Friday, July 22, 2011

Manik Prabhu-4

அத்தியாயம்-4
அழிவற்றவர் அவர்
பார்த்ததும் இல்லை இப்படி ஒரு மகானை
கேள்விப்பட்டதும் இல்லை அவர் யார் என
ஆனால்
அவரோ அனைத்தையும்
கேட்டுக் கொண்டே இருக்கிறார்
நினைத்துப்ப் பார்த்ததும் இல்ல அவரைப் பற்றி
அவரோ எண்ண ஓட்டத்தில் மிதக்கிறார்
நமக்கோ ஒன்றும் தெரியவில்லை
அவரோ அனைத்தையும் அறிந்தவராக இருக்கின்றார்
இவரைத் தவிர வேறு எவர் மகானாக இருக்க முடியும் ?
இயற்கைக் கூட இவரிடம்
குறுக்கும் நெடுக்குமாக
பின்னிப் பின்னி இணைந்து இருக்குமோ?
பிரகத் ஆரண்ய உபநிஷத்
நான் யார் தெரியுமா ?

சிறுவர் என்ற வயதைக் கடந்து வயதுக்கு வந்தவர் ஆனார்  ஸ்ரீ மானிக். பசி, உறக்கம் என எதுவும் இல்லை. சாப்பாடு கிடைத்தால் சாப்பிடுவது, இல்லை என்றால் பட்டினி கிடப்பது. உடலைப் பற்றிக் கவலைப்படவில்லை. மனதிலே சொந்த வெறுப்போ, விருப்போ, சொந்த பந்தங்கள் என்றோ எதையுமே வைத்துக் கொண்டு இருக்கவில்லை. அனைத்தையும் கடந்துவிட்ட அவர் ஒரு அவதூத பிரும்மச்சார்யராகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு இயற்கையே வழிகாட்டி. இயற்கையே துணைவன். என்னதான் மகன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாலும் சொந்த பந்தம் விலகி விடுமா என்ன? அந்த இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்ட ஸ்ரீ மானிக்கைப் பற்றி அவர் வீட்டினர் கவலை கொண்டார்கள். ஸ்ரீ மானிக்கிற்கு  பத்து வயதானபோது அவருடைய தந்தை இறந்து விட்டார்.
வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீ மானிக் அங்கும் இங்கும் தனிமையில் சுற்றித் திரிந்தபடி அலையலானார். அந்த ஊருக்கு பக்கத்தில் இருந்த அம்பி குண்டா, மனதால் போன்ற இடங்களுக்கு எல்லாம் சென்று திரும்பினார். கடவுளின் அவதாரமாகவே அவர் பிறந்து இருந்ததினால் அபார ஆற்றல் பெற்று இருந்தார். இயற்கையாகவே அமைதியான சுபாவமும் அமைந்து இருந்தது. அம்பி குண்டாவில் தங்கி இருந்த ஸ்ரீ மானிக் அங்கிருந்த சிவன் கோவிலில் நெடுநேரம் தங்குவது உண்டு. அப்போது அவரைப் எவரும் கண்டு கொண்டது இல்லை. அவரை எதோ வழிப்போக்கன் போலிருக்கின்றதே என்றே பார்த்தார்கள். ஒரு நாள் ஒரு சிவபக்தர் அந்த ஆலயத்துக்கு வந்திருந்தார். அவர் ஸ்ரீ மானிக்கைப் பார்த்தார். தன் நிலை மறந்து அமர்ந்து இருந்த ஸ்ரீ மானிக்கின் முகத்தை சுற்றி ஒரு ஒளி வளையம் சூரியனைப் போல மின்னுவதைக் கண்டு வியந்தார். ஆவலுடன் ஸ்ரீ மானிக்கின்  அருகில் சென்றபோதும் அதே ஒளி வெள்ளம். ஆகவே அவர் ஸ்ரீ மானிக்கிடம் பேச்சு கொடுக்கத் துவங்கினார். ஆனால் ஸ்ரீ மானிக்கோ அவருடன் பேசுவதை தவிர்த்தார் . வேறு இடத்துக்கு சென்று அமர்ந்தார். ஸ்ரீ மானிக் அப்படி செய்வதைக் கண்ட அந்த சிவபக்தரின் ஆவல் அதிகம் ஆகியது. ஸ்ரீ மானிக்கை பின் தொடர்ந்து சென்று அவர் அமர்ந்த இடத்துக்கெல்லாம் தொடர்ந்து சென்றார்.
