Saturday, October 30, 2010

Ponnandal Ramanathan writes-1

பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய 
தெய்வீகத்தில் நான் படித்த மற்றும் 
கேட்ட செய்திகள் சில -  பாகம் 1

(1) சத்குருனாதரின் காடாஷம் ஒருவர் மீது இருக்குமானால் அந்த அதிருஷ்டக்காரனின் வாழ்கை ஓடம் சலனமில்லாமல் அமைதியாக , நிம்மதியாக, பயமில்லாமல் சென்று கொண்டு இருக்க அந்த குருநாதனே ஓடத்தை ஏற்றிக் கரை சேர்ப்பார் என்பது சத்தியமான வாக்கு.
-----------------------------
(2) சாதுக்களின் தரிசனம், அவர்கள் மீது நாம் வைக்கும் பக்தி மற்றும் தியானமுமே நமக்கு பல புண்ணிய பலன்களையும், புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனையும் தருகின்றது.


--------------------------
(3) சத்சங்கம் கிடைப்பது அரிது. கிடைத்தாலும் அதில் கலந்து கொள்ள எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காது, மனமும் வராது . ராவணன் சிறந்த சிவ பக்தன். ஆனால் அவனுக்கு சத்சங்கங்களில் கலந்து கொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லை.
--------------------------
(4) ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணை கடாஷம் எல்லை அற்றது. ஒரு பாபமும் செய்யாத சீதையை தன் மனைவி என்ற உரிமையில் உலக நியதியை எடுத்துக் காட்டும் பொறுப்பில் அக்னியில் புடம் போட்டு ஏற்றுக் கொண்டவர். ஆனால் அவரே தன் கால் ஸ்பரிசத்தினால் அகலிகையின் தோஷத்தைப் போக்கி கெளதம முனிவருடன் சேர்த்து வைத்தார்.
------------------------
(5) நாம் செய்யும் குற்றத்திற்கு பாவ மன்னிப்புப் பெறலாம். ஆனால் நாம் செய்த குற்றத்தை பகவானிடம் கூறிவிட்டு அதற்கான தண்டனையை இந்த ஜென்மத்திலேயே பெறுவதே சிறந்தது. நம் மனசாட்சி சொல்கின்றபடி நமக்கு நாமே தண்டனை விதித்துக் கொள்ளலாம். இதற்கு எடுத்துக் காட்டாக குமரி பட்டர் காதலி உள்ளது. அவர் புத்த மதத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவர்களில் ஒருவரைப்போல தன்னை காட்டிக் கொண்டு ஏமாற்றி அதில் கலந்து கொண்டார். அதற்கு தண்டனையாக உமியின் நடுவில் அமர்ந்து கொண்டு அதில் நெருப்பை மூட்டி தன்னைத் தானே கருக்கிக் கொண்டார்.
------------------------

(6) திரௌபதியின் பதிவிருத்தா தர்மம் தூய்மையானது. அது  தெரியாமல் அவளை ஐந்து கணவன்களின் மனைவி எனக் கேவலமாகப் பேசுபவர்கள் மூடர்களே. உண்மையில் அவளுடைய ஐந்து கணவர்களும் தெய்வாம்சம் பொருந்தியவர்களே. திரௌபதியும் கார்ப வாசம் செய்யாமல் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவர்களே. அவளும் பத்ரகாளியின் அம்சமே. ஒரு பதியுடன் மனைவி என்ற பெயரில் மட்டும் உலகிற்காக வாழ்ந்து முடிந்ததும் அடுத்த பதியின் இருப்பிடம் போவதற்கு முன்னால் திரௌபதி தன்னை ஸ்புடம் போட்டு அக்னியில் இறங்கி எழுந்து வருவாளாம்.
--------------------------
(7) பக்தர்களுக்கு பகவானிடமும், பகவானுக்கு பக்தர்களிடமும் பற்றுதல் இருப்பது அசாதாரணமானது. அதற்கு உதாரணம் ஸ்ரீ கிருஷ்ணனே. ராதைக்கும் கிருஷ்ணனுக்கும் அலாதி பிரேமை உண்டல்லவா, அது போல அவருக்கு கோபிகைகளிடமும் பிரேமை இருந்தது. பிருந்தாவன லீலை, ராசா லீலை, ஜலகிரிடை போன்ற அனைத்தையுமே கிருஷ்ணர் தமது பத்தாவது வயதுக்குள் செய்து காட்டிவிட்டார். பதினோராவது வயதில் கம்ச வதத்தையும் செய்து காட்டினார். ஆனால் அதனால் அவற்றினால் எந்த களங்கமும் ஏற்படவில்லை என்பதற்குக் காரணம் அனைத்தும் நாடகமே, அந்த கோபிகைகள் வேறு யாருமல்ல. ரிஷிகளே, ஆமாம் ராமாவதாரத்தில் ஆரண்ய காண்டத்தில் உள்ள அந்த ரிஷிகளே கோபிகைகளாக பிறந்திருன்தனர்.
---------------------------

