்ளார். ஒருவரை ஒருவர் நம்பாமல் மற்றவர்கள் வீடுகளுக்கு சென்று அங்கு சிதறிக் கிடந்த அரிசி, பூசைப் பொருட்கள், அனைத்து வீட்டினருக்கும் குருஜி தந்திருந்த ஒரே மாதிரியான பிரசாதம் என அனைத்தையும் கண்டப் பின்னரே  பிரபுவின் லீலையை நம்பினார்கள்.
பீதாரில் இந்த நிலை இருக்க ஜார்னி நரசிம்மாவிலும் அந்த செய்தி பரவியது. அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் திகைத்து நின்றார்கள். ஏன் எனில் ஜார்னி நரசிம்மா பீதாரில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது. அங்கு சென்றுவிட்டு திரும்ப குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும். ஆனால் ஸ்ரீ மானிக் பிரபுவோ இங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். எப்படி ஒருவருக்கும் தெரியாமல் வாகன வசதி கூட இல்லாத அந்த இடத்தில் இருந்து பிரபுஜி அந்த நகருக்கு சென்றுவிட்டு திரும்ப வந்து இருக்க முடியும்? பாமர மக்கள் இப்படி எல்லாம் குழம்பிக் கொண்டு இருந்தாலும் மகான்களை பற்றி அறிந்து உள்ளவர்களுக்கு அது புரியும். மாபெரும் மகான்களினால் அப்படிப்பட்ட காரியங்களை செய்ய முடியும். ஆனால் அவர்கள் அதை தினம் தினம் செய்து காட்ட மாட்டார்கள். எப்போதாவது குறிப்பிட்ட காரணங்களுக்காக அதை செய்வது உண்டு. பீதரில் தரிசனம் கொடுத்த  ஸ்ரீ  மானிக்  பிரபு உறக்கம் கலைந்து  எழுந்தார். உடம்பெல்லாம் பெரிய பயணம் செய்துவிட்டு வந்ததைப் போல இருந்தது. அவரைக் காவல் காத்துக் கொண்டு இருந்த வெங்கம்மா களைப்புடன் இருந்த அவரை என்ன ஆயிற்று என்று கேட்டாள். புன்முறுவல் மட்டுமே தந்தார் ஸ்ரீ மானிக் பிரபு. அந்த புன்முறுவலின் அர்த்தம் பீதார் நகரின் செய்தி கிடைத்ததைப் பின்னரே அவளுக்குப் புரிந்தது. வேறு என்ன செய்ய முடியும்? வாக்கு தந்தப் பின் மகான் மக்களை ஏமாற்றுவரா? இது வெங்கம்மாவின் மறைவுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி.
இயற்கையின் மற்றொரு நியதி என்ன என்றால் ஒருவர் எத்தனைதான் மக்களுக்கு நன்மைகள் செய்தாலும் அவர்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தங்கத்தை உறைத்துப் பார்த்தால்தானே அது தங்கமா என்பது புரியும். ஜார்நியின்  உள்ளூரில் இருந்த சில முஸ்லிம் மத வெறியர்கள் அவர்களின் மதத்தை சேர்ந்த சில முஸ்லிம்கள் ஸ்ரீ மானிக் பிரபுவிடம் செல்வதைக் கண்டு பொறாமை கொண்டார்கள். ஸ்ரீ மானக் பிரபுவை பொறுத்த வரையில் அவர் எந்தவிதமான ஜாதி பேததையோ வைத்து இருக்கவில்லை. ஆகவே அந்த பொறாமைக் கொண்டு முஸ்லிம்கள் அவருக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் வேண்டும் என்றே சில இனிப்புப்ப் பதார்த்தங்களுடன் இறைச்சியை கலந்து வைத்து, அந்த தட்டை மூடி பிரசாதம் போல அனைவருக்கும் விநியோகிக்க அதைக் கொண்டு வந்தார்கள். தட்டை துணியைப் போட்டு மூடி இருந்ததினால் இறைச்சியை உள்ளே வைத்து இருந்தது வெளியில் தெரியவில்லை. ஸ்ரீ மானிக் பிரபுவோ  எவர் பிரசாதத்தைக் கொண்டு வந்தாலும் அதை உடனேயே மற்றவர்களுக்கு விநியோகம் செய்துவிடுவார். அன்றும் அது போல மூடி கொண்டு வரப்பட்ட தட்டில் இருந்து பிரசாதத்தை எடுத்து மக்களுக்கு கொடுக்கத் துவங்கினார். அதைக் கொண்டு வந்து இருந்த முஸ்லிம்  வெறியர்கள் அவர் தந்த பிரசாதத்தைப் பார்த்து உறைந்து நின்றார்கள்.  தட்டு முழுவதும் பழங்களும் இனிப்புக்களுமாகவே இருந்தன. அதைக் கண்டு பயந்து போனவர்கள் ஸ்ரீ மானிக் பிரபுவிடம் சென்று மனிப்புக் கோரினார்கள். அவர்களை ஸ்ரீ மானிக் பிரபு மன்னித்து அனுப்பினார். அது முஸ்லிம் மக்கள் நிறைந்து இருந்தப் பகுதி. அந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மக்களிடையே ஸ்ரீ மானிக் பிரபுவின் புகழ் பெருத்தும் பரவியது. அந்த முஸ்லிம் மக்களால் வணங்கப்பட்டு வந்தவர் மகபூப் சுப்பானி என்பவர் . இறந்து போய் இருந்த  இருந்த அந்த மகானின் அவதாரமாகவே ஸ்ரீ மானிக் பிரபுவும் தம்மை அருள்விக்க  அங்கு வந்திருந்ததாகவே அந்த மக்கள் நம்பினார்கள்.
