Friday, July 22, 2011

Manik Prabhu - 7

அத்தியாயம்-7
உள்ளே உள்ள உள்ளம் கறுத்து
வெளியில் உள்ள உடலும் வெளுத்து
உள்ள அந்த மக்களை
பக்தி மார்கத்தில் இணைக்கவும்
இணைந்த அவர்கள் அனைவரும்
இந்த உலகிலேயே சொர்க்கத்தைப் பெற்று மகிழவும்
வழிகாட்ட என்றே என்னை இந்த உலகில்
இறைவன் படைத்தான்
திரு அருட்பா

பயணம் தொடர்ந்தது.....பாதையும் நீண்டது

ஸ்ரீ மானிக்  பிரபுவின் புகழ் அனைத்து இடங்களிலும் தொடர்ந்தது. எங்கிருந்தெல்லாமோ வந்த மக்கள் அவரிடம் இருந்து ஆசி பெற்றுச் சென்றார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் பல பிரச்சனைகள். தங்களுக்கு ஏற்பட்டு உள்ள சங்கடங்கள் விலக வேண்டும் என அவரிடம் வந்தார்கள். மற்றும் சிலரோ அவருடைய தரிசனம் மட்டுமே கிடைத்தால் போதும் எனவும் அவரிடம் வந்தார்கள். பாமர மக்களுக்கு என்ன தெரியும், எந்த ஞானியும் மகானும் தம்மிடம் உள்ள சக்தியை பயன்படுத்தி உடனேயே வந்தவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது இல்லை என்பது. ஆனாலும் அவற்றை எல்லாம் மீறி அனாவசிய பிரச்சனைகளுக்கு உடனே விடிமோட்ஷம் வேண்டும் என எண்ணியபடி அவரிடம் பெருமளவில் மக்கள் வரத் துவங்கினார்கள். அதனால் மனம் கலக்கமுற்ற பிரபு அப்படிப்பட்ட பிரச்சனைகளில் தான் மூழ்கிக் கிடந்தால் தான் எடுத்த அவதாரத்தின் பலன் வீணாகிவிடும் என்பதினால் மிலார் என்ற அந்த ஊரைவிட்டுக் கிளம்பி பாரவி வைஜனாதா, துள்ஜாபூர் மற்றும் பண்டரிபூர் போன்ற நகரங்களுக்கு செல்லலானார்.
பண்டரிபுரத்தில் உள்ள வித்தலா ஆலயம் புகழ் பெற்றது. பொதுவாக அங்கு செல்பவர்கள் அந்த ஆலயத்துக்கும் செல்லாமல் திரும்ப மாட்டார்கள். ஆகவே அந்த ஆலயத்துக்கு சென்று வித்தலாவை தரிசனம் செய்ய முடிவு செய்தார் ஸ்ரீ மானிக் பிரபு. அவர் கடவுளாகவே இருந்தாலும் பூமியில் பிறந்து விட்டால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க சிலவற்றை செயலில் செய்து காட்ட வேண்டும் அல்லவா. மேலும் தான் யார் என்பதை மற்றவர்களுக்கு காட்டியே ஆக வேண்டும். அப்படிப்பட்ட நியதிகளுக்கு உட்பட்ட ஸ்ரீ மானிக் பிரபு எப்படி விதி விலக்காக இருக்க முடியும்?
வழி நெடுக நடந்து வந்ததினால் சோர்வுற்று இருந்தார். ஆடைகள் அழுக்காகிக் கிடந்தன. ஆலயத்தில் நுழைந்தவர் வித்தலாவின் பாதத்தில் தலையை வைத்து வணங்கச் சென்றார். அந்த ஆலயத்தைப் பொறுத்தவரை ஏழை பணக்காரர் என்ற வித்தியாசத்தை எவரும் காட்டியது இல்லை. ஜாதி பேதமும் பார்த்தது இல்லை. ஆனால் விதி அன்று விளையாடியது. வித்தலாவின் பாதத்தில் தன் தலையை வைக்க ஸ்ரீ மானிக் குனிந்தார். அதைக் கண்ட ஆலய பூசாரி அவரை தடுத்து நிறுத்திக் கூறினார் ' பரதேசியான உன்னை இந்த ஆலயத்தின் சிலையை தொட்டு வணங்க அனுமதிக்க மாட்டேன்'. அது மட்டும் அல்லாமல் வேண்டாத வீண் பிரச்சனைகளைக் கிளப்பினார். ஸ்ரீ மானிக் பிரபு குனிந்த தனது தலையை எடுத்தார். நேராக நின்றபடி பண்டிதரைப் பார்த்தார். அவ்வளவுதான் வித்தலாவின் கழுத்தில் இருந்த அனைத்து மாலைகளும் பறந்து வந்து  ஸ்ரீ மானிக் பிரபுவின் கழுத்தில் விழுந்தன. சுற்றி இருந்த அனைவரும் பிரமித்து நின்றார்கள். பண்டிதரோ அதிர்ந்து நின்றார். தன் கண்களையே  அவரால் நம்ப முடியவில்லை. அப்படியே தடாலென ஸ்ரீ மானிக் பிரபுவின் கால்களில் விழுந்து மனிப்புக் கேட்டார். ஆனால் மானிக் பிரபுவோ நடந்தது எதையுமே பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு இருந்ததைக் கண்டார்கள். அவர் பாடிக் கொண்டு இருந்தார்:-

