Sunday, July 10, 2011

An American Sadhu - Part: 3

 ஒரு அமெரிக்க சாது 

In Tamil  :- சாந்திப்பிரியா 
Part-3

ராமப்பிரியா 
பிறகு நான் மீண்டும் அடுத்த முறை அங்கு சென்றேன். அப்போது குருஜி மட்டுமே தனியாக இருந்தார். அவர் டெண்டிற்குள் இருந்த படுக்கையில் படுத்து இருந்தார். நான் அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தேன்.
'ராமப்பிரியா தாஸ் குளிக்கின்றார். அவன் நல்ல பிள்ளை' என்றார்.
அப்படியானால் நான் நல்லவன் இல்லையா என யோசித்தேன். முன்னர் வந்த போதெல்லாம் என்னிடம் ஹாஷ் என்ற போதைப் பொருள் உள்ளதா எனக் கேட்பது வழக்கம்.  ஒரு நல்ல சாதுவாக இருந்தால் அதையெல்லாம் கேட்பாரா என யோசித்தேன். எனக்கு அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை.  அதற்குக் காரணம் முன்னர் ஒரு முறை நான் அங்கு சென்று இருந்தபோது ராமப்பிரியா அங்கு இல்லை. அப்போது லஷ்மண்  தாஸ் அவருடைய பெட்டியைக் குடைந்து கொண்டு  இருந்ததைக் கண்டேன்  . என்னைப் பார்த்ததும்  அசடு வழிந்தவாறு அவசரம் அவசரமாக பெட்டியை மூடிவிட்டு வெளியில் வந்தார். என் கையில் ஒரு நாணயத்தை தந்து  கைகளை மூடிக் கொள்ளுமாறும் கண்களை மூடிக்கொண்டு ஒரு மந்திரத்தை உச்சரித்து விட்டு கையை திறந்து பார்க்குமாறும் கூறினார். என் கையில் இருந்த நாணயம் சற்று சூடாக ஆனது. கையை திறந்தால் அதில் விபுதி இருந்தது. எது என்ன மாயம்?
ஆனால் அந்த மாதிரியான ஒன்றை எனக்கு முன்னரே ஒரு ஜோதிடர் செய்து காட்டி இருந்ததினால் நான் அவரிடம் அதை பற்றிக் கூற அவர் மீண்டும் அசட்டுத் தனமாக சிரித்தார். பின்னர் கூறினார் ஒரு நாணயத்தின் மீது ஒரு விதமான கல்லின் தூளை நீருடன் கலந்து தடவி அதை காய வைத்து விட்டால் அதை பெறுபவர்கள் மூடிக் கொண்டு உள்ள கையின் சிறு சூட்டினால் அதுவும்  சூடாகி  அந்த நாணயத்தை அரித்து சாம்பலாக்க அப்படிப்பட்ட விபுதி போன்றது வரும்  என்றார்.
நான் காலையில் பார்த்த விவரத்தையும் வீபுதிக் கதையையும் ராமப்பிரியாவிடம் கூறினேன். ஆனால் அவரோ 'குருஜி அப்படிப்பட்ட கெட்டவர்  இல்லை என்றும், அப்படி எல்லாம் விளையாடுவதை குருஜி வேடிக்கையாக செய்வது பழக்கம்' என்றார்.  அவருடன் நான் பேசிக்கொண்டு இருக்கையில் உள்ளே இருந்து லஷ்மண் தாஸ்சின்  குரல் கேட்டது. ' மங்கள் தாஸ், எனக்கு ஹாஷ்  வாங்கி வந்துள்ளாயா?'  '