(8) ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்த அடுத்த சில மணிகளிலேயே அதற்கு எதிரான நிலை. ராஜ்ய பரிபாலனம், சுகபோகத்தை அனுபவிக்க வேண்டியவருக்கு பதினான்கு வருட வனவாசம். ஆனால் அந்த இரண்டு நிலையிலும் ராமர் மிகவும் நிர்சவனமாக, அமைதியாக இருந்தாராம். காரணம் அவர் மனதில் ஏற்பட்டு இருந்த சங்கல்பம். ராமர் மனதில் தோன்றியதாம் 'இன்று நான் பட்டாபிஷேகம் செய்து கொண்டால் என்னுடன் சீதையும், லஷ்மணரும் மட்டும்தானே இருப்பார்கள். ஆனால் நான் எடுத்துள்ள இந்த என் அவதாரத்தை பூர்த்தி செய்துவிட்டு வந்தால் என் விழாவில் அனைத்து சகோதரர்கள், என்னையே தன்னுடையவராக நினைக்கும் ஹனுமான், சுக்ரீவன், ஜாம்பவான் என அனைவரும் இருப்பார்கள் அல்லவா. ஆகவே இந்த வனவாசம் நடந்தேற வேண்டும். என் அவதாரம் புரிந்து கொள்ளப் பட வேண்டும் ' .
------------------------
(9) ராமபிரான் கடலில் அணைக்கட்டி கடலைக் கடக்கும் முன் சிவனை ஆராதித்து பிரார்த்தனை செய்து கொண்டதானது புராண வரலாறு. சிவனும் ராமரும் இணை பிரியாதவர்கள். கடலைத் தாண்டிச் சென்ற வானரங்களை 'ஜெய் பரமேஸ்வரா' எனக் கூறிக் கொண்டு கடலைத் தாண்டிச் செல்லுமாறு ராமர் கட்டளை தந்தாராம். அதனால்தான் ராமர் சிவனை வழிபட்ட அந்த பூமியின் பெயரும் ராமர் + ஈஸ்வரன் என இருவரின் பெயரையும் இணைத்துக் கொண்டு ராமேஸ்வரம் ஆயிற்று.
---------------------
(10) ஒரு மனித உயிர் தனது மனைவி, கணவன், குழந்தை, தாய் தந்தை என அன்பு காட்டுவது எதன் மேல் என்பது தெரியுமா - அவர்களின் சரீரத்தின் மீதா, ஆத்மாவின் மீதா- ? ஆத்மாக்களே மற்ற ஆத்மாவுடன் ஐக்கியமாகி அன்பை வெளிப்படுத்துகிறது என்பதற்கு உதாரணம், நாம் அன்பு கொண்டவர்கள் இறந்து போனப்பின் அவர்களின் உடலை நெருங்கவே, அதைப் பார்கவே ஒரு பயம் ஏற்படுகிறது அல்லவா ? அது மட்டும் அல்லாது அந்த உடலை எரிக்கவும் செய்கிறோம். நம் அன்பானது அந்த உடலின் மீது என்றால் எத்தனை நாற்றம் அடித்தாலும் அதை வைத்துக் கொண்டு இருக்காமல் அதை எரித்து அழித்து விடுவது ஏன்?
-----------------------
(11) அனுமாருக்கு மட்டும் செந்தூரம் ஏன் பூசுகிறார்கள் ? அதற்கான பதில்  ராமாயணத்தில் உள்ளது. சீதாபிராட்டியைத் தேடி இலங்கை அடைந்த ஹனுமார் அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார். முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்தப் பின் அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார். 'அம்மா நெற்றியில் ஏன் செந்தூரம் உள்ளது ' எனக் கேட்க அவள் கூறினாளாம், 'மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும்தான் எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே செந்தூரத்தை இட்டுக் கொண்டேன். ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும். அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே அதை இட்டுக் கொண்டேன் ' என்றாளாம். அதைக் கேட்ட  ஹனுமார் புல்லரித்துப் போய் ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும் என்ற மனதோடு ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை இட்டுக் கொண்டாராம். அதனால்தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோமாம்.
---------------------------------
(12) பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டபோது அவர் கழுத்தை நீல நிறமாக்கி தனது தன்மையை அந்த விஷம் காட்டியது. தனது கையில் அந்த விஷத்தை எடுத்துக் கொண்டு சிவபெருமான் விழுங்கியபோது அதே விஷத்தின் சில துளிகள் பூமியிலே சிந்தியது. அதுவே கொடிய விஷமுடைய ஜீவன்களையும், விஷ மூலிகைகளையும் பாம்பு, தேள் போன்றவற்றையும் படைத்தது.
---------------------------


