Monday, October 18, 2010

Sreekoormam - Temple for Vishnu

ஸ்ரீ கூர்மானந்தா எனும் விஷ்ணு ஆலயம் 

சாந்திப்பிரியா
ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளத்தில்  இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் உள்ளது ஸ்ரீ கூர்மானந்தா என்ற விஷ்ணுவின் ஆலயம். அந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணு ஆமையின் உருவில் காட்சி தருகின்றார். அவர் எடுத்த தசாவதாரத்தில் கூர்ம அவதாரம் முக்கியமானது. அமிருதத்தைக்எடுக்க சமுத்திரத்தை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதைக் கடைய தேவர்கள் பயன்படுத்திய மந்தாரா என்ற மலை சமுத்திரத்தில் முழுக இருந்தபோது விஷ்ணு ஆமை உருவில் சமுத்திரத்தின் அடியில் சென்று அந்த மலையை தன் முதுகின் மீது தாங்கி நிற்கும் வகையில் நூறு யோசனை தூர அளவு பெரிய ஆமையானார்.
விஷ்ணு  மந்தார மலையை தன் முதுகின் மீது சுமந்த காட்சி  
 அந்த அவதாரத்தைக் குறிக்கும் வகையில் விஷ்ணு  ஆமை வடிவில் இங்கு எழுந்து உள்ளார். மேலும் அத்தனைப் பெரிய மலையைத் தாங்கி நின்றது போல தன்னை அங்கு வந்து வணங்கி நிற்கும் அனைவரது அத்தனை கஷ்டங்களையும் தாம் சுமந்து கொண்டு அவர்களைக் காப்பேன் என்பதை விளக்கும் தத்துவமாம் அந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணுவின் அவதாரம். 
 
கர்பக் கிரகத்தில் ஆமை வடிவில் உள்ள விஷ்ணுவின் சிலை 

கர்பக் கிரகத்துக்கு முன்னால் உள்ள நுழை வாயிலில் மகாலஷ்மி உருவம்
ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் உள்ள அந்த ஆலயம் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. இந்தியாவிலேயே இந்த ஒரு ஆலயத்தில்தான் விஷ்ணு ஆமையின் உருவில் காட்சி தருகிறார். ஸ்ரீகூர்மத்தில் உள்ள அந்த ஆலயத்துக்குச் செல்ல ஸ்ரீகாகுளத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவு பயணம் செல்ல நல்ல பாதை உள்ளது. பஸ் மற்றும் டாக்ஸி வசதிகள் உள்ளன. ஹைதிராபாத் ,விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து ஸ்ரீகாகுளம் செல்ல ரயில் மற்றும் பஸ் வசதிகள் உள்ளன. விசாகப்பட்டினத்தில் இருந்து  ஸ்ரீகாகுளம் சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
 ஆலயத்தில் மூலவர் உள்ள அறையின்  தோற்றம்
ஆலயத்தின் வரலாற்றைப் பற்றி கூறப்படும் கதை இது. கலிங்க தேச மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது அங்கு மாதவாச்சாரியா மற்றும் ஆனந்த தீர்த்தா என்ற மகான்களின் சீடராக இருந்தவர் நரஹரி தீர்த்தா என்பவர்.அவர் பூர்ண ப்ரஜன்னா என்ற மற்றொரு சுவாமிகளிடம் இருந்து தீஷை பெற்றபோது அவரை கலிங்க தேசத்தில் இருந்த கஜபதி நாட்டுக்குச் சென்று மன்னன் பதவியை ஏற்று ராமரின் பெருமையைப் பரப்புமாறு கூறினார். அதை ஏற்ற நரஹரி தீர்த்தாவும் அந்தப் பதவியை ஏற்று ராமபிரானின் பெருமையை அனைத்து இடங்களிலும் பரப்பி வந்தார். அந்த நேரத்தில் ஒருநாள் அவருக்கு கனவில் விஷ்ணு தோன்றி தான் துங்கபத்திரை நதியில் முழுகி உள்ளதாகவும் தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்து வழிபடுமாறும் கூறினார். அவரும் அதன்படி இப்போது ஆலயம் உள்ள இடத்தின் அருகில் ஓடிக்கொண்டு இருந்த நதியில் முழுகிக் கிடந்த விஷ்ணுவின் சிலையை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்தார். 
இன்னொரு கதை என்ன என்றால் அந்த ஆலயம் உள்ள இடத்தில்தான்  விஷ்ணுவானவர் ஸ்வேதமகிபதி  என்ற மன்னனுக்கு காட்சி தந்தார். அந்த மன்னன் இறந்தப் பின் அவருடைய எலும்புகளை அங்குள்ள குளத்தில்தான் வீசினார்கள். அவை அனைத்தும் ஆமைகளாக மாறி விட்டனவாம். ஆகவே அந்தக் குளத்தை புனிதமாகக் கருதி அந்த குளத்தில் எவரையும் குளிக்க அனுமதிப்பது  இல்லை. 
அந்தக் குளம் வந்த வரலாறு பற்றியும் ஒரு கதை உள்ளது. அந்த இடத்தின் அருகில் இருந்த இடத்தை ஆண்டு வந்த சுதா என்ற ஒரு மன்னன் ஒரு நாள் காமம் கொண்டு தனது மனைவியிடம் செல்ல அவள் தான்  விஷ்ணுவை வேண்டி விரதத்தில் உள்ளதால் அன்று தன்னால் இன்பம் தர இயலாது எனக் கூறியும் அவன் அதைக் கேட்காமல் அவளிடம் நெருங்க  தன்னுடைய பக்தியின் விரதம் கலையக் கூடாது என எண்ணிய  ஸ்ரீ கூர்மானந்தா ( விஷ்ணு ) அவர்களுக்கு இடையே வம்சதாரா எனும் நதியை ஓடவிட்டார். அதனால் மனம் நொந்து போன மன்னன் அந்த நதிக் கரையிலேயே விஷ்ணுவை வேண்டித் தவம் இருக்க விஷ்ணு அவருக்கு ஆமை வடிவில் - கூர்மாவதாரக் காட்சியில்- தரிசனம் தந்து தமது சக்கரத்தை ஏவி பூமியில் ஒரு குளத்தை ஏற்படுத்தினார் . அதுவே அந்த ஆலயத்தின் புனித ஷேத்திரமாயிற்று. 
அந்த  குளத்தில் ஒருநாள் குளிக்க வந்த ஒரு ஆதிவாசி தம்பதியினருக்கு விஷ்ணு அங்கு ஆமை வடிவில் காட்சி தர அவனே அந்த குளத்தில் முழுகுக் கிடந்த விஷ்ணுவை வெளியில் எடுத்து சிறு வழிபாட்டுத் தளம் அமைத்தான். அதை மன்னன் சுதா பெரிய ஆலயமாக மாற்றி அமைத்தாராம்.  இந்த ஆலயம் பற்றிய மகிமையை வியாச முனிவர் பிரம்மானந்தா மற்றும் பத்மா புராணங்களில் எழுதி உள்ளதாகக் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment