Tuesday, August 24, 2010

Patti Ponnandaal ezhuthiya Gaya Yathra - Part- 2

பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய 

காசி மகத்துவத்தைத் தொடர்வது .....காயா  மகத்துவம் 
 
கங்கையில் காரியங்களை முடித்துக் கொண்டப் பிறகு நாம் கிளம்பிச் செல்ல வேண்டியது காயாவுக்கு. காயா நகரம் பீகாரில் உள்ளது.  வாரணாசியில் இருந்து ஒரு நாள் பயணம் . காயாவை அடைந்ததும் அங்கு ஓடும் பால்குனி நதியில் சென்று குளிக்க வேண்டும். அங்கு குளித்தப் பின்னர் அருகில் உள்ள ஸ்ரீ காதரன் எனும் விஷ்ணுவின் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு விஷ்ணு நம்முடைய சடங்குகளை ஏற்றுக் கொண்டு இறந்துவிட்ட நம்முடைய முன்னோர்களையும் பெற்றோர்களையும் கரையேற்றி பரமபதம் தந்தருள காத்துக் கொண்டு இருக்கின்றார். ஆகவே நாம் இங்கு செய்ய இருப்பது அதற்கான சடங்குகளையே. ஸ்ரீ காதரன் ஆலயத்தில் உள்ள பெரிய ஹாலில் பண்டிதர்களை வைத்துக் கொண்டு சங்கல்பம் எடுத்துக் கொண்டு, தர்பண காரியங்களை செய்தவுடன் நாம் அங்கு செய்து தயாராக வைத்துள்ள சாதத்தை எடுத்து பிண்டங்களாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் .
படங்கள்  நன்றி  :- http://en.wikipedia.org/wiki/File:Vishnupadh_Temple.jpg
இறந்துவிட்ட நம்முடைய முன்னோர்களின் பெயர்களை, தாய் தந்தையரின் பெயர்களை, உற்றார் , உறவினருக்கும் செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு, நாம் வளர்த்த பிராணிகளுக்கு என ஒவ்வொருவரின் பெயரையும் கூறி  அந்த பிண்டங்களை போட்டு ''அதை நீங்கள்தான் ஏற்றுக் கொண்டு அவர்களை நீங்களே கரை சேர்க்க வேண்டும்'' என பிராத்தனை செய்து கொள்ள வேண்டும். ஸ்ரீ காதரப் பெருமாளும் நம் பிராத்தனைகளை மற்றும் நாம் சமர்பிக்கும் பிண்டங்களையும் நேரிலே தோன்றி தானே ஏற்றுக் கொண்டு நிச்சயமாக கரை சேர்ப்பேன் எனக் கூறுவது போல தன் பாதத்தைக் காட்டியவண்ணம்  அங்கே நிற்கின்றார். காலை பன்னிரண்டு மணிவரை அந்த இடம் அபார கர்மா செய்யும் இடம் போலவே காட்சி தரும். அதை நாம் செய்ததும் இறந்து போன நம் பந்துக்கள் அனைவரும் அந்த இடத்துக்கு வந்து விஷ்ணுவை வணங்க அவர் அவர்களை பரமபதத்துக்கு அனுப்பி கரை சேர்ப்பதாக தாத்பர்யம் உண்டு.
 விஷ்ணு பாதம் 
படங்கள்  நன்றி  :-http://www.templenet.com/Ganga/gaya01.html
அந்த காரியங்களை நாம் செய்து முடித்ததும் நாம் தங்கி உள்ள இடத்துக்கு வந்து அங்கு சாஸ்திர முறைப்படி தயாராக செய்து வைக்கப்பட்டு உள்ள சாப்பாட்டை இரண்டு பிராமணர்களுக்குப் போட்டு தானமும்  தந்து அவர்களை திருப்பதிப்படுத்தி அவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த காரியம் முடிந்தப் பிறகு பண்டிதருடன் நாம் அருகில் உள்ள அஷயவடம் என அழைக்கப்படும் ஆல  மரத்தின் அடியில் செல்ல வேண்டும். அதை அடைய சில படிகள் ஏறிப் போக வேண்டும். அங்குதான் நாம் நமக்கு ஆத்ம பலம் தரும் ஒரு முக்கியமான காரியத்தை இறுதியாக செய்து முடிக்க வேண்டி உள்ளது. அங்கு சென்று அந்த