பாண்டு ரங்கா
இந்த பூமியிலே இருந்து கொண்டு
உன் மகிமையைக் கண்டேன்
சிவபெருமான் உன் கிரீடத்தில் ஜொலிக்க
சந்தனப் பட்டைகள் நெற்றியில் மினுமினுக்க
உன் காதுகளில் தொங்கியபடி தகிக்கும் காதணிகள்
சூரியனை கூட வெட்கி தலை குனிய வைக்கும்
அழகிய கண்களும், மூக்கும்,
புன்முறுவலும் கொண்ட உன் முகத்துக்கு அழகூட்ட
துளசி மாலை மார்பினிலே தவழ
கை இரண்டும் இடுப்பில் பின்னி நிற்க
இரத்தின மாலை கழுத்திலே ஜொலிக்க
பிருகு முனிவர் உன் மார்பிலே தெரிய
வித்தலா
உன் இந்த தரிசனத்தைக் காணவே
இத்தனை நாளும் காத்திருந்தேன்
என் கண்களை பனி மறைக்கின்றது
நெஞ்சமே விம்முகின்றதே
அற்புதம்...அற்புதம்
என் வாழ்க்கையில் நான்
எதை அடைய நினைத்தேனோ
இன்று அதைப் பெற்றேன்
வித்தலா
என்னை நீ உன் அன்பு வெள்ளத்தில்
முழுமையாக முழுக அடித்து விட்டாயே.
இப்படியாக ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டவரை கண்ட மக்கள் மீண்டும் அந்த ஆனந்தக் காட்சி எப்போது தமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்து நின்றார்கள். பண்டரிபூரில் இருந்துக் கிளம்பிய ஸ்ரீ மானிக் பிரபு அங்கிருந்து பூனாவிற்குச் சென்று 'ஜங்கலி மகராஜை' சந்தித்தார். அங்கிருந்துக் கிளம்பி 'கிரினாருக்கு' சென்று அங்கு தத்தாத்திரேயரின் தரிசனத்தைப் பெற்றுக் கொண்டப் பின் கங்கோத்தரி, ஹரித்துவார், கேதார்நாத், பத்ரிநாத், வாரணாசி, காசி , மாஹீர், திருப்பதி மற்றும் கனகாபீர் போன்ற அனைத்து இடங்களுக்கும் விஜயம் செய்தப் பின் சொந்த ஊரான கல்யாணை அடைந்தார். அவரைக் கண்ட பக்தர்கள் பெரும் ஆதரவு தந்து வரவேற்றார்கள். சில நாட்களில் மீண்டும் பயணத்தை துவக்கி கேட்கி சங்கம் என்ற இடத்திற்குச் சென்றார். அங்கு பெருமை வாய்ந்த ஒரு சிவன் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் தாழம்பூவை எடுத்துச் சென்று வணங்காவிடில் பலன் இல்லை என்று கூறுவார்கள். அப்படி ஒரு நம்பிக்கை உண்டு. ஸ்ரீ மானிக் பிரபு அந்த ஆலயத்திற்கு சென்றபோது அங்கு தாழம்பூ கிடைக்கவில்லை. என்ன செய்வது என அனைவரும் குழம்பினார்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப் படாத ஸ்ரீ மானிக் பிரபு ஆலயத்துக்குள் சென்றார். அவர் வந்ததைக் கேள்விப்பட்டதும் அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. அப்போது கூட்டத்தின் மத்தியில் இருந்து ஒரு விவசாயி வந்தார். அவர் கை நிறைய தாழம்பூ. அவற்றை ஸ்ரீ  மானிக் பிரபுவிடம் தந்துவிட்டு கூடத்தில் போய் நின்று கொண்டார். அற்புதமாக பூஜை நடந்து முடிந்தது. பூஜை முடிந்தப் பின் அந்த தாழம்பூவைக் கொண்டு வந்த விவசாயி யார் என்பதைப் பார்க்க அனைவரும் அவரை தேடினார்கள். ஆனால் அவர் காணவில்லை. எங்கே சென்று விட்டார்?
அப்படிப்பட்ட மாயை ஏன் நடந்தது? எந்த ஒரு மகானும் தாம் வந்த காரியத்தை முடிக்காமல் சென்றது இல்லை. தமது மாய சக்திகளினால் அவர்களால் அதை நடத்திக் காட்ட முடியும். ஆனால் ஸ்ரீ மானிக் பிரபுவிற்கு அப்படிப்பட்ட அதிசயத்தை நடத்திக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தத்தராக அவதரித்து இருந்த அவரை உலகிற்கு மேலும் அடையாளம் காட்டவே தத்தர் தாமே அங்கு வந்து அதை நடத்திக் காட்டி உள்ளார் என்பதே உண்மை என்பது பிறகே அனைவருக்கும் தெரிந்தது. மானிக் பிரபுவின் புகழ் மேலும் பரவியது.
