Friday, July 22, 2011

Manik Prabhu-5

அத்தியாயம் - 5
பார்த்தா இப்போது என்னைப் பார்
வகைவகையான என் வடிவங்களைப் பார்
ஆதித்யர்களை, அஷ்ட வசுக்களை
அஸ்வினித் தேவர் ருத்ரம் தமை
ஏழு மருந்துகள் என்னுள் அடங்கி
எங்கும் தெரிவதை நன்கே பார்
காண வரும்பும் அனைத்தையும்
காண நினைத்தால் என்னையேப் பார்
இந்தக் கண்களால் என் உருவைக் காண்வது கடினம்
அதனால்தான் பார்த்தா
தெய்வப் பார்வையை சேர்த்தே
உனக்குத் தருகிறேன்
பகவத் கீதை


விஸ்வரூப தரிசனம்

எத்தனை வேண்டிக் கொண்டும் வீடு திரும்ப மறுத்து விட்ட ஸ்ரீ மானிக்கின் பிரிவு வருத்தம் தந்தாலும் வேறு வழி தெரியாமல் ஊர் திரும்பினார்கள் அவர் உறவினர். ஸ்ரீ மானிக் என்றப பெயர் மறைந்து ஸ்ரீ மானிக் பிரபு என அவர் அழைக்கப்படலானார். அப்போது ஸ்ரீ மானிக் பிரபு இருந்த இடம் மன்தால்  என்ற பகுதி ஆகும். அந்த இடத்தை சுற்றியே நிறைய மரம் செடிகள் மற்றும் காடுகள் உண்டு. அங்கு சென்று சுய தரிசனத்தில் ஈடுபடுவார் ஸ்ரீ மானிக் பிரபு. மலை மீது இருந்து இறங்கி வந்து மக்களுக்கு தொண்டு செய்வார். பல நேரங்களில் அவர் போக்கே விசித்திரமாகவும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கும். என்னத்தான் இருந்தாலும் அவர் தத்தாத்திரேயரின் அவதாரம் அல்லவா. அப்படித்தான் இருப்பார். அவருடைய பல நடவடிக்கைகள் பலருக்கு பிடிக்காமல் இருந்தாலும் அந்த வெறுப்பு தற்காலிகமாகவே இருந்து வந்தது.  திடீர் என மரம் ஒன்றின் மீது ஏரி அமர்ந்து கொண்டு அங்கு விளையாடுவார். கட்டைகள் கிடைத்தால் அதன் மீது ஏரி அமர்ந்து கொண்டு குதிரை சவாரி செய்வது போல நடிப்பார். சப்தம் போட்டுக் கொண்டவண்ணமும் இருப்பார். சிறுவர்களையும் சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு வந்து அவர்களுடன் விளையாடுவார். அவருடைய சேஷ்டைகள் பல நேரங்களில் ஒரு பைத்தியக்காரனின் விளையாட்டு போலவே இருக்கும். அதை மற்றவர்கள் தூர நின்று வேடிக்கை பார்ப்பது உண்டு. ஆனால் ஞானிகளும் படித்தவர்களும் ஸ்ரீ மானிக் பிரபு பைத்தியக்காரர் அல்ல, அவர் ஒரு பெரிய மகானாகவே இருக்க வேண்டும் என்றே எண்ணினார்கள். அதற்குக் காரணம் அவர் முகத்தில் தெரிந்த தேஜஸ்தான். ஞானிகளுக்கு மட்டுமே அப்படிப்பட்ட முகம் இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். அவர்கள் நினைத்துப் பார்ப்பது உண்டு- உயிருள்ளபோதே இப்படிப்பட்ட பற்றற்ற வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்க எத்தனைப் பேரால் முடியும்?  ஜபலதா  உபநிஷத் என்ற நூலில் அப்படி பெருமையாகக் குறிப்பிடப்பட்டவர்கள் துர்வாசர், ஜடபறதா மற்றும் ஸ்வதேசு போன்றவர்களே. அதனால்தான் படித்தப் பண்டிதர்களும் கல்வி அறிவு பெற்றவர்களும் ஸ்ரீ மானிக் பிரபு பெரிய மகானாகவே இருக்க வேண்டும் என எண்ணினார்கள். அதனால் அவர்களில் பலர் ஸ்ரீ மானிக் பிரபுவிடம் சென்று அவருடைய ஆசிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார்கள்.
ஸ்ரீ மானிக் ஆடுவார், பாடுவார், கூத்தாடுவார். தெய்வத்தை நினைத்து மனம் உருகிப் பாடுவதே நல்ல செயல் என நம்பினார். அதையே தனது முக்கிய வேலையாக செய்து வந்தார். பஜனைப் பாடல்களைப் பாடுவது ஒவ்வொருவரின் மனதையும் தூய்மைப்படுத்தும். மனதுக்கும் இதயத்துக்கும் இதம் அளிக்கும் என தம்மிடம் வருபவர்களிடம் அவர் கூறுவார். பஜனைப் பாடல்களைப் பாடியவண்ணம் தன்னுடன் வந்து நிற்கும் மக்களுக்கு தன்னிடம் என்ன உள்ளதோ அதை தந்துவிடுவார். அது மட்டும் அல்ல. மற்றவர்கள் தன்னை வந்து தரிசிக்கும்போது தரப்படும் பரிசுப் பொருட்களையும் பிறருக்கு தானமாக தந்து விடுவார். அப்படி தரும்போது தனது எதிரில் உள்ளவர் ஏழையா இல்லை பணக்காரரா எனப் பார்க்க மாட்டார். ஸ்ரீ மானிக் பிரபுவின் சம்பிரதாயத்தில் பஜனை பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதின் காரணம் ''பாட்டிற்கு மயங்காதவர் எவரோ ''என்ற தத்துவார்த்த உண்மைதான். அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அன்னாரின் முன்னோரான ஸ்ரீ நரசிம்ஹா சரஸ்வதி மகராஜ் குரு சரித்திரத்தில் இப்படி பாடியதே:-