மரத்தடியில் நின்றவாறு, '' நான் என் மனம் , வாக்கு, சரீரம் என அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வேன் '' என சங்கல்பம் செய்து கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பின் அதற்கு முன்னோடியாக நமக்கு மிகவும் பிடித்த கறிகாய் வகையில் ஒன்றையும், பழத்தில் ஒன்றையும் இனி ஆயுசு உள்ளவரை என் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என சங்கல்பம் செய்து கொண்டு வர வேண்டும். அதற்குப் பிறகு நம் ஆயுசு உள்ளவரை அவைகளை சாப்பிடவே கூடாது. நாம் செய்யும் ஸ்ரார்தங்களிலும் அவற்றை சேர்க்கக் கூடாது.
 இதற்கு  பரிபூரண வைராக்கியம் தேவை. அதன் பின் நாம் தங்கி உள்ள இடத்துக்குச் சென்று குளித்துவிட்டு நல்ல உடை உடுத்திக் கொள்ள வேண்டும். மாலை மீண்டும் ஸ்ரீ காதாரன் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். நாம் காலையில் தர்ப்பணம் செய்த போது இருந்த நிலைக்கும் , மாலையில் அங்குள்ள நிலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல காணப்படும். நாம் தர்ப்பணம் செய்த அதே மகா விஷ்ணுவின் பாதத்துக்கு மாலையில் சந்தனக் காப்பு சாத்தி அனைவரும் ஒன்று சேர்ந்து விஷ்ணு சஹஸ்ரனாமத்தை  சொல்ல வேண்டும். அந்த சூழ்நிலை மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும்.
இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர்கள் இந்த இடத்தில் வந்து தங்கி இருந்தபோதுதான் கனவில் ஜோதிஸ்வரூபமாக பகவான் தோன்றி அவர்களுக்கு புத்திரப் பேறு உண்டாகும் என ஆசிர்வதிக்க அவர்கள் கதாதரன் என்றே முதலில் இராமகிருஷ்ண பரமஹம்சருக்குப் பெயரிட்டனர். இப்படியாக நாம் கயாவுக்கு  சென்று நம்முடைய தாயாதிகளை கரை ஏற்றிய பின் மீண்டும் வாரனாசிக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சாரதா தேவியை தரிசிக்க வேண்டும். முடிவாக சிரத்தையோடு நாம் ஸ்ரீ கங்கா மாதா பூஜை , ஸ்ரீ விசாலாட்ஷி, அன்னபூர்நேஸ்வரி சமேத ஸ்ரீ காசி விஸ்வனாதருக்குகான தம்பதி பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். வாரனாசிக்குச் சென்று கங்கை கரையில் மந்திரோபதேசத்துடன் பூஜையை ஆரம்பித்து மஞ்சள், குங்குமம், வளையல், கருகமணி, காசோலை, புஷ்பம், பழம் இத்யாதி, இத்யாதி போன்றவற்றை கங்கைக்கு சமர்பிக்க வேண்டும். அதன் பின் கங்கைக்கு பூஜை செய்து, புஷ்பம் போட்டு, நியவேத்தியம் படைக்க வேண்டும். அதன் பின் கற்பூர ஆரத்தி காட்டி கங்கை நீரை தலையில் புரோத்ஷனம் செய்து கொண்டு சிறிது வாயில் ஊற்றிக் கொண்டு அந்த நீரை பருக வேண்டும். அது முடிந்ததும் புரோகிதருக்கு மனதார தட்சணை தந்து அவர் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு அங்குள்ள மணிகர்ணிகா என்ற க்ஹாட்டிற்குச் சென்று  சங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.
