Sunday, February 13, 2011

Thillai Kaali Amman Temple

 தில்லை காளியம்மன் ஆலயம் 
- சாந்த சொரூபம்  மற்றும் உக்ரஹ சொரூபமாக 
உள்ள இரண்டு  தேவிகள் - 
சாந்திப்பிரியா 
சிதம்பரத்தில் இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அனைவரும் அறிந்தது சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயமே. ஆனால் அந்த தில்லை நடராஜர் ஆலயத்துக்குச் செல்பவர்கள் அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் உள்ள தில்லை காளியம்மனையும் தரிசிக்காமல் வந்தால் தில்லை நடராஜரை தரிசித்தப் பலன் கிடைக்காது  என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிதம்பர ஆலயத்தில் இருந்து இடதுபுறமாகச் சென்று முதலில் வரும் இடது திருப்பத்தில் திரும்பி நேராகச்  சென்றால் அந்த சாலையின் இறுதியில் தில்லை காளியம்மன் ஆலயம் உள்ளது. அது மட்டும் அல்ல அந்த தில்லை காளியம்மன் வரக் காரணமாக இருந்த   இரண்டு முனிவர்களான 'ஆனந்தீஸ்வரர்'  மற்றும் 'இளமையாக்கினார்'  போன்றவர்களின் சமாதிகளும் அந்த ஊரில் எங்கோ உள்ளது என்றும், அங்கும் போய் அவர்களை தரிசிப்பது இன்னும் விசேஷம் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த முனிவர்களின்  சமாதி உள்ள இடம் எனக்கு கிடைக்கவில்லை. தில்லை காளியம்மன்  ஆலயத்தின்  வரலாறு மற்றும் மகிமைகள்  என்ன ?  இனி படியுங்கள்.
சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு சம்பவத்தில் பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை அழிக்க வேண்டும். அந்த அரக்கனை பார்வதியால் மட்டுமே அழிக்க முடியும் என்பது தேவ விதியாக இருந்தது. ஆகவே பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் பார்வதி உக்ரக குணத்தைக் கொண்டு அந்த அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும் பார்வதி முன்னர் ஒரு கட்டத்தில் பெற்று இருந்த சாபத்தினால் சிவபெருமானை பிரிந்து சில காலம் வாழ வேண்டும்.  இவை அனைத்தையும் அந்த ஈசன் அறிந்து இருந்தார். ஆகவே அதற்காக அவர் ஒரு நாடகத்தை நடத்தத் துவங்கினார். 
அதற்கேற்ப ஒரு முறை தேவ  லோகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது.  அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை  சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக  கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் தந்து விடுகிறார்.  சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத  பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டப் பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறினார் "இன்னும் சிறிது காலத்தில்  அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ  இதே காளி உருவில் தேவர்களுக்காக போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அப்போது ஒரு கட்டத்தில்  உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்".
காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி  வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம்  சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர்.  அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க அவர் காளி உருவில் இருந்த பார்வதியை  அதற்கு அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசூரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால்  அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறியாட்டம் போல ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.
தாரகாசுரன் அழிந்தாலும் முனிவர்களின் தொல்லை தொடர்ந்தது. அவர்கள் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது. அவரை  விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை.  வெறியும் அடங்கவில்லை. அவளுடைய உக்ரஹத்தினால்  அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் சொல்லொண்ணத் துயருக்கு  ஆளாகினார்கள்.
அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிரபாதர்  மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதை மெச்சி அனைவரும் அமர்ந்து இருந்த வேலையில் காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும்  அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுட்களும் இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி  தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான்  ஊர்த்துவத் தாண்டவம்  என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள அதே  ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது.  பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக்  காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.
   சிவபெருமான் காலை  மேலே  தூக்கி  ஆடிய  ஊர்த்துவத் தாண்டவம்