அதனால் தொந்தரவு அடைந்த ஸ்ரீ மானிக் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு புதருக்குள் சென்று மறைந்து கொண்டார். சிவ பக்தரும் விடவில்லை.புதரின் அருகில் சென்று அதை விலக்கிப் பார்த்தால் அங்கு ஸ்ரீ மானிக் இல்லை. ஒரு பெரிய புலியே படுத்துக் கிடந்தது. அந்த புதருக்குள் பெரிய புலி படுத்துக் கிடப்பதைக் கண்டவர் மானிக்கை  அந்தப் புலி தின்று விட்டது என நினைத்துக் கொண்டு பதறிப் போய் ஊருக்குள் சென்று அந்தப் புலியை அடித்துக் கொல்ல  ஆட்களை திரட்டி வந்தார். வந்த ஜனங்களும் அந்தப் புதரை விலக்கிப் பார்க்க அதனுள் ஸ்ரீ மானிக் படுத்துக் கிடப்பதைக் கண்டார்கள். அது மட்டும் அல்ல, அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஸ்ரீ மானிக் மனிதராகவும், புலியாகவும் மாறி மாறி தோற்றம் தந்தார். அவர்களுக்கு தான் யார் என்பதைக் காட்டுவது போல அமைந்து இருந்தது அந்த நிகழ்ச்சி. நான் யார் தெரியுமா? என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற ஏளன சிரிப்புடன் அதுனுள் அமர்ந்து இருந்தார் ஸ்ரீ மானிக்.
அந்த செய்தி காட்டுத் தீ போல அனைத்து இடங்களுக்கும் பரவியது. ஸ்ரீ மானிக்கின்  உற்றார் உறவினருக்கும் செய்தி கிடைக்க அனைவரும் அங்கு வந்து விட்டார்கள். தயவு செய்து ஊருக்கு கிளம்பி வந்து விடுங்கள் என்ற வேண்டுகோளுடன் வந்திருந்தவர்களிடம் ஸ்ரீ மானிக் கூறினார் '' வருத்தப் படாதீர்கள். உங்களுடைய வேண்டுகோளுக்கு செவி சாய்த்துதான் உங்கள் குடும்பத்தில் அவதரித்தேன். எத்தனைக் காலம் உங்களுடன் இருக்க வேண்டும் என்ற விதி இருந்ததோ அத்தனைக் காலம் உங்களுடன் இருந்தேன். நான் பிறந்தது மனிதகுல மேம்பாட்டிற்காகத்தான்.  நான் பிரும்மன் ஆகி விட்டதினால் எல்லா இடங்களுக்கும் சென்று மக்களை ரட்ஷிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. என் இழப்பை பெரிய இழப்பாகக் கருதாதீர்கள். நான் எங்கு இருந்தாலும் உங்களுடன் இருந்து கொண்டு உங்களைக் காத்தருளுவேன். நீங்கள் அமைதியாக ஊருக்குச் செல்லுங்கள். என் துணை உங்களுக்கு என்றைக்கு தேவைப் படுகின்றதோ அன்று என்னை நினைத்துப் பிரார்த்தனை செய்தால் உங்களின் துயர் தீர்க்க நான் வருவேன்'' என்ற சத்திய வாக்கை தந்தார்.
........5

No comments:

Post a Comment