Monday, August 9, 2010

Jwaalamuki Devi Temple, Himachal Pradesh - 27

 ஆலமரத்து அடியில் கேட்ட சக்தி தேவியின் செய்திகள் -27
ஜ்வாலமுகி தேவி ஆலயம் 
சாந்திப்பிரியா


ஹிமாசலப் பிரதேசத்தில் காங்க்ரா எனும் பள்ளத்தாக்கின் அருகில் உள்ள தர்மசாலா எனும் ஊரில் இருந்து சுமார் 56 கிலோ தொலைவில் உள்ளதே ஜ்வாலாமுகி தேவியின் ஆலயம். அங்கு அந்த தேவிக்கு உருவ வழிபாடு இல்லை. இயற்கையாகவே தோன்றி உள்ள ஒன்பது எரியும் ஜ்வாலையையே தேவியாக கருதி வழிபடுகிறார்கள். ஆனால் ஆலயத்தில் மற்ற தெய்வச் சிலைகள் உள்ளன. அந்த ஆலயத்தின்  கதை என்ன?
அந்த ஆலயம் பற்றி இரண்டு கதைகள் நிலவுகின்றன. முதலாவதின்படி, ஒரு காலத்தில் அங்கிருந்த அசுரன் ஒருவன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். அவர்களால் நிம்மதியாக தமது கடமைகளை செய்ய முடியவில்லை. ஆகவே அவன் அட்டகாசம் தொடரத் தொடர அவர்கள் விஷ்ணுவிடம் சென்று அது குறித்து ஆலோசனை செய்தார்கள். அவன் பெற்று இருந்த வரத்தின்படி அவனை நேரடி யுத்தத்தில் யாராலும் ஜெயிக்க முடியாது. இயற்கையின் துணைக் கொண்டே அவனை அழிக்க முடியும் . ஆகவே அவரும் மற்றவர்களுடன் சேர்ந்து அவன் தங்கி இருந்த இடத்தை சுற்றி தமது முழு சக்தியையும் கொண்ட காற்றை வாயினால் ஊதி பூமியில் செலுத்த அந்த ஒன்பது இடங்களில் இருந்தும்  பெரும் தீ மூண்டது.  அந்த தீயில் இருந்து எழுந்த ஒரு தேவி அந்த அசுரன் இருந்த இடங்கள் அனைத்தையும் எரித்துப் பொசுக்க அதில் சிக்கிக் கொண்ட அசுரன் மடிந்து போனான். அவர்கள் அப்படி மூட்டிய தி பின்னர் அணையவே இல்லை. அந்த தீயை அங்கு இருந்த ஆதிவாசிகள் தெய்வமாக நினைத்து  வழிபடத் துவங்க பின்னர் அந்த புராணக் கதை வெளியில் தெரியவர அங்கு ஆலயம் அமைந்தது.
ஆலயத்தில் உள்ள சூரியனார் 
படம் நன்றி:-   Photo by:-Karthik Raja --Website :- www.karthikrajaphotography.com
அது பற்றி கூறப்படும் இன்னொரு கிராமியக் கதை இது. முதலாம் கதையில் கூறப்பட்ட அசுரனின் வம்சத்தை சேர்ந்த மலைவாசி அரசர்கள் தீயில் குளிப்பார்களாம், தீயை விழுங்குவார்களாம். அவர்கள் ஏழு பேர்கள் இருந்தனர் . ஆகவே அவர்கள் தீயையே விழுங்கும் அசுரர்களான தம்மை சூரியனைவிட அதிக சக்தி வாய்ந்தவர்கள் என எண்ணிக் கொண்டு திரிந்தனர். தேவர்களை துன்புறுத்தினர் . அதனால் கோபமுற்ற சூரியன் அவர்களை எரித்துப் பொசுக்கினார். ஆனால் அந்த அரசர்களில் ஒருவருடைய மனைவி வேறு எங்கோ இருந்ததினால் உயிர் பிழைத்தாளாம். மேலும் அவள் கர்பவதியாக இருந்தாள். அவளுக்குப் பிறந்த குழந்தையே ஜ்வாலமுகியாகி தான் சென்ற இடங்களில் எல்லாம் தீயைக் கக்கியது. வளர்ந்து பெரியவளாகியதும் அவள் சூரியனுடன் யுத்தம் செய்து தோற்றாலும் அவள் துவக்கி வைத்த தீ அணையாமல் எரிந்ததாம். அதுவே ஜ்வாலாமுகி ஆலயத்தில் உள்ள தீயாம்.
இன்னொரு கதையின்படி தென்னிந்திய ஒரு பிராமணரின் கனவில் தோன்றிய பார்வதி தானே ஜ்வாலமுகியாக தர்மசாலா எனும் இடத்தில் (ஆலயம் தற்போது உள்ள இடத்தில் ) எரிந்து கொண்டு இருக்கும் ஒளியாக உள்ளதாகவும் அங்கு ஆலயம் அமைத்து தன்னை வழிபடுமாறும் கூற அவரும் அங்கு சென்று அந்த இடத்தை தேடிக் கண்டு பிடித்து ஆலயம் அமைத்தார் எனவும் கூறுகின்றது.
ஜ்வாலமுகி ஆலயத்தில் பகவதி தேவி 
படம் நன்றி:-   Photo by :- Karthik Raja --Website :- www.karthikrajaphotography.com
அதன் பின்னர் இந்தியாவில் ஆட்சி செய்து வந்த மொகலாய மன்னனான அக்பர் அந்த எரிந்து கொண்டு இருந்த ஜ்வாலையின் கதையைக் கேள்விப்பட்டு அதை நம்பாமல் அதை அணைக்க என்ன என்னவோ முயன்றும் அந்த தீயை அணைக்க முடியாமல் போக அதன் சக்தியை புரிந்து கொண்டவர் அந்த ஆலயத்துக்கு ஒரு தங்க கூறையை பரிசாகத் தந்தாராம். அதுவே இன்றும் உள்ளதாம். இன்றுவரை அந்த தீப்பிழம்பு  எங்கிருந்து வருகின்றது என்பது பற்றி எவருக்கும் தெரியவில்லை. அவை அணையவும் இல்லை. ஆலயம் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். அங்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் நவராத்திரியில் சென்று பூஜை செய்கிறார்கள். . ஆலயத்தின் ஜ்வாலையையே தேவியாக ஆராதித்து வழிபடுகிறார்கள். தினமும் ஐந்து வேளை பூஜைகள் நடைபெறுகின்றதாம். அற்புதமான ஆலயம் அது என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment