Friday, July 22, 2011

Manik Prabhu- 12


அத்தியாயம் - 12
அனைத்துமே அவனாக இருந்த பிரும்மன்
அவராலேயே இந்த உலகம் இயங்கிற்று
முழுவதும் அவராகவே இருந்தவரால்
உலகம் வாழ்ந்தது
உலகிற்கு நடத்திக் காட்டிய நாடகமும் முடிந்தது
நர்குனங்களினால் தீய குணங்கள் அழிந்தன
அத்தனைப் பெயர்களும், அத்தனைப் பொருட்களும்
நிறைந்து இருந்த பிரும்மனுடன் கலந்தது
அனைத்துமாக இருக்கும் பிரும்மன் அவனே
நம்மை அவன் ஆசிர்வதிக்கட்டும்
எங்கும் நிலை பெறட்டும்
அமைதி....அமைதி....அமைதி
  ஸ்வாமி ஜ்யோதிர்மயானந்தா 

மானிக் பிரபு - மகா சமாதி

ஸ்ரீ மானிக் நகரில் ஆன்மீக மையம் உருவான உடனேயே அவருக்கு உறுதுணையாக நின்று அனைத்தையும் செய்தவர்கள் நான்கு பேர்கள். நான்கு தூண்கள் போல செயல் பட்ட அவர்கள் தாயார் பாயா தேவி, வெங்கம்மா, மற்றும் ஸ்ரீ மானிக் பிரபுவின் சகோதரர்களான நரசிம்மன் மற்றும் ஸ்ரீ ஹனுமந்து போன்றவர்களே. ஸ்ரீ மானிக் நகர் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. அந்த கால கட்டத்தில்தான் அந்த நான்குபேரும் ஒருவர் பின் ஒருவராக  காலமாயினர். பிரபு தனிமையில் விடப்பட்டார். ஆனால் அவர் மனதில் அப்படி எதுவும் இல்லை. அது மற்றவர்களுக்குத் தெரியாது. தான் உயிர் உள்ளபோதே அவர்கள் அனைவருக்கும் ஜீவா மோட்ஷம் தர விரும்பினார். அதனால்தான் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். அடுத்து எழுந்தக் கேள்வி-  ஸ்ரீ மானிக்  பிரபுவிற்கு வாரிசு யார்?
ஆனால் அதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மானிக் பிரபு ஏற்கனவே செய்து வைத்து இருந்தார். தன்னிடம் இருந்த நான்குபேர்களை  பக்தி மார்கத்தில் தீவீரமாக ஆக்கி நல்ல பயிற்சி தந்திருந்தார். அவர்களிடம் மட்டும் தமது சமாதிக்கான காலத்தைக் கூறி இருந்தார். அவர்கள் பிரபுவின் சமாதி காலத்தைக் கேட்டு துக்கம் அடைந்தார்கள். ஆனாலும் அதை வெளியில் சொல்ல முடியாமல் துக்கங்களை மனதில் மறைத்துக் கொண்டு வெளிப் பார்வைக்கு மகிழ்ச்சியைக் காட்டி வந்து கொண்டு இருந்தார்கள். ' சன்யாசிகளுக்கு பற்றில்லாத மனம் வேண்டும்' என ஸ்ரீ மானிக் பிரபு அவர்களுக்கு அடிக்கடி கூறி  வந்தார் என்றாலும் ஒரு நாள்  அவர்    ''இன்று நான், நாளை நீங்கள். நேற்று என்பது மறைந்து விட்ட  நமது முன்னோர்கள். நான் மறைந்து போனாலும் என்னுடைய ஆவி உங்களுக்கு வழி காட்டிக் கொண்டே இருக்கும். ஒரு உண்மையை என்றும் மறக்காதீர்கள். பிறப்பும் இறப்பும் எந்த ஒரு சரீரத்துக்கும் மாற்ற முடியாமல் அமைந்தது இருக்கும் விதி'' என ஆறுதல் கூறுவார் .
நாட்கள் மெல்ல நகர்ந்தன. பிரபுவின் முதுகில் ஒரு கட்டி தோன்றியது. அவர் தன் சிஷ்யர்களை அழைத்தார். ''எனக்கு அழைப்பு வந்துவிட்டது. நான் தோன்றிய கடமை முடிந்து விட்டது'' எனக் கூறி விட்டு தான் சமாதி அடையப் போகும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார். அந்த இடத்தைக் காட்டி யாரும் அறியாதபடி அங்கு ஒரு குழியை தோண்டி வைக்குமாறு கூறினார். அதே நேரத்தில் ஸ்ரீ மானிக் நகரில் தத்த ஜெயந்தி வெகு விமர்சையாக நடந்து கொண்டு இருந்தது. சாரி சாரியாக மக்கள் ஸ்ரீ மானிக் நகரை நோக்கி வந்தவண்ணம் இருந்தார்கள். எதேர்ச்சையாக அன்று ஒரு முஸ்லிம் பண்டிகையும் சேர்ந்து கொள்ள ஊரில் ஒரே ஆட்டமும் பாட்டமுமாக இருந்தது.
பிரபுவிற்கு வந்திருந்த கட்டி பெரியதாகிக் கொண்டே இருந்தது. என்று ஸ்ரீ மானிக் பிரபு சமாதி அடைய நினைத்து இருந்தாரோ அன்று மாலை விசேஷ தரிசனத்துக்கும் ஏற்பாடு ஆகி இருந்தது. மறுநாள் புண்ணிய திதியான ஏகாதசி. 1865 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி. தரிசனம் துவங்கியது. அதன் முடிவில் ஸ்ரீ மானிக் பிரபு தனது சகோதரரின் இரண்டு மகன்களையும் அழைத்து வரச் சொல்லி அவர்களில் மூத்தவரே தனது வாரிசு எனப் பிரகடனம் செய்து அவருக்கு தனது கையினாலேயே மாலையும் போட்டார். தரிசனம் முடிந்து அமைதி நிலவியது. அனைவரும் சென்றப் பின் ஸ்ரீ மானிக் பிரபு அமைதியாக நடந்து சென்று தான் சமாதி அடைய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த குழிக்குள் அமர்ந்தார். குழி மூடப்பட்டது. மாபெரும் மகானின் உலக வாழ்வு முடிவுற்றது. 
....13

No comments:

Post a Comment