இல்லை இந்த முறை எனக்கு அது கிடைக்கவில்லை' என்றேன். அவர் ஏமாற்றம் அடைந்து இருக்க வேண்டும். நானோ பொய் கூறி விட்டு வேறு பக்கம் முகத்தை திரும்பிக் கொண்டேன்.  சற்று தூரத்தில் பச்சை பசேல் என்று  செடி கொடிகள் வளர்ந்து இருந்தது. அங்கு பல கழிவறைகள் இருந்தன. அங்குள்ளவர்கள் காலைக் கடன்களை கழிக்க அங்கு சென்று உள்ளதினால் எரு  போட்டதைப் போன்று இருந்த  அந்த இடமே செடி கொடிகளின் வளர்ச்சியை அதிகரித்து உள்ளது. 
சற்று தூரத்தில் இருந்து கோவணாண்டியாக ராமப்பிரியா ஒரு பித்தளை  பத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு  வந்து கொண்டு  இருந்தார்.
தூரத்தில் இருந்தே குரல் கொடுத்தார் ' ஜெய் ராமா....ஹே...மங்கள் தாஸ் ' அவர் கையை தூக்கி ஆட்டியபோது முன்னர் அவர் கையில் பச்சை குத்தப்பட்டு இருந்த உருவம் தெரிந்தது.  தன் கையில் இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து சாம்பலை எடுத்து பாத்திரத்தில் இருந்து எடுத்துக் கொண்ட சிறிது தண்ணீருடன்  கலந்து உடம்பு முழுவதும் பூசிக் கொண்டார். அவர் பேசிக்கொண்டே இருந்தார். இன்னும்  சில நிமிடங்களில் பல சாதுக்கள் வருவார்கள். அவர்கள் அனைவரும்  நதியில் போய் குளிப்பார்கள்.  'இந்த இடம் முழுவதும் DDT மருந்தை தெளித்து உள்ளார்கள். அதனால் பறவைகள் கூட நம் மீது செத்து விழுகின்றது' என அலுத்துக் கொண்டார்.  
அங்கு கூடும் லட்சக் கணக்கான மக்கள் வியாதிகளினால் பீடிக்கப்படக் கூடாது என்ற ஆர்வத்தில் கொசு, பூச்சிகள் மற்றும் தீய கிருமிகளை அழிக்க அரசு அதிகாரிகள் அங்கெல்லாம் DDT மருந்தை அடிப்பது, வயிற்றைக் குமட்டும் வாசனை தரும் மருந்துகளை நதியின் நீரில் கலப்பது , இரவில் மருந்தை புகையை அள்ளி வீசும் லாரிகளின் இயந்திரங்கள் மூலம் சாலை முழுவதும் வெளியேற்றுவது  போன்ற காரியங்களை செய்து வந்தார்கள்.  ' நச்சுப் பொருளான DDT மருந்து தெளிப்பதை உலகின் எல்லா பாகங்களிலும் மனிதர்களின் உடல் நலனுக்காக நிறுத்தி விட்டார்கள். ஆனால்  மிக அதிகமாக தயாரிக்கப்பட்டு உள்ள அந்த மருந்தை எப்படி அழிக்க  வேண்டும் எனத் தெரியாததினால் இந்தியாவில் கொண்டு வந்து அதை இப்படியாக  அழிக்கின்றார்கள் . சாதுக்களை கொல்கிறார்கள். ' என்றார் அவர்.
வெளிநாட்டு சாதுக்கள் சிலர் 
அவருடைய குருஜி ஒரு சின்ன தூக்கம் போட்டார். அடுத்து சில வெளிநாட்டவர்கள் அங்கு வந்தார்கள்.  மூன்று பெண்கள், மூன்று ஆண்கள். அவர்களைப் பார்த்த குருஜி குதித்துக் கொண்டு எழுந்து வந்து அவர்களை அமருமாறு கூறினார்.  ஜெயராமா...ஜெயராமா எனக் கூவினார்.  ராமப்பிரியா அவர்கள் அமர பாய்களைக்  கொண்டு வந்து தந்தவுடன் தன்னுடைய பணியாளரிடம் அவர்களுக்கு தேநீர் கொண்டு வருமாறு கூறினார். 