அவை முடிந்தப் பிறகு துந்தி கணபதியை மனம், வாக்கு, காயம் உட்பட நன்றியோடு நமஸ்கரித்து தேங்காய் உடைத்து வணங்க வேண்டும். ஸ்ரீ விசாலாட்ஷி, அன்னபூரணி மற்றும் காசி விஸ்வநாதரை பரிபூர்ணமாக சரணடைந்து, மனதில் வேண்டிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்து ஷோடோபசாரம் செய்து முன் சொன்னபடியே மந்திரோபதேசத்துடன் பூஜையை ஆரம்பித்து மஞ்சள், குங்குமம், வளையல், கருகமணி, காசோலை, புஷ்பம், பழம் இத்யாதி, இத்யாதி போன்றவற்றை அவர்களுக்கு சமர்பித்து, மேலும் புடவை, வேஷ்டி, இரண்டு குண்டுகள் கொண்ட திருமாங்கல்யம், காலுக்கு கொலுசு போன்ற நம்மால் முடிந்த ஆபரணங்களை வைத்து அவர்களை வலம்  வந்து நமஸ்கரித்து அவர்களுடைய அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதைத் தவிர நமக்கு வேண்டியவர்களுக்காகவும் நம்மால் முடிந்ததை தனியாகக் கொடுக்கலாம். நான் என்னுடைய தந்தையின் நினைவாக ஒரு சால்வை சமர்ப்பித்து திருப்தி அடைந்தேன்.
வெளியில் வந்து கடைகளில் தாரா பாத்திரம். பீடம். சொம்பு , அம்மனுக்குக் கட்டும் பாவாடை போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். ஊருக்குத் திரும்பியதும் நல்ல நாள் பார்த்து நம் வீட்டில் தம்பதி பூஜை செய்து நாம் வாங்கி வந்துள்ள சொம்பு , கங்கை நீர், கால பைரவர் கயிறு, போன்றவற்றை பூஜையில் வைத்து பிராமணர்களுக்கு போஜனம் கொடுத்து  முடித்தப் பின்னரே அவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். இதுவே சரியான முறை.
 ராமேஸ்வரர் ஆலயம் 
அடுத்து எத்தனை விரைவாக செல்ல முடியுமோ அத்தனை விரைவாக ராமேஸ்வரத்துக்கு யாத்திரை செல்ல வேண்டும். யாத்திரைக்கு முடிந்த அளவு கங்கை நீரை எடுத்துச் செல்ல வேண்டும். ராமேஸ்வரத்தில்தான் ராமபிரான் ஹனுமாரினால் எடுத்து வரப்பட்ட மற்றும், சீதையினால் பிடித்து வைக்கப்பட்ட சிவலிங்கங்களுக்குப் பூஜை செய்து தமது பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொண்டாராம். அங்குள்ள கடல் மண்ணில் லிங்கம் மற்றும் ராம கோதண்ட வில்லையும் வரைந்துவிட்டு சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும். சேதுவில் உள்ள அதிசயம் அங்குள்ள இடத்தில் உள்ள கடலில் அலைகள் எழுவதில்லை. அமைதியாகவே உள்ளது. மேலும் ராமேஸ்வரத்தின் அருகில் உள்ள ராமநாதபுரத்தில் ராமர் கடலிலேயே நவக்கிரஹங்களை வழிபட்டதாகவும் அதன் பின்னரே சமுத்திர ராஜனை தனக்கு வழி விடுமாறு கேட்டு இலங்கைக்கு சென்றதாக புராணக் கதை உள்ளது.
  அந்த இடத்துக்கும் சென்று நாம் தரிசனம் செய்ய வேண்டும். பிறகு அங்கு ஸ்நானம் செய்துவிட்டு ஸ்ரீ ராமநாத ஸ்வாமி ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள ஒன்பது குளங்களில் ( கிணறில்) உள்ள நீரில் குளித்துவிட்டு சுவாமிய தரிசிக்க வேண்டும். நாம் கொண்டு வந்துள்ள கங்கை நீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை ஆராதனைகளை செய்து முடித்தப் பின்னர்தான் காசி யாத்திரை பரிபூரணமாக நிறைவு பெற்றதாகக் கருத முடியும். அது மட்டும் அல்ல இலங்கையில் இருந்து வந்த ராமபிரான் அங்குள்ள கடல் அருகில் குதித்து இறங்கிய இடத்தில் உள்ள ராமர் பாதத்தையும்  தரிசித்தப் பின்னரே கிளம்ப வேண்டும்.
ஓம் தத் சத்
சுபம் 

No comments:

Post a Comment