Thursday, September 2, 2010

Gajendra Motsham

பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய
சுக முனிவர் சொன்ன கதை- பாகவதத் துளிகள் -2
 கஜேந்திர மோட்ஷம்
சாந்திப்பிரியா

ஸ்ரீ சுக முனிவர் மன்னன் பரிஷித்திற்கு  மேலும் கூறலானார்.
'' மன்னா கேள். உத்தம தனசன் என்பவன் நான்காவது மனு ஆவார். அவர் வம்சத்தில் ஹரிமேதா-ஹரிணி என்ற தம்பதிகளுக்கு பகவான் ஹரி என்ற நாமத்தோடு அவதரித்தார். அவரே கஜேந்திரன் என்ற மன்னனை முதலிடம் இருந்துக் காப்பாற்றினார். அதை விவரமாகச் சொல்கிறேன் கேள்.
கஜேந்திரனின் பூர்வ ஜென்மம் இந்த்ரத்யும்னன் என்பது. அவன் அப்போது பாண்டிய நாட்டின் அரசனாக இருந்தான். நாட்டை ஆண்டு வந்த போது  ஒரு சமயம் அவன் குல பர்வதத்தில் ஆடம்பரமாக பூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருடைய குல குருவான அகஸ்தியர் வந்து சேர்ந்தார். நியமனப்படி பூஜையை நிறுத்திவிட்டு அங்கே பிரதிஷ்டமாக வந்துள்ள ஆச்சாரியாரை  வரவேற்று உபசரிக்கவில்லை. அவன் மனதில் அகந்தை குடி கொண்டு இருந்தது.  நாம் படோபகாரமாக பண்ணும் இந்த பூஜையை அவரும் பார்க்கட்டுமே என மனதில் நினைத்தான். ஆனால் அவன் ஒன்றை மறந்தான். நாம் எண்ணுவதை ஞானிகள் புரிந்து கொள்ள மாட்டார்களா? அவன் மனதை அடக்கணும், அவனுக்கு உண்மை பக்தி வரவேண்டும் என்பதற்காக அவனை யானையாகப் பிறக்குமாறு சபித்து விட்டுச் சென்றார்.
காலம் ஓடியது. அவன் இப்போது மனைவி, மக்கள், உறவினர் எனப் பெரிய கூட்டத்தோடு ஒரு யானையாகப் பிறந்து யானைகளின் தலைவனானான்.  திரிகூட மலையில் பெரிய ஏரி . அது மரகத ரத்னங்கள், அருவி, ஓடை, சித்தர், சாரணர், கந்தர்வர்கள், அப்சரஸ் என அனைவரும் நீராடி மகிழும் இடம். அதில் நம் கதாநாயகன் கஜேன்திரனும் குடும்ப சமேதமாக வெப்பம் தீர விளையாடிக்கொண்டு இருந்தான். அந்த ஏரிக்குள் இருந்த முதலை அவன் காலை கவ்விக் கொண்டது. அதில் இருந்து விடுபட  யானை பலம் என்பார்களே அது கூட கை கொடுக்கவில்லை. எத்தனை முயன்றும் முதலையின் வாயில்  இருந்து காலை வெளியே இழுக்க  முடியவில்லை. ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்லா, சுமார் ஆயிரம் வருடங்கள் முதலை கவ்விய காலுடன் அங்கு நின்று  கொண்டு இருந்தான். அப்போதுதான் கஜேந்திரனுக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. இனி என் கஷ்டத்தை பகவானினால் மட்டுமே தீர்க்க முடியும் என உணர்ந்து அவரை துதிக்க ஆரம்பித்தான். 'ஓம்கார ரூபமான சைதன்ய பிரபஞ்ச ஸ்வரூபமான பரம புருஷன் என்ற அனைத்துக்கும் ஆதி மூலம் நீயே. ஞானானந்தா மாயன், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன், யோகிகள் மட்டுமே அறியக் கூடியவர், உன்னை விரும்புபவர்கள் விஷய சுகத்தை விரும்பி ஆசை வைக்க மாட்டார்கள், நீ அணுவுக்கும் அணுவானவன், தேச கால வஸ்துவில் எல்லை இல்லாதவன், நீ ஆண், பெண், அலி என எதுவும் அல்லன். நான் உன்னை இப்போது இந்த முதலையிடம் இருந்து விடுவிக்குமாறு கோரவில்லை. இந்த சம்சார பிடியில் இருந்து விடுதலைப் பெற்று முக்தி அடையவே வேண்டுகிறேன். சரணாகத ரக்ஷகனான உன்னை நமஸ்கரித்து பிராதிப்பதைத் தவிர வேறு உபாயம் இல்லை. சர்வ வல்லமை படைத்தவனான நீயே ஆதி மூலமே  உனக்கு நமஸ்காரம்'.
 நிர்குண பரமான இந்த துதி பிரும்ம, ருத்ர தேவர்களை எழுப்பவில்லை. அடியார்க்கு அடியான் என்ற முறையில் ஹரி ஒருவனே கருட வாகனனாக விரைந்து வந்தான். முதலையை வெளியே இழுத்து சுதர்சனத்தினால்  அதன் வாயைக் கீறி யானையை விடுவிக்க,  முதலையின் சாபமும் தீர்ந்தது.  அவன் கந்தர்வனாக மாற , கஜேந்திரனும் விடுபட அவ்வளவு காலமும் தனது கையில் வைத்து இருந்த தாமரை மலரை ஹரியின் பாதத்தில் சமர்பித்தான். ஹரியே அவனை அணைத்துக் கொண்டு முதலை கடித்த காலுக்கு மருந்து போட்டு ஊதிக் கொடுத்து தனது உத்தரியத்தால் கட்டு போட்டாராம்.  யானை காலுக்கு உத்தரியத்தினால் கட்டு போட முடியுமா? அது வேறு ஒன்றும் இல்லை. பகவான் ஹரி தன்னை ஆதி மூலமே என அவன் அழைத்ததைக் கேட்டு ஒன்றும் பிடி படாமல் பதட்டத்தில் தனது பார்கியாள் லஷ்மி தேவியின் புடவையை அல்லவா எடுத்து வந்து விட்டார். கஜேந்திரன் சாப விமோசனம் அடைந்தார். பகவானின் ஸ்பரிசத்தினால் அவரும்  நான்கு கைகளைக் கொண்ட பீதாம்பர  தாரியை, உடுத்தி  பகவானின் திரு உருவைப் போலவே வடிவம் பெற்று பகவத் ஸ்வரூபத்தைப் பெற்றார்

