Friday, July 1, 2011

An American Sadhu - Part : 2

 ஒரு அமெரிக்க சாது 

In Tamil  :- சாந்திப்பிரியா 
Part-2
 
 ஒரு சாது 
''இனி எனக்கு அது தேவை இல்லை'' என்றவர் தான் தனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் ராம ஜெபம் செய்வதாகக் கூறினார். அவர் தன்னிடம் இருந்த ஒரு துளசி மணி மாலையைக்  காட்டினார். அதை வைத்துக் கொண்டு தினமும் அந்த மாலையில் உள்ள மணிகளின் எண்ணிக்கைகளைப் போல ஆயிரம் மடங்கு ராம ஜெபம் செய்வாராம்.  அதை மேலும் அதிகம் ஆக்கிக் கொள்ள முடிவு செய்து உள்ளாராம். இருபத்தி நான்கு மணி நேரமும் தன் மனதிலும் ராம நாம ஜெபத்தை செய்து கொண்டு இருக்க திட்டமிட்டு உள்ளாராம். 
'ஒருவனுக்கு நல்ல நடத்தையே முக்கியம்' என்றவர் தனது தந்தை இப்போது தன்னைப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்றார். அவருடைய தந்தை அமெரிக்காவின் ராணுவத்தில் ஒரு அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்பது மட்டும் அல்லாமல் அவருடைய குடும்பத்தினரை ராணுவ கட்டுப்பாட்டுடன் வளர்த்தவர். என்றார். ஆகவே ராமப்பிரியா தாஸ் தனது தந்தையை எதிர்த்தார், அவரை வெறுத்தார். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்தன. அவர் தனது தந்தையைப் பற்றி கூறுகையில் மிகவும் கேவலமான வார்த்தையினால் திட்டினார். ஒருநாள்  அவர் யாரிடமும் கூறிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் தந்தையை இன்றுவரைப் பார்க்கவில்லை. 
இப்போதோ அவருக்கு ஒரு  தந்தையைப் போல ஆறுதல் காட்ட குரு உள்ளார் என்று கூறியவர் 'ஒ...குருஜி' என உரத்தக் குரலில்  கூவினார். அவரைப் பார்த்து 'நாம் அடிக்கடி சண்டை போடுகிறோம் இல்லையா ' என்றார்.
லஷ்மண் தாசும் அவரைப் பார்த்தபடிக் கூறினார் 'இந்தப் பையன் தனக்கு எல்லாம் தெரியும் என இப்போது நினைக்கின்றான் அல்லவா. அவனுக்கு ஒரு  அடி கொடுத்தால் சரியாகிவிடும்'  என கொஞ்சலாகக் கூறிக் கொண்டே அவரை தனது தடியினால் அடிக்க வர  ராமப்பிரிய தாஸும் தனது கைகளினால் தனது தலையை மூடிக் கொள்ள, அவருடைய குரு அவர் தலை மீது தனது தடியினால் லேசாக ஒரு தட்டு தட்டினார். அந்த காட்சி நாடகமா அல்லது என்ன என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.  
 ராமப்பிரியா  தாஸ் மற்றும் அவருடைய குருநாதர்
அப்போது அங்கு இன்னொரு சாது வந்தார்.  லஷ்மண் தாஸ் தம்மிடம் இருந்த சில்லும்மை பற்ற வைத்துக் கொள்ள முயன்றபோது அங்கு வந்த சாது தன்னிடம் இருந்த தீக்குச்சியினால் அதற்கு நெருப்பு வைத்தார் .  அவர்கள் அந்த சில்லுமில் இருந்த போதைப் பொருளில் இருந்து எழுந்த புகையை தமது வாய்க்குள் இழுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் ராமப்பிரிய தாஸ்   பேசிக் கொண்டே இருந்தார்.