வந்தவர்கள் அனைவரும் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்கள். ஐரோப்பிய மற்றும் இந்திய பாணியில் வண்ணமயமான  உடைகளை அணிந்து இருந்தார்கள். உடலில் பல நகைகளையும் அணிந்து இருந்தார்கள். அவர்கள் ரயிலில்  பயணம் செய்து கொண்டு இருந்தபோது யாரோ ஒரு சாமியார் அவர்களுக்கு லஷ்மண் தாஸின் விலாசத்தை தந்து அங்கு செல்லும் வழியையும்   மிக துல்லியமாக  போட்டுத் தந்து இருந்தாராம். மேலும் அவரிடம் பல வெளிநாட்டு பக்தர்களும் உள்ளதாகக் கூறி இருந்தாராம். அதனால்தான் அவரைத் தேடி இங்கு வந்தார்களாம். ஆனால் அந்த சன்யாசியின் பெயர் அவர்களுக்கு நினைவில் இல்லை என்றார்கள். லஷ்மண் தாசுக்கு ஒரே சந்தோஷம்.  தனது புகழ் அத்தனை இடங்களில் பரவி உள்ளாதா?  வியந்தார்.
அடுத்து அவர்கள் கொண்டு வந்து இருந்த போதைப் பொருட்கள் அனைவருக்கும் தரப்பட்டது.  எனக்கும் ஒரு பெண் 'நீங்கள் சில்லுமில் புகை பிடிப்பீர்களா' எனக் கேட்டுவிட்டு அதை தந்தாள்.  லஷ்மன் தாஸ்  கூற ஆரம்பித்தார் ' குரு என்பவரே கடவுளுடன் தொடர்ப்பு கொள்ள உபயோகப்படும்  தொலைபேசி' அதைக் கேட்ட அனைவரும் சிரித்தார்கள். ஆனால் அவர்களுக்கு அது புரியாததினால் ராமப்பிரியா அவர்களுக்கு விளக்கத் துவங்கினார். மேலை நாடுகளில் நிலவும் அவல நிலை,  ஒரு குருவானவர் எப்படிப்பட்டவர் என்றெல்லாம் கூறிக் கொண்டே போனவர் அவர்களுக்கு குரு தேவை என்றால் குருவை தேடிக்கொண்டு வந்திருந்தால் இந்த ஆசிரமத்திலேயே தங்கலாம் என்றார்.  குருவின் மனது யானையைப் போன்றது, ஒரு குரு இல்லாமல் உள்ள வாழ்கை ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது போன்றது எனக் கூறிக் கொண்டே போனவர் அவர்களுக்கு ஒருவர் ஒருவராக பெயர் வைக்கத் துவங்கி அந்த தாஸ், இந்த தாஸ் என்றெல்லாம் கூறிக் கொண்டே போனார். நான் தூரத்தில் இருந்தவாறே  அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். எனக்கு லஷ்மண் தாசுடன் ஏற்பட்ட அனுபவத்தைக் கூறி அவர்களை வேறு குருவிடம் செல்லுமாறு கூறலாமா, அவர்கள் அதைக் கேட்கும்  நிலையில் உள்ளனரா என்பதெல்லாம் தெரியாமல் யோசனை செய்தேன். பிறகு நானே என்னை அடக்கிக் கொண்டேன். பாவம், அந்த குருவும்  மனிதர்தானே...அவருக்கும் ஒரு கும்பல் தேவை...போதைப் பொருள் தேவை....
அன்று இரவு  நான்  தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்ததும் முதல் வேலையாக என் கையில் அவர் கட்டி இருந்த கயிற்றை அறுத்து எறிந்தேன்.
அடுத்து  என்னவெல்லாம்   ஆயிற்று ?  அதுதான் முக்கியக் கதை. அடுத்து வெளியாக உள்ள கடைசி பகுதியில் சுவையான அது வரும்.
...........Part-III......To be continued

No comments:

Post a Comment