Friday, July 22, 2011

Manik Prabhu -2

அத்தியாயம்-2
பிரபோ, உலக அபிமானத்தை துறந்து
சின்னஞ்சிறு குழந்தைப் போல
சுகமாக இருப்பேனாக
ஓர் கன்னிகை கையில் மிஞ்சி இருந்த
பிறர் கூட்டு அற்ற
ஒற்றை வளையல் போல
வீண் பேச்சில் அகப்படாமல் சஞ்சரிப்பேனாக
அம்புக் குறி வைத்தவன்
அரசன் வரும் ஊர்வல சப்தத்தைக் கூட
உணராமல் இருப்பது போல
உம்மிடம் மட்டுமே மனதை வைத்து விட்டு
வேறு ஒன்றையும் அறியாமல் இருப்பேனாக
ஸ்ரீமத் நாராயணீயம்

ஸ்ரீ  மானிக் பிரபுவின் அவதாரம்


முன்னாள் ஹைதிராபாத் சமஸ்தானத்தில் இருந்த ஒரு சிற்றூர் கல்யாண் என்ற இடம். அது ஒரு கிராமம். ஸ்ரீ மனோகர் நாயக் மற்றும் பாபா தேவி என்ற தம்பதியினருக்கு பிறந்தவரே ஸ்ரீ மானிக் பிரபு. அந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்து இருந்தனர். 1817 ஆம் ஆண்டு. அந்த ஊரில் தத்த ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டு இருந்தது. அந்த தேதியில்தான் மானிக் பிரபு மனோகர் நாயக் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தத்தாத்திரேயரின் குரு சரித்திர புத்தகத்தை ஆசாரபூர்வமாக பதினாறு வருடங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டு ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து கொண்டு இருந்த தம்பதியினருக்கு அவர்களின் புதல்வராக தத்தாத்திரேயர் ஸ்ரீ மானிக் பிரபு என்ற மகனாக பிறந்ததற்கும் ஒரு காரணம் இருந்தது.
ஸ்ரீ மானிக் பிரபுவின் பெற்றோர்கள் தம்மிடம் மிக்க பக்தி கொண்டு ஆசாரசீலர்களாக விளங்கியவர்கள் என்பதினால் ஒரு நாள் தத்தாத்திரேயர் அவர்கள் கனவில் தோன்றி ''உங்களின் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன வேண்டும் '' எனக் கேட்டார். அந்த தம்பதியினரும் சற்றும் தாமதிக்காமல் ''உங்களைப் போன்ற நற்குணம் படைத்த புதல்வன் வேண்டும்'' என்று கேட்டார்கள். '' கவலைப் படாதீர்கள். நானே விரைவில் உங்களுக்கு மகனாகப் பிறப்பேன்'' எனக் கூறிவிட்டு தத்தாத்திரேயர் மறைந்து போனார். இருவருடைய கனவிலும் தனித் தனியாக தோன்றி அந்த இருவருக்கும் வரம் அளித்த சில காலத்துக்குள்ளேயே அவர் ஸ்ரீ மானிக் பிரபுவாக , தத்தாத்திரேயரின் நான்காம் அவதாரமாக பூமியில் பிறப்பு எடுத்தார். 
சிறு வயது முதலேயே ஸ்ரீ மானிக் வித்தியாசமான குழந்தையாகவே வளர்ந்து வந்தார். அந்தக் குழந்தையை வீட்டினர் மட்டும் அல்லாது மற்றவர்களும் பெரிதும் விரும்பினார்கள். அதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. ஆனால் ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால் அந்தக் குழந்தையின் முன்னால் வந்து எவராவது தனது கஷ்டங்களைக் கூறி வருந்தினாலோ அல்லது தமது பிரச்சனைகளைக் குறித்து விவாதித்தாலோ, அந்த பிரச்சனைகள் தாமாகவே விலகத் துவங்கின. ஆரம்பத்தில் அதைக் குறித்து கவனிக்காதவர்கள் பின்னர் அந்த ஆச்சர்யமான உண்மையைக் கண்டு வியந்தார்கள். அந்தக் குழந்தை முன்பு தமது பிரச்சனைகளைக் கூறி பேசினால் அவை தாமாகவே விலகி விடுகின்றது என்ற நம்பிக்கை கொள்ளத் துவங்கி அதற்குக் காரணம் அந்தக் குழந்தையின் அதிருஷ்டமே என நம்பினார்கள். ஆகவே அந்தக் குழந்தையின் முன்னால் நின்று கொண்டு தமது கஷ்டங்களை விவாதிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக் கொண்டார்கள். வெகு காலத்துக்குப் பிறகே ஸ்ரீ மானிக் பிரபு ஒரு தெய்வப் பிறவி என்பதை தெரிந்து கொண்டப் பின்னரே அதன் காரணம் புரிந்தது.