(13) ரகுகுல திலகரான ராமபிரான் தினமும் அரண்மனைக்குச் சென்று தனது தாயார் மற்றும் தந்தையை பார்த்து சேவித்து விட்டு வருவது பழக்கம். அப்போது அவர் தான் அணிந்து செல்லும் பாதரக்ஷையை அரண்மனையின் வாயிலிலேயே விட்டு விட்டுச் செல்வார். போகுமுன் அதைப் பார்த்துக் கருணையோடுக் கூறுவாராம் ' என்ன செய்வது, உன்னை காலில் அணிந்தபடி உள்ளே போகக்கூடாது அல்லவா...ஆகவே இங்கேயே எனக்காகக் காத்திரு ' ராமர் அந்த பாதரட்ஷைக்குக் அன்று காட்டிய கருணையே ராமர் வனவாசத்துக்கு சென்றபோது பதினான்கு வருடங்கள் அந்த பாதரட்ஷையை அரசவை சிம்மாசனத்தில் அமர வைத்தது. ராமனின் கருணையே கருணை.
--------------------------
(14) நாம் இறைவனின் நினைவாக நெற்றியில் வீபுதி இட்டுக் கொள்கின்றோமே, அதற்கு அப்படிப்பட்ட பெருமை வந்ததின் பல காரணங்களில் ஒன்று என்ன தெரியுமா? இதோ, இதைப் படியுங்கள். கண்ணன் சிறுவனாக இருந்தபோது துருதுருவென இருந்ததினால் கண் திருஷ்டி பட்டுவிடும் என பயந்த கோபிகைகள் அவரை தொக்கிக் கொண்டு மாட்டுத் தொழுவத்தில் போய் அங்குள்ள பசுவின் பாதத்தினால் பூமியை சுரண்டி அந்த மண்ணை எடுத்து அவர் உடல் முழுவதும் பூசுவார்கள். அதன் பின் பசுவின் மூத்திரத்தை அவர் மீது தெளிப்பார்கள். கடைசியாக பசுவின் சாணியை எடுத்து அவர் நெற்றியில் திருஷ்டிப் பொட்டு போல வைப்பார்கள். அதனால்தான் கண்ணனின் நெற்றியில் அமர்ந்த பசுமாட்டு சாணத்தைப் பொசுக்கி நமது நெற்றியில் இட்டுக் கொள்ளும் வீபுதியை தயாரிக்கிறார்கள்.
----------------------------
(15) வேதம் மற்றும் புராணங்களுக்கு வித்தியாசம் என்ன? வேதத்தின் உபதேசங்கள் மன்னனின் கட்டளைப் போல. அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. நம்முடைய இஷ்டப்படி அதை மாற்ற முடியாது. அதன் கட்டளைகளுக்கு கீழ் படிந்தே தீர வேண்டும். அதை செய்தால் பலன் உண்டு. இல்லாவிடில் கெடுதி நிச்சயம். ஆனால் புராணகள் அப்படி அல்ல. அவை நமக்கு படிப்பினையைத் தரும் வேத புத்தகம் போல. நண்பனைப் போல அது உபதேசிக்கும். நன்மைகளை செய்து பலரும் பயன் அடைந்ததையும், தீமைகள் செய்தவர்களுக்கு கிடைக்கும் கெடுதல்களை பற்றி விளக்கிக் கூறும்.  நம்மை வேதம் பயமுறுத்தும், புராணம் வழி காட்டும்.
-----------------------------
(17) நாம் செய்யும் உணவை நைவித்தியம் செய்தப் பின் சிறிது காக்கைக்குப்  போட்டப் பின்னால்தான் நாம் சாப்பிட வேண்டும் என்பது சாஸ்திரம். அதற்கான காரணம் , காகம் தான் உண்ண வரும்போது தனது கூட்டத்தை கூவி அழைத்துக் கொண்டே வருகின்றது. காக்கைகளை நம் முன்னோர்களாகவே கருத வேண்டும். காரணம் அது யம தர்மராஜனின் ஆசனம். நம் முன்னோர்கள் முதலில் போவது யமதர்மராஜரிடமே. அங்கிருந்துதான் கணக்கு வழக்குப் பார்த்து அவரவர் விதிக்கேற்ப  அவர்கள் போகுமிடம் முடிவு செய்யபடுகின்றது. ஆகவே உணவு விஷயத்தில் காக்கையை மதிக்க வேண்டியது  அவசியம்.