இந்த உலகில் உள்ள அற்பத்தனமான இன்பங்களில் உழன்று கொண்டு, விஞ்ஞான உலகில் வளர்ந்து வரும் நிலைமைக்கு ஏற்ப வாழ்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டு பேராசைகளுடன் வாழ்ந்து வரும் மக்களின் மத்தியில் உள்ள வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் அவர்களின் வாழ்கை முறைகளுக்கு முற்றிலும் எதிராக ஒரு சன்யாசியாக மாறி இங்கே வந்து பண்டைய கால உலகிற்குச் சென்று விட்டாரே என எனக்கு வியப்பு. 
நாங்கள் புகை பிடித்து  முடிந்ததும் 'நல்ல சரஸ்' எனக் கூறியவாரே லஷ்மண் தாஸ் தனது படுக்கையை இழுத்துப்  போட்டுக் கொண்டு படுத்தார். ராமப்பிரிய தாஸுடன் என்  பேச்சு தொடர்ந்தது.  அடுத்து ''ஆண்-பெண் உறவு பற்றி அதாவது காம இச்சைகளைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டப் பின் தொடர்ந்தேன்  ''அதை துறப்பது சாதுக்களின் அடிப்படைக் கொள்கை அல்லவா .......  மேற்கத்திய நாடுகளிலோ  இல்லை கிழக்கத்திய நாடுகளிலோ சரி, அங்காங்கு உள்ள  அனைத்து சன்யாசிகளுக்கும்  காம இச்சைகளை  அடக்குவது  தலையாய கொள்கை அல்லவா . காம இச்சைகளை ஆன்மீக இன்பமாக மாற்றி அன்பை கடவுள் மீது அல்லவா செலுத்த வேண்டும்''. 
காம இச்சைகளை அடக்குவது குறித்துப் பேசுவதை பலரும் வெட்கமாக நினைப்பார்கள். அதிலும் இந்தியாவில் சன்யாசிகளிடம் அது பற்றிக் கேட்க எவரும் தயங்குவார்கள். ஆனால் ராமப்பிரிய தாஸ் அதைப் பற்றி கவலையேபடவில்லை. தயங்காமல் அதற்கான பதில்களை வெளிப்படையாகவே தந்தார்.
''முதலில் காம இச்சைகளை அடக்குவது எனக்கே கஷ்டமாக இருந்தது.  நானோ அதற்கு அடிமையாக இருந்தவன். அதனால்தான் இந்தக் கோவணத்தை நான் அணிந்து உள்ளேன்' எனக் கூறியவர் தன் இடுப்பில் இருந்த அறை நாண் கயிறு மற்றும்  கோவணத்தைக் காட்டி அதை தனது ஆண் உறுப்பின் மீது கெட்டியாக கட்டிக் கொண்டு உள்ள தோரணையும் தயங்காமல் காட்டினார். இரவும் பகலும் அதை தான் கெட்டியாகவே கட்டிக் கொண்டு  படுப்பதாகக் கூறினார்.
''நீங்கள் காம இச்சைகளைப் பற்றி  இப்போது நினைப்பது இல்லையா'' என்றேன். 
''இல்லை நினைப்பது இல்லை. அப்படி எப்போதேனும் நினைவு வந்தால் காம உணர்ச்சி தோன்றிய உடனேயே  நான் எழுந்து யோகாவையும் ஜெபத்தையும் செய்யத் துவங்கி விடுவேன்'' என்றவர் அது மட்டும் அல்ல தான் ஐரோபியாவுக்கு போகும் போதும் கோவணத்தை தான்  உடைகளுக்கு உள்ளே அணிந்து  கொண்டு சென்றதாகவும் கூறினார்.
ஆனால் அவர் பணப் பிரச்சனையை சமாளிக்கவும், விசா பிரச்சனைக்காகவும் அவ்வப்போது ஐரோப்பாவிற்கு சென்றுவிட்டு வர வேண்டி இருந்தது. அப்போது ஒரு முறை- பல காலம் முன்னர்- சிறிய தவறுகளை செய்து விட்டே வந்தாராம். சில மாதங்கள் ஒருவளுடன் இன்பமாக இருந்துள்ளாராம். இந்தியாவிலேயே தான் தங்கி இருந்திருந்தால் அதை தவிர்த்து இருக்கலாம் என்றார். அவர் கூறியதும் உண்மைதான். மேற்கத்தைய நாடுகளில் காம இச்சைகளை தூண்டும் நிகழ்ச்சிகள், காட்சிகள் போன்றவை   மிக அதிக அளவில் இருப்பதினால்தான் காமம் என்பது வாழ்க்கையோடு ஒன்றிப் போனதாக  அங்கெல்லாம் உள்ளன.
அப்போது அவர் கையில் கட்டப்பட்டு இருந்த கை கடிகாரத்தைப் பார்த்தேன்.  அதே போன்ற ஒன்று அவர் குருஜியின் கையிலும் இருந்தது. அது குறித்துக் கேட்டபோது அவர் தான் கொண்டு வருபவைகளை தனது குருவுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும், இந்த முறை வெளி நாடு சென்று திரும்பியபோது குருவிற்காக ஒரு சிறிய அரவை மிஷின்  (Blender) கொண்டு வந்துள்ளதாகவும், பற்கள் இல்லாத அவருக்கு அது உணவை அரைத்து உண்ண சௌகர்யமாக  இருக்கும் என்றும் கூறினார். அந்த ஆஸ்ரமத்திற்காக அவர் தாராளமாக செலவு செய்து உள்ளார்.  ஒரு சிறிய காட்டையும் ஆசிரமத்தை   சுற்றி வளர்க்க ஏற்பாடு செய்து வந்துள்ளார். அது பற்றிக் கேட்டபோது அவர் அவை அனைத்துமே முதலீடுகள் என்றும் என்ன இருந்தால் என்ன, முடிவாக அந்த ஆசிரமத்தை தலைமை தாங்கப் போவது தான்தானே என்றார்.
எனக்கு ஒரே வியப்பு,''நீங்களா இந்த ஆசரமத்தின் தலைவராக முடியும்"" என்று கேட்டேன்.
அவர் நிதானமாகக்  கூறினார் '' ஆமாம் என்னை ஏற்கனவே  குருவின் வாரிசாக அறிவித்து விட்டார். நான்தான் அவருக்குப் பின் இந்த ஆசரமத்தின் மகன்த்  (தலைவர் ) '' என்றார்.
அதைக் கேட்ட எனக்கு வியப்பு இன்னும் அதிகம் ஆகியது. நான் பல வெளிநாட்டு சாதுக்களை சந்தித்து உள்ளேன். ஆனாலும் அவர்கள் எவருமே தலைமைப் பதவியை  அடைந்தவர்கள் அல்ல.  அவரை அடுத்த மகன்த்தாக அறிவித்தபோது ஒரு வெளி நாட்டவர் மகன்த்தாவதா என பல மகன்த்துக்கள் அதை எதிர்த்தார்கள்.  ஆனால் அவருடைய குருவோ அவர்கள் அனைவருக்கும் சாஸ்திரங்களில் இருந்த ஷரத்துக்களையும், சம்பிரதாயங்களையும்  மேற்கோள்  காட்டி சமாதானப்படுத்தி விட்டார்.
ஒவ்வொரு மகன்த்தும் அவரவர்களுடைய வழியினர்களுடைய செலவை பெரிய அளவில் ஏற்க வேண்டும் என்பதினால் ராமப்பிரிய தாஸை அவர்களுக்கு தலைவராக ஏற்க சம்மதித்ததில் வியப்பில்லைதான். அவர் ஏற்கனவே அவர்களுக்கு பலவிதமான பண உதவிகளை செய்து வந்துள்ளார். அவர் மூலமே குருவிற்கு நல்ல படுக்கை, உள்ள இடத்தின் கட்டணம், பாத்திரங்கள், பண்டங்கள், அடுப்பு என அனைத்தும் அவர்கள் வழிப் பிரிவினரின் வாழ்க்கைக்கு கிடைத்து உள்ளன.
ஆனால் மறுபுறம் பார்த்தால் ராமப்பிரியாவுக்கு அவர்கள் பிரிவில் அனைவரையும் போல வேறுபாடு இல்லாமல் இருக்க இடம் கிடைத்துள்ளது, ஒரு தந்தை-மகன் உறவை அவருடைய குரு அவருக்குத் தந்துள்ளார், அவருக்கும் மரியாதை கிடைத்து உள்ளது. உள்ளூர் ஜனங்களும் அவருடைய குருவிற்கு எத்தனை மரியாதை தருகின்றார்களோ அதே அளவு மரியாதையை இவருக்கும் தருகிறார்கள்.  எவரையும் பார்க்கும் போது குனிந்து வணங்குகிறார்கள்.  அவருக்கும் உணவு தருகிறார்கள், பணிவிடை செய்கிறார்கள், அவரிடம் ஆசிகளைக் கோருகிறார்கள். ஒரு மனிதனுக்கு வேறு என்ன தேவை? சமூகத்தில் ஒரு அந்தஸ்த்து வேண்டும். எந்த சமூகமாக இருந்தால் என்ன?
பேசிக்கொண்டே இருக்கையில், பலத்தக் குரல் கேட்டது. ராமப்பிரியா தாஸ் தனது கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு எழுந்தார். அங்கிருந்த மற்ற சிஷ்யர்களிடம் சாப்பாடு தாராகிவிட்டது, வாருங்கள் என்று குரல் கொடுத்தார். தானும் எழுந்தவர் தனது பிளாஸ்டிக் கை பையை எடுத்துக் கொண்டார். அது நிறைய பல வியாதிகளுக்கும்  மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள்  அவருடைய குரு என்னைப் பார்த்துக் கூறினார் '' ராமப்பிரியா உடல் நலமற்றப் பிள்ளையாகவே உள்ளார் ''.
அடுத்து சில நாட்களில் நான் மீண்டும் அங்கு சென்றபோது ராமப்பிரியா இன்னும்  அதிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தனது ஆசரமத்தில் மேலும் சில வசதிகளை செய்துள்ளதைக்  காட்டினார்.  டென்டின் எதிரில் தீ மூட்ட ஒரு குழியை வெட்டி அதை சுற்றி இருந்த பகுதியில் அமர்ந்து கொள்ள பசு சாணத்தினால் வழ வழவென்று நிலத்தின் மீது பூசி இருந்தார்.  இன்னொரு பக்கத்தில் ஒரு மரத்தடியில் அவருடைய குரு ஒரு கட்டிலில் அமர்ந்து கொள்ள ஏற்பாடு செய்து இருந்தார். நாங்கள் அங்கு சென்று அமர்ந்தோம்.
'எங்கே, உன்னுடைய கையைக் காட்டு' என்று லஷ்மண் தாஸ் என்னிடம் கூறி விட்டு 'இப்போது உனக்கு ஒரு குரு அவசியம் தேவை ' என்றார்.
என்னுடைய மணிக்கட்டில் வெள்ளையும் சிவப்பு நிறமும் கலந்த மணிகளுடன் ஒரு துளசி மணியையும் கோர்த்து இருந்த சொற்ப விலையிலான நகையைக் கட்டினார்.
'இனி உன்னுடைய பெயர் மங்கல்  தாஸ்' என்றார்.
நான் கேட்காமலேயே, எனக்கு அதை அணிவித்ததின் நோக்கம் புரியாத நான் என்னுடைய வியப்பை அடக்கிக் கொண்டு அவரிடம் மங்கல் தாஸ் என்றால் என்ன என்று கேட்டேன். எனக்கு முன்னரே தெரியும் அந்த இடத்தின் அருகில் மங்கல் தாஸ் என்று ஒரு ஆலயம் உள்ளது என்பது.