அந்த நிகழ்ச்சியும் ஸ்ரீ மானிக் பிரபுவிற்கு திருப்பு முனையாகவே அமைந்தது. இனியும் ஊர் ஊராக சுற்றிக் கொண்டு இருப்பதில் என்ன பயன் ஏற்படும்? அதைவிட தமது பக்தி மார்க்கத்தைப் பரப்ப ஒரு ஸ்தாபனம் இருந்தால் நல்லது அல்லவா என நினைத்தார். அது மடமாகவோ இல்லை ஒரு சமஸ்தானமாக இருந்தால்கூட பரவாக இல்லை என அவர் நினைத்தார். பெருகி வரும் அக்கிரமங்களை எதிர்த்து அவர்களை ஒடுக்க தனது முழு அவதாரத்தையும் காட்ட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதை உணர்ந்தார். உடனடியாக பல்லக்கில் ஏறிக் கொண்டு கல்யானை விட்டு கிளம்பி பீதாரை வந்து அடைந்தார்.  ஹும்னபாது எனும் இடத்தில் இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அங்கிருந்து கத்வந்தரி என்ற ஊருக்கு செல்ல குறுகலான  பாதையே இருந்தது. நடக்கவே கஷ்டப்பட வேண்டும். இரு புறமும் செடிகள், கொடிகள் என பாதையை மறைத்து நின்றது. அதனால் தன்னை தூக்கி வந்தவர்களின் சுமையைக் குறைக்க தானும் இறங்கி அவர்களுடன் நடந்து செல்லலானார். தூரத்தில் ஒரு சிவன் ஆலயம் தெரிந்தது. அதை வில்வமரங்கள் சூழ்ந்து இருந்தன. அங்கு சென்று ஒய்வு எடுத்தார் ஸ்ரீ மானிக் பிரபு. அப்போது அங்கு ஒரு வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் ஒய்வு எடுத்துக் கொண்டு இருந்தபோது அங்கு இருந்த இரண்டு வில்வ மரங்கள் பற்றி எரிந்தன. அனைவரும் திடுக்கிட்டு எழுந்து கொள்ள அனைவரையும் சாந்தப் படுத்தினார் ஸ்ரீ மானிக் பிரபு. அவர்களிடம் அந்த இரண்டு மரங்களும் இரண்டு பிரும்ம ராக்ஷசர்கள் என்றும் தாம் அங்கு வந்ததினால் அவை அழிந்து விட்டதினால் அந்த மரங்கள் தீப்பிடித்து அழிந்ததாகவும் கூறினார். அதன் பின் காலை அங்கு இருந்த நதியில் அவர் குளித்தப் பின் அருகில் இருந்த கருநெல்லி மரத்து அடியில் தங்கி  இளைப்பாறினார். எப்போதுமே கருநெல்லி மரம் தத்தருக்கு பிடித்தமான ஒன்று என்றும் அதன் அடியில்தான் தத்தர் எப்போது இளைப்பாறிக் கொண்டே இருப்பார் என்றும் கூறுவார்கள். அதை கல்பக விருஷம் என்பார்கள். அதற்கும் ஒரு கதை உண்டு.
முன்னொரு காலத்தில் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹ்ரன்யகசிபுவை  அழித்தபோது அவன் உடலில் இருந்த விஷம் கலந்த ரத்தம் திருமாலின் கை விரல்களில் ஒட்டிக் கொள்ள அவர் விரல்கள் அதன் வெட்பத்தினால் தகித்தன. உடனேயே மகாலஷ்மி அந்த வெப்பத்தின் சூட்டை தணிக்க கருநெல்லி மரத்தில் இருந்து பறித்த பழங்களின் சாற்றை அவர் விரல்களில் தடவ அந்த சூடு மறைந்ததாம். அதன் பொலிவும் மீண்டும் திரும்பியதாம். அது குறித்து குரு சரித்திரத்தில் ஒரு பாடல் உண்டு. அது:
அந்த அசுரனின் இடைப் பகுதியில் இருந்து
 கடுமையான விஷம் கலந்த சதைப் பகுதியின் ரத்த ஓட்டம்
பயங்கரமாக எரிந்து கொண்டு  இருக்கும்
 காட்டுத் தீயைப் போல

அந்த அரக்கனின் நெஞ்சை இரண்டாகப் பிளந்த
சர்வேஸ்வரரின் விரல்களை

ரத்தத்தினால் நனைந்து போக வைக்க
அவர் விரல்களும் வெந்து போயின
அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த கரு நெல்லி மரத்து நிழல் அவர் மனதுக்கு அமைதி தந்தது. அவர் எண்ணம் எண்ணமும் தீவீரம் அடைந்தது. எரிந்து போன வில்வ மரங்களின் நிகழ்ச்சியும் கருவேல மாற நிழலும் மனதில் உறுதியை தந்தது. இங்குதாம் நம்முடைய சமஸ்தானத்தை அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். அதுவே பின்னர் ஸ்ரீ மானிக் நகர் என்ற இடமாக மாறியது. தன்னை மக்கள் அங்கு வந்து தரிசனம் செய்யவும் தனது சக்தியை வெளிப்படுத்தவும் அதுவே சரியான இடம் என ஸ்ரீ மானிக் பிரபு முடிவு செய்துவிட்டதைக் காட்டியது.
...9

No comments:

Post a Comment