அது போல இரவில் நாம் உணவு அருந்தியப் பின் மீதியை தெருவில் உள்ள நாய்க்குப் போட வேண்டும்.  நாய்க்கு போடப்படும் உணவை மற்றவர்களை தின்ன விடாது அது  துரத்தும். காக்கைக்கு நேர்மாறான செயல். ஆனால் அது கால பைரவரின் வாகனம்.  எப்படி நாம் காலபைரவரை நாம் வணங்கித் துதித்தால் தீய சக்திகள் நம்மை நெருங்காமல் அவர் நம்மைக் கப்பாற்றுகிராரோ அதுபோலத்தான் நாயும் அந்நியர்கள் நம்மை நெருங்க விடாமல் நம்மைக் காக்கும் பிராணி. ஆகவே உணவு விஷயத்தில் நாயிற்கும் நாம் மதிப்புத் தந்து உணவு போட வேண்டும்.
-----------------------
(18) தியானம் ஒன்றே இறைவனை அடையும் ஒரே வழி. உலகப் பொருட்களில் ஆசை, பந்தம் , பாசம் இவற்றை நீக்கியவனே இறைவனைக் காண்கிறான். நீரில் மூழ்கியதை நீரில் மூழ்கித்தான் எடுக்க வேண்டும்.  இறைவருள் பெறவும், நமக்குள் நமக்குத் தெரியாமல் மறைந்திருப்பவனைக் காணவும் நாம் நமக்குள்தான்  முழுகி - ஆத்மா தியானம் செய்து , அதை காண வேண்டும்.
---------------------
(19)  ஒரு முறை பாரதியார் கடற்கரையில் உலாவிக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு குள்ளமான சாமியார் ஒரு சாக்கு நிறைய குப்பைக் கூளங்கள், காகிதங்கள், டப்பா போன்றவற்றை எடுத்துக் கொண்டு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அங்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அவரிடம் வேகமாகச் சென்ற பாரதியார் அவரை தடுத்து  நிறுத்தி  ' ஏனப்பா, குள்ளசாமி , இந்த வேண்டாத குப்பைகளை ஏன் தூக்கிக் கொண்டு அலைகின்றாய், அதைத் தூக்கி எறிவதுதானே ?' எனக் கேட்டார். குள்ளசாமி  கூறினாராம், ' பாரதி, இந்த சாக்குப் பையில் உள்ள குப்பைகளை நான் சமுத்திரத்தில் எறிந்து விடத் தயாராக உள்ளேன். ஆனால் எனக்கு நீ ஒன்று சொல்... இந்தக் குப்பைகளை விட அதிகமாக  காமக் குரோத விருப்பு விருப்புக்களை மனதில்  சுமந்து கொண்டு சுமக்க முடியாமல் மனிதர்கள், ஏன் நீயும்தானே இருக்கிறாய். அனைத்து குப்பைகளையும் நான் சுமப்பதைப் போல நீங்களும் அல்லவா  சுமந்து கொண்டு அலைகிறீர்கள்.  அதை எங்கே கொண்டு கொட்டப் போகிறாய்?'  குள்ளசாமி கேட்ட கேள்விக்கு விடை தர முடியாத பாரதி பேச முடியாமல் வாய் அடைத்து நின்றாராம். அந்தக் குள்ளசாமிதான்  ஸ்ரீ ஞானானந்தராம் .
-----------------------------
(20)  நாம் கழுத்தில் அணிவதை ஹாரம் என்கிறோம். கழுத்தைச் சுற்றி உள்ள அது வட்டமாக உள்ளது. அதனால்தான் நாம் இறைவனின் சன்னதியை சுற்றி வருவதற்கும் ஒரு  பிரானின் ( தெய்வம்)  ஹாரத்தை அதாவது  பிராகாரத்தை  அமைத்து உள்ளார்கள்.
---------------------