'இன்று செய்வாய் கிழமை. மங்கல் என்ற பெயர்  ஹனுமானுக்கும் உண்டு. குரங்கு தெய்வம்....இராமருக்குப் பிடித்தமானவர் '  என்று லஷ்மண் தாஸ் கூறியதும்   ' அழகான பெயர், அழகான உருவம் கொண்டவருக்கு சரியானப் பெயர்' என்று பக்கத்தில் இருந்த ராமப்பிரியா தாஸ் கூறினார்.
ஆனால் எனக்கு அவை பிடிக்கவில்லை என்பதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு முன்னரும் நான் பல சாதுக்கள், சன்யாசிகளை  சந்தித்து உள்ளேன். ஆனால் எவருமே அப்படிப்பட்ட செய்கைகளை என்னிடம் செய்யவில்லை.....என்னையும் அவர் ஒரு சிஷ்யனாக மாற்ற நினைக்கின்றார்கள். நானோ எந்த மதத்துக்கும் அடிமை அல்ல. சுதந்திரமாக இருக்க நினைப்பவன். சிஷ்யன் ஆகி விட்டால் பல பணிவிடைகளை செய்ய வேண்டி வரும். சில நேரத்தில் அடிமையாக இருக்க வேண்டும்.
'மங்கல் தாஸ் உனக்கு எப்போதாவது சிக்கல் ஏற்பட்டால் என்னை நினைத்துக் கொள், நான் வந்து உதவுவேன்' என்று குரு வேடிக்கையாகக் கூறினார்.
அப்போது உள்ளூரில் இருந்த கிராமவாசிகள் அங்கு வந்தார்கள். அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்தப் பின் அனைவரையும் மீண்டும்  திரும்பிப் பார்த்தார்கள் . அங்கு இருந்த வெளிநாட்டை சேர்ந்த அமெரிக்க சாதுவைப் பார்ப்பதில்  அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்திருக்க வேண்டும்.  ராமப்பிரியாவோ தன்னுடைய கையில் ஒரு கொத்து திராட்ஷை பழத்தை  வைத்துக் கொண்டு இருந்தார். தன்னை வந்து வணங்கியவர்களுக்கு அதில் இருந்து சிறிது பழத்தைத்  தர அவர்கள்  அதை புனிதப் பிரசாதமாக இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார்கள். ஒரு யோகப் புருஷரை தொட்டால் அவர்கள் உடலில் இருந்து தமக்கு ஆன்மீக சக்தி கிடைக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
அவர்கள் சென்றப் பின் குருஜி கண்களை மூடிக் கொண்டார். மற்றவர்களும் ஆயாசமாக அமர்ந்து கொண்டார்கள். நாங்கள் அந்தப் பழத்தை சாப்பிடத் துவங்கினோம். நான் அமர்ந்து இருந்தபடியே அந்த இடத்தை சுற்றி இருந்தப் பகுதியை நோட்டமிட்டேன். அவர்கள் இருந்த இடத்தின் எதிரில் நிறைய புதர் செடிகளுடன் கூடிய பகுதி. அதைத் தாண்டி போடப்பட்டு உள்ள சாலை.  தொலைவில் ஒரு பஸ்  செல்வதைக் காண முடிந்தது.  சுற்றிலும் புழுதிப் படலம், செடி கொடிகள், பறவைகளின் ரீங்காரம். மெல்ல  காற்றும்  வீசிக் கொண்டு இருந்தது  உடலுக்கு  இதமாக இருந்தது.  அற்புதமான இடம் என நினைத்தேன்.
'ஆமாம், இந்த இடம் மனதுக்கு இனிமையானது...கவலைகள் இல்லை.........பிரச்சனைகள் இல்லை' என்று சுற்றி உள்ள அனைத்து இடங்களையும் சுட்டிக் காட்டியபடி  ராமப்பிரியா  என்னிடம் பேசினார் .