போட்டியில் தோற்று போனதும் அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரஹமாக வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவனும் இல்லை.  இருவரும் இணைந்து இல்லாதவரை  பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட அனைத்து தேவர்களும், மகாவிஷ்ணுவும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து  காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு  வேண்டிக் கொண்டனர்.  பிரும்மா அங்கேயே அமர்ந்து கொண்டு காளியை புகழ்ந்து வேதங்களை ஊதி அவளை பூஜிக்க    அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி  பிரும்மசாமுண்டேஸ்வரி  என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகி  ஆகி  அதே இடத்தில் இன்னொரு  சன்னதியில் சென்று அமர்ந்தாள்.
ஆக அந்த ஆலயத்தில் ஒரு சன்னதியில் உக்ரஹ காளி தேவியாக பல ஆயுதங்களையும் ஏந்திய  எட்டுக் கைகளைக் கொண்ட தில்லைகாளியாகவும்  இன்னொரு சன்னதியில் சாந்தமான  நான்கு முக பிரும்மசாமுண்டேஸ்வரி அம்மனாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை ரட்சித்து வருகிறாள்.  காளி சொரூபத்தில் உள்ளவள் பில்லி சூனியப் பேய்கள், சினம், பகை, கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்து வருகிறாள். சாந்தமான  பிரும்மசாமுண்டேஸ்வரி கல்வி, ஐஸ்வர்யம் , வீரம் போன்ற அனைத்தையும் அளித்து வருகிறாள்.
  தில்லை காளியம்மன்   
இந்த ஆலயத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அதாவது  1229 AD மற்றும் 1278 AD ஆண்டுகளில் கோபெருங்ஜிங்கன்    என்ற மன்னன் கட்டினான் என்று தெரிகின்றது. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கத்தின்படி போரில் வெற்றி அடைவதற்காக தமது தலையையே தருவதாக வேண்டிக் கொண்ட படையினர் சிலர் போர்களில் வெற்றிப் பெற்றப் பின் அங்கு வந்து தமது தலைகளையே வெட்டிக் கொண்டு மரணம் அடைந்ததாக வாய்மொழிக் கதைகளும் உள்ளதாம்.
ஆலயம் மிகப் பெரியது அல்ல ஆனால் மிகப் பழமையானது.  உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில்  முருகனும் கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தவாறு இருந்து கொண்டு பக்தர்களை காத்து அருளுகிறார்கள்.  முதல் மண்டபமான தியான மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும்  அலுவலக அறைகள் உள்ளன. தியான மண்டபத்தில்  பக்தர்கள் நெய் விளக்குகளை ஏற்றி தேவிகளை ஆராதிக்க விளக்கு  பீடமும் வைக்கப்பட்டு உள்ளது.  அடுத்த மண்டபத்தில் உள்ள   சன்னதிகளில்   நாம்  காணுவது  கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்து உள்ள தில்லைக் காளி அம்மனும்  மேற்கு நோக்கி அமர்ந்து உள்ள பிரும்ம சாமுண்டியும் ஆவர்கள். அவர்கள் அங்கு அமர்ந்தவாறு பக்தர்களை ரட்சித்து  கொண்டு உள்ளனர். அந்த மண்டப  நுழை வாயிலில்  இருபுறமும்  பிரும்மாண்டமான காவல் தேவதைகள்  நின்று கொண்டு உள்ளார்கள். சுவறுகளில் சில கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
பிரும்ம சாமுண்டி
தில்லை காளியம்மனுக்கு வெள்ளைப் புடவையை மட்டுமே சாத்துகிறார்கள்.  தினமும் அவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. காளி சாந்தம் அடையக்கூடாது என்பதற்காக உஷ்ணம் தரும் எண்ணையான நல்லெண்ணை மட்டுமே உபயோகிக்கின்றார்களாம்.  உடம்பு முழுவதும்  மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு ( அதைக் காப்பிடுதல் என்று கூறுகிறார்கள்)  வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது. கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றது.  தில்லை காளியை    அந்த கோலத்தில்  மட்டுமே தரிசிக்க முடிந்தது. (படத்தைப் பார்க்கவும்). அவள் சன்னதிக்கு பக்கத்திலேயே அவளை ஆராதித்து  தீபம் ஏற்றி  வேண்டிக்  கொள்ள   விளக்கு  பீடமும் வைக்கப்பட்டு உள்ளது.  அந்த சன்னதியில் தில்லை காளியை தரிசிப்பவர்கள் கண்டிப்பாக அவள் உக்ரஹமான கண்களை உற்று நோக்கி அவளை வேண்டிக் கொண்டால்தான் பலன் உண்டு. ஆனால்  அதற்கு மாறாக  பிரும்ம சாமுண்டிக்கோ அனைத்து விதமான அலங்காரங்களும் செய்யப்பட்டு தேன், பால், போன்ற அபிஷேகங்களும் செய்யப் படுகின்றனவாம்.
வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு,  
உடம்பு முழுவது குங்குமத்தினால் காப்பிடப்பட்டு (மூடப்பட்டு ), கண்கள்  
வெள்ளை பொட்டினால் பளபளத்த நிலையில் 
காட்சி தந்து கொண்டு இருந்த தில்லைக் காளி அம்மன்
அவள் சன்னதிக்கு பக்கத்தில் சுமார் ஆறு அல்லது ஐந்து அடி  உயரமும்    நான்கு அல்லது ஐந்து அடி சுற்றளவும் கொண்ட  மிகப் பெரிய நாகதேவர் சிலை உள்ளது. காளியை வணங்கியப் பின் அவரையும் வணங்க வேண்டுமாம். அதன் பக்கத்திலேயே போர் வீரர்கள் தமது தலைகளை வெட்டிக் கொண்டு பலி தந்தக் காட்சியைக் காணலாம்.
 நாக தேவர் 
 மேலும் அந்த சன்னதிக்குள் அனைத்து பகுதிகளிலும் பைரவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர்  போன்றவர்களும் காட்சி தருகிறார்கள்.