என்னை
அடைய நான் என்னொரு வழி சொல்கிறேன்
இனிமையான இசையைக் கொடுப்பவர்களுடன்
நான் இருந்து கொண்டே இருப்பேன்.
எனக்கு இசை உயிரானது
எவர் என்மீது தினமும் துதி பாடுகிறார்களோ
அவர்கள்
என்னுடைய அழியா அன்பை பெற்றவர்கள்
அவர்களின் இல்லத்தில் எல்லாம்
நிச்சயமாக என்னைக் காணலாம்.
ஸ்ரீ மானிக் பிரபு தென்றல் காற்றுப் போல ஊர் ஒற்றாக சுற்றி வந்தார். அவர் ஒரு அவதூதராகவே இருந்து வந்தார். இப்படியாக சுற்றிக் கொண்டு இருந்தவர் சலகாபூர் என்ற இடத்தை வந்தடைந்தார். அது கல்யாண் என்ற ஊரின் எல்லையில் இருந்தது. அந்த சலகாபூயன் ஒதுக்குப் புறத்தில் பழம் பெருமை வாய்ந்த ஹனுமான் ஆலயம் இருந்தது.
மனித நடமாட்டம் இரவில்  குறைவாகவே இருந்ததினால் அந்தப் பக்கம் இரவில் எவரும் செல்ல மாட்டார்கள். அது மட்டும் அல்ல. அந்த ஹனுமார் மிக சக்தி வாய்ந்தவர் என்பதினால் அவர் முகம் பார்க்கவே பயங்கரமாக இருக்கும் என்பது மற்றொரு நம்பிக்கை. ஸ்ரீ மானிக் பிரபுவிற்கு அந்த விஷயம் தெரியாது. அது பற்றி தெரிந்தாலும் அவர் கவலைப்படப் போவது இல்லை. அவர் என்ன சாதாரண மனிதரா பயப்படுவதற்கு?  ஒரு நாள் இரவு வேலை. வெளியில் போய் விட்டு திரும்பி வந்தார் ஸ்ரீ மானிக் பிரபு. சலகாபூரின் அருகில் இருந்த அந்த ஆலயம் அவர் கண்களில் தெரிந்தது. ஆலயத்திற்குள் நுழைந்தார். அங்கு எவருமே இல்லை. ஹனுமாரின் சிலைக் கூட கண்களில் தெரியவில்லை. நல்ல இருட்டு. அந்த சிலையின் தோள்புறத்தில் இருந்த இடுக்கில் தனது காலணிகளை கயற்றி வைத்தார். துணிமணிகளையும் அதன் மீது போட்டு விட்டு அதன் கீழே படுத்து  உறங்கி விட்டார் .
பொழுது புலர்ந்தது. ஆலய பண்டிதர் வந்தார். சிலை மீது காலணிகளும் துணிகளும் இருப்பதைக் கண்டார். தன்னை மறந்து உறங்கிக் கொண்டு இருந்த ஸ்ரீ மானிக் பிரபுவையும் பார்த்தார். கோபம் கொந்தளித்தது. ஸ்ரீ மானிக் பிரபுவை உதைத்து எழுப்பினார். அடி அடி என ஆத்திரம் தீரும் வகையில் அடித்தார். அடித்ததும் திரும்பியவர் தரையில் ரத்தம் வழிந்து இருந்ததைக் கண்டு சிலையை பார்த்தார். அப்படியே அதிர்ந்துவிட்டார். தரையில் வழிந்தோடிய ரத்தம் எங்கிருந்து வந்தது தெரியுமா? ஹனுமான் சிலையில் இருந்தே ரத்தம் வழிந்தோடியது. ' நான் அடித்தது இந்த மனிதரை, அவர் உடம்பிலோ காயம் எதுவும் இல்லை. மனிதர் பதறி  ஓடவும் இல்லை. மாறாக ரத்தம் வழிவதோ ஹனுமான் சிலையில் இருந்து...நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா?..அபசாரம் செய்து விட்டேனா' எனப் பதறினார். அது மட்டும் அல்ல அடித்த தன்  கைகளிலும், உதைத்த கால்களிலும் தாங்க முடியாத வலி வேறு எடுக்கத் துவங்கியது. தான் அடித்தது ஒரு மகானையா? ஒன்றும் புரியாமல் ஒரு கணம் தவித்தார். மனம் பதற உள்ளத்தில் பயம் தோன்ற தடாலென ஸ்ரீ மானிக் பிரபுவின் கால்களில் விழுந்தார். அவர் கால்களை பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கோரினார். மன்னிப்பு  கேட்டு எழுந்தவர் மீண்டும் அதிர்ச்சி அடைந்தார். ஸ்ரீ மானிக் பிரபுவின் உடல் பெரியதாகிக் கொண்டே சென்று அவர் தத்தாத்திரேயாராக காட்சி தந்தார். சில வினாடிகளில் அவர் தன்  பழைய உருவை அடைந்தார்.
அந்த செய்தி காட்டுத் தீயைப் போல அனைத்து இடங்களுக்கும் பரவியது. ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழாவுக்கு செல்வது போல அந்த ஆலயத்தை நோக்கி வந்தார்கள். ஸ்ரீ மானிக் பிரபுவின் ஆசிகளைக் கோரி நின்றார்கள். ஸ்ரீ மானிக் பிரபுவின் தாயாரும் அவர் உறவினர்களும்  கூட அங்கு வந்து மானிப் பிரபுவை வணங்கினார்கள்.
.....6

No comments:

Post a Comment