(21)  இறுமாப்பை அடக்க வேண்டும் என்பது நியதி. அதற்கு உதாரணக் கதை ஒன்று உள்ளது. ஒரு முறை ஒரு எறும்பு சிவனை துதித்து தபம் செய்ய சிவனும் அதன் முன் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' எனக் கேட்டாராம். அதற்கு   எறும்பு ' நான் கடித்ததும் இறந்து விடவேண்டும்' என்று கேட்க சிவனும் வரம் தந்தார். அடுத்த கணமே அது அந்த வரத்தை சோதனை செய்து பார்க்க சிவனையே கடித்ததாம். உடனே சிவனும் அதை அடித்துக் கொன்றாராம். யமலோகம் சென்ற எறும்பு சிவனிடம் கோபமுற்றுக் கூறியதாம்  ' என்னை ஏமாற்றி விட்டீர்கள். கடித்தால் இறந்து விடவேண்டும் என்றால் உங்களைக் கடித்த என்னை அல்லவா இறக்க வைத்து விட்டீர்கள். இது நியாயமா?' சிவன் கூறினாராம் ' நான் நியாயமாகத்தானே வரம் தந்தேன். நீ கடித்தால் நீயா அல்லது நீ கடித்தவர்  இறக்க வேண்டும் என்றா வரம் கேட்டாய் ? நான் கடித்தால் இறக்க வேண்டும் என்றாய் , நீ கேட்ட  வரம் உனக்கே எதிராக இருந்தால்  நான் என்ன செய்வது? அது முதல்தான் எறும்பு கடித்தால் அதை அடித்துக் கொல்வது உலக வழக்கமாகிவிட்டது.
------------------------
(22)  உள்ளத்தால்  ஒன்றை பழக்கிக் கொண்டு விட்டால் அதை தவிர்ப்பது கடினம்.  காரணம் அது இல்லாவிடில் நம் உடல் வேறு எதையும் ஏற்க மறுக்கிறது. உணவுப் பொருட்கள் முதல், சுக போகங்கள் சொந்த பந்தங்கள் என அனைத்துக்கும் அது பொருந்தும்.  இந்த உடலுக்கு இது தேவை என்பதை அந்த உடலுக்குள் உள்ள மனதே தீர்மானிக்கின்றது. ஆக மனதையே  உடலின் சுகத்திற்கேற்ப   நடக்கப் பழக்கி விட்டோம்.  அதனால்தான் தக்ஷ யாகத்தில் அவமானப்பட்டபோது  , இனி மனத்தால் மட்டும்  அல்ல இந்த உடலாலும் தன் தகப்பனுக்கு தான் பிறந்தவள் அல்ல என்பதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மனதையும் உடலையும் அழிக்க தீயில் குதித்து மரணம் அடைந்து அடுத்த ஜென்மத்திலும் பரமேஸ்வரியாகவே பிறந்து சிவபெருமானை மணந்து கொண்டாள்.
------------------------
(23)  ஒரு சித்தர் பாடல் உண்டு. அது என்ன என்றால் ''நந்தவனத்தில் ஒரு ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதைக் கூத்தாடிக் கூத்தாடி போட்டு உடைத்தாண்டி''  இதன்  அர்த்தம் என்ன தெரியுமா?
ஆண்டி என்பது ஜீவன். பிரும்மாவை வேண்டித் தவம் இருந்து தோண்டி என்ற உடலை தாயின் கர்பத்தில் வைத்து ( நாலாம் மாதம் ஸ்திரமாகும் கர்ப்பம், அடுத்த ஆறு  மாதத்தில் கர்பத்தில் இருந்து வெளிவரும்) நாலாறு மாதம்  (4+6 என்பது) என்ற பத்து மாதம் கர்பத்தில் தாங்கி உலகிற்கு வந்தான். வந்த பிறவியை மறந்து லோக மாயையில் முழுகி சுகபோகங்களில் ஆடிப்பாடி இருந்தவாறு உலகிற்கு வந்த இந்தப் பானை வீண் என்பதைக் காட்டி உடைத்து ( மரணம்) விடுகிறான்.

