Friday, July 22, 2011

Manik Prabhu - 11


அத்தியாயம் - 11
 

ஒன்றாகக் கூடுங்கள், ஒன்றாகிப் பேசுங்கள்
உங்கள் அனைவர் மனமும்
ஒன்றினை நோக்கியே இருக்கட்டும்
மூவுலக தேவர்களும்
ஒன்றாகி அடையும் இன்பத்தை
உங்கள் பக்தி மார்கங்களும்
உங்கள் சந்திப்பும் காட்டட்டும்
உங்கள் மனதை ஒன்றாக்குங்கள்
உங்கள் ஆசிகளும் ஒன்றாகியே இருக்கட்டும்
அதன் பயனாக
அனைவருமே ஆசி பெற்று
நல்வாழ்வு பெறட்டும்
ஒரு வழிப்போக்கன் கவிதை

மானிக் பிரபுவும் மன்னர்கள் மற்றும் மகான்களும்


சகலமாதா சம்பிரதாயம் என்பதை பிரபுஜி முழுமையாக ஏற்றுக் கொண்டார். அதில் ஒருவருக்குக் கூட அவர் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. அவரை ஒரு அவதார புருஷராகவே ஏற்றுக் கொண்டார்கள். பிரபுஜியின்  வாழ்கையில் பல சம்பவங்கள் நடந்தேறி உள்ளன. அவரை பல மகான்கள் சந்தித்து உள்ளார்கள். அவர்களைப் பற்றி முழுமையாக கூற முடியாது என்பதினால் ஜாடை மாடையாக மட்டுமே கூற இயலும். ஒரு முறை சிருங்கேரி மற்றும் ஹம்பி மடாதிபதிகளுக்கு இடையே ஒரு கருத்து வேற்றுமை தோன்றியது . நிஜாம் மன்னர் ஆட்சி செய்து வந்த பகுதிகளில் எந்த மடத்தினர் சென்று ஆதி சங்கரரின் புகழைப் பரப்புவது என்ற சர்ச்சை அனாவசியமாக பெரியதாயிற்று. ஹம்பி சங்கராச்சாரியார் தான் சுதந்திரமானவர் என்றும் ஆகவே சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு கட்டுப்பட்டவர் அல்ல என்று  கூறிக் கொள்ள  சிருங்கேரி மடத்தின் நரசிம்ம பாரதி VIII என்பவரோ  ஹம்ரி சங்கராச்சாரியாரின் கூற்று தவறு, அவர் எதை செய்தாலும் தம்முடைய மடத்தின் அனுமதியைப் பெற்றே செய்ய வேண்டும் எனக் கட்டளை இட்டார். அந்த தகராறு பல விதமான சர்ச்சைகளைக் கிளப்பியதினால் இரண்டு மடாதிபதிகளும் தமது வேற்றுமையைக் களைய ஸ்ரீ மானிக் பிரபுவை அணுகினார்கள். ஸ்ரீ மானிக் பிரபுவும் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டப் பின் சிருங்கேரி மடத்தின் நரசிம்ம பாரதி VIII அழைத்து அவருக்கு சம்பிராதய வரவேற்பை தந்தப் பின் நீண்ட நேரம் அந்தப் பிரச்சனைக் குறித்துப் பேசினார். அதன் பின் ஸ்ரீ மானிக் பிரபு ஹம்ரி சங்கராச்சாரியாரிடமும் தனிமையில் பேசிய  பின் இருவரும் ஏற்கும் விதமாக ஒரு சமாதான உடன்படிக்கையில் ஸ்ரீ மானிக் பிரபு முன்னிலையில் இருவரும் கையெழுத்து இட்டுக் கொண்டார்கள். அந்த பிரச்சனை சுமுகமாக முடிந்தது. இன்றுவரை அந்த இரண்டு மதத்தினரும் அந்த உடன்பாட்டின்படி தத்தம் கடமைகளை செய்கிறார்கள். ஆனால் அதன் சாரத்தை மூன்று மடாதிபதிகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஸ்ரீ மானிக் பிரபு சமஸ்தானமோ மற்ற மடாதிபதிகளோ இன்றுவரை வெளியிடவில்லை.
மராட்டிய மக்களினால் பெரிதும் மதிக்கப்படும் தத்தாத்திரீய அவதாரமான ஸ்ரீ அக்கல்கோட் ஸ்வாமிகள் தான் வந்து  இனி ஸ்ரீ மானிக் நகரில் தங்க முடிவு செய்த போது அதை ஸ்ரீ மானிக் பிரபு அனுமதிக்கவில்லை. ஸ்ரீ  அக்கல்கோட் ஸ்வாமிகள் தத்தரின் அவதாரமாக அவதரித்த நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் எனில் அக்கல்கோட்டிற்கு சென்று தங்கி அங்கு பணி புரிய வேண்டும் என அறிவுறுத்தினார் ஸ்ரீ மானிக் பிரபு என்ற செய்தி உள்ளதினால்தானோ என்னவோ அக்கல்கோட்டிற்கு சென்று அக்கல்கோட் சுவாமிகளை வணங்கியவர்களை 'ஸ்ரீ மானிக் நகருக்குச் சென்று என்னுடைய மூத்த சகோதரரையும் சந்தித்து ஆசி பெற்றுச் செல்லுங்கள்' என அக்கல்கோட் ஸ்வாமிகள் கூறுவது உண்டு என்று கூறுகிறார்கள்.
அது போலவே ஸ்ரீரடி சாயி பாபா பற்றிய ஒரு செய்தியும் உள்ளது. சாயிபாபா சீரடிக்கு செல்லும் முன்னர் ஸ்ரீ மானிக் நகருக்கு வந்தாராம். ஒரு பகீரைப் போன்று ஒரு குடுவையை எடுத்துக் கொண்டு ஸ்ரீ மானிக் பிரபுவிடம் சென்று 'பிரபுஜி, இதில் ஏதாவது போடுங்கள்' என்றாராம். அப்போது ஸ்ரீ மானிக் பிரபுவின் அருகில் அமர்ந்து இருந்த ஸ்ரீ மானிக் பிரபுவின் சகோதரர் தத்தா சாகேப் என்பவரைப் பார்த்து ஸ்ரீ மானிக் பிரபு கூறினாராம் 'அவர் கூறுவதை செய்'. தத்தா சாகேப் அந்த குடுவையில் எத்தனைப் பணம் போட்டாலும் அது நிறையவே இல்லையாம். பயந்து போனார் தத்தா சாஹேப். அவர் ஸ்ரீ மானிக் பிரபுவைப் பார்க்க ஸ்ரீ மானிக் பிரபு புன்முறுவல் செய்துவிட்டு எழுந்துப் போய் இரண்டு பேரிச்சம் பழங்களையும், சிறிது பூக்களையும் கொண்டு வந்து அதில் போடா குடுவை நிரம்பி வழிந்ததாம். அதை செய்தப் பின் 'சாயி எடுத்துக் கொள்' என்று ஸ்ரீ மானிக் பிரபு கூற, 'இது எனக்குப் போதும்' என சாயி பாபா கூறிவிட்டு அந்தக் குடுவையை தலைகீழாக கவிழ்க்க அதில் இருந்து தத்தா சாகேப் போட்ட பணத்தைவிட அதிக பணம் கீழே கொட்டியதாம். அதன் பின் சாயிபாபா ஸ்ரீ மானிக் பிரபுவிடம் தனிமையில் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தப் பின் கிளம்பிச் சென்று விட்டாராம்.
அதன் பின்  கோண்டேவாலாவை  சேர்ந்த சைதன்ய மகராஜ் என்பவர் பல இடங்களிலும் தமக்கு  ஒரு குருவை தேடி அலைந்தப் பின் கடைசியாக ஸ்ரீ மானிக் பிரபுவிடம்  வந்து சேர்ந்தாராம் . ஹைதிராபாத்தை ஆண்டு வந்த ஐந்தாம் நிஜாம் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லையே எனக் கவலையுடன் இருந்தார். அவர் ஸ்ரீ மானிக் பிரபுவின் சக்தியைக் கேள்விப்பட்டு அவரிடம் தன்  தூதுவரை அனுப்பினார். அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தூக்கிக் கொண்டு தூது வந்தவரிடம் ஸ்ரீ மானிக் பிரபு கூறினார்' இதைவிட எனக்கு தத்தாத்திரேயர் அதிக பொருட்களை தந்து உள்ளார். ஆகவே இவற்றை  திரும்பி எடுத்துக் கொண்டு போய் நிஜாமிடமே தந்து விட்டு, இந்த பிரசாதத்தையும் அவருக்குக் கொடு. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு மெஹபூப் எனப் பெயரிடச் சொல் ' என்று கூறி அனுப்பினார். அதற்கு அடுத்த வருடமே நிஜாமிற்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.
....12

No comments:

Post a Comment