பூஜை முடிந்ததும் அங்கு இருந்த ஆல மரத்தின் அடியில் அமைந்து கொண்டு இருந்தபடி அனைவருக்கும் தரிசனம் தந்தார். அங்கு மேலும் ஒரு அதிசயத்தை நடத்திக் காட்டினார். கூட்டத்தில் இருந்த ஒருவரை அழைத்தார். ஒரு இடத்தைக் காட்டி அங்கே பூமியை தோண்டச் சொன்னார் . தோண்டிய அந்த இடத்தில் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது. அதை வெளியில் எடுத்து அங்கேயே ஒரு ஆலயத்தை அமைக்கச் சொன்னார். ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அந்த ஆலயத்துக்கு தானே கும்பாபிஷேகமும் செய்தார். அதன் பின் அங்கிருந்துக் கிளம்பி பீதார் நகருக்கு செல்ல முடிவு செய்தார். அப்போது கேடகி சங்கமத்தில் நயல்கல் என்ற இடத்தில் இருந்த இருந்த தேஷ்முக் என்பவர் ஸ்ரீ மானிக் பிரபுவிடம் தனது ஊருக்கும் வந்து மக்களுக்கு ஆசிர்வாதங்களை அளித்து விட்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். அவர் அன்புத் தொல்லையை தாங்க முடியாமல் ஸ்ரீ  மானிக் பிரபு அவருடன் செல்ல சம்மதிக்க ராஜ மரியாதையுடன் அவரை ஒரு பல்லக்கில் அமர வைத்து தமது ஊருக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். பீதார் நகரில் இருந்து இரண்டு கல் தொலைவிலேயே இருந்த ஜார்னி நரசிமா என்ற இடத்தை அடைந்தபோதுதான் அவர்களுக்கு தாம் வழி தவறி வந்துவிட்டது புரிந்தது. இது எப்படி நடந்தது? நாம் நயன்கல்லை நோக்கித்தானே போனோம் ....அதே வழியில்தானே இத்தனை நாட்களும் போனோம் என குழம்பியவர்கள் மீண்டும் அவரை தூக்கிக் கொண்டு வந்த வழியே செல்ல வழியில் ஒரு இடத்தில் பெரிய பாம்பு அவர்களது வழியை அடைத்துக் கொண்டு படமெடுத்து நின்றது. என்னைத் தாண்டிச் செல்லாதீர்கள் என்ற அச்சுறுத்தலோடு நின்றிருந்தது அந்தப் பெரிய பாம்பு. அதைக் கண்ட ஸ்ரீ மானிக் பிரபு பல்லக்கை விட்டு இறங்கி வந்து அந்த பாம்பிடம் சென்றார். அதனுடன் அவர் எதோ பேசுவது போல தெரிந்தது. அதன் பின் மீண்டும் திரும்பி வந்து பல்லக்கில் ஏறிக் கொண்டவர் 'அந்த பாம்பு நம்மை ஒன்றும் செய்யாது. கவலைப் படாதீர்கள். அது ஒரு சித்த புருஷர். என்னிடம் சில விஷயங்களை கூற விரும்பியதினால்தான் நம்மை தடுத்தது. ஆகவே பல்லக்கை தூக்கிக்  கொண்டு அதன் பின்னாலேயே தொடர்ந்து செல்லுங்கள். அது நமக்கு வழிகாட்டிக் கொண்டு செல்லும்' எனக் கூறினார். அந்தப் பாம்பும் அவர்கள் செல்ல வேண்டிய இடம் வரை வழி காட்டிக் கொண்டு சென்றப் பின் மறைந்துவிட்டது. அதன் பின் ஜார்னி நரசிம்மாவில் தங்கினார் ஸ்ரீ மானிக் பிரபு. அங்கு அவர் தங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அது ஒரு விசேஷமான இடம். அங்குதான் ஒரு பழம் பெருமை வாய்ந்த விஷ்ணுவின் ஆலயம் உள்ளது. அங்கு நந்தி பகவான் விஷ்ணுவை பார்த்தபடி அமர்ந்து உள்ளார். சிவன் ஆலயங்களில் மட்டுமே காணப்படும் நந்தி அங்கு விஷ்ணுவை பார்த்தபடி உள்ளது விசேஷம் அல்லவா.
.........8

No comments:

Post a Comment