5 comments:

 1. குள்ளசாமி ஸ்ரீ ஞானனந்தர் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? பலர் இதை கட்டு கதை என்கிறார்களே.

  ரங்கனாதன். என். ஆர்.

  ReplyDelete
 2. Please let me know whether this Kulla Sami is swami gnananandar. Is there any proof for it. Many people are not approving of this. thanks. N.R.Ranganathan .

  ReplyDelete
 3. இது என் சொந்தக் கருத்து: இந்தக் கதையைக் கூறியவர் ஆன்மீகத்தில் அதி பக்தி கொண்ட எண்பதிற்கும் மேலான வயதான ஒரு மூதாட்டியாவார் .
  பண்டை காலத்தில் இருந்தே வாய்மொழிக் கதைகளாக கூறப்பட்டு வந்துள்ள ஆன்மீகக் கதைகளுக்கு ஆதாரங்கள் தேடுவது முறை அல்ல. இராமாயண மகாபாரதங்களில் இடையிடையே கூறப்பட்டு உள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதாரங்கள் உள்ளனவா? தொன்மை வாய்ந்த பல ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதைகள் எழுதி வைக்கப்படவில்லை என்பதினால் அதை நாம் கட்டுக் கதை என்று கூற முடியுமா ? சித்தர்கள் பலரையும் குறித்து நிலவிவரும் பல்வேறு மகிமைகளுக்கு எழுதி வைக்கப்பட்டு உள்ள அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதா ? வாழ்மொழியாக விளங்கி வரும் கதைகளின் தத்துவங்களை பார்க்க வேண்டுமே தவிர அதை ஆராயக் கூடாது. அதனால்தான் கூறுவார்கள் 'நதி மூலம் மற்றும் ரிஷி மூலத்தையும் பார்க்கக் கூடாது' என்று. ஆகவே எதையுமே நம்புவதும் நம்பாததும் அவரவர் மன நிலையைப் பொறுத்தது.

  ReplyDelete
  Replies
  1. ஐயா, மிக்க நன்றி. எனினும் குள்ளசாமி ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகள் என்று ஒரு கட்டுரை அடியேன் எழுதினால், அதற்கு ஆதாரங்கள் கேட்பார்களே ? அதனால்தான் கேட்டேன். மேலும் சிலரிடம் விசாரித்தேன். சிலர் ஆமாம் என்கிறார்கள். சிலர் தெரியாது என்கிறார்கள். அடியேனும் ஸ்ரீ ஞானானந்தரின் அடிமைதான். ரங்கனாதன். 9380288980. வேறு ஏதாவது தகவல் கிடைத்தால் தெரியப்படுத்தவும்.. மிக்க நன்றி.

   Delete
 4. ஐயா, எனக்கும் அது பற்றித் தெரியாது. ஆனால் சமீபத்தில்தான் காலமான அந்த பொன்னாண்டாள் பாட்டி இதை என்னிடம் கூறினார். ஆகவே காலம் காலமாக வாழ்மொழியாகவே உலவி வரும் சில செய்திகளை அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இல்லை என்றால் நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் என்று விட்டு விடுவதே நல்லது. வாய்மொழிச் செய்திகளுக்கான ஆதாரங்களை கேட்டால் எங்கிருந்து தருவது?

  ReplyDelete