ஆலய  சன்னதிகளின்  வரைபடம் 
ஆலய விலாசம் 
ஆலய நிர்வாக அதிகாரி, 
அருள்மிகு தில்லை  காளியம்மன் ஆலயம் ,
சிதம்பரம், கடலூர் மாவட்டம், 
தமிழ்நாடு,
தொலைபேசி எண்:- 04144-230251
தொடர்ப்பு கொள்ள இ மெயில் முகவரி: info@thillaikali.com

6 comments:

 1. மிகமிக அற்புதமான பதிவுகள் .. பல அரிய செய்திகளை இந்த பிளாகரில் பதிவிட்டிருக்கிறீர்கள் ...
  ஆன்மீகம் சார்ந்த பிளாகருக்கு வாசகர்களின் வருகை அவ்வளவாக இருப்பதில்லை ... எனினும் தங்களது இடையறாத முயற்சியால் பல நல்ல செய்திகளை தொகுத்து தந்திருக்கிறீர்கள்.. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 3. Very happy to go through the precious details of THE POWERFUL Thillai KALI. But you ve named THILLAI amman as BRAHMA CHAMUNDI which i ve never heard of. I ve heard it as THILLAI AMMAN or NANMUGI.How you explain this naming sir? Kindly explain please........

  ReplyDelete
  Replies
  1. I remember when we went to Thillai Kali Amman Temple one of the Archakar explained me the said info. I normally keep a note immediately in my diary and while publishing share the information. Generally whatever I write it is gathered from the same temple sources.

   Delete
  2. Thank you so much sir.... awaiting to get to know about many more temples through ur precious blog sir.

   Delete
 4. Though manytimes i ve been to the temple I ve never worshipped NAGAR sannidhi. I ll definitely do it on my next visit sir. Thanks for the precious information.

  ReplyDelete