Friday, July 9, 2010

Chinnak kadai Renuga devi Temple

தெரிந்த ஆலயம் , பலரும் அறிந்திடாத வரலாறு -- 13

சென்னை சின்னக் கடை ஸ்ரீ மாரியம்மன் அல்லது 
ரேணுகா பரமேஸ்வரி ஆலயம்.
சாந்திப்பிரியா

சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியவில்லை. முக்கியமாக அவற்றில் மாரியம்மன் சம்மந்தப்பட்ட ஆலயங்கள் அங்காங்கே உள்ளன. அதில் ஒன்றுதான் சின்னக்கடை மாரியம்மன் அல்லது ரேணுகா தேவி ஆலயமும். சௌகார்பேட்டை என்ற இடத்தில் மின்ட் சாலையும் என். எஸ். ஜி. போஸே சாலையும் இடிக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம்  தோன்றியது இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள். அந்த ஆலயத்தைக் கட்டியவர்கள் யார், அது அங்கு எப்படி வந்தது என்ற என்ற விவரம்  எவருக்கும் தெரியவில்லை. கூறப்படுவது அனைத்துமே வழி வழியாகக் கூறப்படும் கதையே.  அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கின்றாளாம் . அதற்குக் காரணம் ஆலயத்தின் கற்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும், ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டும் பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும்  அம்மன் காட்சி தருகிறாள். அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ மாலையுடன் மிளகாயை சேர்த்துக் கட்டி தேவிகளை பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகள் இருந்தால் அவை அனைத்தும் ஓடி ஒளியுமாம்.
ரேணுகா தேவியின்  சில தோற்றங்கள்
அங்குள்ள ரேணுகா தேவி மற்றும் மாரியம்மன் என்பது யார்?
முன்னர் ஒரு காலத்தில் தருகா என்றொரு அசுரன் பிரும்மாவிடம் இருந்து பெற்ற வரத்தினால் தேவர்களை துன்புறுத்தினான். அவனை அழிக்க சிவ பெருமான் காளியைப் படைத்தார். அவள் அந்த அசுரனைக் கொன்றதும் தருகாவின் மனைவியான மண்டோதரி என்பவள் தனக்கு வாழ்வதற்கு ஏதாவது வழி காட்டுமாறு சிவனை வேண்டி தவம் இருக்க சிவன் அவளுக்கு தன்னுடைய உடம்பில் இருந்து வியர்வைத் துளிகளைக் கொடுத்தாராம். அதை அவள் எவர் மீது தூவுவாளோ அவர்களுக்கு அம்மை நோய் வரும். அதை குணப்படுத்த அவர்கள் அவளையே வணங்கி அவளுக்கு பூஜைகள் செய்வார்கள்.  அதனால் அவளுக்கும்  ஒரு அந்தஸ்து கிடைக்கும். அது முதல் மண்டோதரியே அம்மை நோயின் அதிபதியானாள். அவள் பூமியில் அவதரிக்க சில நியதிகள்இருந்தன.
ஆகவே  அவளே பார்வதியின் அவதாரமான ரேணுகா தேவியாக அவதரித்து ஜமதக்னியின் மனைவியானாள். அவள் கற்பில் சந்தேகம் அடைந்த முனிவர் அவள் தலையை சீவி எறியுமாறு பரசுராமரிடம் கூற அதை செய்ய பரசுராமர் அவளிடம் செல்ல அவள் பல உருவங்களாகக் காட்சி தந்தாள். ஆகவே யார் ரேணுகா எனப் புரியாமல் பரசுராமர் அனைவரையும் வெட்டி விடுகிறார். அதன் பின் பரசுராமரின் வேண்டுகோளை ஏற்று ஜமதக்கினி முனிவர் ரேணுகாவை உயிர் பிழைக்க வைக்க வெட்டப்பட்ட அனைவரும் உயிர் பெற்று எழுந்து சகோதரிகள் ஆக ஒருவள் தேவலோகத்திலும் மற்றவர்கள் பூமியில் பல இடங்களில் சென்று குடி கொண்டனர் . அவர்களை அடையாளம் கண்டு கொண்ட இடங்களில் அவர்களுக்கு ஆலயங்கள் தோன்றின. அவர்கள் சீதல் மாதா மற்றும் ரேணுகா அல்லது எல்லம்மா அல்லது மாரியம்மா எனப் பல பெயர்கள் பெற்று அம்மை நோயின் அதிபதிகளாக மாறினார்கள். ஆனால் தம்மை வேண்டி  வணங்குபவர்களை அவர்கள் காத்து அருளுகிறார்கள். நோய் நொடிகளை ஆண்ட விடுவதில்லையாம். அந்த அவதாரங்களில் ஒன்றுதான் சின்னக் கடை மாரியம்மனும். ஆகவேதான் அங்கு சகோதரிகளான ரேணுகாவும் மாரியம்மனும் இருக்கிறார்கள் . அவர்கள் அங்கு விளக்கின் ஒளியாக அருள் பாலிக்கிறார்கள். அந்த ஆலயத்தில் அவர்களைப் படைத்த சிவபெருமானும் காசி விஸ்வனாதராக பார்வதியுடன் இருக்கின்றாராம்.  ஆகவே ரேணுகா, மாரியம்மன், சீதல் மாதா மற்றும் எல்லம்மாள் போன்ற அனைவருமே ஏதாவது ஒரு வகையில் சக்தியின் அவதாரங்களே.  

1 comment:

  1. meenachiamma soundararajan <sriannanappaa at yahoo.com sent me a mail on 08.07.2010 as below:-
    "I just saw you blog spot, its really nice and interesting to me".

    ReplyDelete