குழந்தைப் பருவத்தில் இருந்த ஸ்ரீ மானிக் மெல்ல மெல்ல வளரத் துவங்கினார். வளர்ந்து வந்தக் குழந்தை படிப்பில் நாட்டம் இன்றி இருந்தது. நாள் முழுவதும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வீட்டின் அருகில் இருந்த தோப்புக்குள் சென்று விளையாட்டில் நேரத்தைக் கழித்தார். செடிகள், கொடிகள் பறவைகள் என இயற்கையின் அற்புதங்களை ரசித்தபடி பொழுதைக் கழித்தார். அவர் படிக்காமல் ஊதாரியாக வளர்ந்து திரிந்ததினால் மற்றவர்கள் அவரை உதவாக்கரை என்றார்கள். ஸ்ரீ மானிக் அது குறித்துக் கவலைக் கொள்ளவில்லை . தான் ஒரு அவதாரப் புருஷர் என்பதை அவர் மறைமுகமாகக் கூறியும் அதை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இப்படியாக காலத்தை கழித்து வந்தவர் ஒரு நாள் தன்னுடன் விளையாட வரும் நண்பன் கோவிந்தன் அன்று வரவில்லை என்பதை கவனித்த ஸ்ரீ மானிக் 'கோவிந்தனுக்கு என்ன ஆயிற்று' என நினைத்தபடியே அவனை விளையாட அழைத்து வரலாம் என்று எண்ணிக் கொண்டு அவன் வீட்டிற்குச் சென்றார்.
கோவிந்தன் அன்று மாலை இறந்துவிட்டான். அவன் வீட்டில் அவனுடைய பெற்றோர்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தார்கள். தனது நண்பன் கோவிந்தன் இறந்துவிட்டான் என்பதினால் வருத்தமுற்ற ஸ்ரீ மானிக்கிற்கு அந்த நிகழ்ச்சி மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. அனைவரையும் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடினார். 'கோவிந்தா'....'கோவிந்தா' என இருமுறைக் கூவி அழைக்க இறந்து கிடந்த கோவிந்தனும் ஏதோ உறக்கத்தில் இருந்து எழுந்து வருவது போல எழுந்திருக்க அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. மருத்துவர் வந்து அந்த பையன் இறந்துவிட்டதாக ஊர்ஜிதப் படுத்திவிட்டு சென்றப் பின் இறந்து போனவன் உயிர் பிழைத்தது எப்படி? அன்றுதான் சிலரது மனதில் ஸ்ரீ மானிக் ஏதோ அமானுஷ்ய சக்தியை பெற்று உள்ளார் என்ற சந்தேகம் எழுந்தது. கோவிந்தன் எழுந்தான். தனது நண்பருடன் விளையாடச் சென்று விட்டான்.
மற்றும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஹைதிராபாத் நிஜாமின் படையில் இருந்தார் அப்பாராவ் அரபு என்பவர். அவருடைய மனைவியின் பெயர் பீமா பாய் என்பது. அவள் குழந்தை ஸ்ரீ மானிக்கின் அற்புத சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண அவர் இருந்த லட்வந்தி என்ற கிராமத்துக்கு சென்று கொண்டு இருந்தாள். அவள் வந்து கொண்டு இருந்த வழியில் சில சிறுவர்கள் ஒரு பையனை அடித்துக் கொண்டு இருந்தார்கள். ஆகவே அவள் தன்னுடன் வந்து கொண்டு இருந்த வீரர்களை அனுப்பி அடி வாங்கிக் கொண்டு இருந்த சிறுவனை மீட்டு தன்னிடம் அழைத்து வரச் சொன்னாள். அவனை பத்திரமாக வீட்டிற்குப் போகுமாறு கூறினாள். ஆனால் அந்தப் பையனோ தான் மற்ற நண்பர்களுக்கு எட்டு சோழிக் கொட்டைகளை தர வேண்டும் என்றும் அதை தராவிடில் மறுநாளும் அடிப்பார்கள் என்றான். சோழிக் கொட்டை என்பது கடலில் இருந்து கிடைக்கும் கிளிஞ்சல் போன்ற விளையாட்டுப் பொருள். அதனால் அவள் தனது படைவீரனை கடைக்கு அனுப்பி கடையில் இருந்து எட்டு சோழிக் கொட்டைகளை வாங்கி வரச் சொல்லி அதை அந்த சிறுவனிடம் தந்து விட்டுக் கூறினாள் ' இந்தா, இதை உன் நண்பர்களிடம் தந்து விடு''. அதைப் பெற்றுக் கொண்ட அந்தப் பையனோ '' சரி அப்படி என்றால் உனக்கு எட்டு சோழிக் கொட்டைகளை தந்துவிட்டேன்...போ'' என சம்மந்தம் இன்றி உளறிவிட்டு ஓடிவிட்டான். பீமா பாய்க்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் பயணத்தை தொடர்ந்தாள்.
ஸ்ரீ மானிக்கை தேடி அவன் வீட்டிற்குச் சென்றாள். ஆனால் அப்போது ஸ்ரீ மானிக் வீட்டில் இல்லை. அவனது பெற்றோர்களோ அவன் எப்போது வருவான், எப்போது போவான் என்பது தமக்குத் தெரியாது என்றும், சில நேரத்தில் மூன்று நாட்கள் கூட வர மாட்டான் என்பதினால் அவனுக்காக காத்திருப்பது வீண் வேலை எனக் கவலையுடன் அவளிடம் கூறினார்கள். ஆனால் அவற்றைக் கேட்கும் நிலையில் பீமா பாய் இல்லை. தனக்கு அவனைப் பார்க்க வேண்டும், அவனைப் பார்க்காமல் வீட்டை விட்டுப் போக மாட்டேன் எனக் கூறி விட்டு அவர்களுடைய வீட்டு வாசலிலேயே அமர்ந்து கொண்டாள். மூன்று நாட்கள் கழிந்தன. ஸ்ரீ மானிக் வீடு திரும்பவில்லை. ஆகவே பட்டினி விரதம் இருக்கத் துவங்கினாள். அந்த செய்தி ஸ்ரீ மானிக்கின் காதலி எட்டியது. ஆகவே இனியும் அவளை தவிக்க விடுவது தவறு என உணர்ந்தவர் அன்று மாலையே வீடு திரும்பினார். அவனைக் கண்ட பீமா பாய் திடுக்கிட்டாள். தான் எட்டு சோழிக் கொட்டைகளை தந்து காப்பாற்றிய அதே சிறுவன் என்பதை கண்டு வியப்பு அடைந்தாள். ஆனால் அவள் பேசத் துவங்கும் முன்னரே ஸ்ரீ மானிக் கூறினார் ''நான்தான் நீ கேட்ட வரத்தை தந்து விட்டேனே.....இனி என்ன...போ...திரும்பிப் போ......அமைதியாக வீட்டிற்குப் போ '' . அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தவள் தன் ஊருக்கு கிளம்பிச் சென்றாள். அவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளேயே பீமா பாய் அடுத்தடுத்து எட்டு குழந்தைகளை பெற்றெடுத்துக் கொண்டாள். சிறுவன் ஸ்ரீ மானிக்கின் சக்தியைக் கண்டு வியந்து நின்றனர் அனைவரும்.
இவை ஒருபுறம் நடந்து கொண்டு இருந்தாலும் ஸ்ரீ மானிக்கின் நிலைக் குறித்து கவலை கொண்டனர் அவன் பெற்றோர்கள். இப்படியே ஊரை சுற்றிக் கொண்டு இருந்தால் நாளைக்கு அவன் கதி என்ன ஆகும் எனக் கவலைபட்டார்கள். அவனிடம் உள்ள சக்தி அவனுக்கு என்ன கொடுத்துவிடும்? தமது காலத்துக்குப் பிறகு அவனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலை பெற்றோர்களை அறித்தது. ஸ்ரீ மானிக் மனதிலோ வேறு எண்ண அலை ஓடியது. '' தத்த தேவா எனக்கு எதுவும் தேவை இல்லை. என் உருவில் நீ உள்ளபோது அதை உலக நன்மைக்காக உபயோகிக்காமல் ஏன் சம்சார பந்தத்தில் வீணாக செலவு செய்ய வேண்டும்? எவர் வேண்டுமானாலும் எதுவும் கூறட்டும். குழந்தைப் போலவே மனதை தூய்மையாக வைத்து இருந்து திரிந்து அலைந்து கொண்டு இருக்கும் எனக்கு அது பற்றிக் கவலை இல்லை . எது எப்படி இருந்தாலும் என் மனம் சஞ்சலம் அடையாமல் உன் மனதுடனே ஒன்றிக் கிடக்கட்டும். நான் பிறந்த நோக்கம் நிறைவேறும்வரை ஒரே குறிகோளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனதை எனக்குக் கொடு''
.......3

4 comments:

 1. Hi,
  Laudable. was searching for a tamil version of Shri Manik Prabhu Maharaj for a long time say from 2012. Blessed only on Thursday,13/11/2014 11.45 PM. Have read ur 13 chapters. was feeling blessed and contented. thank u so much.

  ReplyDelete
 2. Thanks a lot. To see my service remain useful to devotees, my mind tells me 'continue' service as before.

  ReplyDelete
 3. Yes uncle. Dont ever stop ur spreading of dharma. Please continue ur service as always. Datta Digambhara!.

  ReplyDelete