கஜேன்திரனுக்கு  மோட்ஷம் அளித்தப் பெருமாள் தானே அதன் பல ஸ்துதிகளையும் சொல்வது என்பது அந்த சரித்திரத்தின் ஏற்றதை இன்னும் உயர்த்தியது.
பகவான் வாக்கு:- 'விடியல் காலை தூங்கி எழுந்து கண்ணை முழித்ததும் தூய மனதுடன் என்னையும் உன்னையும் ( ஹரி மற்றும் கஜேந்திராழ்வார்) , இந்த மலையையும், இந்த சரசையும் ( ஏரி) நினைப்பவர்களுக்கு எல்லாப் பாபமும் அழிந்து போகும்.. நீ செய்த ஸ்தோத்திரங்களை ஜெபிப்பவர்களுக்கு மரணத் தருவாயில் என் நினைவு ஏற்பட்டு மோட்ஷத்தை அடைவார்கள்'.
இப்படியாக கஜேந்திர மோட்ஷம் பெற்றக் கதையைக் கேட்ட மன்னா, இதனால் உனக்கு மட்டும் அல்ல இந்தக் கதையைக் கேட்டவர்களுக்கும் கீர்த்தி பெருகும், கெட்ட சொப்பனங்கள் பலனற்றுப் போகும். மோட்ஷம் கைகூடும். பாபங்கள் விலகும்  '' என சூதர் பரிஷித் மன்னனுக்குக் கூறினார்.

No comments:

Post a Comment