இந்தியாவிலும் அனைத்தும் நன்றாக இல்லை....மக்கள் பொருளாசை பிடித்து அலைகிறார்கள்....ஆனால் இந்தியாவில் பல இடங்களில் அமைதியாக உள்ளனவாம் ...அவர் எப்போது இந்தியாவுக்கு  வந்தாலும் அவர்களுடைய ஒரு ஆசிரமம் உள்ள மவுன்ட் அபுவில் தங்குவதையே விரும்புவாராம். ஆனால் தனது குருவின் அருகில் இருக்க நினைப்பதினால் அவர் எங்கே செல்கின்றாரோ அங்கெல்லாம் எவரும் செல்ல வேண்டி உள்ளது. அவரிடம் தன்னை முழுமையாக அர்பணித்து விட்டதாகவும் தனக்குத் தேவை  மன அமைதி மற்றும் முழுவதுமான மன மாற்றம். அதுவே தற்போது தனது தலையாய எண்ணம் என்றார் அவர்.
ஒரு வருடத்திற்கு முன்னர் அவர் சாம்பல் அபிஷேக தீட்ஷையைப் பெற்றாராம். அது முதல் அவர் இரண்டு வேளையும்  அந்த தீயின் மூலம் கிடைக்கும் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்ள வேண்டும். அடுத்து ஐந்து தீக் குழிக்களில் இருந்து எடுக்கும் சாம்பலை நல்ல வெய்யிலில் உடம்பில் ஐந்து வேளை பூசிக் கொள்ள வேண்டும். அதற்கான மனப் பக்குவத்தை அவர் இன்னமும் பெறவில்லையாம். அந்த ஆசிரமத்தை பெரிய அளவில் கட்டி முடிக்க ஆசை உள்ளது. அங்கு உலகளாவிய யோகா பள்ளியை நிறுவ வேண்டுமாம்.  வரும் விருந்தினர்கள் தங்குவதற்கு ஆஸ்ரமத்தின்  அருகில் ஒரு இடத்தைக் கட்ட எண்ணி உள்ளார். யானைகளை வளர்க்க வேண்டும்...செடி கொடிகள் பயிரிட வேண்டும்..பல விதமான ஆசைகளை வைத்துள்ளார்.
'மங்கல்ஜி ,இன்று என்னுடைய குருநாதர் ஒரு யானை மீது அமர்ந்து கொண்டு ஊர்வலம் செல்ல இருக்கின்றார். நீங்கள் வந்து அதை புகைப்படம் எடுக்கின்றீர்களா' என என்னை அழைத்தார்.
 ஊர்வலத்தில்  யானை மீது ராமப்பிரியா  தாஸ் மற்றும் அவருடைய குருநாதர்- இன்னொரு படம்
மறு நாள் காலை ரயில் நிலையத்தின் அருகில் இருந்த ஒரு இடத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டுச் செல்ல ஏற்பட்டு ஆகி இருந்தது. ஒரே கூட்டம், கூச்சல், குழப்பம். காவல்துறை அனைத்து இடங்களிலும் கடுமையான கட்டுப்பாட்டை வைத்து இருந்தது.  நூற்றுக் கணக்கான பார்வையாளர்கள் சாதுக்களைப் பார்க்க ஆவலுடன் வழி நெடுக நின்று கொண்டு இருந்தார்கள்.  நான் வெளிநாட்டவன், மேலும் புகைப்படக்காரன் என்பதினால் காவல் துறையினர்  அனைவரையும் எனக்குப் பின்னால் தள்ளிவிட்டு முன்னால் நான்  நிற்க நல்ல இடம் ஒதுக்கித் தந்தார்கள்.
 ஊர்வலத்தில்  ஒரு சாதுக்களின் பிரிவினர் 
அங்கு விதவிதமான நாமங்கள் போட்ட மூன்று யானைகள் தயாராக நின்று கொண்டு இருந்தன. திடீரென பல சாதுக்கள் கூட்டமாக உள்ளே இருந்து வெளியில் ஓடி வந்தார்கள். ஒரு ஒழுங்கு முறை இல்லாமல் தள்ளிக் கொண்டு சாலை நடுவில் யாத்திரைக்குத் தயாராக வந்து நின்றார்கள். அவர்களை அடுத்து   கம்பீரமாக தோற்றம் அளித்த சாமியார்கள், சன்யாசிகள் என பல பிரிவினர்கள்  வெளியில் வந்தார்கள். ராமப்பிரியாவும் அவருடைய குருவும் ஒரு யானை மீது ஏறி உட்கார தயாரானார்கள். அந்த யானை காலை மடித்துக் கொண்டு உட்கார அதன் முதுகின் மீது அமைக்கப்பட்டு இருந்த பல்லக்கில் கஷ்டப்பட்டு ஏறி அமர்ந்தார்கள்.  அவர்கள் ஏறிக் கொண்டதும் அந்த யானை எழுந்து நிற்க அவர்கள் அமர்ந்து இருந்த பல்லக்கு குலுங்கியது. அவர்கள் கீழே விழுந்து விடுவார்கள்  போல இருந்தது. ராமப்பிரியா தாசும் அவருடைய குருவும் அனைவரையும் பார்த்து கைகளை அசைத்துக் காட்டி ஆசிர்வதிப்பது போலச் சென்றார்கள். நான் நின்று இருந்த இடத்திற்கு வந்ததும் என்னையும் பார்த்து கையை அசைக்க  நான் அவர்களை புகைப்படம் எடுத்தேன். அவர்கள் அனைவரும் ராஜா மகராஜாக்களைப் போல காட்சி தந்தவண்ணம் சென்று கொண்டு இருந்தார்கள்.
 
ஊர்வலத்தில்  யானை மீது ராமப்பிரியா  தாஸ் மற்றும் அவருடைய குருநாதர்
வழி நெடுக வெயிலின் தாக்கத்தை தவிர்க்க உள்ளூர் ஆட்சியினர் தீயணைக்கும் வண்டிகள் மூலம் தண்ணீரை பேச்சி பாய்ந்து கொண்டே செல்ல சாதுக்களும் சன்யாசிகளும் தன்னை மறந்து ஆடியவண்ணம் அந்த சாலையில் குதித்து ஆடியபடி  சென்று கொண்டு இருந்தார்கள். பலர் அவர்களில் நிர்வாணமாகவே இருந்தார்கள். உடம்பில் ஒரு போட்டு துணிகூட இல்லை.  சிலர் நல்லமுறையில் காவி உடை அணிந்து கொண்டு இருந்தார்கள்.
 ஊர்வலத்தில்  இன்னொரு  சாதுக்களின் பிரிவினர் .
சிப்ரா நதியில் குளிக்கத் தயாராக உள்ளார்கள்
எங்கும் காவி வண்ணமயமான கொடிகள்....பூக்கள் எரிந்து கிடந்தன...சாதுக்களின் கழுத்தில் மஞ்சள் நிற மாலைகள். அந்தப் பகுதியே மஞ்சளும், காவி வண்ணமுமாகவே காட்சி தந்தது.  சாதுக்கள் தமது கழுத்தில் அணிந்து இருந்த மாலைகளில் இருந்த பூக்களை   அங்காங்கே நின்று கொண்டு இருந்த மக்களிடம் தூக்கிப் போட அதை அந்த மக்கள் பிரசாதமாகவே கருதி வாங்கிக் கொண்டார்கள். ராமப்பிரியா தாசும்  அங்காங்கே மக்களைப் பார்த்து ஆசிர்வதித்துக் கொண்டே சென்றார்.  நான் நினைத்துப் பார்த்தேன், அப்படியெல்லாம் தனக்கும் ஒரு தகுதி கிடைக்க அவர் எத்தனை செலவு செய்து இருப்பார்? .........   மறுநாள்..........
 ...........Part-III......To be continued

No comments:

Post a Comment